ஜனாதிபதித் தேர்தலைக் குழப்புகின்ற சதியா இவை?

“தேர்தல் அறிவிப்பில் ஏற்படுகின்ற தாமதம் ஆபத்தானது”

-நஜீப் பின் கபூர்-

நமது நாட்டில் ஜனநாயகத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் வரலாற்றில் என்றுமில்லாத அளவில் ஏற்பட்டிருப்பது பற்றி பல்வேறு மட்டங்களில் கவலைகள் தெரிவிக்கபட்டு வருகின்றன. நாம் இது பற்றி நிறையவே பேசி இருக்கின்றோம். இறுதி நேரமான இப்போதும் அது பற்றித்தான் கதைக்க வேண்டி இருக்கின்றது. இப்போது தேர்தல் ஆணைக் குழுவுக்கு தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுக்க அதிகாரம் கடந்த 17.07.2024 முதல் கிடைத்திருக்கின்ற இந்த நேரத்தில் கூட 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான ஒரு அச்சம் இன்றும் நாட்டில் இருந்து வருகின்றது.

சங்கிலித் தொடர்போல வரும் இந்த நெருக்கடிகள் இன்று முடியும் நாளை முடியும் என்ற நம்பிககைகளும் நீதி மன்றங்களும் உறுதி மொழி தந்தாலும் ஜனாதிபதிக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரங்களினால் தேர்தல் நடந்து முடியும் வரையிலும் நாட்டில் தேர்தல் தொடர்பான நிச்சயம் இல்லாத ஒரு நிலையும் சந்தேகங்களும் நீடிக்கத்தான் செய்கின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்;பட்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்ப்பட்டு தேர்தலுக்கான திகதியும் அறிவித்த அந்தத் தேர்தலுக்கு என்ன நடந்தது என்பது மக்கள் மனதில் இன்றும் நினைவில் இருப்பதால் அவர்களுக்கு இந்த பயம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

சராசரி குடி மக்கள் எப்படிப்போனாலும் அரசியல் தலைவர்கள் புதிஜீவிகள் மற்றும் எம்மைப்போன்று இது விடயத்தில் அவதானத்துடன் இருக்கின்ற எங்களுக்கே உறுதியாக எதையும் சொல்ல முடியாத ஒரு நிலை என்றால் அப்பாவி குடி மக்களின் நிலையை என்னவென்று சொல்வது. இது வரை இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு வந்த முட்டுக்கட்டைகள் பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி முட்டுக் கட்டைகள் போட்டவர்களுக்கும் எமக்கும் எந்த விதமான தொடர்புகளும் கிடையாது. அதனைச் செய்தவர்கள் அவருடைய ஆள் இவருடைய ஆள் என்று அதற்குச் சாக்குப்போக்குகள் சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது தொடர்ப்பில் சிறு குழந்தை இடத்தில் கூட கூட ஒரு புரிதல்-தெளிவு இருக்கின்றது.

இந்த அனைத்து முட்டுக் கட்டைகளும் படு தோல்வியில் முடிந்தாலும் அவர்கள் தேர்தலைத் நடத்தாமல் காலத்தை ஓட்டுவதற்கு எடுக்கின்ற முயற்சிகளில் இருந்த இன்னும் வெளியேறவில்லை – பின்வாங்கவில்லை. கடைசியில் அரசியல் படுகொலைகளை நோக்கி இவர்கள் செல்லக்கூடும் என்று இந்த நாட்டில் இருக்கின்ற பௌத்த தேரர்களே பகிரங்கமாக மேடைகளில் பேசும் அளவுக்கு ஒரு வன்மம்- வன்முறை இந்தத் தேர்தலில் காணப்படுகின்றது.

இப்போது தேர்தல் ஆணைக்குழுவுக்கு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து அதிகாரங்களும் கிடைத்திருக்கின்றது. நீதித்துறை கூட அதனை பல முறை உறுதி செய்திதிருக்கின்றது. இப்படியான நேரத்தில் இந்த தேர்தல் ஆணைக்குழு தேர்தல் தொடர்பான அறிவிப்புக்களை செய்ய காலதாமதம் எடுத்துக் கொண்டால் அது இந்த நாட்டு குடி மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் செய்கின்ற பாரிய துரோகமாக அமைந்து விடும். தேர்தலுக்கு அஞ்சுகின்றவர்கள் இந்த தாமதமாகும் காலத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக இது அமைந்து விடும் என்று நாம் எச்சரிக்கின்றோம்.

அப்படி ஒரு விபரித நிலைக்கு தேர்தல் ஆணைக்குழு வாய்ப்பை வழங்குமாக இருந்தால் அதனால் நாட்டில் ஏற்படுகின்ற அமைதி இன்மைகளுக்கும் வன்முறைக்கும் அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அவர்களும் தேர்தலுக்கு எதிரான அணியின் உறுப்பினர்களாகத் தான் பொது மக்கள் பார்க்க வேண்டி வரும். முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இப்படி ஜனநாயக விரோத செயல்களைச் செய்வதன் மூலம் மக்களை தெருவில் இறக்கி ஒரு வன்முறையை நாட்டில் ஏற்படுத்தி அதன் மூலம் தேர்தலைத் தள்ளிப்போடுகின்ற ஒரு உத்தியாகவும் இவை இருக்கலாம் என்று பகிரங்கமாகவே கூறி இருக்கின்றார் மஹிந்த தேசப்பிரிய. இதனைத் தான் நாமும் தொடர்ச்சியாக நெடுநாளாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

இந்த நாட்டில் காசுக்காக என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் -நடக்கின்றது என்பதை முழு உலகமுமே நன்கு அறியும். அப்படி தேர்தல் ஆணைக்குழு ஜனநாயக விரோதிகளுக்கு வாய்ப்பை வழங்குமாக இருந்தால் நிச்சயம் அங்கு காசுதான் விளையாடி இருக்கின்றது என்பது வெகுசனக் கருத்தாக அமைந்து விடும். எனவே இப்படி ஒரு அவப்பெயருக்கு தேர்தல் ஆணைக்குழு தன்னை இலக்காக்கிக் கொள்ளும் என்று நாம் நம்பவில்லை. ஆனால் அப்படி ஒரு அச்சமும் பயமும் இந்த காலகட்டத்திலும் நமது நாட்டு சம்பிரதாயங்களின் படியும் ஒருவருக்கு ஏற்படுவதும் தவிர்;க்க முடியாதது.

அதிகார வர்க்கமும் தற்போது பதவியில் இருக்கின்ற ஆளுநர்களும் கூட தேர்தல் தள்ளிப்போவதற்கு இசைவாகத்தான் செயலாற்ற அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. கராணம் அவர்கள் அனைவரும் இருக்கின்ற ஊழல் மிக்க அரசின் இலாபம் அடைபவர்களாகத்தான் இருந்து வருகின்றார்கள் என்பதுதான் இதற்குக் காரணம். ஆனால் ஒட்டு மொத்த அரசியல் அதிகாரிகளையும் நாம் இப்படிக் கணக்குப் பார்ப்பதும் தவறுதான். நேர்மையானவுகளும் அங்கு இருப்பதால்தான் ஊழல்கள் கொள்ளைகள் மோசடிகளும் பகிரங்கமாகின்றன என்பதனை நாம் இங்கு மறுக்க முடியாது. மருண்டவன் கண்களுக்கு இருடதெல்லாம் பேய் போலத் தெரிவதால் இப்படி ஒரு சந்தேகத்தையும் நாம் சொல்லி வைக்க வேண்டி இருக்கின்றது.

இதனால்தான் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றோம் எதிர்க்கட்சிகள் என்னதான் தமக்கு அதிகாரத்தை கைப்பற்றுவதில் போட்டி நிலை முரண்பாடுகள் இருந்தாலும் அவர்கள் மத்தியில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான ஒரு இருக்கமான கூட்டணி மற்றும் செயல்பாடுகள் காலத்தின் கட்டாயமாகும். மேலும் நமது நாட்டில் நடக்கின்ற இந்த ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சர்வதேச சக்திகளின் நலன்கள் விருப்பு வெறுப்புக்கள் இருக்கின்றன.

அவர்கள் அதனை வைத்துத்தான் எந்தக் கணக்ககளையும் போடுவார்கள் – பார்ப்பார்கள் அவர்களுக்கு இந்த நாட்டு மக்களின் நலன்கள் ஜனநாயக உரிமைகளை விடவும் அவர்களின் நலன்கள் தான் முக்கியம் என்ற ஒரு நிலையும் இந்தத் தேர்தலில் இருந்து வருகின்றது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இந்த நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது இந்த நாட்டு மக்களுடைய தேவையே அன்றி மற்றவர்கள் அதனைச் செய்து தருவார்கள் என்று எவராவது எதிர்பார்ப்பார்களால் அது முட்டால் தனமானது.

இப்போது நாட்டில் நடக்கின்ற சில சம்பவங்களை பாருங்கள் இதுவரை தேர்தலைத் தள்ளிப்போட பகிரங்கமாக செயலாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் மற்றும் தவிசாளரும் தேர்தல் ஆணைக்குழுவினரை சந்தித்து அவர்களிடம் காலதாமதமின்றி தேர்தல்களை விரைவாக நடாத்தி முடிக்கும் படி கேட்டுக் கொண்டதாக ஊடகங்களில் பேட்டி கொடுத்திருந்தார்கள். இது எவ்வளவு விசாலமான முரண்பாடு என்பதனை ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.

குறுக்கு வழிகளில் தேர்தலுக்கு ஆப்பு வைக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போனதால் ஜனரஞ்சகமாக வேட்பாளர்களை கொலை செய்தாவது இந்த தேர்தலில் ஒரு குழப்பத்தை சிலர் ஏற்படுத்தலாம் என்று பௌத்த தேரர்கள் மேடைகளில் பகிரங்கமாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இது எவ்வளவு பெரிய பயங்கரமான நிலை என்பதனை ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபல சிரிசேன ஜனாதிபதித் தேர்தலை தடுக்க எவருக்கும் அதிகாரம் இல்லை. அப்படி ஏதாவது நடந்தால் வன்முறை வெடித்து இரத்த ஆறு ஓடும் அப்போது பல்லாயிரக் கணக்கானவர்கள் இறக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்திருக்கின்றார். இதற்கிடையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் போன்ற விஐபி.க்களின் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக ஒரு அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் முன்வைத்திருக்கின்றார். இது என்ன நோக்கத்துக்காக முன்வைக்கப்படுகின்றது என்பதைக் கூட சந்தேகத்தில்தான் பார்க்க வேண்டி இருக்கின்றது.

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப் படுகொலை முயற்சிலிருந்து இந்த அச்சம் மேலும் அதிகரித்துள்ளது. இன்று அணுரகுமார மற்றும் சஜித்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட வேண்டும் என்று அந்தக் கட்சி ஆதரவாலர்கள் முக்கியஸ்தர்கள் பகிரங்கமாக கேட்டு வருகின்றனர். ஆனால் என்பிபி. தரப்பினர் அரசதரப்பு பாதுகாப்பை பெரும் சந்தேகத்துடன் பார்ப்பதால் இதுவரை அவர்கள் உத்தியோகபூர்வமான இந்த பாதுகாப்பு பற்றி எந்தக் கோரிக்கைகளையும் விடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் பற்றிய தீர்மானங்களை தேர்தல் ஆணைக்குழு எடுக்க இருக்கின்ற இந்த நேரத்தில் பதவிக் காலம் ஆறு ஐந்து பிரச்சினைகளை முன்வைத்து ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஜனாதிபதி எதிர்பார்க்கின்றார். தனக்கு இதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியாது போனால் நாடாளுமன்றதைக் கலைக்கின்ற ஒரு திட்டம் தற்போது பரிசீலனையில் இருக்கின்றது. ஜனாதிபதியின் இந்த திட்டத்துக்கு ராஜபக்ஸாக்களின் ஆதரவும் ஏற்கெனவே கிடைத்திருக்கின்றது என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது ஜனாதிபதித் தேர்தலும் நாடாளு மன்றத் தேர்தலும் சமாந்திரமான நேரத்தில் நடக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதிலும் முன்கூட்டி நடப்பது பொதுத் தேர்தலாகத்தான் இருக்க முடியும் என்பது நமது ஊகமும் கூட. முன்கூட்டி பொதுத் தேர்தல் நடந்தால் ஒரு தொங்கு நாடாளுமன்றத்துக்குத்தான் அதிக வாய்ப்புக்கள் இருக்கும் என்பது நமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. நமது முன்கூட்டிய கணிப்புக்களின் படி என்பிபி. அதிக ஆசனங்களைப் பெற்றாலும் (80-90 வரை) சஜித் தரப்பினர் (50-60 வரை) ஆசனங்களைக் கைப்பற்ற வாய்ப்பு இருக்கின்றது. இந்த நிலையில் மொட்டு-ஐதேக. தரப்பு இணைந்து (30-40) வரையிலான ஆசனங்களைக் கைப்பற்றுவார்கள்.

பிரதான கட்சிகள் பொதுத் தேர்தலில் இப்படி ஆசனங்களைக் கைப்பறிறனால் நாம் வழக்கமாகச் செல்வது போல சர்வதேச அழுத்தங்களுடன் சஜித்-ராஜபக்ஸாக்கள் ஒரு கூட்டரசங்கத்துக்கு சிறப்பான வாய்ப்புக்களுக்கு இடமிருக்கின்றது. இந்தியாவும் மேற்கு நாடுகளும் அதற்கு ஆதரவாக நிற்கும்.

இதற்குச் சமாந்திரமான ஒரு கருத்தை பசில் ராஜபக்ஸ கூட முன்பு சொல்லி இருந்தார். அவர்கள் எப்படியும் அணுரகுமார தலைமையிலான ஒரு அரசு அமைவதை ஜீரணித்துக் கொள்ள முடியாதிருப்பதுதான் இந்த நியதிக்குக் காரணம். இப்படி ஒரு வாய்ப்பு களத்தில் இருக்கின்றது என்பதில் நமக்கும் நிறையவே உடன்பாடுகள் இருக்கின்றது.

பொதுத் தேர்தல் முன்கூட்டி நடந்தால் அப்போது இதுவரை மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் நாட்டில் தொடர்ந்து இருப்பதா அல்லது தப்பி ஒடுவதா என்ற முடிவை எடுத்துக் கொள்ள அவர்களுக்கு நல்ல வாய்ப்பும் பாதுகாப்பும் அதன் மூலம் கிடைக்கும்.

இது அப்படி இருக்க மீண்டும் நாடாளுமன்றத்தை கலைக்கின்ற யோசனை பற்றி பார்ப்போம். இலங்கை வரலாற்றில் இப்படி ஜனாதிபதித் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் நெருக்கமாக இதுவரை நடந்ததில்லை. தேர்தல்களில் மிகவும் நெருக்கமான போட்டிக்கு இடமிருப்பதால் நாட்டில் அமைதியின்மைக்கும் அதிக வாய்ப்புக்ளும் இருக்கின்றன. அப்படி ஒரு நிலையை நோக்கி நாட்டை நகர்த்துவதுதான் இந்த நாடாளுமன்றத்தை கலைக்கின்ற முயற்சியும் இருக்கலாம் என்று நாம் அஞ்சுகின்றோம்.

ரணிலை ஆதரிக்கின்ற அமைச்சர் மஹிந்த அமரவீர இப்படியாக ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடுகின்ற எந்தத் திட்டமும் அரசுக்குக் கிடையாது. இது ஏதாவது பேச வேண்டும்-கதைக்க வேண்டும் என்பதற்கு எதிர்க் கட்சிகள் சொல்கின்ற கதைகள். கடைசியாக நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர் நடாத்திய கூட்டத்தில் அப்படியான எந்தத் தீர்மானங்களும் அங்கு எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். ஆனாலும் கடைசி நேரத்தில் ஏதாவது சதிகளை ஆளும் தரப்பினர் செய்யலாம் என்பதால் எதிர்க்கட்சிகள் மிகவும் அவதானத்துடன் இருந்து வருவதாக எதிரணியினர் தரப்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

நீதி அமைச்சர் விஜேதாச அதிரடியாக ஜனாதிபத் தேர்தல் முடியும் வரை இந்த ஐந்து ஆறு திருத்தத்தில் எந்த முடிகளும் எடுக்கக் கூடாது என்று நீதி மன்றத்தை எழுத்து மூலமாகக் கேட்குமாறு தனது அதிகாரிகளுக்குக் கட்டளை பிறப்பித்திருப்பதாக ஊடகங்களுக்கு கூறி இருக்கின்றார். நீதி அமைச்சர் என்னதான் கூறினாலும் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் மிக்க ஒரு மனிதன். நாடாளுமன்றைக் கலைத்து பொதுத்தேர்தல் அறிவிப்புச் செய்வதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கத்தான் செய்கின்றது. அதனால் தான் அச்சங்கள் தொடர்கின்றன.

நன்றி: 21.07.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

வாராந்த அரசியல் 21.07.2024

Next Story

மகிந்த வீட்டுக்குள் மோதல்