மனித நாகரிகமே அழியும்..
சூரியன் தான் பூமியின் ஒளி மற்றும் வெப்பத்தின் ஆதாரமாக இருக்கிறது. இந்தச் சூரியன் திடீரென மறைந்துவிட்டால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா.. இது பூமியைத் தற்காலிகமாக இருளில் மூழ்கடிக்குமா இல்லை.. அது அழிவின் தொடக்கமாக இருக்குமா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். இதற்கான பதில் நாம் பார்க்கலாம்.
பூமிக்கு சூரியன் ஒளிதான் எப்போதும் ஆதாரமாக இருக்கிறது. பூமியின் செயல்பாடுகளுக்கு ரொம்பவே முக்கியமான ஒன்றாகச் சூரியன் தொடர்ந்து இருந்து வருகிறது. சின்ன சின்ன பாக்டீரியா, செடி, கொடிகள் என அனைத்திற்குமே சூரிய ஒளி தான் ஆதாரமாக இருக்கிறது. அந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கும் சூரியன் திடீரென மறைந்து போய்விட்டால் என்ன நடக்கும்.

விவாதம்
இந்த விவாதம் தான் சமூக வலைத்தளங்களில் இப்போது எழுந்துள்ளது. சூரியன் 8.5 நிமிடங்கள் வரை மறைந்தால், பூமி பாதிக்கப்படாமலேயே இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏனென்றால் சூரிய ஒளி பூமியை அடையச் சுமார் 8.5 நிமிடங்கள் ஆவதால், சூரியன் மறைந்ததை நாம் உடனடியாகக் கவனிக்க மாட்டோம். எனவே, சூரியன் உடனடியாக இல்லாமல் போனாலும், 8 நிமிடங்கள் வரை சூரிய ஒளி இருக்கவே செய்யும்.
அதேநேரம், நீண்ட நேரம் பூமி இல்லாமல் போனால் தான் பேரழிவு ஏற்படத் தொடங்கும். அதேநேரம் பூமியின் வெப்பம் உடனடியாகப் பூஜ்ஜியத்திற்கு வராது. பூமியின் சுற்றுச்சூழலில் தக்கவைக்கப்பட்ட வெப்பம் உடனடி பூமி உறைபனிக்குச் செல்வதைத் தடுக்கும். அதேநேரம் பகல் நேரம் இருக்கும் நாடுகளிலும் இது இருளை ஏற்படுத்தும் என்பதால் குழப்பங்கள் அல்லது விபத்துக்களை ஏற்படுத்தக்கூடும். ஆனால் குறுகிய காலத்தில் பூமியின் வெப்பநிலை குறையாது.
பலருக்கும் தெரியாது
அதாவது சூரியன் ஒரு நிமிடம் மட்டும் திடீரென மறைந்து மீண்டும் ஒளிர ஆரம்பித்தால் அது குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள். பலருக்கு இப்படியொரு சம்பவம் நடந்தது கூட தெரியாது. இருப்பினும், நாள் கணக்கில் அல்லது மாத கணக்கில் சூரியன் இல்லாமல் போனால் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும்.
வெப்பம் குறையும்
ஒரு வாரத்திற்குள், சிறிய தாவரங்கள் இறக்கத் தொடங்கும், மேலும் வெப்பநிலை சுமார் 0°C (32°F) ஆகக் குறையும். சூரிய ஒளி போனதால் சில காலத்தில் ஒளிச்சேர்க்கை நின்றுவிடும்.. இதனால் பெரும்பாலான தாவரங்கள் இறந்துவிடும்.. இருப்பினும் பெரிய மரங்கள் மேலும் கூடுதல் காலம் தாக்குப்பிடித்து உயிர்வாழக்கூடும். கடலின் மேற்பரப்பு மெல்ல உறைய ஆரம்பிக்கும். ஆனால், முழுக் கடலும் ஐஸ் கட்டி போல மாற பல ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம் என்கிறார்கள்.
மனித இனமே அழியும்
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சூரியன் ஒரு நிமிடம் மறைந்தால் பூமிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.. வெறும் குழப்பம் மற்றும் உளவியல் விளைவுகளே அதிகமாக இருக்கும். இதனால் பீதி மற்றும் குழப்பம் ஏற்படும். அதேநேரம் பல ஆண்டுகள் சூரியன் மறைந்தால் அது மனித நாகரிகத்தின் அழிவின் தொடக்கமாக இருக்கும். பெரும்பாலான மனிதர்கள் அழிந்துவிடுவார்கள்.
ஒரு நூற்றாண்டு சூரியன் இல்லாமல் இருந்தால், வெப்பநிலை சுமார் -240°C (-400°F) ஆகக் குறையும்.. வளிமண்டலம் சிதறிவிடும்.. தீங்கு விளைவிக்கும் காஸ்மிக் கதிர்வீச்சு கிரகத்தைத் தாக்கும்.. இதனால் பூமி ஒரு தரிசு நிலமாக மாறும்.. அப்போது ஆழ்கடல் பாக்டீரியாக்கள் மட்டுமே உயிர்வாழும். மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுமே அழிந்துவிடும்.