தமிழரசு தேர்தல் தருகிற செய்தி!

-நஜீப் பின் கபூர்-

வரலாற்று பதிவுக்காக தமிழரசுக் கட்சியை பாராட்டலாம்

மு.  கா.  விலும் இப்படி ஒரு மாற்றம் காலத்தின் தேவை

தலைவர் சிரிதரனுக்கு வாழ்த்துக்களும் எச்சரிக்கைகளும்

இந்த வாரம் நாம் என்னதான் செய்திகளை தகவல்களை மக்களுக்குச் சொல்ல எதிர்பார்த்தாலும் அந்த அனைத்து விடயங்களையும் இராஜாங்க அமைச்சர் சனத் நிசந்தவின் அகல மரணம் பின்னுக்குத் தள்ளிவிடும் என்ற நிலை இன்று நாட்டில் இருக்கின்றது. இது பற்றி சில தகல்களை பிரிதொரு இடத்தில் பேசி இருக்கின்றோம். இந்தப் பின்னணியல் தான் கடந்த வாரம் நடந்த தமிழரசுக் கட்சியின் தேர்தல் தருகின்ற செய்திகளைச் சொல்ல எதிர்பார்க்கின்றோம்.

அதற்குப் முன்னர் நாம் ‘தோற்றுப் போன தரப்பிலிருந்து வருகின்ற விரக்தியும் வெற்றி  தரப்புக்கு வருகின்ற மமதையும் அழிவின் துவக்கப் படிகளாக மாற அதிக வாய்ப்புக்கள்’ என்ற செய்தியை வெற்றி பெற்ற சிரிதரனுக்கும் தோற்றுப் போன சுமந்திரன் ஐயாவுக்கும் நாம் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். இது இனம் சார்த்த ஒரு தேவைக்காக வந்த போட்டி என்பதனை இரு தரப்பினரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்பது ஒரு இனம் சார்ந்த விவகாரம். இது இன்று சர்வதேச அளவில் போய் நிற்க்கின்றது. இதில் தமிழ் மக்களின் அரசியல் சமூகப் பொருளாதார தேவைப்பாடுகள் பின்னிப் பிணைந்து இருக்கின்றது. இதனை ஒரு விமார்சனக் கண்ணோட்டத்தில் பேசுகின்ற போது, சில நாமங்களையும் அரசியல் செயல்பாடுகளையும் நாம் இங்கு உச்சரிக்க வேண்டியது இருக்கின்றது. இது இயல்பானதும் தவிர்க்க முடியாததும் என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.

இன்று தமிழ் மக்களின் மிகப் பெரிய அரசியல் இயக்கமாக வடக்குக் கிழக்கில் தமிழரசுக் கட்சி இருந்து வருகின்றது. கடந்த காலங்களில் இது வேகமாக சரிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பது நமது அவதானம். இதற்கு முக்கிய காரணம் கட்சியை வழி நடாத்தியவர்கள் அண்மைக் காலமாக கொழும்பு அரசியல் தலைமைகளை நம்பி தமிழ் மக்களை ஏமாற்றி வந்ததும், தீர்க்க தரிசனம் இல்லாத அவர்களது அனுகுமுறைகளுமே என்று நாம் நம்புகின்றோம்.

Image

தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் தனி நபர்களின் பிடியில் சிக்கி இருந்தது. இதனால் தீர்மானங்கள் எடுக்கின்ற வேலைகளை ஒரு சிலரே அங்கு முடிவு செய்தும் வந்திருக்கின்றார்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இதற்குக் காரணம் சம்பந்தன் ஐயாவின் தனிப்பட்ட பலயீனங்களும் உடல் ரீதியான பலயீனங்களுமே. இதனை சிலர் தமக்கு சாதகமாகப் பாவித்து கட்சியில் மேலாதிக்கம் செலுத்தியதால் அங்கு உட்கட்சி ஜனநாயகம் முடமாகிப் போய் இருந்தது.

இந்த விடயத்தை வெளிப்படையாகப் பேசுவதாக இருந்தால்  கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா என்று இருந்தாலும் நடைமுறையில் அப்படி ஒரு நிலை அங்கு இருக்கவில்லை. அவர் கட்சிக்குள் காணாமல் போய் இருந்த ஒரு நிலையே இருந்தது. அவருக்குத் தெரியாமலே முடிவுகள் எடுக்கப்படுகின்ற ஒரு நிலையும் அங்கு இருந்து வந்திருக்கின்றது. இவை அனைத்திலும் சுமந்திரன் செல்வாக்கு இருந்தது என்ற விமர்சனங்கள் இருக்கின்றன.

Sri Lanka vows to free 130,000 Tamil refugees | Sri Lanka | The Guardian

இந்த நிலையைத் தெடர்ந்து ஐயா சம்பந்தனை முதன்மைப்படுத்தி வைத்திருக்கலாம்-நகர்த்தலாம் என்று சுமந்திரன் கருதி இருக்க வேண்டும். ஆனால் தலைமைத்துவத்தில் மாற்றம் ஒன்று அவசியம் என்பதனை தமிழ் தரப்பினரும் எம்மைப் போன்றவர்களும் தொடர்ச்சியாக வலியுருத்தி வந்தோம். அதனால் புதிய தலைவர் தெரிவை எவரும் தட்டிக் கழிக்க முடியாமல் போனது.

மீண்டும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தலைவர் என்ற பேச்சுக்கள் வந்தாலும் அங்கு விட்டுக் கொடுப்புக்கள் தோல்வியில் முடிந்தது. அதனால் வழக்கத்துக்கு மாற்றமாக இந்த முறை தேர்தல் மூலம்தான் தலைவர் தெரிவு என்ற நிலை வந்தது.

Tamil National Alliance | An Alliance fraught with challenges - The Hindu

படித்தவர் மூன்று மொழிகளும் தெரிந்தவர் தெற்கு அரசியல்வாதிகளுடனும் சர்வதேசத்துடனும் உறவுகளைப் பேனக்கூடியவர் என்றெல்லாம் சுமந்திரன் தரப்பில் சொல்லப்பட்டாலும், அவரது கடந்த கால அரசியல் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு இசைவாக பயணிக்கவில்லை. மாறாக கொழும்பு ஆளும் தலைமைத்துவங்களுடன் இணக்க அரசியலில் தான் விமோசனம் என்று அவர் எதிர்பார்ப்பு இருந்து வந்திருக்கின்றது. இது முற்றிலும் கோமாளித்தனமானது. நடைமுறைச் சாத்தியம் இல்லாதது.

அந்த வழியில்தான் தீர்வை எட்ட முடியும் என்று மூத்த தலைவர் சம்பந்தன் கூட நம்பிக்கை ஊட்டப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்று நாம் ஊகிக்கின்றோம். இதற்கு யார் காரணம்.? மக்கள் அங்கிகாரம் இல்லாத ஜனாதிபதி ரணிலுடன் நடாத்துகின்ற எந்தப் பேச்சுவார்த்தைகளும் தீர்மானங்களும் வெற்றி பெறாது என்று நாம் தலைவர்களுக்கும் வல்லுணர்களுக்கும் துவக்கத்திலே அடித்துச் சொல்லி இருந்தது வாசகர்களுக்கு நினைவில் இருக்கும்.

தமிழரசுக் கட்சித் தலைவர் தேர்தலுக்கு ஓரிரு நாட்கள் இருக்கின்ற நேரம் ‘தான் வெற்றி பெற்றால் நிச்சயம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு’ இப்படி ஒரு செய்தியை சுமந்திரன் சொல்லிப் பரப்புரை செய்திருந்தார். அது எப்படி? அவரது இந்த வார்த்தை முற்றிலும் தவறானது. கடந்த காலங்களில் சம்பந்தனை வைத்து இவர் இதனைத்தான் தொடர்ந்து தமிழ் மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார் என்பது தமிழர்கள் அறிவார்கள்.

National List row in TNA - UTV News English

ஒரு தனி மனிதனின் ஆளுமையை அல்லது புலமைத்துவத்தை வைத்துத்து இந்தப்  போராட்டத்தில் தமிழர் சாதிக்க முடியும் என்பது சிறு பிள்ளைத்தனமானது-ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஒரு சமூகத்தின் அரசியல் விடுதலைப் போரட்டமும் உரிமைகளை வென்றெடுக்கின்ற விடயமும் கடினமானது. அதனைத் தனிமனிதனாக நின்று வென்றெடுக்கின்றேன் என்று சொல்வது பதவியை கைப்பற்ற மக்களுக்குச் சொல்லப்பட்ட போலி வாக்குறுதிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியான கதைகளைச் சொல்லி சமூகத்தை மீண்டும் மீண்டும் ஏமாற்றுவதும் பொறுத்தமற்ற செயல். நெல்சன் மண்டேலா மகாத்மா காந்தி போன்றவர்கள் கூட தனிமனிதர்களாக நின்று விடுதலை வாங்கித் தருவேன் என்று சொல்லியதை நாம் எங்குமே பார்க்கவில்லை.

கொழும்புத் தலைமைகளின் தீர்வு சம்பந்தன் காலத்திலும் அதற்கு முன்பும் கூட தோற்றுப் போன ஒன்று. அதனால்தான் ஆயுதப் போராட்டமே வெடித்தது என்பதும் தெரிந்ததே. ஆனால் சம்பந்தனும் சுமந்திரனும் இது விடயத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி காலத்தைக் கடத்திக் கொண்டுதான் வந்திருக்கின்றனர். பேரினத் தலைமைகள் ஏமாற்றுவது ஒன்றும் ஆச்சர்யமானதல்ல. ஆனால் தீர்வு பற்றி தமிழ் அரசியல்வாதிகள் சொல்லும் கதைகள் மிகப் பெரும் துரோகமானது.

புதிய தலைவருக்கு!

Navy in Kachchativu Subtle 'Sinhalization' move – Sritharan | SRI LANKA

தற்போது தலைமைப் பதவிக்கு வந்திருக்கின்ற சிரிதரன்  முதலில் கட்சியில் ஜனநாயகத்தை உறுதி செய்ய வேண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர முயற்ச்சிக்க வேண்டும். அடுத்து வடக்கு கிழக்கு என்ற அரசியல் போதங்களை முற்றாக் கலைய அவரிடத்தில் ஒரு நேர்மையான வேலைத் திட்டம் அவசியம். மேலும் தோற்றுப் போனவர்கள் முதுகில் குத்தாது கட்சியை மறுசீர் அமைக்க புதிய தலைவர் சிரிதரன் முயற்சித்தால் அதற்கு ஒரு அவருக்கு வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்.

அதனால் நிருவாக சபை மத்திய குழு என்பனவும் இதர பதவிகளும் மறுசீர் அமைக்கப்பட வேண்டும். அல்லது சரிபார்க்கப்பட வேண்டும். கட்சிப் பேச்சாளர் பதவியில் ஒரு மாற்றும் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும். பேச்சாளர் வேலையை ஐயா சுமந்திரன்தான் தொடர்ந்தும் பார்க்கின்றார் என்றால் அங்கு நெருக்கடிகளுக்கு இடமிருக்கின்றது.

சிரிதரனும் போட்டிக்கு மத்தியில் பதவிக்கு வந்தவர் என்ற வகையில் மிகவும் நிதானமாக காய் நகர்த்த வேண்டும். தேசிய வாதம் பேசுகின்றவர்களும் தமிழ் மக்களின் சமூக ஊடகங்களும் நடுநிலையாக தமது பார்வையைச் செலுத்த வேண்டும். இது அவர்களது சமூகக் கடமையும் கூட. தோற்றுப் போனவர்களின் மனங்களை நோகடிக்கின்ற வேலைகள் பிளவுகளை ஏற்படுத்தும் என்பதால் தனது விசுவாசிகளை தலைவர் சிரிதரன் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டியதும் கட்டாயமானது. தேர்தல் முடிவுகளும் அதற்குப் பின்னலான நடவடிக்கைகளும் கனவான் தன்மையுடையவையாக இருக்க வேண்டும்.

இன்று கட்சி மீது ஒரு சின்ன நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. இதனால் சரிந்து வருகின்ற கட்சியின் செல்வாக்கை தூக்கிப் பிடிக்க இதனை ஒரு நல்ல வாய்ப்பாக பாவித்துக் கொள்ள முடியும். கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் உள்ளீர்ப்பு விவகாரத்திலும் விமர்சனங்கள் இருக்கின்றன. அதில் கூட கடந்த காலங்களில் முறைகேடுகள் இருந்து வந்தமை தேர்தலின் போது அவதானிக்க முடியும்.

மத்திய மற்றும் செயற்குழு உறுப்புரிமை சரிபார்க்க வேண்டி இருக்கின்றது.  அத்துடன் ஏனைய பதவிகளுக்கு சிரிதரன்-சுமந்திரன் அணி என்ற பேதங்களுக்கு அப்பால் தெரிவுகள் அல்லது நியமனங்கள் அமைய வேண்டும். இப்படியான சீர்திருத்தங்களுடன் கட்சி சரி செய்யப்படுமாக  இருந்தால் அது கஜேந்திரன் மற்றும் விக்ணேஸ்வரன் அணிகள் செல்வாக்கை கட்டுப்படுத்தலாம்.

இந்த மாற்றங்கள் வராத நிலையில் அவர்களது வளர்ச்சி தவிர்க்க முடியாது போகும். கீரைக் கடைக்கும் எதிர் கடை தேவை என்பதால், அவர்களது வரவும் அவசியமானதுதான். இப்படி ஒரு போட்டி நிலை அங்கு இல்லாதிருந்தால் இந்த முறையும் தமிழரசு அரசியலில் நிருவாக மாற்றங்கங்கள் வந்திருக்க மாட்டாது என்று உறுதியாக சொல்ல முடியும்.

கடந்தகால தமிழரசுத் தலைமைகள் கொழும்புடன் நெருக்க உறவில் இருந்து வந்ததால், இப்போது புதிதாக தெரிவு செய்திருக்கும் சிரிதரனை அவர்கள் ஜீரணித்துக் கொள்வது சற்றுக் கஷ;டமாகத்தான் இருக்கும்.

இதனால் கொழும்புத் தலைமைகளுக்கும் மேற்கத்திய இராஜதந்திர அனுகுமுறைகளுக்கும் புதிய தலைவருக்கு ஒரு ஆலோசைக்குழு அவசியம். மேலும் இந்திய மற்றும் புலம்பேர் சர்வதேச அமைப்புக்களுடன் உறவுகளை முன்னெடுப்பதிலும் தமிழ் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள் புதிய தலைமக்கு தமது ஆலோசனைகளை வழங்க வேண்டி இருக்கின்றது.

இது தவிர உள்நாட்டில் இருக்கின்ற அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் சிவில் அமைப்புக்களையும் ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் புதிய தலைவருக்குக் கொண்டு வர முடியுமாக இருந்தால் அது அவர் மீது பெரும் நம்பிக்கைளை ஏற்படுத்தும். இதற்காக சில காலம் அவருக்கு அவகாசம் தேவை என்பதனை அவரது அரசியல் எதிரிகளும் நண்பர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

கட்சி யாப்பு ஒரு விடயத்தை உறுதியாக சொல்லி இருக்கின்ற நேரம் சம்பிரதாயங்கள் பற்றி பேசி கட்சி செயல்பாட்டாளர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இந்த முறை தமிழரசுக் கட்சி தலைவர் நியமனம் நடந்திருந்தால் அங்கு நிச்சயம் வெடிப்பு-பிளவு என்று பெரும் குழப்பங்கள் தோன்றி இருக்கும்.

தமிழரசுத் தேர்தல் தெற்கில் அரசியல் கட்சிகள் வைத்திருப்போருக்கும் இது நல்லதொரு முன்மாதிரியும் படிப்பினையும் கூட. எதிர்வரும் காலங்களில் கட்சி செயல்பாட்டாளர்கள் தமது கட்சிகளிடத்திலும் இப்படி ஜனாநாயக தெரிவு முறை கோட்டு நிற்க இந்த தமிழரசு தேர்தல் காரணமாக அமையலாம். கட்சிகளில் இப்படி ஒரு நிலை இல்லாததால்தான் தலைவர்கள் தான்தோன்றிகளாக ஆயுள் முழுவதும் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதையும் நாம் பார்க்க முடியும்.

No agreement till candidate is allowed - Hakeem tells RW

கட்சிகளில் ஜனாநாயக முறைகள் இன்மையால் ரணில் மற்றும் ஹக்கீம் போன்றவர்கள் பல தசாப்தங்களாக கட்சி தலைமைப் பதவிகளில் தொடர்ந்தும் அமர்ந்திருக்க முடிகின்றது. அது மட்டுமல்லாது தமக்கு விசுவாசமானவர்கள்-நண்பர்கள் என்று  செயற்குழுவில் அமர்த்தி ஆயுல் முழுதும் தலைமைப் பதவிக்கு அவர்கள் வேலி சமைத்துக் கொள்கின்றனர். ரணில் செயல்பாட்டால்  ஐக்கிய தேசியக் கட்சி பிளந்து சஜித் அணி என்று ஒன்று தோன்றி இப்போது ஐ.தே.க. மக்கள்  மத்தியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி நிற்கின்றது.

SLMC to vote against no-confidence motion of PM | Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition

 

அதே போன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் ஹக்கீம் பிடியில் சிக்கி அங்கு ஜனநாயகத்துக்கு இடமில்லாது போனதால், அந்தக் கட்சியிலிருந்து பலர் வெளியேறி ஆளுக்கொரு அணி என்று கட்சி சமைத்திருக்கின்றார்கள். இந்த அவல நிலையால் சமூக உணர்வுமிக்க ஹசனலி போன்ற முக்கியஸ்தர்கள் அரசியலில் இருந்து காணாமல் போய்விட்டார்கள். இது சமூகத்துக்கு  ஆரோக்கியமான செய்தியல்ல. எனவே மு.கா. போன்ற சிறுபான்மை கட்சிகளிலும் ஜனநாயக முறை வருவது சமூகத்துக்குப் பாதுகாப்பாக இருக்கும். இது சில உதாரணங்கள் மட்டுமே.

எனது கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் : கட்சி ஆரம்பிக்கும் திட்டம் இல்லை | Virakesari.lk

தற்போது இருக்கின்ற தலைவர்களை விட என்னதான் திறமையானவர்கள் கட்சிகளில் இருந்தாலும் அவர்களும் கட்சித் தலைவர்களாக வந்து நட்டுக்கும் தனது சமூகத்துக்கும் பணி செய்கின்ற சந்தர்ப்பம் இல்லாமல் போய் விடுகின்றது. இன்று நாட்டில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளிலும் போல் இருக்கின்ற தலைவர்கள் தன்னைத் தொடர்ந்தும் அதிகாரத்தில் வைத்திருப்பதற்கான  கட்சி யாப்புக்களை வைத்துக் கொண்டுதான் தமது அரசியல் பிழைப்புக்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் தலைவர்களுக்கு கூஜா தூக்கி அரசியலில் பிழைக்கின்ற ஒரு கூட்டம் தலைவர்களைச் சுற்றி நாட்டில் எப்போதும் காணப்படுகின்றது.

நன்றி: 28.01.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

நீதிபதி கதிரைக்கு வந்த தெய்வம்!

Next Story

ஹூத்தி தாக்குதலில் பற்றி எரிந்த கப்பல் - 22 இந்தியர்கள் என்ன ஆயினர்?