கடந்த வார இறுதி நாட்களில் அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் மற்றும் அதிபரின் அதிகாரத்தை அதிகரிக்கும் அவரின் முயற்சிகளுக்கு எதிராக நடைபெற்ற “நோ கிங்ஸ்” போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சனிக்கிழமை நியூயார்க் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அமெரிக்க இடதுசாரிகளுக்கு தேசிய அரசியலில் எந்த அதிகாரமும் இல்லாத நிலையில் இந்தப் போராட்டங்கள் ஜனநாயக கட்சியினர், தாராளவாதிகள் மற்றும் டிரம்ப் எதிர்ப்பு குடியரசு கட்சிக்காரர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்தனர்.
போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன?
சனிக்கிழமை அன்று நடைபெற்ற போராட்டங்களில் சிகாகோ, நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலிஸ் போன்ற பெருநகரங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறு நகரங்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது.
ஜூன் மாதம் நடைபெற்ற “நோ கிங்ஸ்” பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை மிஞ்சியது.
குடியரசு கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவிற்கு எதிரானது எனக் குறிப்பிட்டனர். அக்கட்சியைச் சேர்ந்த சில ஆளுநர்களும் தங்களின் மாகாணங்களில் வன்முறை ஏற்படலாம் எனக் கருதி காவல்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருந்தனர்.
ஆனால் இந்த பெருந்திரளான பேரணி வன்முறையாக அல்லாமல் கொண்டாட்டமாக அமைந்தன. நியூயார்க் நகரில் போராட்டம் தொடர்பாக எந்த கைதும் மேற்கொள்ளப்படவில்லை, வாஷிங்டனில் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

தலைநகர் வாஷிங்டன் உட்பட பல நகரங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.
“இந்த நாட்டின் வரலாற்றில் நடைபெற்ற எந்தப் போராட்டத்தையும் விட அதிக அளவிலான மக்கள் இதில் கலந்து கொண்டனர். நாம் சுதந்திரமானவர்கள், நம்மை யாரும் ஆள முடியாது, நமது அரசு விற்பனைக்கு கிடையாது என்பதை அமெரிக்க மக்கள் உரக்கச் சொல்கிறார்கள்.” என்று வாஷிங்டன் பேரணியில் கலந்து கொண்ட கனக்டிகட் செனடர் கிறிஸ் மர்ஃபி தனது உரையில் தெரிவித்தார்.
நோ கிங்ஸ் போராட்டங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த வெள்ளை மாளிகையின் துணை பத்திரிகை செயலாளர் அபிகெய்ல் ஜேக்சன், “யார் கவலைப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்றை ட்ரூத் சோசியல் பக்கத்தில் பகிர்ந்தார். டிரம்ப் கிரீடம் அணிந்து ஜெட் விமானத்தை ஒட்டியபடி போராட்டக்காரர்கள் மீது மனித கழிவுகளைக் கொட்டுவதைப் போல அந்த காணொளி அமைந்துள்ளது.
இந்தப் போராட்டங்களின் முக்கியத்துவத்தை குடியரசுக் கட்சியினர் குறைத்துப் பேசி வருகின்றனர். இதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் கருத்துக் கணிப்பில் சரிந்து வரும் டிரம்புக்கான ஆதரவும் ஜனநாயக கட்சி கடந்த தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
ஜனநாயக கட்சியின் நிலை என்ன?
கருத்துக் கணிப்புகளில் மூன்றில் ஒருவர் மட்டுமே ஜனநாயக கட்சியை சாதகமாகப் பார்க்கின்றனர், கடந்த சில தசாப்தங்களில் இது மிகவும் குறைவே. மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் எவ்வாறு டிரம்புக்கு வலுவான எதிர்ப்பை வழங்க முடியும் என ஜனநாயக கட்சிக்காரர்களும் குழம்பிப் போய் உள்ளனர்.
தாராளவாதிகள் பல்வேறு காரணங்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரம்பின் தீவிரமான குடியேற்ற கொள்கைகள், வரிக் கொள்கைகள், அரசாங்க நிதி ரத்து, வெளியுறவு கொள்கை, அமெரிக்க நகரங்களில் தேசிய பாதுகாப்பு படைகளை அனுப்புவது மற்றும் அதிபருக்கான அதிகாரங்களை விதிமுறைகளை மீறி பயன்படுத்துவது போன்றவைகளுக்கு எதிராக இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

அதிபருக்கான அதிகாரங்களை விதிமுறைகளை மீறி பயன்படுத்துவதற்கு எதிராக இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.
இதில் ஜனநாயக கட்சி தலைவர்களும் விமர்சிக்கப்பட்டனர்.
“நாங்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறோம், அதனால் வெளிப்படையாக பேசவில்லை. நாங்கள் அனைவரையும் தாக்கிப் பேச வேண்டும் என நினைப்பது உங்களுக்கு தெரியும், ஆனால் அது எல்லா நேரங்களிலும் வேலை செய்யாது.” என போராட்டத்தில் கலந்து கொண்டவர் தெரிவித்தார்.
தற்போது நான்காவது வாரத்தை நெருங்கியுள்ள அரசு நிர்வாக முடக்கத்தை ஜனநாயக கட்சிக்காரர்கள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய மத்திய அரசின் செலவீனங்களுக்கு குறுகிய கால நீட்டிப்பு வழங்க அவர்கள் மறுத்து வருகின்றனர். .
ஏனெனில், இந்த ஆண்டின் இறுதியில் காலாவதியாக இருக்கும் வருமானம் குறைந்த அமெரிக்கர்களுக்கான மருத்துவ காப்பீடு சலுகைகளுக்கு தீர்வுகாண இருதரப்பு ஒப்பந்தம் இல்லாமல் காலநீட்டிப்பு வழங்க மறுத்து வருகின்றனர்.
ஜனநாயக கட்சியினர் சிறுபான்மையில் இருந்தாலும் சில செனட் நாடாளுமன்ற விதிகளின்படி அவர்களுக்கு இன்னும் சில அதிகாரங்கள் இருக்கின்றன. மக்கள் தற்போதைய நிலைக்கு பெரும்பாலும் டிரம்ப் மற்றும் குடியரசு கட்சியையே குற்றம்சாட்டி வருகின்றனர்.
யாருக்கு அழுத்தம்
ஆனால் இந்த உத்தியில் சில சவால்களும் உள்ளன. நிர்வாக முடக்கத்தால் ஜனநாயக கட்சியினருக்கு ஏற்படும் பிரச்னைகள் இனிவரும் வாரங்களில் அதிகரிக்கவே செய்யும்.
பல மத்திய அரசு பணியாளர்கள் சம்பளம் கிடைக்காமல் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். வருமானம் குறைந்தவர்களுக்கான உணவு திட்டத்திற்கான நிதியுதவியும் நின்றுவிடும் நிலையில் உள்ளது. அமெரிக்க நீதித்துறையும் தங்களின் வேலைகளை குறைத்துக் கொண்டுள்ளது.
இந்த முடக்கத்தைப் பயன்படுத்தி டிரம்ப் நிர்வாகம் ஜனநாயக கட்சி ஆளும் மாகாணங்கள் மற்றும் நகரங்களைக் குறிவைத்து மத்திய அரசு பணியாளர்களை பணிநீக்கம் செய்வது மற்றும் செலவுகளைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால் யதார்த்தம் என்னவென்றால் செனட்டில் உள்ள ஜனநாயக கட்சி தலைவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான வழியைக் கண்டடைய வேண்டும். ஆனால் போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சங்களை நிறைவேற்றுவது அவர்களுக்கும் கடினமாக இருக்கும்.
“நாங்கள் டிரம்புடன் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டால் அடுத்த வாரமே அவர் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதையும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை ரத்து செய்வதையும் பொது சுகாதார நிதிகளை ரத்து செய்வதையும் மேற்கொள்வார். அதைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை.” என வெர்ஜினியாவைச் சேர்ந்த ஜனநாயக கட்சியின் செனடரான டிம் கெய்ன் என்பிசி தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டால் அதை மாற்றவே கூடாது என்கிற ரீதியிலான ஒப்பந்தத்தைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் மத்திய அரசு நிர்வாக முடக்கம் நவம்பர் மாதத்தின் தொடக்கம் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
அரசு நிர்வாக முடக்கம் நவம்பர் மாதத்தின் தொடக்கம் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்போது சில மாகாணங்களில் தேர்தல் நடைபெற உள்ளது, கடந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது.
மாகாணங்கள் சட்டசபை மற்றும் ஆளுநருக்கான தேர்தல்கள், “நோ கிங்ஸ்” போராட்டத்தில் வெளிப்பட்ட டிரம்ப் எதிர்ப்பு மனநிலை ஜனநாயக கட்சியினருக்கு தேர்தல் வெற்றியாக மாறுகிறதா என்பதற்கான முன்னோட்டத்தை வழங்கும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெர்ஜினியா மாகாண ஆளுநர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் வென்றார். இந்த மாகாணம் அதற்கு முந்தைய அதிபர் தேர்தலில் இடதுசாரி சார்பு கொண்டதாக இருந்தது.
இங்கு குடியரசு கட்சியின் வெற்றி அப்போதைய அதிபர் ஜோ பைடன் மீதான அதிருப்தியின் ஆரம்பக்கட்ட வெளிப்பாடாக இருந்தது. இம்முறை ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிகெய்ல் ஸ்பான்பெர்கர், கருத்துக்கணிப்புகளில் குடியரசு கட்சி வேட்பாளரை விட முன்னணியில் இருக்கிறார்.
கடந்த அதிபர் தேர்தலில் நியூ ஜெர்சி மாகாணத்தில் 6% வித்தியாசத்திலே டிரம்ப் தோற்றார். ஆனால் இந்த வித்தியாசம் 2020-இல் பைடன் (16%) மற்றும் 2016-இல் ஹிலாரி க்ளிண்டன் (14%) போட்டியிட்ட போது இருந்த நிலையிலிருந்து கணிசமாக குறைந்துள்ளது. இங்கு நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஆளுநர் தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகிறது.
நியூ ஜெர்சியில் நடைபெற்ற நோ கிங்ஸ் பேரணியில் பேசிய ஜனநாயக கட்சியின் தேசிய குழு தலைவர் கென் மார்டின், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வர இருக்கின்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
“இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்வது ஒரு விஷயம், ஆனால் போட்டியிட்டு சில அதிகாரத்தை திரும்பப் பெறுவது இன்னொரு விஷயம்.” எனத் தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்குள்ளுமே விரிசல்கள் இருப்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன.
நவம்பரில் நடைபெற உள்ள தேர்தல்கள், இடதுசாரி வாக்காளர்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்க டிரம்புக்கு எதிரான மனநிலை மட்டும் போதுமா என்பதற்கான பரிசோதனையாக இருக்கும்.
இவை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களுக்கான சிறிய முன்னோட்டம் மட்டுமே, அந்த தேர்தல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எந்தக் கட்சி கட்டுப்படுத்தப்போகிறது என்பதை தீர்மானிக்கும். இடைக்கால தேர்தல்கள் டிரம்பின் ஆட்சிக் காலத்தின் செயல்பாடு மீதான மதிப்பீட்டையும் ஜனநாயக கட்சியினருக்கு வழங்கும்.
சனிக்கிழமை போராட்டங்களின் செய்தி என்பது டிரம்பிற்கு எதிராக ஒருங்கிணைவதாகவே இருந்தது. இந்தச் சூழலில் ஜனநாயக கட்சியினர் ஆட்சிக்கு வந்து என்ன செய்வார்கள் என்பது பற்றி அக்கறை குறைவாகவே இருக்கிறது.
எனினும் ஜனநாயக கட்சிக்குள்ளுமே விரிசல்கள் இருப்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன.
முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸின் புத்தகத்தை விளம்பரப்படுத்தும் பயணங்களிலும், பைடன் நிர்வாகத்தின் கீழ் எடுக்கப்பட்ட மத்திய கிழக்கு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாலத்தீன ஆதரவு போராட்டக்காரர்களால் இடையூறு ஏற்படுகிறது.
திருநர் உரிமை உள்ளிட்ட சமூக கொள்கைகளை தவிர்த்துவிட்டு பொருளாதார பிரச்னைகளின் மீது கவனம் செலுத்துவதற்கான திட்டங்களுக்கும் இடதுசாரி தரப்பிலிருந்தே கண்டனங்கள் எழுகின்றன.
மெய்ன், மாசசூசெட்ஸ், கலிஃபோர்னியா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கான ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழம்பெரும் அரசியல்வாதிகளுக்கு எதிராக இளம் வேட்பாளர்களும் மத்திய கொள்கை கொண்டவர்களுக்கு எதிராக தாராளவாதிகளும் நிறுத்தப்படலாம்,
இந்தப் போட்டிகள் ஆற்ற முடியாத பழைய அரசியல் காயங்களை மீண்டும் திறக்கலாம். அத்தகைய சூழலில் கட்சி எதிர்கொண்டிருக்கும் சவால்களை சமாளிக்க பேரணிகள் மட்டும் போதாது.