சேனல் 4 குற்றவாளிகளைத் தோலுறித்ததா?

-நஜீப் பின் கபூர்-

channel 4 tv guide, A Christmas present - online TV guide | free and - agriturismofurfullanu.net

*****

“துவக்க நாள் முதல் பிள்ளையானின் நெருங்கிய

சகாவாகவும் அவரது அரசியல் கட்சியில்

முக்கிய பதவியில் இருந்த இந்த மௌலானா

ஏன் தற்போது பல்டியடித்திருக்கின்றார்

என்று பார்த்தால் தற்போது இலங்கையின்

அரசியல் போக்கு ராஜபக்ஸாக்களுக்கு

இசைவாக இல்லை. அவர்களோடு தான்

தொடர்ந்தும் பயணித்தால் எதிர் காலத்தில்

ஆயுள்வரை கம்பி எண்ண வேண்டி வரும்.

அத்துடன் உயிருக்கும் ஆபத்து என்பதனை

அவர் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றார்.”

*****

ஆசாத் மௌலானா யார்? சேனல் 4 ஆவணப்படத்தில் ஏன் சாட்சியமளித்தார்?

“அந்த வகையில் நாடு குற்றவாளிகளை

சேனல் 4 கதை சொல்லும் முன்பே

அடையாளம் கண்டுதான் இருந்தது.

இப்போது அது சர்வதேச அளவில்

உறுதியாகி இருக்கின்றது அவ்வளவுதான்”

UK Channel 4 to reveal hitherto unheard revelations on the Easter Bomb attack - Counterpoint

சேனல் 4 கதைகளுக்கு வருவதற்கு முன்னர் நாம் கடந்த வாரம் எழுதி இருந்த ஒரு குறிப்புப் பற்றி சற்றுப் பார்ப்போம். ‘திசை மாறுகின்ற கதைகள்’ என்ற தலைப்பில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கணக்கு வழக்குகளை மாற்றான் வரவில் பதிவு வைக்கின்ற ஏற்பாட்டை  அரசியல் பிரபல்யங்களுக்கு கூலிக்கு கூஜாத் தூக்குகின்ற சிலர் மேற்கொண்டு வருவது பற்றி நாம் எச்சரித்திருந்தோம்.

இந்தப் பின்னணியில்தான் தற்போது சேனல் 4 தனது ஆய்வில் குற்றவளிகளைக் கையும் களவுமாக அது இனம் கண்டிருப்பதாகச் சுட்டிக் காட்டி இருக்கின்றது. ஆனால் இந்த தாக்குதல் நடந்த பின்னர் முதல் வாரத்திலோ நாம் எமது வார இதழுக்கு எழுதிய கட்டுரையில் தாக்குதலுக்கு பின்னால் பெரும் சதி இருக்கின்றது என்று அன்றே அடித்துச் சொல்லி இருந்தோம்.

அந்த விவகாரங்கள் அப்படி இருக்க தற்போது சேனல் 4 வெளியிட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஆராய முற்படுகின்ற நாம் முதலில் இந்த அலைவரிசை தொடர்பாக சற்றுப்பார்ப்போம். 1982 நவம்பர் 2ம் திகதி இது ஐக்கிய இராச்சியத்தில் ஆங்கில மொழியில் துவங்கப்பட்டிருக்கின்றது. உலகில் நடக்கின்ற முக்கிய நிகழ்வுகள் படுகொலைகள் மற்றும் இரகசியங்களை இதற்கு முன்னரும் அது துல்லியமாக கண்டறிந்து பதிவிட்டிருந்தது. இதற்கு முன்னரும் இசைப்பிரியா தொடர்பான ஒரு விவரணப் படத்தை வெளியிட்டு இலங்கை;கு ஆட்சியாளர்களுக்கு தலைவலியைக் கொடுத்திருந்தது.

இதனால் இந்த ஊடகம் தொடர்பாக ஆட்சியாளர்களுக்கு குறிப்பாக ராஜபக்ஸாக்களுக்கு நல்லெண்ணம் கிடையாது. சேனல் 4 பொதுவாக செய்திகளைத் தயாரித்த பின்னர் அந்த செய்திகள் தொடர்பில் தமது சட்டத்தரணிகள் பார்வைக்கு சமர்ப்பிப்பார்கள். பின்னர் தாம் குற்றம் சாட்டுகின்றவர்களின் அபிப்பிராயத்தையும் கேட்டு அதனையும் குறிப்பாக பதிவிடுவார்கள். இது தமது தேடலில்-செய்தியில் எந்த பாதிப்பும் அதனால் ஏற்படுத்தி விடாது.

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition Tamil Diaspora, backed by other religious extremists behind Channel 4: Pillayan

எதிரும் புதிரும்

குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் முற்றிலும் ராஜபக்ஸாக்களின் அரசியல் தேவைக்காக வடிவமைக்கப்ட்டது என்று அது தனது புதிய ‘மௌலான’ கதையில் சொல்லி இருக்கின்றது. இதனால் அவர்கள் கொதித்துப் போய் இருக்கின்றார்கள். எனவே இந்த கணக்கை தனது தலையில் சேனல் 4 கட்டிவிடப் போவதை ராஜபக்ஸாக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது முஸ்லிம் அடிப்படை வாதிகளின் செயல் என்பதனை உறுதிப்படுத்த அவர்கள் தமக்குள்ள அனைத்து வளங்களையும் ஊடகங்களையும் அதிகாரத்தையும் பாவிப்பார்கள்.

The Cardinal and Gotabaya - A Tale Unknown (Eranda Ginige)

இதற்கு மறுப்புக் கொடுக்க அவர்கள் தமது பக்கப் பணிகளை வருகின்ற நாட்களில் முன்னெடுப்பார்கள். அத்தோடு இது வெளிநாடுகளில் இருக்கின்ற டயஸ் போராக்கள் வேலை என்று சொல்லித் தப்பிக் கொள்ளவும் அவர்கள் முனையக் கூடும். ஆனால் சோறு உண்ணுக்கின்ற மக்கள் இப்படியான கதைகளை இனியும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்தளவுக்கு மக்கள் அதிகாரத்தில் இருப்போர் அட்டகாசங்களில் கடுப்பில் இருக்கின்றார்கள்.

Gotabaya Rajapaksa and the Matale District JVP Insurgency - Opinion | Daily Mirror

அதே நேரம் அரச எதிர்ப்பாளரும் தம்மிடம் இருக்கின்ற ஆதாரங்கள் மற்றும் வளங்களை ராஜபக்ஸாக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள். தாக்குதல்  நடப்பதற்கு முன்னரும் அதற்குப் பின்னருமான ராஜபக்ஸாக்கள் மற்றும் அவர்களது கையாட்கள் நாட்டில் ஏற்கெனவே நடந்து கொண்ட முறைகள் தொடர்பில் பொது மக்களிடம் தமது வலுவான ஆதாரங்களை அவர்கள் பட்டியலிடுவார்கள்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நடந்த எந்த விசாரணைகளிலும் தெளிவான குற்றவாளிகள் இனம் காணப்படவோ அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபனமாகவோ இல்லை. கதையை திசைதிருப்பும் ஏற்பாடுகளைத்தான் இன்றும் ஆளும்தரப்பினர் செய்து கொண்டிருக்கின்றார்கள். கிடைத்திருக்கின்ற சாட்சிகள் மற்றும் தகவல்களின் படி சஹ்ரான் மற்றும் அவனது அணியினர் அடிப்படை வாதிகள் என்ற கருத்து யதார்த்தமாக இருந்தாலும் அரச படைதரப்புடன் அவர்களுக்கு குறிப்பாக சுரேஸ் சாலே என்று உளவுத்துறை முக்கிய புள்ளிக்குமிடையே  நெருக்கமான உறவுகள் இருந்திருக்கின்ற என்பது அன்சீர் அசாட் மௌலானவின் வாக்குமூலங்களில் இருந்து தெளிவாகின்றது. ஆனால் இது தொடர்பான தேடுதலில் அரச தரப்பினர் இன்றும் நாட்டமில்லாமல் இருக்கின்றார்கள்.

துவக்க நாள் முதல் பிள்ளையானின் நெருங்கிய சகாவாகவும் அவரது அரசியல் கட்சியில் முக்கிய பதவியில் இருந்த இந்த மௌலான ஏன் தற்போது பல்டியடித்திருக்கின்றார் என்று பார்த்தால் தற்போது இலங்கையின் அரசியல் போக்கு ராஜபக்ஸாக்களுக்கு இசைவாக இல்லை. அவர்களோடு தான் தொடர்ந்தும் பயணித்தால் எதிர் காலத்தில் ஆயுள்வரை கம்பி எண்ண வேண்டி வரும். அத்துடன் உயிருக்கும் ஆபத்து என்பதனை அவர் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றார்.

தனக்கு இதுதான் மிகச் சிறந்த வாய்ப்பு என்பதனை அவர் சேனல் 4 ல் தன்னைப் பாவித்துக் கொண்டிருக்கின்றார். தனது மனச் சாட்சி தன்னை உறுத்திக் கொண்டிருக்கின்றது அதனால்தான் இப்படி ஒரு முடிவுக்கு தான் வந்ததாகவும் அவர் குறிப்பிடுக்கின்றார்.

அடுத்து இந்த ஈஸ்டர் தாக்குதல் அது வடிவமைக்கப்பட்ட ஒழுங்கு, தாக்குதலுக்கு முஸ்லிம் அடிபடைவாதிகள் பாவிக்கபட்டது. சுரேஸ் சாலேயைக் கூட இதற்கு ராஜபக்ஸக்கள் தெரிவு செய்தது அனைத்துமே இதனை முஸ்லிம்களின் தலையில் மொத்தமாகக் கட்டிவிட வசதியாக இருக்கும் என்பதற்ககாத்தான் இருக்க வேண்டும்.

இந்த சுரேஸ் சாலே, சஹ்ரான் குழுவுடன் நேரடியாக தொடர்ப்பில் இருந்ததால் அவர்கள் தங்குமிடங்களுக்குப் போய் வந்திருக்கின்றார். தனக்கும் சுரேஸ் சாலேக்கும் கூட இது தொடர்பாக தனிப்பட்ட சந்திப்புக்கள் நடத்திருந்தன. அத்துடன் லசந்த கொலைக்கு கோத்தாவே நேரடியாகக் கட்டளையிட்டார் என்றும் மௌலான அடுக்கிக் கொண்டு போகின்றார்.

அந்த வகையில் பிள்ளையானின் சகா என்றவகையில் தாக்குதல் தொடர்பான தகவல்கள் அதில் பங்கு கொண்டவர்கள் வழி நடாத்தியவர்கள் தொடர்பாக மௌலான அதிகம் அறிந்திருக்க வாய்ப்புக்கள் பிரகாசமாக இருந்திருக்க வேண்டும். மேலும் பிள்ளையானின் இரண்டாம் மட்டத் தலைவர் என்ற வகையில் அன்று நடந்த அடவடித்தனங்களில் மௌலான பங்கு மிகைப்பட்டிருந்தாலும் இன்று அதனை அவர் அடுத்தவர்களுக்கு பகிர்ந்தளித்து தன்னைப் புனிதப்படுத்திக் கொள்ளும் முயற்சியிலும் அவர் ஆர்வமாக இருக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

மௌலானா தகவல்படி இந்தத் தாக்குதல் முற்றிலும் கோத்தா ராஜபக்ஸ அதிகாரத்தக்கு வருவதற்காக நாட்டில் அமைதியின்மையை தோற்றுவிப்பது தான் இவர்களது குறிக்கேலாக இருந்திருக்கின்றது. இதனை சுரேஸ் சாலே தன்னிடம் நேரடியாக் கூறினார் என்றும் அதில் அவர் குறிப்பிடுகின்றார். அதனைத்தான் இங்கு மௌலானா வலியுறுத்த முனைகின்றார். இப்படி ஒரு தாக்குதலை முஸ்லிம்கள் சார்பில் சஹ்ரான் குழுவினர் செய்வதாக இருந்தால் அவர்கள் அந்த நாட்களில் சிங்களவர்கள் மீதுதான் பாய்திருக்க வேண்டும்.

இந்தத் தாக்குதல்  தொடர்பாக ஒரு சில பேரினத்தினர்  அறிந்திருந்ததால் தமது இனத்தின் மீது இப்படி ஒரு அக்கிரமத்தை செய்து பதவிக்கு வந்தது பிற்காலத்தில் கதை வெளியே தெரிய வந்தால் தேசபக்தர்களுக்கு நாட்டில் இருக்க முடியாத ஒரு நிலைவரும் என்பதால்தான் முஸ்லிம்களுடன் சிறு அளவிலோனும் எந்த முரண்பாடுகளையும் இதுவரை கொண்டிராத அப்பாவி கிருஸ்தவர்கள் மீது இந்த மிருகத்தனமான தாக்குதல்கள் அன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதற்கு நியாயமே கிடையாது.

இதற்கு நியுஸ்லாந்தில் அந்த நாட்களில் முஸ்லிம்களுக்கு எதிரான நடந்த தாக்குதலுக்கு பலிவாங்கள் என்ற மூடிச்சும் போடப்பட்டிருக்கின்றது. இது சூத்திரதாரிகள் புனைந்த கதை.  பின்பு இதனை ஐஎஸ்ஐஸ். கணக்கில் பொறுப்றே;பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது படைத்தரப்பு கையடக்கத் தெலைபேசிகள் பாவிக்கப்படடிருப்பதும் அதற்கு மாத்தளை சஹ்ரான் என்ற பிரிதொரு நபரது பெயரும் பாவிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்திருக்கின்றது.

மேலும் லசந்த விக்கிரமதுங்ஹ படுகொலை தொடர்பான நடந்த விசாரணைக்கு கோட்டாவை அழைத்தது தொடர்பாக நிலந்த டி சில்வா என்ற அதிகாரியிடம் அவர்  கேள்வி எழுப்பி இருக்கின்றார். காரணம் இருப்பதால்தான் அழைத்தாதகவும் அன்று நிலந்த கோதாவுக்குப் பதில் சொல்லி இருக்கின்றார். இன்றைய சேனல் 4 குற்றச்சாட்டுக்கள் தொடர்ப்பில் ஏற்கெனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது அவதானம் உள்நாட்டு விசாரணைகளிலும் இருந்துதான் வந்திருக்கின்றது.

சம்பந்தப்பட்ட அதிகாரி உயிர் அச்சுறுத்தல் காரணமாக குடும்பத்துடன் தலைமறைவாகி இன்று ஆவனங்களுடன் சுவிச்சலாந்தில் மௌலானவைப் போல் தஞ்சம் அடைத்திருக்கின்றார். இப்படியான ஒரு தாக்குதலுக்கு பல வழிகளில் பாவிக்கப்படுக்கின்ற அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பிற்காலத்தில் காணாமல் போவது அதாவது பல்வேறு காரணங்களினால் கொல்லப்படுவது இலய்பானதுதான். சாட்சியை அழிப்பதுதான் சூத்திரதாரிகளுக்கு (இரகசியம் காக்க) பாதுகாப்பு என்ற விதி இதற்குக் காரணம்.

LankaWeb – Sri Lanka's Easter Sunday: Loopholes in Hamsa Asad Maulana allegations against Maj. Gen. Suresh Salley

அசாட் மௌலானா

இப்படி ஒரு சாவு தனக்கும் ஏற்பாடாக இருக்கின்றது என்பதனைத் அறிந்ததால்தான் நாட்டிலிருந்து வெளியேற வேண்டி வந்தது என்றும், அதற்கு மனச் சாட்சிக்கும் முடிச்சுப் போட்டு தனது பாவக் கடனை மௌலான தீர்க்க சேனல் 4 வைப் பாவித்திருக்கின்றார் போலும். சிவனேசத்துறை சந்திரக்காந்தன் அல்லது பிள்ளையானுடன் நெருக்கமான உறவிலும் அவரது வலது கரமாக இருந்த மௌலானா வாக்குமூலம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் வலுவான ஒரு சாட்சி.

பிள்ளையான், மௌலான பற்றிக் கூறுகின்றபோது ஏனையோரைப் போல தனது பெயரைப் பாவித்து மௌலாவும் தஞ்சக் கோரிக்கையை முன் வைத்திருக்கின்றார். அத்துடன் மௌலானவுக்கு குடும்ப வாழ்க்கையிலும் கசப்புக்கள் நிறையவே இருந்து வந்தது. இந்தக் காரணங்களினால்தான் அவர் நாட்டிலிருந்து ஓடினார் என்பது பிள்ளை வாதம். பிள்ளையானுக்கு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விஐபி சலுகை இருந்தது. அதனை நான் நேரில் பார்த்தோன். அத்துடன் மற்றுமொரு தகவலின்படி சட்டமா அதிபரிடம் சிபார்சு செய்து பசில் ராஜபக்ஸ பிள்ளையானை சிறையில் இருந்து விடுவித்திருந்தார் என்றும் ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றது.

மேலும் இந்த சம்பவத்தடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தவர்கள் மற்றும்  பல சாட்சிகள் ஏற்கெனவே சாகடிக்கப் பட்டிருக்கின்றார்கள் (காத்தான்குடி பழனிபாவ, காத்தான்குடி சப்பாத்துக்கடை பார்சான். ஊர்காவல் படை ஆதம் லெப்பை முஹம்மட் ரியாஸ், வவுனதீவு இரு பொலிஸ் படுகொலை.) இன்னும் பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்னும் பலருக்கு ஆபத்து நெருக்கமாக வந்திருக்கின்றது.

குண்டு வெடிப்பு நடந்த நேரம் தன்னை சுரேஸ் சாலோ தாஜ் சமுத்திராவுக்கு உடனே போகுமாறு கேட்டிருந்தார். ஆனால் மௌலான அங்கு போகவில்லை. அப்படிப் போய் இருந்தால் தாஜ் சமுத்தரா ஹேட்டால் (ஜெமீல்) குண்டு வெடித்து  மௌலான அதில் கொல்லப்பட்டிருப்பார் என்று கூறுகின்றார் அஜித் தாமபால என்ற முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரி. இதில் ஈடுபட்ட உயர் அதிகாரரிகள் சூத்திரதாரிகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இப்படியான இரத்தக் கரைபடிந்த செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களின் முடிவுகளும் இப்படித்தான் அமையும்.

The Weekend Leader - Channel 4 Uncovers New Insights on 2019 Sri Lanka Easter Bombings: Archbishop Calls for Global Investigation

ஆணைக்குழு அறிக்கை

ஜெனீவாவில் பழைய கணக்குகள்  நிலுவையில் இருக்கின்ற இந்த நேரத்தில் கூட இருந்தவர்களே இன்று ஈஸ்டர் சாட்சிகளாக மாறுகின்ற நிலை ராஜபக்ஸாக்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் ஆரோக்கியமானதல்ல. இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரி அமைத்திருந்த ஜனாதிபதி விசாரணைக்குழு அறிக்கை 75000 வரையிலான பக்கங்களைக் கொண்டது.

ஆனால் இது இன்றுவரை முழுமையாக எவராவும் வாசிக்கப்படவில்லை என்று பேராயர் மெல்கம் கூறுகின்றார். அவர்கள் இதுவரை வாசித்திருக்கின்ற பக்கங்களில் பல சிபார்சுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதனை முன்னெடுப்பதற்கு அரசு ஆர்வம் இல்லாத நிலையைக் கடைப்பிடிக்கின்றது அது ஏன் என்று புரியவில்லை என்று கார்தினால் முறைப்படுகின்றார்.

கடந்த புதன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கடும் போக்கு சரத் வீரசேக்கர பெரும்பாலான பக்கங்களை இது வரை யாரும் பார்க்கவில்லை. அதனை முழுமையாக மக்கள் மயப்படுத்தப்படாமல் மறைத்ததுதான் இது போன்ற அறிக்கைகள்- ஆவணங்கள் செல்வாக்குப் பெற முக்கிய காரணம் என்று பகிரங்கமாகமாக அரசை அவர் குற்றம் சாடி  இருந்தார். அரசு யார்? அவர் யார்? என்ன வேடிக்கை இது?

மேலும் அதே தினம் ஜேவிபி. பிரச்சாரச் செயலாளார் விஜித ஹேரத் நடாத்திய ஊடகச் சந்திப்பில் இந்தத் தாக்குதல் நடந்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகின்றது. இது தொடர்பாக நியாயமான எந்த ஒரு விசாரணையும் உள்நாட்டில் நடக்கவில்லை. அத்துடன் முன்னாள் சட்டமா அதிபர் இது முற்றிலும் அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்று உறுதிபட கூறி இருந்தார்.

பெரும்பாலான பொது மக்கள் இந்த தாக்குதல் தொடர்பாக என்ன நினைக்கின்றார்கள் என்பதனை அவர்களுடன் பேச்சுக் கொடுத்தால் அவர்களது மன உணர்வுகளை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நாடு குற்றவாளிகளை சேனல் 4 கதை சொல்லும் முன்பு அடையாளம் கண்டுதான் இருக்கின்றது. இப்போது அது சர்வதேச அளவில் உறுதியாகி இருக்கின்றது.

தாக்குதலுக்குப் பின்னர்  தான் ஜனாதிபதியாக வந்தால்தான் நாட்டில் அமைதியை நிலை நாட்ட முடியும் என்று தனது வேட்பாளர் வருகையை அறிவித்தார் கோத்தாபே ராஜபக்ஸ. அந்த வேட்பாளர் உரிமையை கடும் போக்கு பௌத்த தேரர்களின் உதவியுடன்தான் அன்று அவர் பிடுங்கி எடுத்தார் என்ற ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது.

SIS chief summoned to CID: Rev. Father Cyril Gamini to follow?

சுரேஸ் சாலே

இந்த சுரேஸ் சாலே கோதாவுக்கு மிகவும் நெருக்கமாகச் செயல்பட்டவர். ரணில் பிரதமராகி ஜனாதிபதியாகிய பேதும் சுரோஸ் சாலே பதவிக்கு எந்த ஆபத்தம் இல்லை. இந்தப் பாரதூரமான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற நேரத்திலும் அவர் இன்றும் அரச உளவுத்துறை பிரதானி. அவர்தான் இந்த ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என்று சர்தேச மட்டத்தில் வலுவான குற்றச்சாட்டு. அப்படிப்பட்ட ஒருவரை அதிகாரம் மிக்க பதவியில் வைத்துக் கொண்டு அது தொடர்பான நியாயமான விசாரணையை எப்படி நேர்மையாக நடத்த முடியும். அத்துடன் அவர் தற்போது சேவை நீடிப்பில் இருக்கின்றார்.

நாடும் உலகும் எதிர்பார்கின்ற  நியாயாமான ஒரு விசரணையை மக்கள் அங்கிகாரம் இல்லலாத ஜனாதிபதி ரணிலிடமிருந்து எதிர்பார்க்கவும் முடியாது. ரணில் பற்றிய நல்லெண்ணம் மேற்கு நாடுகளில் இருக்கின்றது. அவர் ஒரு ஜனநாயகவாதி மிஸ்டர் கிளின் என்றெல்லாம் அவருக்குப் பெயர்களாம்! அப்படிப்பட்ட ஒருவர் இப்படியான பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு முன்னால் எப்படி நடந்து கொள்ளப் போகின்றார் என்பதும் இன்னும் சில நாட்களில் தெரியவரும். அனேகமான ஏதாவது பெயரில் ஒரு தெரிவுக் குழுவை ஒன்றை அமைத்து அதற்கு விசாரணை என்ற பெயரில் காலத்தைக் கடத்தவே அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு என்னதான் வேண்டுகோள்கள் விடுத்தாலும் அதற்கு இலங்கை செவிசாய்க்க வாய்ப்புக்கள்; மிக மிகக் குறைவு

ரணில் கோதாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது ரணில் தன்னைத்தானே தூக்கில் போட்டுக் கொள்ளும் செயல். அதனால் ரணில் நடவடிக்கை மீது  நம்பிக்கை வைப்பது என்பது நடக்கக் கூடிய காரியம் அல்ல. ரணில் ஜனாதிபதியானதும் ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை என்று நாடாளுமன்றத்தில் பேசி இருந்ததும், இன்றுவரை அது நடக்கவில்லை அவர் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கும்.

இதற்கு முன்னர் ஒரு முறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸாவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டது. அதற்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம் என்று மஹிந்தவே பகிரங்கமாக நாடாளுமன்த்தில் குறிப்பிட்டார். ஆனால் இன்றுவரை அப்படி நஸ்டஈடு கோரி எந்த வழக்கும் நியுயோர்க் டைம்ஸூக்கு எதிராக மஹிந்த எந்த பதியவோ நஸ்டஈடு கோரவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால் அந்தக் குற்றச்சாட்டு? அது போலதான் சேனல் 4 குற்றச்சாட்டுக் கதையும் அமையும் என்பது நமது கணிப்பு.

தனக்கு மரண தண்டைனையை பாகிஸ்தான் அதிபர் சியாவுல் ஹக் விதித்த போது முன்னாள் பாக்.பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டே கேள்விகள் இரத்தத்தினால் எழுதப்படும் போது பதில்களும் இரத்தத்தினால் வரையப்படுவது தவிர்க்க முடியாதது. என்று ஒரு குறிப்பை அன்று எழுதி இருந்தார். சியாவின் முடிவும் அப்படித்தான் அமைந்தது.

Sri Lanka: Muslim refugees fear repercussions after jihadist attacks | DW Stories - YouTube

எச்சரிக்கை

இந்த நாட்டில் தொடர்ந்தும் இஸ்லாமியப் பயங்கரவாதம் உயிருடன் இருக்கின்றது என்று காட்சிப்படுத்த வேண்டிய தேவை ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு இருக்கின்றது. எனவே சஹ்ரான் அணியைப் போன்று சில குழுக்களைக் காட்சிக்குக் கொண்டு வரும் ஆபத்தும் அபயமும் இன்றும் இருக்கின்றது. இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் மிகுந்த விளிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அப்படியான எந்த ஏற்பாடுகளும் முஸ்லிம் சமூகக் கட்டமைப்பில் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. இது மிகவும் ஆபத்தானது.

நன்றி: 10.09.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

'கோட்டா-பிள்ளை' அமெரிக்கா தூதுவராலயம் அதிரடி

Next Story

சனல் 4:  சுரேஷ் சலேவின் முறைப்பாட்டையடுத்து விசாரணை ஆரம்பம்