ரஷ்யா
இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: டொனால்ட் டிரம்ப்பை வாழ்த்தும் எண்ணம் புடினுக்கு இல்லை. எங்கள் நாட்டிற்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள நாட்டை பற்றி நாம் பேசுகிறோம் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
அமெரிக்க தேர்தலை ரஷ்யா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்நாட்டிடம் இருந்து உறுதியான அறிவிப்புகள் வெளியாகும் வரை அதிகாரப்பூர்வமாக எதையும் கூற மாட்டோம். தற்போதைய அதிபர் இன்னும் ஒரு மாதம் பதவியில் உள்ளதால், இன்னும் நாம் காத்திருக்க வேண்டி இருக்கும்.டிரம்ப் ஏற்கனவே அதிபராக இருந்த போது வெளியிட்ட அறிக்கைகள் வேறு தொனியில் இருந்தன. எனவே நாங்கள் அனைத்தையும் கவனமாக பகுப்பாய்வு செய்து கவனிக்கிறோம். டிரம்ப்பின் செயல்பாடுகள் அடிப்படையிலேயே முடிவு எடுப்போம். மோதலை முடிவுக்கு கொண்டு வரும் இடத்தில் அமெரிக்க உள்ளது. ஆனால், இதனை ஒரே நாள் இரவில் எடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
சீனா
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது: பரஸ்பர மரியாதை, அமைதியான சூழ்நிலை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்கா உடனான உறவை நாங்கள் கையாள்வோம். அமெரிக்க மக்களின் விருப்பத்தை நாங்கள் மதிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்கா – சீனா இடையிலான உறவு சீரானதாக இல்லை. இச்சூழ்நிலையில், சீனாவின் இந்தக் கருத்து, அரசியல் விளைவுகளை பொருட்படுத்தாமல், அமெரிக்க நிர்வாகத்துடன் உறவை தொடர அந்நாடு விரும்புவதை காட்டுகிறது.
ஈரான்
ஈரான் அரசின் செய்தித்தொடர்பாளர் பதேமே மொஹஜெரானி கூறியதாவது: அமெரிக்காவில் யார் அதிபராக வந்தாலும், ஈரான் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இருக்காது. தேவையான நடவடிக்கைகள் முன்கூட்டிய திட்டமிடப்பட்டு உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஈரானுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இரு நாடுகளுக்கு இடையிலான பொதுக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஹமாஸ்
பாலஸ்தீனம் குறித்து டிரம்ப் எடுக்கும் முடிவை பொறுத்தே அவரை மதிப்பிடுவோம் என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.