-நஜீப் பின் கபூர்-
நன்றி: 15.11.2024 ஞாயிறு தினக்குரல்
நமது ஜனாதிபதி அனுர குமராவின் இந்திய விஜயம் ஓர் வரலாற்றுத் திருப்பம் என்ற தலைப்பில் செய்திகளைச் சொல்வதற்கு முன்னர் சமகால அரசியல் தொடர்பில் சில வார்த்தைகளைப் பேசலாம் என்று தோன்றுகின்றது. புதிய நாடாளுமன்ற அமர்வு துவங்கி அதன் செயல்பாடுகள் கடந்த வாரம் நடந்தது. அங்கு நடந்த விவதாங்களை- கருத்துப் பரிமாற்றல்களைப் பார்க்கும் போது ஒட்டு மொத்த எதிரணியினரையும் சுவரில் சாத்தி கண்ணத்தில் அறைவது போல ஒரு காட்சியைத்தான் எமக்கு அவதானிக்க முடிந்தது.
ஆளும் தரப்பில் டசன் கணக்கான மிகச் சிறந்த பேச்சாளர்கள்-விவாதாக்காரர்கள் இருக்கின்றார்கள். அதே நேரம் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தி-சஜித் அணியில் பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எவரும் அந்த தரத்தில் இல்லை. அத்துடன் இப்போதுதான் மீதமுள்ள நான்கு தனது தேசியப் பட்டியல் நியமனங்களை அவர்கள் பூரணப்படுத்தி இருக்கின்றார்கள். அதற்கு யாரை நியமனம் செய்தாலும் அதில் நிச்சயம் லடாய்தான் வரப் போகின்றது.
தேர்தல் மேடைகளில் என்பிபி. யினர் பேசிய விடயங்களை இரவோடு இரவாக அமுல்படுத்த வேண்டும் என்று எதிரணியினர் கோஷமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்- எதிர்பார்க்கின்றார்கள். இது யதார்த்தமானதல்ல. ஆளும் தரப்புக்கு அவர்கள் சென்னவற்றை செய்வதற்கான களத்தை முதலில் சமைத்துக் கொள்ள குறைந்தது ஒரு இரண்டு வருடங்களையாவது கொடுக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்தாக இருக்கின்றது.
வெளிநாட்டில் இருந்து அரசி இறக்குமதி. தேங்காய்களின் விலை ஏற்றம் எல்லாம் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று சிலர் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இதே பதவிகளுக்கு கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர்கள் திரும்பவும் வந்திருந்தாலும் இந்த விடயங்களில் மாற்றங்கள் வந்திருக்க சாத்தியமில்லை என்பதுதான் யதார்த்தம்.
எரிபொருட்கள் மின் கட்டணங்களின் விலை குறைப்புத் தொடர்பாக ஆளும் தரப்பினர் மேடைகளில் பேசிய விவகாரங்கள் என்பன இன்று மக்கள் மத்தியில் பேசு பொருளாகி வருகின்றன. சில தனியார் ஊடகங்கள் நியாயமற்றவித்தில் செய்திகளைச் சொல்லி அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி அணுரவுக்கும் மக்கள் மத்தியில் அவப் பெயரை ஏற்படுத்த முனைகின்றன.
இதனை வடக்கில் நடந்த மா வீரர்கள் நினைவு கூரல் நிகழ்வுகளின் போது பார்க்கக் கூடியதாக இருந்தது. கடந்த கால நீதிதுறையின் செயல்பாடுகள் பற்றி சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஆற்றிய உரை அனைவரினதும் அவதானத்தை ஈத்திருந்தது.
ஜனாதிபதி தமக்கு மக்கள் கொடுத்திருக்கின்ற வெகுஜன அங்கிகாரத்தை எதிரணியினரும் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களும் அரச அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு மக்கள் கொடுத்திருக்கின்ற ஆணையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை கலந்த தொணியில் ஜனாதிபதி அணுரவும் சில அமைச்சர்களும் இப்போது நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.
பயிர்களுக்கு விலங்குகள் பறவைகளினால் குறிப்பாக குரங்கு பன்றி போன்றவற்றினால் ஏற்படும் சேதங்களுக்கு நடவடிக்கை எடுக்க முனைகின்ற போது அங்கு சுற்றுச் சூழல்வாதிகள் குறுக்கே நிற்பதனையும் நாம் பார்க்க முடிகின்றது. கிராமப்புறங்கள் மற்றும் விவசாயிகளிடத்திலிருந்து இந்த சூழல்வாதிகளுக்கு எதிரான கடும் கோபங்கள் தற்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அத்துடன் கடந்த அரசாங்கம் குறிப்பாக ரணில் ஆட்சியில் ஐஎம்எப். புடன் செய்து கொண்டுள்ள இணக்கப்பாடுகளில் பாரிய அளவில் மாற்றங்களை மேற்கொள்ள தற்போதய அரசுக்கு முடியாவிட்டாலும் இருதரப்புப் புரிதலுடன் பயணிக்க இருசாரரும் இணங்கி இருக்கின்றார்கள். அரசு துணிச்சல் இருந்தால் ஐ.எம்.எப். புடன் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட இணக்கப்பாட்டை தூக்கி எறிய வேண்டும் என்று கபீர் ஹாசீம் அரசுக்கு சவால்விடப் போய் நன்றாக வாங்கிக் கொண்டார்.
சஜித்தும் அதே பாணியில் பேசி இருந்தார். ஆனால் அதே அணியில் இருக்கும் அர்ஷத டி சில்வா ஐ.ம்.எம். விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு பச்சை கொடி காட்டி இருந்தார். இது எதிரணியினரிடையே இருக்கும் பொருளாதாரம் தொடர்பான புரிந்துணர்வின்மையை நன்றாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
இந்தியா நமக்குப் பக்கத்து நாடு என்னதான் இணக்கப்பாடுகள் முரண்பாடுகள் நமக்குள் இருந்தாலும் அது நமக்கு ஒரு அண்ணன் உறவில்தான் இருந்தது வந்திருக்கின்றது. நமக்குத் தெரிந்த வரலாறுகள் அதற்கு முன்பு உள்ள புராதன வரலாறுகள் என்று பார்த்தாலும் கல்தோன்றி மண்தோன்றக் காலத்தால் மூத்த தமிழ் என்பது போலத் தான் இந்த உறவுமுறையும் நமக்கு.
இந்த வரலாறுகள் கதைகள் நமக்கு நிறையவே இருந்தாலும் இங்கு நாம் சுதந்திரத்துக்குப் பின்னாலாலன உறவுகள் கொடுக்கல் வாங்கள்கள் என்ற ஒரு மையக் கருத்துடன்தான் சில விடயங்களை பேச எதிர்பார்க்கின்றோம். சுதந்திரம் தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள். விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் என்பன நாம் நேரில் பார்த்த விடயங்கள்.
ஜனாதிபதி அணுர குமார மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்துடன் வலுவான ஒரு அதிகாரத்துடன் இருக்கும் போதுதான் இந்த இந்திய விஜயம் அமைகின்றது. அத்துடன் அவர் கடந்த காலங்களில் இந்திய தொடர்பான கருத்துப் பரிமாறல்களின் போது மிகவும் நிதானமான கருத்துக்களைத்தான் தெரிவித்து வந்திருக்கின்றார்.
இந்தியாவுடன் முட்டி மோதி அரசியல் செய்யும் நிலையில் அவர் இல்லை. அதனால் இந்தியாவும் அவரை நட்புடன்தான் வரவேற்க்கின்றது. மேலும் முன்பு போல ஈழத் தமிழர் விவகாரம் உச்சகட்டக் கொதிநிலையில் இல்லை. அது ஆறிப்போது கொதிநீரின் நிலையில் இருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் என்பனவற்றில் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் இடதுசாரிகளான அணுர தரப்புக்கு வடக்கு கிழக்கு மலையகம் முஸ்லிம் பிரதேசங்களில் கணிசமான ஆதரவு கிடைத்திருக்கின்றது. இதற்கு நல்ல உதாரணம் தமக்கு கடந்த காலங்களுடன் கிடைத்த வாக்கு எண்ணிக்கையில் யாழ்ப்பாணம் வன்னி என்ற தேர்தல் மாவட்டங்களில்தான் விகிதாசார அடிப்படையில் முழு நாட்டிலும் முதலாம் இரண்டாம் இடத்தில் தமக்குக் கிடைத்த வாக்குகள் இந்த முறை அதிகரித்து இருக்கின்றது என்று அமைச்சர் சந்திரசேகரன் ஒரு ஊடகச் சந்திப்பில் குறிப்பிட்டது நமக்கு ஞாபகம்.
எனவே இந்தியாவில் தழிழர் பிரச்சினைகள் என்று வரும் போது புதிய அரசியல் யாப்பில் தாம் வழங்க இருக்கின்ற தீர்வுகள் பற்றியும் அங்கு ஜனாதிபதி அணுர தரப்பு மேலோட்டமாக சில கருத்துக்களை இந்தியத் தரப்புக்கு முன்வைக்க இடமிருக்கின்றது என்று நாம் நம்புகின்றோம். இன ரீதியிலான பிரச்சினைகளில் தமிழ் தரப்பு மற்றும் இந்தியத் தரப்பினர் மத்தியில் இருக்கின்ற கருத்துக்களிடையே சற்று வித்தியாயாசமான ஒரு கருத்துத்தான் தற்போதய ஆட்சியாளர்கள் மத்தியில் இருக்கின்றது என்பது எமது மதிப்பு.
இவர்கள் இங்கு இனப்பிரச்சனை கிடையாது பொருளாதார மற்றும் மொழி ரீதியிலான முரண்பாடுகள் என்றுதான் இதனைப் பார்க்கின்றார்கள். அவை சரி செய்யப்படுகின்ற போது அனைவருக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கின்றார்கள்.
அண்மையில் ஜேவிபி. செயலாளர் டில்வின் சில்வா பதிமூன்றாவது திருத்த விவகாரத்தில் இதற்குச் சமாந்திரமான ஒரு கருத்தை சொல்லி அதற்கு ஜனாதிபதி அணுர பின்னர் ஒரு விளக்கம் கொடுக்க வேண்டியும் வந்தது. எனவே இது தொடர்பாக இந்திய தமது தரப்பில் ஒரு விளக்கத்தை எதிர்பார்க்கின்ற நிலையும் இருக்கின்றது. இந்திய முன்வைத்த பதிமூன்றாவது திருத்தம் புதிய ஆட்சியாளர்கள் தூக்கி எறிவார்களானால் அது இந்தியாவுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக அமைந்து விடும்.
எனவே இந்தியாவையும் பகைத்துக் கொள்ளாது தமது கொள்கைகளையும் விட்டுக் கொடுக்காத ஒரு நிலைக்கு ஜனாதிபதி அணுர தரப்பு ஒரு தீர்வை முன்மொழிய வேண்டி வரும். ஆட்சியாளர்கள் புதிய அரசியல் யாப்பை வடிவமைக்கின்ற போது இந்தியாவின் உணர்வுகளையும் விருப்பு வெறுப்புக்களையும் மதிக்க வேண்டி இருக்கும். இந்த விஜயத்தின் போது இது பற்றிய தெளிவுகளை இந்திய எதிர்பார்க்கக் கூடும். என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
தற்போதய இனப்பிரச்சினை விவகாரம் நிலை நாம் முன்பு சுட்டடிக்காட்டியது போன்று ஆறிப்பான சூடுநீராகத்தான் இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் கடந்த காலங்களில் இந்தியா ஆட்சியாளர்கள் இது விடயத்தில் முனைப்புடன் காரியம் பார்க்காததால் ஈழத் தமிழர்கள் இந்திய நமக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பில் சற்றும் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கின்றார்கள்.
அத்துடன் தமது அரசியல் தலைமைகள் இன ரீதியான பிரச்சினைகள் என்று பார்ப்பதை விட தன்னல அரசியலுக்கும் இலபாங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததால் இன்று மக்கள் தமிழ் அரசியல் தலைமைகளைக் களத்தில் இருந்து ஓரம் கட்டுகின்ற மன நிலைக்கு குடிமக்கள் வந்திருக்கின்றார்கள். இதனைத்தான் பொதுத் தேர்தல் முடிவுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
தமிழர்களின் அரசியல் விற்பண்ணர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டு கொழும்புடன் சுகபோக நல்லுறவு அரசியல் என நாடகமாடிக் கொண்டிருந்த சுமந்திரன் மற்றும் விக்ணேஸ்வரன் போன்றவர்கள் களத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டது இவற்றின் வெளிப்பாடாகத்தான் இருக்க வேண்டும். அதனால்தான் இன்று வடக்குக் கிழக்கில் அணுர மீது மக்கள் நம்பிக்கை கொண்டு அவர்களை முதன்மை இடத்தில் வைத்து அழகு பார்க்கின்ற ஒரு நிலை அங்கு வந்திருக்கின்றது.
வருகின்ற உள்ளூராட்சி மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற்றால் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு ஆளும் அணுரத் தரப்புடன் பெரும் சவால்களை கொடுக்கும் நிலை அங்கு தோன்றி இருக்கின்றது. இதனை பிரிதோர் இடத்தில் சற்று விரிவாக பதிந்திருக்கின்றோம்.
நாம் மேற்சொன்ன வடக்கு கிழக்கு அரசியல் வரைபடத்தில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்துகின்ற ஒரு வலுவான நிலையில்தான் ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் இனப்பிரச்சிணையை எடுத்துரைக்கின்ற நிலையில் இருக்கின்றார்கள். இது தவிர இந்தியா-இலங்கை கடல் எல்லைகள் அதன் மீன்பிடி உரிமைகள் விடயத்திலும் தொடர்ச்சியாக ஒரு முறுகல் இருப்பதுடன் இந்திய இலங்கை மீனவர்களின் உயிர்கள் கூட அவ்வப்போது காவு கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விடயத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு இலங்கை மீனவர்கள் குறிப்பாக குறிப்பாக வடக்கு மீனவர் சமூகம் ஒரு தீர்வை எதிர்பார்க்கின்றது. இதனால்தான் மலையகத்தை சேர்ந்த சந்திரசேகரனை ஆட்சியாளர்கள் துறைக்குப் பொறுப்பான அமைச்சராக நியமனம் செய்திருக்கின்றார்கள் என்று நாம் அன்றே சுட்டிக் காட்டி இருந்தோம். அவரும் ஜனாதிபதி அணுரவுடன் இந்திய விஜயத்த்தில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார். மீனவர் விவகாரம் நிச்சயம் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இடம் பெறும்.
இது தவிர இலங்கையின் வெளிவிவகாரம் பாதுகாப்பு விடயங்களில் இந்தியா எப்போதும் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள எதிர்பார்க்கும். தற்போது அதிகாரத்துக்கு வந்திருப்பவர்கள் இடதுசாரி சிந்தனையுடையவர்களாக இருப்பதால் அவர்கள் சீனாவுடன் மிக நெருக்கமான உறவை வைத்துக் கொள்வதனை இந்திய அவதானத்துடன்தான் பார்க்கும். இலங்கையின் பொருளாதார மற்றும் விவசாய கலாச்சாரத்துறைகளில் இருதரப்பு நலன்களுக்கு இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னுரிமை கொடுக்கப்படும்.
வலதுசாரியான ரணில் அதிகாரத்தில் இருக்கின்ற போதும் அதற்கு முன்னரும் இலங்கை சீனாவுடன் அளவுக்கதிகம் நெருங்கி விடக் கூடாது என்பதற்காக இந்தியா நெருக்கடி நிலைகளின் போது முந்திக் கொண்டு உதவிய சந்தர்ப்பங்களும் நிறையவே இருக்கின்றன. ஜேஆர். காலத்தில் இந்தியாவின் ஆகாய ஆக்கிரமிப்பு இந்தியப் படைகளை இங்கு கொண்டு வந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு எடுத்த முடிவுகள் என்பன சுதந்திரத்துக்குப் பின்னரான உறவில் சற்று நெருக்கடியான நிகழ்வுகள் என்றுதான் பார்க்கப்படுக்கின்றது.
அவை கூட பிரச்சினைகளுக்கு தீர்வைத் தரவில்லை. எனவே சீனாவின் கொள்ளைகளுடன் நெருக்கமான ஒரு உறவில் இருக்கின்ற ஜேவிபி-என்பிபி அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்ற போது முன்பை விட இந்தியா இலங்கை விவகாரத்தில் கடும் எச்சரிக்கையுடன் காய்நகர்த்தும் என்பதும் தெரிந்ததே. இந்திய விஜயத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி அணுர குமார சீனாவுக்கு விஜயம் செய்ய இருக்கின்றார்.
இந்திய இலங்கை தலைவர்களின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புக்கள் கடந்த காலங்களைப் போல் அல்லாது ஆக்கபூர்வமான ஒரு சந்திப்பாகவும் அங்கு எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் ஒரு வரலாற்றுத் திருப்பு முனையாக அமையுமா என்பதனைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்று இருநாள் (15-17) தனது பயணத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோரையும் ஜனாதிபதி அழைத்துச் செல்கின்றார். அங்கு பிரதமர் மோடி வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நிதி அமைச்சர் சீதாராமண் பாதுகாப்புச் செயலாளர் தேவால் அகியோரையும் இலங்கை தூதுக் குழுவினர் சந்திக்க இருக்கின்றனர்.