டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை: எது உண்மை? –

-வினீத் கரே-

டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட்டது. கரௌலி, கர்கோன் போன்ற இடங்களுக்குப் பிறகு, வகுப்புவாதப் பதற்றத்தின் வெப்பம் டெல்லியின் ஜஹாங்கிர்புரியை அடைந்துள்ளது.

2020ஆம் ஆண்டு கலவரத்திற்குப் பிறகு டெல்லியில் நடந்த முதல் பெரிய வகுப்புவாத மோதல் இதுவாகும். இருப்பினும், ஜஹாங்கிர்புரியில் கலவரம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக பலரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது, ஆனால் அந்தப்பகுதி மக்களிடம் பேசும்போது பதற்றம் தெளிவாகத் தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை நாங்கள் ஜஹாங்கிர்புரி காவல் நிலையத்தை அடைந்தபோது, கைது செய்யப்பட்ட ஆண்களின் குடும்பத்தைச்சேர்ந்த பெண்கள் பகலில் கொளுத்தும் வெய்யிலில் மணிக்கணக்காக காவல்நிலைய வாயிலுக்கு வெளியே காத்திருந்தனர். உண்ணா நோன்பு கடைப்பிடிப்பதால் சோர்வாக காணப்பட்ட அந்தப்பெண்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

இறுதியில் அவர்களை காவல் நிலையத்தை விட்டு வெளியேறுமாறு கூறிய போலீஸார், பிரதான கேட்டை அடைத்தனர். யாருக்கு இடையில் மோதல் நடந்ததோ, அவர்கள் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை பிடித்து வந்துள்ளனர் என்று ஒரு பெண் கூறினார்.

“என் மைத்துனரை தீவிரவாதி என்று சொல்கிறார்கள். அவர்கள் உண்மையை பொய்யாக்கி, பொய்யை உண்மையாக்குகிறார்கள்,” என்றார் மற்றொருவர்.

“முஸ்லிம்களாகிய நாங்கள் விலங்குகளா? எங்கள் குழந்தைகளுக்கு குற்றப்பின்னணி இருந்தால், அவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பளிக்க முடியாதா?” என்று வேறு ஒரு பெண் கேள்வி எழுப்பினார்.

ஜஹாங்கிர்புரியில் இது போன்ற ஒரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்றும், ஆனால் சனிக்கிழமை வன்முறைக்குப் பிறகு இங்கு பதற்றம் நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த வன்முறை எப்படி நடந்தது, ஏன் நடந்தது, முன்பு போலவே பதில்கள் மாறுபட்டு உள்ளன. வன்முறையின் வைரலான வீடியோக்களை மக்கள் பார்த்தவண்ணம் இருப்பதை காணமுடிகிறது.

மக்களிடையே கோபம்

கௌரிசங்கர் குப்தாவும் சனிக்கிழமை ஊர்வலத்தில் கலந்து கொண்டார். ஜஹாங்கிர்புரி ‘சி பிளாக்’ மசூதியின் முன் ஊர்வலம் சென்றடைந்த போது கல் வீச்சு தொடங்கியது என்று அவர் கூறினார்.

மசூதியின் மேற்கூரையில் இருந்தும் கல் வீசப்பட்டது என்று கௌரிசங்கர் கூறினார். எனினும், மசூதியின் மேலாளர் முகமது சலாவுதீன் பிபிசியிடம் பேசியபோது இதை மறுத்தார். வீடுகளின் மேலிருந்து பெண்களும் ஊர்வலத்தின் மீது கற்களை வீசினர் என்று கௌரிசங்கர் மேலும் தெரிவித்தார்.

மிகவும் சிரமப்பட்டு உயிரை பணயம் வைத்து அனுமன் சிலையை ஊர்வலத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தோம். முழு திட்டமிடல் இருந்தது. நாங்கள் சுற்றி வளைக்கப்பட்டு கற்கள், வாள்கள், கத்திகளால் தாக்கப்பட்டோம். அங்கு இருந்த ரேஷன் வண்டியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது. வாகனங்கள் கவிழ்க்கப்பட்டுள்ளன. சிறிது தூரத்தில் மளிகைக்கடை உள்ளது. கடையின் பணம் சூறையாடப்பட்டுள்ளது. ஒரு பைக்கிற்கு தீவைக்கப்பட்டுள்ளது.”

ஊர்வலத்தின் போது சர்ச்சைக்குரிய முழக்கங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை என்றும் மக்கள் தாக்கப்பட்டபோது ஜெய் ஸ்ரீராம் என்று குரல் எழுப்பியதாகவும் கௌரிசங்கர் கூறுகிறார்.

“கற்கள், வாள்கள், கத்திகளால் அவர்கள் தாக்கினர். பெட்ரோல் குண்டுகள் கூட வீசப்பட்டன. துப்பாக்கிகளாலும் சுட்டனர். நான்கு போலீஸ்காரர்கள் காயமடைந்துள்ளனர்,”என்று கெளரி சங்கர் குறிப்பிட்டார்.

ஊர்வலத்தில் வீசப்பட்ட கற்கள்

ஜஹாங்கிர்புரியின் குறுகிய வீதிகள் வழியாக, ஊர்வலத்தின் ஏற்பாட்டாளர் சுகேன் சர்க்காரை சந்திக்கச்சென்றோம். அவரைச்சுற்றியுள்ள சூழல் பதட்டமாக இருந்தது. மக்கள் கோபமாக இருந்தனர்.

அனுமான் கோவிலின் முன் தரையில் கம்பளத்தின் மீது அமர்ந்திருந்த சுகேன் சர்க்கார், ஊர்வலத்தின் மீது நூற்றுக்கணக்கானவர்கள் கற்களை எறிந்தனர் என்று குறிப்பிட்டார்.

” எங்கள் பக்கமும் மக்கள் இருந்தனர். ஆனால் நாங்கள் சண்டையிடும் மனநிலையில் இல்லை. நாங்கள் ஊர்வலமாக சென்று காவிக்கொடியைக் கொண்டு வந்தோம். நாங்கள் நிராயுதபாணிகளாக இருந்தோம். மேலே இருந்து கற்கள் மற்றும் கண்ணாடிகளின் மழை பெய்தது போல இருந்தது.”என்றார் அவர்.

சுகேன் தனது ஆடைகளை நீக்கி கற்களால் காயப்பட்ட இடத்தை எங்களிடம் காட்டினார்.

ஆனால் இந்த கல் வீச்சு ஏன் நடந்தது? இந்தக்கேள்விக்கு பதிலளித்த சுகேன் சர்க்கார், “ஒரு வேளை அவர்களுக்கு ஜெய் ஸ்ரீ ராம் மீது பொறாமை இருக்கக்கூடும், அவர்களுக்கு காவி நிறத்தைப் பார்த்து பொறாமை இருக்கக்கூடும்?” என்று கூறுகிறார்.

கல்வீச்சுக்கு ஆதாரம் உள்ளது

சுகேனுக்கு அருகே கூலர் முன் அமர்ந்திருந்த பாபா யோகி ஓம்நாத், “என் மார்பு மீது கல் பட்டது. கால் மீதும் பட்டது. பாருங்கள் என் கால் வீங்கியிருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே தனது காலைக்காட்டினார்.

“கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. பைக்குகள் எரிக்கப்பட்டன. மசூதியின் மேல் செங்கற்கள் வைக்கப்பட்டன. என்னிடம் ஆதாரம் உள்ளது. கூரைகளில் இருந்து கல் மழை பெய்தது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இறுதி வரை நான் போராடினேன்,” என்றார் அவர்.

இந்த விஷயத்தை கவனமாக கையாள்வதுதான் நிர்வாகத்தின் முன் உள்ள சவால் என்று அங்கிருந்து கிளம்பும் போது எங்களுக்குத் தோன்றியது.

பள்ளிவாசல் மேலாளர் விளக்கம்:

மசூதியைச் சுற்றியுள்ள மக்கள் சொல்லும் வித்தியாசமான கதை

ஜஹாங்கிர்புரி சி பிளாக்கின் நெரிசலான பகுதி, சம்பவம் நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது. இங்கு பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். இங்கு வன்முறை எப்படி தொடங்கியது ? என்பதன் மாறுபட்ட கதையை இங்குள்ளவர்கள் சொல்கின்றனர்.

ஒரு அறையில் அமர்ந்திருந்த மசூதியின் மேலாளர் முகமது சலாவுதீன், “எங்கள் குழந்தைகள் இறுதிவரை அமைதியாக இருந்தனர். மசூதி மீது தாக்குதல் அல்லது கல் வீச்சு நடப்பதை பார்த்தபோது, எங்களால் தாங்க முடியவில்லை,” என்றார்.

மசூதிக்குள் இருந்து கல் வீச்சு எதுவும் நடக்கவில்லை, நடந்தது அனைத்துமே சாலையில்தான் நடந்தது என்கிறார் அவர். இந்த மசூதி 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகவும், பல வருடங்களாக அதனை தான் பராமரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

சி பிளாக்கில் வசிக்கும் பெரும்பாலான முஸ்லிம்கள் சிறு வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஏழை வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அங்கு அமர்ந்திருந்த இனாமுல் ஹக் கூறினார். மேலும், “ஊர்வலத்தில் இருந்து முதலில் கற்கள் எறியப்பட்டன. அதற்கு பதிலடியாக கல்வீச்சு நடந்தது,” என்று முகமது சலாவுதீன் கூறுகிறார்.

மசூதியில் கொடி ஏற்ற முயற்சி

முதலில் சென்ற ஊர்வலங்கள் அமைதியாக நடந்தன. ஆனால் பின்னர் நிலைமை மாறியது என்கிறார் ஊர்வலம் நடைபெற்றபோது அங்கிருந்த் ஷஹாதத் அலி.

மொபைலில் வீடியோ ஒன்றை அவர் காட்டினார். இது ஊர்வலத்தின் வீடியோ என்று அவர் கூறினார். அதில் சிலர் வாள் ஏந்தியபடி காணப்பட்டனர்.

இஃப்தாரி (உண்ணா நோன்பை முடிக்கும் நேரம்) நேரத்தில் தான் வீட்டில் உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்ததாகவும், திடீரென்று ஊர்வலத்தில் இருந்தவர்கள் கற்களை வீசி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டபடி மசூதிக்குள் நுழைந்ததாக கூறப்படுவதாகவும் அவர் சொன்னார்.

அவர்கள் மசூதியில் கொடியை ஏற்ற முயன்றதாக ஷஹாதத் குற்றம் சாட்டுகிறார். “எங்கள் பெரியவர்கள் விளக்க முயன்றனர், ஆனால் யாரும் புரிந்து கொள்ளவில்லை,”என்றார் அவர்.

திட்டமிட்ட சதி-இது போல் நடந்ததில்லை

ஜஹாங்கிர்புரியில் நடந்திருப்பது யாரோ திட்டமிட்டு செய்த சதி என்று பாஜகவுடன் தனக்கு தொடர்புள்ளதாக கூறிக்கொள்ளும் ரோஷன் தெரிவிக்கிறார்.

“இதில் யாரோ ஒருவரின் கை வலுவாக உள்ளது. இது எங்கள் ஜஹாங்கிர்புரியில் ஒருபோதும் நடந்ததில்லை. இது திட்டமிட்டு செய்யப்பட்டது.”என்று அவர் குறிப்பிட்டார்.

ஜஹாங்கிர்புரி காவல் நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த,கைது செய்யப்பட்ட ஒருவரின் உறவினர் , “அவர்கள் (ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள்) கையில் வாள், கைத்துப்பாக்கி வைத்திருந்தனர். இந்தியாவில் இருக்கவேண்டுமென்றால் நீங்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்ல வேண்டும் என்றார்கள். . இது எங்காவது எழுதியிருக்கிறதா என்ன?”என்று கேள்வி எழுப்பினார்.

வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சி பிளாக்கில் வசிப்பதாக ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சாஜ்தா என்ற பெண்மணி, “இவர்கள் அனைவரும் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள். ஆதாரத்தைப் பாருங்கள். முஸ்லிம்கள் சொல்வதை யாரும் நம்புவதில்லை. ஊடகவியலாளர்கள் ஏற்கனவே முஸ்லிம்களை இழிவுபடுத்தி வைத்துள்ளனர். பங்களாதேஷ் மற்றும் கொல்கத்தா மக்களின் பேச்சு மொழி மாறுபட்டது,” என்றார்.

காவல் துறை அதிகாரி விளக்கம்

சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி காவல்துறையின் சிறப்பு ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) தீபேந்தர் பதக், “காவல்துறை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறது. இந்த கலவரத்தில் விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அல்லது உதவியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,”என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

முகமது அன்சாரின் கைது

கைது செய்யப்பட்டவர்களில் முகமது அன்சாரும் அடங்குவார். நாங்கள் அவரது வீட்டை அடைந்தபோது, அவரது வீட்டிற்கு வெளியே ஒரு கூட்டம் கூடியிருந்தது.

அவர் மக்களை காப்பாற்ற சம்பவ இடத்திற்கு சென்றார் என்று அவரது மனைவி சகினா பிவி கூறினார். அவரது பக்கத்து வீட்டுக்காரர் கமலேஷ் குப்தாவும் இதே போன்ற ஒன்றைச் சொன்னார்.

மறுபுறம், அன்சார் ஒரு குற்றப் பின்னணி கொண்டவர் என்றும் அவர் போலீஸ் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் சிறப்பு போலீஸ் கமிஷனர் தீபேந்திர பதக் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாகம் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தெருக்களில் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்படுகின்றன. ஆனால் மக்களுடன் பேசும்போது, ஒருவரையொருவர் பற்றிய பாதுகாப்பின்மை உணர்வு ஆழமடைகிறது, இடைவெளி அதிகரிப்பதாக தோன்றுகிறது.

காவல்துறை குறித்து கேள்வி

ஜஹாங்கிர்புரி வன்முறை தொடர்பாக இதுவரை 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் சிறார்கள். கைது செய்யப்பட்ட 14 பேரும் ஞாயிற்றுக்கிழமை ரோகிணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அன்சார் மற்றும் அஸ்லம் என்ற இருவரையும், ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது நடந்த வன்முறை சம்பவத்தை தானாக முன்வந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதுவரை நடந்துள்ள டெல்லி காவல்துறையின் விசாரணை பக்க சார்புடையதாகவும், வகுப்புவாத ஆதரவாகவும் இருப்பதோடு கூடவே உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்கும் முயற்சியாகவும் உள்ளது என்று மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.

Previous Story

GO HOME GOTA வந்த லசந்த மனைவி!

Next Story

பொலிஸார் வெட்கப்பட வேண்டும்! ரம்புக்கனை சம்பவம்:மஹேல