ஞானசார முன்னிலையில் ஏன் சாட்சி வழங்கினோம்!

“ஒரே நாடு ஒரே சட்டம்“ ஜனாதிபதி செயலணியில் இன்றைய தினம் கலந்து கொண்டு எம் தரப்பு நியாயங்களை முன்வைத்தோம்.

பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் “ஒரே நாடு ஒரே சட்டம்“ ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாரிய வாதப் பிரதிவாதங்கள் நம் சமூகத்திலும் பிற சமூக மட்டத்திலும் இருப்பது உண்மைதான்.

ஆனாலும், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குறித்த செயலணியின் பரிந்துரைகள் எதிர்காலத்தில் தேசிய மட்டத்தில் பல தாக்கங்களை செலுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஞானசார தேரரின் செயல்பாடுகள் நமக்கு பிடிக்கா விட்டாலும், குறித்த செயலணி நாடு முழுவதும் கருத்துக்களை கேட்டு சாட்சியங்களை பதிவு செய்து வரும் நிலையில் பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் போது சாட்சி சொன்னவர்களின் சாட்டியத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் நிலை வரும்.

இதுவரை சாட்சி கூறச் சென்ற பலர் முஸ்லிம் தனியார் சட்டம், உலமா சபையின் பத்வா போன்ற பல விவகாரங்களை பேசியிருப்பதை ஊடகங்கள் காட்சிப்படுத்தின.

வழங்கப்பட்ட சாட்சிகள் பொய்யானது என்றால், அல்லது பிழையானது என்றால் அதனை முகநூலிலும் ஊடகங்களிலும் பேசிக் கொண்டிருப்பதாலோ கமண்ட் அடிப்பதினாலோ எந்த மாற்றமும் நிகழாது.

இந்த ஆபத்தான நிலையை தவிர்க்க வேண்டுமெனில் சமூகத்தைப் பற்றி பிழையான பார்வை முன்வைக்கப்படுகிறது என்று பேசிக்கொண்டிருக்காமல் குறித்த பிழைகளை சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று கூற வேண்டும். நம் தரப்பு நியாயங்களை ஆதாரங்களுடன் சாட்சியங்களாக பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் இதன் எதிர்கால ஆபத்தை ஓரளவுக்காவது நாம் தவிர்க்க முடியும்.

அந்த அடிப்படையில் தான் இன்றைய தினம் “ஒரே நாடு ஒரே சட்டம்“ ஜனாதிபதி செயலணியின் BMICH காரியாலயத்திற்கு நேரில் சென்று ஆதாரங்களுடன் நாம் சாட்சியம் வழங்கியுள்ளோம்.

ஷரீஆ சட்டம் என்றால் என்ன?

மாற்று மதத்தினரை கண்ட இடத்தில் கொலை செய்ய வேண்டும் என குர்ஆன் கூறுகிறதா? அதன் விளக்கம் என்ன?

இஸ்லாம் கூறும் ஜிஹாத் என்பது ஒரு அரசாங்கம் தனது நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு செய்யும் யுத்தமே தவிர தனித்தனிக் குழுக்கள் செய்யும் தாக்குதல் ஜிஹாத் அல்ல அது தீவிரவாதம் அதனை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை என்பது பற்றிய தெளிவுகள்.

பயங்கரவாதத்தை ஒழிக்கவும் தாய் நாட்டை பாதுகாக்கவும் கடந்த காலங்களில் நாம் செய்த சேவைகள் பற்றிய ஆதாரங்கள்.

நாம் வெளியிட்ட குர்ஆன் சிங்கள மொழிபெயர்பின் சிறப்பம்சங்கள் போன்றவை தெளிவூட்டப்பட்டதுடன்,

முஸ்லிம்களுக்கு மத்தியில் இத்தனை பிரிவுகள் உண்டானமைக்கான காரணம் என்ன?

பல குர்ஆன் மொழியாக்கங்கள் வெளிவந்தமைக்கான காரணம் என்ன? போன்ற விபரங்களும் தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன், உலமா சபையினால் காத்தான்குடி அப்துர் ரவூப் என்பவருக்கு எதிராக “மதம் மாறியவர்களை கொல்ல வேண்டும்” என கடந்த காலத்தில் வழங்கியதாக கூறப்பட்ட சர்சைக்குறிய பத்வா பற்றிய விளக்கத்தையும் ஆதாரங்களுடன் வழங்கினோம்.

இஸ்லாமிய மதத்தை விட்டும் ஒருவர் வெளியேறிச் சென்றால் அவரை கொலை செய்ய வேண்டும் என இஸ்லாம் ஒரு போதும் கட்டளையிடவில்லை என்பதுடன் உண்மையில் உலமா சபை அப்படியொரு பத்வாவை வழங்கியிருந்தால் அது அன்றைய கால கட்டத்தில் இஸ்லாம் பற்றிய போதிய தெளிவின்மையினால் வழங்கப்பட்ட ஒன்றாக இருக்கும்.

ஏனெனில் மதம் மாறியவனை கொலை செய்ய வேண்டும் என்று குர்ஆன் ஒரு போதும் கூறவும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இஸ்லாத்தை ஏற்று நபிக்கு முன்னால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிச் சென்றவர்களைக் கூட நபியவர்கள் கொலை செய்யவில்லை என்பதுடன் மதம் மாறியவர்களுக்கு உலகில் எவ்விதமான தண்டனைகளையும் இஸ்லாம் கூறவில்லை.

இஸ்லாத்தின் போதனைகளை தவறாக புரிந்து கொண்டதினால் ஏற்பட்ட பிரச்சினைதான் இதுவென்று குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் நாம் தெளிவூட்டியதுடன் அதற்கான ஆதாரங்களையும் செயலணிக்கு வழங்கினோம்.

அதே போல், இந்நாட்டில் ஏகத்துவம் பேசும் சகோதரர்கள் மீது ஏகத்துவத்திற்கு எதிரானவர்கள் நடத்திய தாக்குதல்கள், ஏற்படுத்திய சேதங்கள், கொல்லப்பட்ட சகோதரர்கள் பற்றிய தகவல்களை சம்பவ ஆதாரங்களுடன் திகதி வாரியாக குறித்த செயலணிக்கு ஒப்படைத்துள்ளோம்.

முஸ்லிம் தனியார் சட்டம் என்பது முஸ்லிம்களின் மதம் சார்ந்த செயல்பாடுகளுக்கானது என்பதினால் அதில் சில திருத்தங்கள் குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதனை முழுமையாக இல்லாமலாக்கக் கூடாது. என்பதையும் அதற்கான நியாயங்களையும் எடுத்துக் கூறியதுடன், செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் பற்றிய எமது பரிந்துரைகளையும் ஒப்படைத்துள்ளோம்.

அதே போல் பயங்கரவாதி ஸஹ்ரானின் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாகவே பல தடவைகள் பாதுகாப்பு தரப்பினருக்கு அது தொடர்பான தகவல்களை வழங்கியும் தாக்குதலை தடுக்கவில்லை என்பதையும் முக்கிய சூத்திரதாரி நௌபரை கைது செய்யுங்கள் என பொலிஸ் தலைமையகத்தில் நாம் செய்த முறைப்பாட்டின் ஆதாங்களையும் சமர்பித்துள்ளோம்.

நாம் பேசிய விபரங்களுக்கான ஆதாரங்களை எழுத்து மூலம் ஒப்படைத்ததுடன், திருக்குர்ஆன் மொழிபெயர்பொன்றையும் குறித்த செயலணிக்கு ஒப்படைத்துள்ளோம்.

இறுதியாக இது ஒரே நாடுதான். இங்கு ஒரே சட்டம் தான் இருக்கிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தான் பிரச்சினையிருக்கிறது. அதனை சரிசெய்தாலே எல்லாம் சரியாகிவிடும் என்பதையும் தெளிவூட்டியதுடன், ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி முஸ்லிம்களை நோக்கி மாத்திரமே செயல்படுகிறது என்பதை வெளியில் இருந்து பார்க்கும் எவரும் உணரும் நிலை இருக்கிறது. அந்நிலையை மாற்றுங்கள் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம்.

மேலே நாம் கூறியது போல் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியை நாம் ஏற்றுக்கொள்கிறோமா? இல்லையா? என்பது ஒரு புறம். ஆனால் இந்தச் செயலணியின் சாட்சியங்கள் தான் பரிந்துரைகளான மாறும் என்பதினால் நம் பக்க நியாயங்களை சம்பந்தப்பட்ட இடத்தில் நாம் ஆதாரங்களுடன் ஒப்படைக்காவிட்டால் அது நாளை நம் சமூகத்தை பாரிய அளவில் பாதித்து விடும் என்பதை கவனத்தில் கொண்டு உலமா சபை மட்டுமல்ல அனைத்து சிவில் அமைப்புகள் தனி மனிதர்கள் என அனைவரும் சாட்சியம் வழங்குவது கட்டாயமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் சாட்சியம் வழங்காமல் பரிந்துரைகள் கொடுக்கப்பட்ட பின்னர் அப்படியாகிவிட்டது இப்படியாகி விட்டது என்று புலம்புவதினால் ஒன்றும் நடக்காது. இதுவொரு ஜனாதிபதி செயலணி என்பதையும் அதற்குள்ள அதிகாரங்களையும் கவனத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

நம் பணிகளை ஏக இறைவன்  அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!

நாம் சாட்சியம் வழங்காமல் பரிந்துரைகள் கொடுக்கப்பட்ட பின்னர் அப்படியாகிவிட்டது இப்படியாகி விட்டது என்று புலம்புவதினால் ஒன்றும் நடக்காது. இதுவொரு ஜனாதிபதி செயலணி என்பதையும் அதற்குள்ள அதிகாரங்களையும் கவனத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

நம் பணிகளை ஏக இறைவன்  அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!

Rasmin MISc

Previous Story

43 வருடங்களுக்குப் பிறகு திருத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம்

Next Story

வேக்சினுக்கு கட்டுப்படாத மின்னல் வேக கொரோனா- WHO