மர்மங்கள்!
நஜீப் பின் கபூர்
12.10.2025:நன்றி ஞாயிறு தினக்குரல்.
இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கின்ற சில சம்பவங்கள் அல்லது நிகழ்வுகள் காரணமாக அரசியல் ரீதியில் பாமர மக்களைக்கூட விளிப்படைந்து வருகின்றார்கள் என்றுதான் நமக்கு எண்ணத் தோன்றுகின்றது.
அணுரகுமார ஜனாதிபதி கதிரையில் அமரும் வரை நாம் கேட்டவை பார்த்தவை எல்லாம் வெறும் மாயைகள் ஏமாற்றுக்கள் என்று யோசிக்கும் அளவுக்கு கபடங்கள் நிறைந்தவையாக இருந்து வந்திருக்கின்றன.
இன்றுகூட கடந்த ஆட்சியாளர்களின் ஊசலாட்டங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன என்பதனை இங்கு சொல்லி ஆக வேண்டி இருக்கின்றது. இது இயல்பான ஒன்று என்பதிலும் நமக்குப் புரிதல் இருக்கின்றது.
முன்னாள் ஆட்சியாளர்கள் குறிப்பாக ஜனாதிபதி ராஜபக்ஸ காலத்திய ஊழல் மோசடிகள் வன்முறைகள் மற்றும் தாஜூதீன் லசந்த எகனலிகொட போன்ற படுகொலை பற்றி விசாரணைகள் அணுர அதிகாரத்துக்கு வந்தாலும் சாத்தியம் இல்லை என்ற அளவுக்குத்தான் நாட்டில் எண்ணக்கரு அமைந்திருந்தன. அவை தொடர்பான அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டன என நம்பப்பட்டு வந்தன.
அத்துடன் அவர்களுக்குப் பக்க துணையாக ஊடகங்கள் பலவும் நாட்டில் இருந்தன. அவை பெரும்பாலும் பிழைப்புக்காக அதிகாரவர்க்கத்தினரை நம்பி செயல்பட்டு வந்தவை என்பதும் இங்கு அவதானிக்கத் தக்கது. எனவேதான் சில ஊடகங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன என்று நாம் சொல்லி வருகின்றோம்.
அப்படியான ஊடகங்கள் மீது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது நமது வழக்கமான எச்சரிக்கையாகும். அப்படியான ஊடகங்கள் இன்றும் இருக்கின்றது. அது அப்படி இருக்க…
கிணறு வெட்டப் பூதம் வெளிப்பட்ட கதைபோல பல மர்மங்கள் எதிர்பார்க்காத திசைகளில் இருந்து இப்போது வெளியே வந்துகொண்டிருக்கின்றன என்பதனைக் இன்று காணமுடிகின்றது. இதனைத்தான் நாம் கடவுளின் நீதி என்று சொல்லி வருகின்றோம்.
இன்று ராஜபக்ஸாக்கள் பற்றி எழுதுவதில் ஆபத்துக்கள் இல்லை என்பதால்தான் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு அதில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கின்றார்கள். சரி அதுவும் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்வோம். உள்நாட்டில் சிங்கள ஆங்கில ஊடகங்கள் அரசியல் பொது விவகாரங்களில் கடுகதி வேகத்தில் தமக்கு செய்தி சொல்லிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த வேகத்தில் தமிழ் வாசகர்களுக்கு தகவல்கள் வந்து சேர்வதுகிடையாது. அது இரவுத் தபால் ரயில் போலதான் வருகின்றன. அதற்காக நாம் எவரையும் குற்றம் சாட்டவில்லை அவற்றுக்கான பின்னணிகள் வேறு. என்றாலும் தமிழ் பேசும் மக்களில் கனிசமான ஒரு தொகையினர் கடுகதி செய்திகளைப் படிப்பதில் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள் என்று நமக்குத் சொல்ல முடியும். ஆனாலும் சிங்கள வாசகர் எண்ணிக்கையுடன் ஒப்பு நோக்கின்ற போது இது கம்மிதான்.
இன்றைய நாட்களில் நாட்டில் பிரதான பேசுபொருளாக இருப்பது தாஜூதீன் படுகொலைதான். அதனோடு ராஜபக்ஸாக்கள் குறிப்பாக சிரந்தி அவரது பிள்ளைகள் அவர்கள் பாவித்த டிபேன்டர் வாகனம் மற்றும் இதனோடு தொடர்படுத்தப்படுகின்ற யசோதர காதல் விவகாரம்.! அந்தப் பெண் யார் அவரது
அந்தரங்க இடத்தில் இருந்த மச்சம் பற்றியெல்லாம் ராஜபக்ஸ அதிகாரத்தில் இருந்த காலத்தில் அதாவது பல வருடங்களுக்கு முன்பு நாம் இதே வார இதழில் சொல்லி வந்திருக்கின்றோம். அத்துடன் அந்தப் பெண் நமது நாட்டில் ஜனரஞ்சக நடிகர் காமினி பொன்சேக்காவின் பேத்தி என்பதையும் எமது வாசகர்களுக்கு அப்போதே சொல்லி இருந்தோம். கூர்மையான நமது வாசகர்கள் இவற்றை நினைவில் வைத்திருக்கக் கூடும்.
அதே போன்று சிரந்தி ராஜபக்சாவின் சிரிலிய வங்கிக் கொள்ளை அதற்கு பாவிக்கப்பட்ட 222222222 வீ என்ற ஆள் அடையாள அட்டை பற்றியும் முன்பு பேசி இருந்தோம். லசந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படவிலை அவுஸ்திரேலிய போன்ற நாடுகளில் மிருகங்களை வேட்டையாட பாவிக்கின்ற ஒரு கூரிய ஆயுதத்தாலே லசந்த கொலை நடந்தது என்பதும் எல்லாவற்றுக்கும் மேலாக மிக் விமனக் கொள்ளை பற்றி லசந்த தகவல் சொன்ன அதே வாரத்தில் நாமும் அந்த செய்தியை இதே வார ஏட்டில் சொல்லி இருந்தோம்.
அதுதான் நாம் பத்திரிகைக்கு எழுதிய முதலாவது அரசியல் கட்டுரையும் கூட. ராஜபக்ஸாக்கள் அதிகாரத்தில் இருந்த காலத்திலே குடும்ப உறவுகள் நண்பர்கள் எச்சரிக்கைகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் எமது வாசகர்களுக்கு நாம் செய்தி சொல்லி வந்திருக்கின்றோம்.
நாம் இதுவரை சொன்ன தகவல்கள் செய்திகள் அனைத்தும் ஒரு நினைவூட்டல்கள் மட்டுமே. இப்போது தாஜூதீன் கொலையும் சாடிக்குள் இருந்த பூதம் அல்லது கிணறு வெட்ட வெளிப்பட்ட பூதம்பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.
ராஜபக்ஸாக்கள் காலத்தில் நடந்த கொலைகள் கொள்ளை மனிதக் கடத்தல் கப்பம் மோசடிகள் ஊழல் லஞ்சம் மற்றுமல்ல பொலிஸ் பதிவுகள் அழிக்கப்பட்டு விட்டன அல்லது காணாமல் போய் விட்டன என்றெல்லாம் ஒரு எதிர்பார்ப்பு மக்களிடத்தில் இருந்தது. அதில் நிறையவே உண்மைகளும் இருந்தன.
உதாரணத்துக்குச் சொல்வதாக இருந்தால் சிரந்தியின் சிரிலிய வங்கிக் கணக்குகள் பற்றிய கோவைகளைக் காணவில்லை. பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாட்டுப் பதிவுகளில் பக்கங்கள் கடந்த காலங்களில் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக புதிய பக்கங்கள் அங்கு ஒட்டப்பட்டிருந்தன.
சிரந்தி பாவித்த சர்ச்சைக்குரிய டிபேன்டர் வாகனம் ஹபரன காட்டில் மறைத்து வைத்திருந்த போது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றும் அந்த வாகனம் பலமுறை சட்ட விரோதமாக வர்ணம் மாற்றம் செய்யப்பட்டமை.
தாஜூதின் கொலை தொடர்பான உடற்கூறுகளைக் காணவில்லை என்று அதனை முன்னின்று நடத்திய வைத்தியப் பேராசாரியர் ஆனந்த சமரசேக்கர கூறி இருந்ததுடன் அதற்கான பொறுப்பை தன்னால் ஏற்க முடியாது என்றும் அவர் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதனை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரி அணுரசேனாநாயக்க அது ஒரு சராசரி விபத்து என்று சொல்லி இருந்தார்.
போலி வைத்திய சான்றிதழ் கொடுத்தவரும் விபத்து மரணம் என்று சொன்ன பொலிஸ் அதிகாரியும் தாம் தப்புப் பண்ணியதை பின்பு ஏற்றுக்கொண்டார்கள். அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இவர்கள் கைதாகி நீதி மன்ற விசாரணைகளை எதிர் நோக்கி இருந்த நாட்களில் அந்த வழக்கு முடியும் முன்னரே இருவரும் மரணம் எய்தினார்கள்.! இதில் கூட சந்தேகம் எழுகின்றன.!
நீதிபதிகள் லஞ்சம் வாங்கிய சம்பவங்கள் பொலிஸ் அதிபர் பதவி பார்த்த தேசபந்து சட்டவிரோத கூலிப்படையையும் வழிநடாத்தியது போன்ற நிகழ்வுகள் எல்லாம் நமது நாட்டில் சட்டம் நீதி என்பன ராஜபக்கஸ ரணில் காலங்களில் எப்படி அரங்கேரி வந்திருக்கின்றன என்பதனைக் கோடிட்டுக் காட்டுகின்றன. இப்படி டசன் கணக்கானவர்கள் கைதாகி இருக்கின்றார்கள். இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் கம்பி எண்ண இருக்கின்றார்கள்.
இது போன்ற சிறியதும் பெரிதுமான சட்டவிரோத முறைகேடுகள் எண்ணிக்கையில் அடங்காதவை. மோசடிகள் குற்றச்சாட்டுக்கள் அதற்கான ஆவணங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டிருகின்றது-காணாமல் செய்யப்பட்டிருக்கின்றன.
இதுவும் நாடறிந்த செய்தி. இதனை குடிமக்கள் தெரிந்து வைத்திருந்ததால்தான் உண்மை நிலையைக் கண்டறிய ஆட்சி மாற்றம் ஒன்றுதான் தீர்வு என முடிவுக்கு வந்து பழையவர்களைத் தூக்கி எறிந்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்ததுபோல இன்று நாட்டில் புதிய ஆட்சி. அரசியல் மற்றும் நிருவாக துறைகளிலும் இன்று நம்பிக்கையான ஒரு மாற்றங்கள் தெரிகின்றது.
கடந்தவாரம் நாம் எழுதிய பல குறிப்புக்களில் கடவுள் விசாரிக்கின்ற வழக்குகள் என்று சொல்லி இருந்தோம். இந்த தாஜூதீன் விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது பற்றிய அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டன. வழக்கை முன்னெடுத்துச் செல்ல போதிய ஆதாரங்கள் இல்லை என்ற பலர் எண்ணி இருந்தார். நமக்கும் அப்படியான வாய்ப்புத்தான் அதிகம் என்ற எண்ணம் இருந்தது.
ஆனால் கிணறு வெட்ட பூதம் வந்தது போல இந்தோனோசியவில் போதை மற்றும் பாதாள உலகக் கைதுகளுக்கும் இந்தத் தாஜூதீன் கொலைக்கு என்ன தொடர்புகள் இருக்க முடியும் எவராவது எதிர்பார்த்திருந்தார்கள்களா?
ஆனால் இந்த கைதுகளுடன் மனம்பேரி தொடர்பு மனம்பேரிக்கும் மொட்டு அரசியல் தலைமைகளுக்கும் குறிப்பாக ராஜபக்ஸாக்களுக்கும் இருந்த நெருக்கம் அதனுடன் கச்சா உறவு.! கச்சா கொலை பற்றி பெக்கோ சமன் சொல்கின்ற அதிரடி வாக்குமூலங்கள்.
இந்த கச்சா ராஜபக்ஸாக்கள் பற்றிய சொல்லி இருக்கின்ற முன்னய பின்னய கதைகள். சிரந்திக்கும் கச்சாவுக்கமான உறவுகள் தாஜூதீன் படுகொலை பற்றி கச்சா சமுதிதவுக்குக் கொடுத்த வாக்குமூலம்.
தனது கொலை பற்றிய அவர் வழங்கி இருந்த முன்னறிவிப்பு எல்லாம் நீதிமன்றம் கூடாமலே குற்றவாளிகள் யார் என்பதனை உள்ளங்கை நெல்லிக்கனி போல சந்தியில் நிறுத்தி இருந்தாலும் வழக்கில் பணப்பலம் சட்டத்தரணிகளின் திறமைகளைக் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பும் இருக்கின்றது.
இப்படி ஒட்டு மொத்த ராஜபக்ஸாக்காக்களும் கன்னியில் சிக்கிய எலிகள் போல நின்றாலும் அவர்களுக்காக வக்காளத்து வாங்கும் ஒரு கூட்டம் நாட்டில் இருக்கின்றது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் மொட்டுக்கட்சிக்கு நாட்டில் ஒரு ஏழு சதவீதமான வாக்குகள். அவர்கள் ராஜபக்ஸாக்களுக்காக பேசுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. அது அரசியல் பிழைப்பு தொடர்பான விவகாரம்.
இந்த மனம்பேரி தொடர்பாக ராஜபக்ஸாக்களின் நெருங்கிய சகா ஜொன்ஸ்டன் வழங்கிய சான்றிதழ். அதே மனம்பேரி இன்று பொலிஸ் மற்றும் உளவுத்துறையினருக்கு வழங்கி இருப்பதாக சொல்லப்;படுகின்ற தகவல்கள். அவைபற்றி ஊடகங்கள் முன்பு பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் வழங்கி வரும் செய்திகளினால் ராஜபக்ஸாக்கள் நிலை குழைந்துபோய் இருப்பது நமக்கு நன்றாகப் பார்க்க முடிகின்றது.
அரசு வலுவாக இருக்கின்றது. சீர்கெட்டுப்போய் இருந்த நிருவாகம் தற்போது ஓரளவு சீராகி வருகின்றது. பொலிஸ் சட்டம் நீதித்துறைகள் நம்பிக்கை ஊட்டும் வகையில் செயல்படுவதாகத் தெரிகின்றது. கடந்த காலங்களைப்போல இந்த துறைகளில் அரசியல் தலையீடுகள் இல்லை.
என்றாலும் அப்படி இருக்கின்றது என நாமலும் அவர்களின் ஒரு சில சகாக்களும் கூறிக் கொண்டிருந்தாலும் மக்கள் அவர்கள் கதைகளை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஊடகங்கள் முன் தன்னை ஒரு பெரும் அரசியல்வாதிபோல நாமல் வந்து நின்றாலும் பேய் அறைந்தவன்போலத்தான் அவர் தேற்றம் இருக்கின்றது. அத்துடன் திரும்பத் திரும்ப நாமல் அங்கு ஒன்றையே கூறிக் கொண்டிருக்கின்றார்.
இதற்கிடையில் இந்த தாஜூதீன் படுகொலையை மூடிமறைப்பதற்காக அல்லது அதனுடன் தொடர்புடைய சாட்சிகளை அழிப்பதற்காக நடக்கின்ற படுகொலைகள் ஏற்பாடுகள் இந்த அரசு பதவிக்கு வரமுன்னரும் வந்த ஓரிரு நாட்களில் நாம் சொல்லி இருந்தோம். உதாரணம் ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பலர் அந்த நாட்களிலே கொல்லப்பட்டு விட்டனர். அதுபோலத்தான் இந்த கச்சா படுகொலையும்.
இந்த மனம்பேரி மற்றும் கச்சா விவகாரங்களில் இன்று நடக்கின்ற ஒன்றுக் கொன்று முரணான ஊடகச் சந்திப்புக்களை பாருங்கள் படிப்பறிவே கிடையாத கச்சா டீனேஞ் மகன் பண்டிதர்போல முகநூலில் போட்ட பதிவுகள்.! மேலும் கச்சா பற்றி அவரது தாய்-சகோதரிகள் சொன்ன மாறுபட்ட தகவல்கள்தான் இன்று ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகி வருகின்றன.
இதற்கு மத்தியில் விமல் கம்மன்பில் தயாசிரி போன்றவர்கள் குற்றவாளிகளை மீட்டெடுக்க வழங்கும் தகவல்கள் நல்ல கேலிக் கூத்தாகி வருகின்றன. பொலிசில் வந்த தகவல்களைப் பதியுங்கள் என்று கேட்டால் மன்னிப்பு என்று மண்டியிடுகின்றார்கள்.அல்லது ஸ்கெப்பாகி விடுகின்றார்கள். இதனை அரசு எவ்வளவு காலத்துக்குதான் வேடிக்கை பார்க்கப்போகின்றது என்று நாம் கேட்கின்றோம்.
இதற்கிடையில் மஹிந்த ராஜபக்ஸாவின் மெய்பாதுகாவலர் நெவில் கைதாகி இருப்பதும் போதிய கல்வி அறிவில்லாத இந்த மனிதன் மஹிந்தவின் சிபார்சில் இராணுவத்தில் உச்ச பதவி பெற்ற எப்படி? கோடிஸ்வரானது எப்படி?
இந்த சொத்துக்களை எப்படி வந்தது என்று கேட்டால் மஹிந்த மாமி-மாணிக்கப் பொதி தேசிய ஆச்சி பாணியில் தனக்கு சொத்து வந்த முறை நினைவில் இல்லை என்று இந்த நெவில் பதில்; அமைந்திருந்ததாம்.
இது என்ன நகைச்சுவை? இதுபோன்ற பதில்களை ஒரு சட்டரீதியான அரசு மற்றும் நீதித்துறை எப்படி ஜீரணிக்கும் என்று நாம் கேட்கின்றோம்.