
இந்தோனேசியாவின் தேசிய திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு முகமையின் தரவுகளின்படி, புதிய தலைநகருக்கான மொத்த நிலப்பரப்பு சுமார் 256,143 ஹெக்டேர் (சுமார் 2,561 சதுர கிலோ மீட்டர்) என அளவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நுசந்தாரா நகரத்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று செய்திகள் வெளியாகின. இருப்பினும் அமைச்சகங்களும், அரசாங்க நிறுவனங்களும் இடம்பெயரும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை இறுதி செய்யும் பணி தொடர்வதாக தெரிவித்துள்ளன.
உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோவின் பெரும்பகுதியை இந்தோனேசியா கொண்டுள்ளது. மலேசியா மற்றும் புருனே ஆகிய நாடுகள் போர்னே தீவின் வடக்குப் பகுதியின் சில பகுதிகளைக் கொண்டுள்ளன.
ஏன் தலைநகரை மாற்றுகிறது இந்தோனேசியா? –
தலைநகர் ஜகர்த்தாவில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவது இந்தோனேசிய அரசுக்குத் தொடர்ந்து பிரச்சினையாகவே இருந்து வந்தது. மேலும், காலநிலை மாற்றம் காரணமாகப் பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் கடும் பாதிப்பை ஜகர்த்தா சந்தித்து வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் வாகனப் பெருக்கமும், காற்று மாசும் ஜகர்த்தாவில் அதிகரித்து வருகின்றன.இதன் காரணமாகவே தலைநகரை மாற்றும் முடிவுக்கு இந்தோனேசியா வந்ததாக கூறப்படுகிறது.
2019-ஆம் ஆண்டே ஜகர்த்தாவிலிருந்து தலைநகரை மாற்றும் முடிவை இந்தோனேசிய அரசு எடுத்துவிட்டது. கரோனா காரணமாக இந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.