ஜனாதிபதி இராஜினாமா செய்வதுதான் ஒரே வழி – ரிஷாட் பதியுதீன்

நாட்டின் பொருளாதார சிக்கலினால் மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை நிறுத்துவதற்கான ஒரே வழி  கோட்டாபய, ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்வது மட்டுமே அதற்கு பதிலாக அமையும் என அகில இலங்கை மக்கள்  காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அவரது வீட்டில் நேற்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“பயங்கரவாத சம்பவத்தை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது சாட்டி இந்த அரசாங்கம் முஸ்லிம்களை பலிவாங்கியதுடன் எந்தளவுக்கு வேதனைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு வேதனைப்படுத்தினார்கள்.

மேலும் நான் உட்பட பல நூற்றுக்கணக்கான அப்பாவிகள் குறிப்பாக ஹிஜாஷிப் ப்ஹுள்ளா, ஆசாத் சாலி மற்றும் வைத்தியர் ஷாபி போன்ற பலர் இவ்வாறான அசெளகரியத்திற்கு உள்ளாக்கபட்டமை நாட்டு மக்கள் அறிவார்கள்.

ஆனால் இன்று கார்டினல் அவர்கள் வீதிக்கு வந்து இந்த உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். எனவே ஒரு இனவாத கும்பலாக, நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையை உருவாக்கி இனங்களுக்கிடையில் முரண்பாடு வரவழைக்கக்கூடிய பிரச்சாரங்களை முன்வைத்துதான் இந்த ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தனர்.

அவர்களால் மக்களுக்கு இரண்டு வருடங்கள்  வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை வழங்க முடியாத ஒரு துர்பாக்கிய நிலையிலேயே இந்த அரசாங்கம் உள்ளது அதனால் தான் நாட்டு மக்கள் வீதிகளுக்கு இறங்கி “Go Gota Home” என சொல்லி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே இந்த மக்களின் மீது கொஞ்சமாவது இறக்கம் இருக்குமாயிருந்தால், இந்த ஜனாதிபதி உடனடியாக பதவியில் இருந்து விலகி மக்களுடைய விருப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டும். அது மட்டும் தான் எதிர்காலத்தில் நாட்டில் ஒரு நிம்மதி மற்றும் ஒரு நலனை ஏற்படுத்தக் கூடியதாக  இருக்கும்.

இந்த கோட்டாபய நாட்டின் ஜனாதிபதியாக இருக்க தகுதியற்றவர் என நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து விட்டார்கள், ஒரு சிலரை தவிர. எனவே அவ்வாறான ஒருவருடைய தலமையில் உள்ள அரசாங்கத்தில் பங்காளியாக இருப்பது எந்தவகையிலும் நியாயமில்லை. அது நியாயமாகாது, மக்களுடைய விருப்பத்திற்கு மாறாக அது அமையும். ஆகையாலே நாங்கள் அவ்வாறான தீர்மானத்தை எடுக்கவில்லை.

கடந்த காலங்களிலே கட்சியுடைய முடிவுகளுக்கு கட்டுப்படாமல் நடந்த பிறகு கட்சி அவர்களின் மேல் நடவடிக்கை எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மேலும் அவர்கள் கட்சியின் தொடர்பில் அவர்கள் இல்லை.

நாட்டில் விலைவாசி அதிகரிப்பு என்பது மிக மோசமான நிலையில் இருக்கின்றது. நான் வர்த்தக கைத்தொழில் அமைச்சராக ஒன்பது வருடங்கள் இந்த நாட்டில் பணியாற்றியுள்ளேன். எனது காலத்தில் எல்லா பொருட்களின் விலைகளும் கட்டுபாட்டில் இருந்தது, இவ்வாறான எந்த வித தட்டுப்பாடுகளையும் நாங்கள் காணவில்லை. ஆகையால் நாட்டில் ஒரு அரசாங்கம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

மேலும் இந்த அரசாங்கம் பேருக்குதான் இருக்கிறது நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பூஜ்ஜியமாக உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் எமது கட்சியில் இருந்து இடைநிறுத்தபட்டவர்கள் நாடாளுமன்றத்தில் அமைச்சு பதவி கேட்பது வதந்தியாக அல்லாமல் உண்மையாக இருந்தால் நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் விரோதியாக அவர்கள் பார்க்கப்படுவார்கள்.” என தெரிவித்துள்ளார்.

Previous Story

ஜனாதிபதி-41: கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவு

Next Story

விலங்கிடப்பட்ட ராஜாக்கள்!