‘தம்மம்’ பட காட்சிகளை பௌத்தர்கள் சங்கம் எதிர்ப்பது ஏன்?

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தம்மம் படத்தின் காட்சி ஒன்றுக்கு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. என்ன காரணம்?

இயக்குனர் ரஞ்சித்
இயக்குநர் ரஞ்சித்

கடந்த வெள்ளிக்கிழமையன்று Victim என்ற ஆந்தாலஜி வகைத் திரைப்படம் ஒன்று சோனி லைவ் ஓடிடியில் வெளியானது. அதில் இயக்குநர் பா. ரஞ்சித்தும் ஒரு படத்தை இயக்கியிருந்தார். ஜாதி ஆதிக்க உணர்வு கொண்ட ஒருவரால் அடித்தட்டு விவசாயி ஒருவர் எந்த மாதிரியான சிக்கலுக்கு உள்ளாகிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில், சிறுமி ஒருவர் புத்தர் சிலையின் மீது ஏறி நிற்பார். அதைப் பார்க்கும் தந்தை (குரு சோமசுந்தரம்) சாமி சிலையின் மீது ஏறி நிற்காதே என்று கூறுவார். அதற்கு அந்தச் சிறுமி, ‘சாமியே இல்லன்னு புத்தர் சொல்லிருக்காரு. அவர போய் சாமின்னு சொல்ற’ என்று பதில் சொல்வார். குருசோம சுந்தரம், கலையரசன், ஹரி கிருஷ்ணன், பேபி தாரணி, அர்ஜீன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் படத்தில் வரும் காட்சிகளுக்கு தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் பௌத்த சங்கம் ஒன்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை என்ற இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்தர் கடவுள் இல்லை என்று சொல்வதற்காக அவர் தலை மீது ஏறி நின்று சொல்லும் வக்கிரத்தை இந்த உலகம் இதுவரை கண்டிருக்காது. பௌத்தம் வலுவாக உள்ள நாடுகளில் இது போன்ற காட்சி வெளியே வந்திருக்குமானால், அந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். ஆனால், இந்தியாவில் தமிழகத்தில் சிறுபான்மை பௌத்த மதத்தினருக்கு உரிய பாதுகாப்பும் அங்கீகாரமும் இல்லாத காரணத்தினால் இதுபோன்ற புரிதல் குறைவான புத்தரை அவமதிக்கும் வீடியோக்கள் வெளியே வருகின்றன.

எதிர்ப்பை வெளிப்படுத்தும் பெளத்த ஆதரவாளர்கள்

இந்தக் காட்சி பகவன் புத்தர் மீது உருவாக்கும் தமிழ்நாட்டில் பௌத்தர்கள் மனம் வெகுவாகப் புண்பட்டுள்ளது. இந்தக் காட்சி உலக நாடுகளுக்குப் போகுமானால் உலகில் உள்ள பௌத்தர்களின் எதிர்ப்பையும் கடும் கண்டனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

தான் எடுக்கும் படங்களில் புத்தரை நல்லபடியாகக் காட்டிக்கொண்டிருந்த பா. ரஞ்சித்துக்கு திடீரென இப்படி ஒரு காட்சி வெளியிடத் தோன்றியது ஏன் என்பது கேள்வியாக இருந்தாலும் தம்மம் படத்தில் வெளிவந்திருக்கின்ற காட்சி எங்களைப் போன்ற பௌத்த மதத்தினரின் மனதை வெகுவாகப் புண்படுத்தியுள்ளது.

அந்தப் படத்தின் காட்சிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அந்தக் காட்சிகளுக்கு தனது மன்னிப்பையும் வருத்தத்தையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும். இந்தக் காட்சிகளுக்கான விளக்கத்தை நாங்கள் கோரவில்லை. பௌத்தர்கள் மனம் புண்பட்டதற்கான வருத்ததைத் தெரிவித்து, அந்தக் காட்சிகளை உடனடியாக இணைய தளங்களில் இருந்து நீக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் தொடர்ந்து பௌத்தைக் கருத்துகளையும் புத்தரின் உருவத்தையும் தனது திரைப்படங்களில் பயன்படுத்திவரும் நிலையில், அவரை எதிர்ப்பது ஏன் என அந்தப் பேரவையின் பொதுச் செயலாளரும் பிக்குவுமான போதி அம்பேத்கரிடம் கேட்டபோது, “ரஞ்சித் செய்திருப்பது அவரது இந்து சமூக மனநிலையையே வெளிப்படுத்துகிறது” என்றார்.

மேலும், “புத்தர் நீங்களே விளக்காய், ஒளியாய் இருங்கள் என்கிறார். கடவுள் என்பதை ஒரு இடத்தில் சொல்கிறார். கடவுள் என்பவர் காணப்படவும் இல்லை, அறியப்படவும் இல்லை என்று நிறுத்திக்கொள்கிறார்.

இப்படியா படத்தில் காட்சியை எடுப்பது?”

தம்மம் படக் காட்சிகளை பௌத்தர்கள் சங்கம் எதிர்ப்பது ஏன்?

நாம் புத்தரைப் பின்பற்றுபவர்களாக இருந்தால், அவரை மதிக்க வேண்டும். அது சிலையாக இருந்தாலும் ஓவியமாக இருந்தாலும் அதற்கு அருகில் செல்லும்போது நம் மனம் நிறைகிறது. அவர் அறிவை பகிர்ந்து கொள்கிறோம்.

அப்படி இருக்கும்போது ஒரு குழந்தையை புத்தர் சிலை மீது ஏற்றிவிட்டு பேசுகிறார் பா. ரஞ்சித். அது பௌத்தம் என்ற அம்சத்திற்கே எதிரானது. அந்தக் காட்சி அப்படித்தான் அமைந்திருக்கிறது. அவர் மிகப் பிரபலமானவர். ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டுகிறார் என்றார் அதற்கு நோக்கம் உண்டு. விளைவுகளும் உண்டு. அப்படியிருக்கும்போது ஒரு குழந்தையின் மூலமாக அப்படி ஒரு செய்தியைச் சொல்வதே தவறு.

மதம், கலாசாரம், கல்வி, ஊடகம் ஆகியவைதான் மனித வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்குகின்றன. பா. ரஞ்சித் ஊடகத்தைப் பயன்படுத்தி தவறான கருத்தை முன்வைக்கிறார். அந்தக் குழந்தை பேசும் ‘கடவுள் இல்லை’ என்ற வார்த்தை மட்டுமல்ல, மொத்த காட்சியுமே ஆட்சேபகரமானது. அபத்தமானது” என்கிறார் போதி அம்பேத்கர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு பா. ரஞ்சித்தைத் தொடர்புகொள்ள பல முறை முயற்சித்தும், அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை.

தமிழ்நாட்டில் பௌத்தம் தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டும், எழுதியும் வரும் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் வேறொரு கருத்தை முன்வைக்கிறார்.

“கடந்த பல ஆண்டுகளாக புத்தரை ஒரு தத்துவஞானியாக, வழிகாட்டியாக பார்க்கும் போக்கு உருவாகியிருக்கிறது. புத்தரை அப்படி பார்க்கலாம், தவறில்லை. ஆனால், சாதாரண மக்களுக்கு பௌத்தத்தை ஒரு மதமாக உணர வைக்க அது போதாது. ஆகவே கலாச்சாரா ரீதியாகவும் சில அம்சங்களைச் செய்ய வேண்டும். அப்படி கலாச்சார ரீதியாக செய்யும் நிகழ்வுகள் ஒரு இந்து விழாவைப் போல மாறாமல், அறிவுசார்ந்த நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற உரையாடல்களும் தொடர்ந்து நடக்கின்றன. ரஞ்சித் போன்ற ஒருவர் சினிமாவில் பௌத்தத்தைக் காட்டும்போது அந்த விவாதம் மேலெழுகிறது.

தம்மம் படக் காட்சிகளை பௌத்தர்கள் சங்கம் எதிர்ப்பது ஏன்?

தமிழ்நாட்டில் கடந்த 10 – 15 ஆண்டுகளில் நிறைய பிக்குகள் வந்திருக்கிறார்கள். நிறைய மாநாடுகளை நடத்துகிறார்கள். சில நடைமுறைகளை கொண்டுவருகிறார்கள். பௌத்தத்தை கலாச்சார அடையாளமாக வைப்பதா, அரசியல் அடையாளமாக வைப்பதா என்ற விவாதம் தொடர்ந்து இருந்துவந்தது. அந்த விவாதத்தின் தொடர்ச்சிதான் இப்போது நடக்கும் நிகழ்வுகள் எல்லாம்.

ரஞ்சித், புத்தரை கடவுளாக மாற்றாமல், அவரை அறிவாளியாகவும் தத்துவமாகவும் பார்க்க வேண்டும் என்ற உரையாடலின் பிரதிநிதி. பௌத்தம் என்பது சிலையை வணக்குவது அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. மற்றவர்கள் மீது கருணை செலுத்துவதுதான் பௌத்தம் என்கிற வாழ்க்கை முறை. அம்பேத்கரின் மரபு அது. ஆகவே, ரஞ்சித் படம் எடுக்க வரும்போது அதேபோன்ற புத்தரை தன் படங்களில் காட்டுகிறார். ஆனால், அதனை விவாதமாக பார்ப்பதை விட்டுவிட்டு, காட்சிகளை நீக்கக் கோருவது நியாயமல்ல.

ரஞ்சித் அவருக்கான புத்தரை முன்வைக்கிறார். இன்னொருவர் இன்னொரு புத்தரை முன்வைக்கலாம். ஆனால், ரஞ்சித்தோடு முரண்படும்போது அதனை விவாதமாக முன்னெடுக்காமல் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று கோரக்கூடாது.” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

Previous Story

நிர்வாணப்படுத்தி சோதனைக்கு உள்ளான 650 சிறார்கள்: பிரித்தானியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்

Next Story

பரிசு பொருளை விற்று ரூ.1300 கோடி 'ஆட்டை':'மாஜி' பிரதமர் மீது புகார்