தண்டனையில் இருந்து தப்பிய ‘நல்ல நாஜி’

ஆல்பர்ட் ஸ்பியர் ஹிட்லரின் கட்டட கலைஞராகவும் பிறகு அமைச்சராகவும் இருந்தவர். 1946-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற நியூரம்பெர்க் போர்க் குற்றங்கள் தீர்ப்பாய விசாரணையின் போது, நாஜிக்களின் அட்டூழியங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன், அவர் தன் மீதான பிம்பத்தை கவனமாக மீண்டும் கட்டியெழுப்பினார்.

ஹிட்லரின் அமைச்சர் மரணத் தண்டனையிலிருந்து தப்பியது எப்படி?
ஹிட்லரின் கட்டட கலைஞராகவும் பிறகு அமைச்சராகவும் இருந்த ஆல்பர்ட் ஸ்பியர் நூரெம்பெர்க் போர் குற்ற தீர்பாயத்தில் மரண தண்டனை பெறாமல் தப்பித்தார்.

நியூரம்பெர்க்கில் நடைபெற்றதே, உலகின் முதல் சர்வதேச போர்க்குற்ற தீர்ப்பாயமாகும். அந்த தீர்ப்பாய விசாரணையில் தண்டிக்கப்பட்ட 10 நாஜி அதிகாரிகள் 1946 அக்டோபர் 16 அன்று, தூக்கிலிடப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போரில் தாங்கள் ஆற்றிய பங்கு குறித்து விசாரணையை எதிர்கொண்டவர்களில் சிலர், ஆடம்பரமான மற்றும் மனந்திருந்தாத ஹெர்மன் கோயரிங் போன்றவர்கள். அவர்கள் (இந்தக் குற்றங்களுக்கான) தெளிவான பொறுப்பைக் கொண்ட மூத்த நாஜி தலைவர்கள்.

மற்றவர்கள் மிகவும் இளையவர்கள், தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட ஹென்ரிச் ஹிம்லர் மற்றும் ஜோசப் கோயபல்ஸ் போன்றவர்களுக்கு பதிலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். 21 பிரதிவாதிகள் புதிதாக வரையறுக்கப்பட்ட இனப்படுகொலை குற்றம் உட்பட கொடூரமான அட்டூழியங்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

நடந்தவற்றை சொல்ல வாழ்ந்தவர்களில் ஒருவர் ஆல்பர்ட் ஸ்பியர். இளம் மற்றும் நம்பிக்கையான நபர், முதலில் ஹிட்லரின் கட்டடக் கலைஞராகவும், பின்னர் போர்த் தளவாட உற்பத்தித் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் தான் உத்தரவுகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து வருவதாகக் கூறுவதற்குப் பதிலாக, ஸ்பியரின் கவனமான பதில் அவர் உயிர்வாழ காரணமாக இருந்தது, ஹிட்லரிடம் இருந்து தன்னை விலக்கிக் கொள்வதாக இருந்தது, அதேநேரத்தில் ஆரம்பத்தில் இருந்தே குற்றங்களுக்கான கூட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 20 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு, அவர் ஊடகங்களுக்கு விருப்பமானவராக மாறினார்.

அவர் எழுதிய நினைவுக் குறிப்பு சிறப்பாக விற்பனையானது, “நல்ல நாஜி” என்ற அவரது பிம்பத்தை மெருகேற்ற உதவியது. ஆனால் அவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது உண்மையான வருத்தமா அல்லது அவரது உயிரை காப்பாற்றுவதற்கான ஓர் உத்தியாக இருந்ததா?

ஹிட்லரின் அமைச்சர் மரணத் தண்டனையிலிருந்து தப்பியது எப்படி?
20 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து வெளியே வந்த பிறகு, 1971-ல் ஸ்பியர் பிபிசிக்கு நேர்காணல் அளித்தார்.

விசாரணைகளுக்கு நியூரம்பெர்க்கைத் தேர்ந்தெடுத்தது முக்கியமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நாஜிக்கள் தங்கள் ஆடம்பரமான செயல்களில் ஒன்றாக , நகரத்தில் பெரிய அளவிலான பிரசார பேரணிகளை நடத்தினர்.

இந்த தீய காட்சிகளின் மையத்தில் ஸ்பியரின் ஒளி கதீட்ரல் இருந்தது. இரவு வானத்தைத் துளைக்கும் நூற்றுக்கணக்கான தேடல் விளக்குகளைக் கொண்டிருந்தது. (எதிரி விமானங்களை இரவு வானில் கண்டறியும் சக்தி வாய்ந்த தேடல் விளக்குகள் நூற்றுக்கணக்கில் அருகருகே நிலைநிறுத்தப்பட்டு, அவை விண்ணை நோக்கி ஒளிக்கீற்றை வீசும் வண்ணம், நாஜி பேரணிகளில் பயன்படுத்தப்பட்டது).

கலை விமர்சகர் ராபர்ட் ஹியூஸின் கூற்றுப்படி, ஸ்பியர் “ஒரு காலத்தில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கட்டடக் கலைஞர் மட்டுமல்ல, இதுவரை வாழ்ந்த மிகவும் சக்திவாய்ந்த ஒருவர்” என்கிறார். ஹிட்லரின் பார்வையில், மூன்றாம் பேரரசு (Third Reich – ஹிட்லர் தலைமையிலான ஜெர்மன் அரசு) 1,000 ஆண்டுகள் நீடிக்கப் போகிறது, அதன் கட்டடங்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று எண்ணினார்.

இரண்டாம் உலகப் போர், லெபென்ஸ்போர்ன் திட்டம், குழந்தைகள்
நமீப் பாலைவனத்தில் எடுக்கப்பட்ட ஒரு பழுப்பு நிற ஹைனாவின் (கழுதைப்புலி) புகைப்படம் தற்போது ஒரு முக்கிய விருதைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அந்தப் பாலைவனம் புத்துயிர் பெற்றுள்ளது. அதன் பின்னணியும் மிக சுவாரஸ்யமானது.

ஜெர்மனியில் ஹிட்லர் பதவியேற்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1931 -ல் நாஜி கட்சியில் சேர்ந்தார் ஸ்பியர். சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் கொண்ட கட்டட கலைஞரான ஸ்பியருக்கு அப்போது 25 வயது.

வரலாற்றாசிரியர் ஹெய்க் கோர்ட்மேக்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “ஹிட்லர் தன்னை ஒரு கலைஞராக, ஒரு கட்டடக் கலைஞராக பார்த்தார். அவர் ஸ்பியரை சந்தித்தபோது, இந்த இளைஞனிடம் அவரால் ஆக முடியாத கட்டடக் கலைஞரை ஸ்பியரிடம் பார்த்தார்.” ஹிட்லரின் ஆதரவு, தனது எண்ணத்தை செயல்படுத்தும் அதிகாரத்தை ஸ்பியருக்கு வழங்கியது.

1970 -ல் பிபிசியின் மைக்கேல் சார்ல்டனால் நேர்காணல் செய்யப்பட்ட போது, ஸ்பியர் இப்போது ஹிட்லரை வரலாற்றில் மிகவும் தீயவர்களில் ஒருவராக கருதுவதாகக் கூறினார். இருப்பினும், தனது நண்பருக்கு “சில வசீகரமும் இருந்தது” மற்றும் “மிகவும் சாதாரண மனிதர்” என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

“இதைச் சொல்வது அவசியம் என்று நான் நினைத்தேன், ஏனென்றால் போருக்குப் பிறகு, ஹிட்லர் எப்போதும் இரவு பகலாக சீற்றமடைந்த ஒருவராகவும் விவரிக்கப்பட்ட ஒரு காலகட்டம் இருந்தது.

இது எதிர்காலத்திற்கு ஒரு ஆபத்தாக இருக்கும், ஏனென்றால் இப்போது ஒரு புதிய ஹிட்லர் எங்காவது வந்தால், அவர் இரவு பகலாக கோபம் கொள்ளவில்லை என்றால், ‘அது ஆபத்து இல்லை – அவர் ஹிட்லர் அல்ல’ என்று ஒருவர் கூறக்கூடும். ஆனால் ஹிட்லர் என்ற நபருக்கு பல வேறுபட்ட முகங்கள் இருந்தன. அவர் ஒரு மனிதர்” என்றார்.

“ஒரு புத்திசாலித்தனமான மனிதர், நேர்மையான மனிதர்” என்ற முறையில், ஹிட்லரின் ஆட்சி குற்றம் புரிவதை எவ்வாறு காணத் தவறிவிட்டீர்? அதை ஏற்றுக் கொண்டீரா? என்று ஸ்பியரிடம் கேட்கப்பட்டது . போரின் முடிவில் இருந்த தனக்கும் தற்போது இருக்கும் தனக்கும் வித்தியாசங்கள் உள்ளன என்று ஸ்பியர் கூறினார்.

“1945-ல், நான் ஒரு தொழில்நுட்ப வல்லுநராக இருந்தேன். என் சூழலையொட்டி சிந்திக்கவே நான் கல்வி கற்றேன், பொதுவாக சிந்திக்க அல்ல. பள்ளியில், நாங்கள் எங்கள் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது, ஆனால் அரசியல் பிரச்னைகள் குறித்து எந்த விவாதமும் இல்லை.

நாங்கள் அந்த பிரச்னைகளில் இருந்து கிட்டத்தட்ட விலகிச் சென்றோம், ஹிட்லர் போன்ற ஒரு மனிதர் வந்தபோது அவரைப் பற்றி முழுமையாக சிந்திக்க நாங்கள் தயாராக இல்லை” என்றார்.

நாஜி தலைவரால் ஈர்க்கப்பட்ட தனது தலைமுறையில் வேறு எவரிடமிருந்தும் தான் வேறுபட்டவர் அல்ல என்றும் ஸ்பியர் கூறினார். “ஹிட்லர் ஒரு கால கட்டத்தில் தோன்றினார், அது இளைஞர்களாகிய எங்களுக்கு ஏமாற்றத்தின் காலமாக இருந்தது.

எங்கள் எதிர்காலத்தைப் பற்றி எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, அப்போது ஒரு மனிதன் வந்து, உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, நம்மால் அதைச் செய்ய முடியும், நம்மால் அதை நிர்வகிக்க முடியும், ஜெர்மனி மீண்டும் செழித்து வருகிறது என்று கூறினார்.” என்று அவர் கூறினார்.

ஹிட்லரின் அமைச்சர் மரணத் தண்டனையிலிருந்து தப்பியது எப்படி?
எதிரி விமானங்களை இரவு வானில் கண்டறியும் சக்திவாய்ந்த தேடல் விளக்குகள் நூற்றுக்கணக்கில் அருகருகே நிலைநிறுத்தப்பட்டு, அவை விண்ணை நோக்கி ஒளிக்கீற்றை வீசும் வண்ணம், நாஜி பேரணிகளில் பயன்படுத்தப்பட்டது. ஸ்பியரின் இந்த படைப்பு Cathedral of Light என்றழைக்கப்பட்டது.

ஆனால் நிச்சயமாக எச்சரிக்கை மணிகள் ஒலித்திருக்க வேண்டுமல்லவா? 1934-ம் ஆண்டில், நீண்ட வாட்களின் இரவில் (Night of the Long Knives), ஹிட்லரின் எதிரிகளில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர்.

வொன் பாப்பனின் அலுவலகத்தை பாதுகாப்பு தலைமையகமாக மறுசீரமைக்க ஸ்பியர் அனுப்பப்பட்டார். தனது நினைவுக் குறிப்பான “இன்சைட் தி தெர்ட் ரீச்சில்”, பாப்பனின் உதவியாளர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் காய்ந்த ரத்தக் கறைகளை பார்த்ததை நினைவு கூர்ந்தார். “நான் விலகிச் சென்றேன், அதன் பின்னர் அந்த அறையைத் தவிர்த்தேன்,” என்று அவர் எழுதியுள்ளார்.

அவர் சார்ல்டனிடம் “எந்த எதிர்வினைகளையும் நான் கொண்டிராதது எனது முழுமையான தார்மீக தோல்வியாகும். இப்போது எந்த சாக்குப்போக்கையும் சொல்வது தவறு.

உண்மையில், நான் அந்த ரத்தக் கறையைப் பார்த்ததை என் நினைவிலிருந்து அகற்றிவிட்டேன். அது இனி இல்லை என்று நான் என் வேலையை செய்து வந்தேன். நான் அதைப் பற்றி கொஞ்சம் யோசித்திருந்தால், அந்த நேரத்தில் நான் ஹிட்லரிடமிருந்து விலகிச் சென்றிருப்பேன். ஆனால் நான் செய்யவில்லை.”என்கிறார்.

மூன்றாம் பேரரசில் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர்

ஸ்பியர் தனது லட்சியமாக கொண்டிருந்த கட்டடக்கலை திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது: அது பெர்லினின் முழுமையான புனரமைப்பு, உலகின் எதிர்கால தலைநகரான ‘ஜெர்மானியா’ என்று மறுபெயரிடப்பட இருந்தது. அதன் மையத்தில், ஸ்பியர் வடக்கு-தெற்கு திசையில் ஒரு பரந்த இடத்தை கற்பனை செய்தார்.

இது ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸை விட 16 மடங்கு உயரமான குவிமாடத்துடன் ஒரு பெரிய மண்டபத்தை கொண்டதாகவும் திட்டமிடப்பட்டது. உட்புறம் மிகவும் பரந்ததாக இருந்திருக்கும் என்று கருதப்பட்டது.

அங்கு கூடும் 1,80,000 நாஜிக்களின் சுவாசத்தால் நிரப்பப்பட்ட போது, கூரையில் மழை மேகங்கள் உருவாகியிருக்கலாம். அதற்கு பதிலாக, 1939 -ல் ஹிட்லர் இரண்டாம் உலகப் போரைத் தொடங்கினார், ஐரோப்பாவை ஆறு வருட நரகத்தில் மூழ்கடித்தார்.

1942 -ம் ஆண்டில், அவர் ஸ்பியரை ஆயுத உற்பத்திக்கான அமைச்சராக நியமித்தார். போரின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய அவரது அசாதாரண திறன்களை பயன்படுத்திக் கொண்டார்.

கட்டடக் கலைஞரான ஸ்பியர் மூன்றாம் பேரரசில் தனது 37வது வயதில் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். நாஜி போர் துப்பாக்கிகளுக்கு உணவளிக்க, ஸ்பியர் தனது தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் குவாரிகளில் அடிமை உழைப்பைப் பயன்படுத்தினார்.

70 லட்சத்துக்கும் அதிகமான கட்டாயத் தொழிலாளர்கள் ஜெர்மன் தொழிற்துறையால் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அவர்கள் ஸ்பியரின் மேற்பார்வையில் ஆயுதத் துறையில் பெருமளவில் குவிந்தனர். சிலர் பயங்கரமான சூழ்நிலையில் கொல்லப்பட்டனர்.

வரலாற்றாசிரியர் ஹக் ட்ரெவர்-ரோப்பர் 1996 -ம் ஆண்டு பிபிசி ஆவணப்படமான ‘மன்னிப்பு கேட்ட நாஜி’ ( The Nazi Who Said Sorry), ஸ்பியர் தான் என்ன செய்கிறார் என்பதை அறிந்திருந்தார் என்று கூறினார்.

“அவர் வலிமையான கட்டுப்பாட்டு முறைகளைக் கொண்டிருந்தார், அவர் விரும்பினால் சித்திரவதை முகாம் முறையைப் பயன்படுத்த முடியும், ஆனால் அவர் வேலையைச் செய்தார், அது ஹிட்லரை கவர்ந்தது,” என்று அவர் கூறினார்.

நியூரம்பெர்க் விசாரணைகளில், அடிமை உழைப்பை பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டிற்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு வஞ்சகமான உத்தியை ஸ்பியர் கொண்டிருந்தார்.

அவர் தனது முன்னாள் பிரதிநிதியான ஃபிரிட்ஸ் சாக்கலை ஒரு பலிகடாவாக ஆக்கினார். ஸ்பியரின் சொற்பொழிவு திறன் அல்லது சமூக நுட்பம் எதுவும் இல்லாத சாக்கல், அமெரிக்க வழக்கறிஞர் ரோபர்ட் ஜாக்சனால் அடிமைகளை கையாண்ட “எகிப்தின் அரசர்களுக்குப் பிந்தைய மிகப் பெரிய மற்றும் கொடூரமான ” நபர் என்று வர்ணிக்கப்பட்டார். 1946 அக்டோபர் 16 அன்று சாக்கல் தூக்கிலிடப்பட்டார்.

ஹிட்லரின் அமைச்சர் மரணத் தண்டனையிலிருந்து தப்பியது எப்படி?
ஸ்பியர் எழுதி சிறந்த விற்பனையை கண்ட அவரது நினைவுக் குறிப்பு, “நல்ல நாஜி” என்ற அவரது பிம்பத்தை மெருகேற்ற உதவியது.

1966-ல் செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு, 61 வயதான ஸ்பியர், ஸ்பாண்டாவ் சிறைச்சாலையில் இருந்து வெளியேறினார். ஹிட்லரின் முன்னாள் சிறந்த நண்பரைப் பார்க்க கூடியிருந்த உலக ஊடகங்களின் கவனத்தை அவர் ஈர்த்தார்.

1969 ஆம் ஆண்டில், ஸ்பியர் தனது அதிகம் விற்பனையான நினைவுக் குறிப்பான ‘மூன்றாம் பேரரசின் உள்ளே’ (Inside the Third Reich) வெளியிட்டார். பிபிசியில் இருந்து பிளேபாய் இதழ் (அமெரிக்காவில் வெளியான பொழுதுபோக்கு இதழ்) வரை அனைவருக்கும் அளித்த நேர்காணல்களில், நாஜி ஆட்சியின் குற்றங்களைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக மிகுந்த வெட்கப்பட்ட ஒரு மனிதர் என்ற பிம்பத்தை அவர் நயமாக உருவாக்கினார்.

ஆனால் ஸ்பியர் உண்மையில் இனப் படுகொலை தீமைகளைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு வெறும் தொழில்நுட்ப வல்லுநரா? யூத மக்கள் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி தான் முதன்முதலில் கேள்விப்பட்டது நியூரம்பெர்க்கில் தான் என்று ஸ்பியர் கூறினார்.

எனினும், 1971-ல், அவரது முதல் பிபிசி நேர்காணலுக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர், ஹார்வர்ட் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் எரிக் கோல்ட்ஹேகன், அக்டோபர் 1943 -ல் மூத்த நாஜிக்களின் ஒரு மாநாட்டில் ஸ்பியர் கலந்து கொண்டார் என்பதைக் கண்டறிந்தார், அதில் ஹிம்லர் “யூத மக்களை நிர்மூலமாக்குதல்” பற்றி வெளிப்படையாகப் பேசினார்.

ஸ்பியரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் கிட்டா செரெனி பிபிசியின் ஆவணப்படக் குழுவிடம் கூறுகையில், “வரலாற்றில் மிக மோசமான உரையை” கேட்க அவர் நேரில் அங்கு வந்திருந்தார் என்பதை ஒருபோதும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், ஸ்பியரின் நெருங்கிய சக ஊழியர்களில் மூன்று பேர் கலந்து கொண்டனர் என்றார்.

ஹிம்லர் பேசியதை அவரிடம் அவர்கள் சொல்லியிருப்பார்கள். “அங்கு இருந்தாரோ இல்லையோ -எந்த வித்தியாசமும் இல்லை; அப்போதிருந்து, அவர் அறிந்திருந்தார்,”என்று செரெனி கூறினார்.

ஸ்பியர் 1981 -ல் மற்றொரு பிபிசி நேர்காணலுக்காக லண்டனில் இருந்தார், அப்போது ஹோட்டலில் வைத்து அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அன்றிரவு அவர் தனது 76 வயதில் இறந்தார். அவர் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டிருந்தார்–”அடிமை அரசு: எஸ்எஸ் மேலாதிக்கத்திற்கான ஹென்ரிச் ஹிம்லரின் மாஸ்டர் பிளான்”.

வரலாற்று ஆசிரியர் கோர்ட்மேக்கர் இந்த ஆண்டு பிபிசியிடம் கூறுகையில்: “ஒரு புதிய புத்தகம், ஒரு புதிய கதை, ஒரு புதிய நேர்காணல் மற்றும் அதே நாளில் அவர் தனது ரகசிய காதலியுடன் லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் இறந்தார்.

அவர் இரட்டை வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை இப்போது உலகம் உணர்ந்தது. லண்டனில் இருந்த காதலியைப் பற்றி யாருக்கும் தெரியாது. அவரது மனைவி அவரது குழந்தைகளுக்கும் தெரியாது. இங்கேயும், இரட்டை வாழ்க்கை, ஒரு துரோகம். இதுவே வழக்கமான ஸ்பியர்” என்றார்.

ஸ்பியரின் கட்டடக்கலையின் பெரும்பகுதி எஞ்சியிருக்கவில்லை, ஆயிரம் ஆண்டுகால பேரரசுக்காக வடிவமைக்கப்பட்ட அவரது கட்டடங்கள் பெரும்பாலும் நியூரம்பெர்க் விசாரணைகள் தொடங்குவதற்கு முன்பே வெற்றி பெற்ற நேச நாடுகளால் அழிக்கப்பட்டன.

நியூரம்பெர்க்கில் அவரது முடிக்கப்படாத கட்டடத்தில் இப்போது ஒரு நிரந்தர கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றில் ஓர் எச்சரிக்கையாக செயல்படுகிறது. அவரது கட்டடக்கலையின் இடிபாடுகள் ஓர் எச்சரிக்கையாக நிற்கும் போது, ஸ்பியர் மிகவும் இருண்ட ஒன்றை உருவாக்குவதில் அவர் வகித்த பங்கை முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை.

Previous Story

50 ஆண்டு"விஸ்கி" போர்.. !

Next Story

டிரம்புக்கு எதிரான 'நோ கிங்ஸ்' போராட்டம்