தன் மனைவி என நினைத்து அடுத்தவர் மனைவியை கொன்றவர் கைது

ஆம்பூரில், பிளாட்பாரத்தில் படுத்து துாங்கியவர், தன் மனைவி என நினைத்து, அடுத்தவர் மனைவியை குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை, இந்திரா நகரைச் சேர்ந்தவர் தேவேந்திரன்-50;

மாடு அறுக்கும் தொழிலாளி. இவர் மனைவி ரேணுகாம்பாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.இதனால், திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த விதவை பெண் தனலட்சுமி, 35, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தேவேந்திரன் தினமும் குடித்து விட்டு வந்ததால், கோபித்துக் கொண்டு தனலட்சுமி ஆம்பூருக்கு வந்து, நேதாஜி சாலை பிளாட்பாரத்தில் தங்கினார்.

இங்கு இவரைப் போல நிறைய ஆதரவற்றோர் தங்கியிருந்தனர்.நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு, ஆம்பூர் வந்த தேவேந்திரன், மனைவியை தேடி கண்டுபிடித்து, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார்.

தனலட்சுமி வர மறுத்து, தேவேந்திரனை விரட்டினார்.ஆத்திரமடைந்த தேவேந்திரன், மனைவியை கொலை செய்யும் நோக்கத்தில் மாடு அறுக்கும் கத்தியுடன் ஆம்பூரில் சுற்றிக் கொண்டிருந்தார்.

நேதாஜி சாலை பிளாட்பாரத்தில், சக பெண்களுடன் தனலட்சுமி இரவு, 10:00 மணிக்கு படுத்து துாங்கினார். நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு கத்தியுடன் தேவேந்திரன் அங்கு வந்தார்.

துாங்கிக் கொண்டிருந்த பெண்களில் தன் மனைவி இருக்கிறாரா என பார்த்தார். பெண்கள் அனைவரும் கொசு கடியில் இருந்து தப்பிக்க, முகத்தை மூடியவாறு துாங்கிக் கொண்டிருந்தனர்.

இதில், துாங்கிக் கொண்டிருந்த பெண்களில் ஒருவரை தன் மனைவி என நினைத்து, தேவேந்திரன் கத்தியால் குத்தினார்.

அந்த பெண் அலறியடித்து எழுந்து ஓட முயன்ற போது, மீண்டும், மீண்டும் கத்தியால் குத்தியதில், சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் இறந்தார்.

கத்திக்குத்து வாங்கி, அவர் சரிந்து விழுந்த பின் தான், அப்பெண் தனலட்சுமி இல்லை என்பதே, தேவேந்திரனுக்கு தெரிந்தது. பின்னர் தேடியதில், அந்த பெண்ணுக்கு பக்கத்தில் படுத்திருந்த தனலட்சுமியை கண்டுபிடித்து, அவரையும் கத்தியால் குத்தினார்.

படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் தேவேந்திரனை பிடித்து நையபுடைத்து, ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், ஆம்பூர், கம்பிக்கொல்லையைச் சேர்ந்த நவீத், 30, மனைவி கவுசர், 27, என, தெரியவந்தது. திருட்டு வழக்கில் கைதான நவீத், வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனால் கவுசரை அங்கிருந்தவர்கள் விரட்டி விட்டதால், நேதாஜி சாலை பிளாட்பாரத்தில் அவர் தங்கியிருந்தது தெரியவந்தது.தன் மனைவி குறட்டை விட்டு துாங்குவார் என்பதால், அங்கு குறட்டை விட்டு துாங்கிய கவுசரை, தன் மனைவி என நினைத்து குத்திவிட்டதாக, தேவேந்திரன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

போலீசார் தேவேந்திரனை கைது செய்தனர். படுகாயமடைந்த தனலட்சுமி, வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Previous Story

இரண்டு நாள் வாழ்ந்த குழந்தை மரணம் ஒரு கொலை

Next Story

அரை மணி நேரத்தில் நேட்டோ குளோஷ்-ரஷ்யா