சூடானில் அந்நாட்டு இராணுவம் மற்றும் துணை ராணுவப் படையான ராபிட் சப்போர்ட் போர்சஸ் (RSF) இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் போர் நடந்து வருகிறது. தற்போது இந்தப் போர் எண்ணெய் வளம் நிறைந்த கோர்டோபான் மாகாணங்களை நோக்கித் தீவிரமடைந்திருக்கிறது.

சூடானின் தென்-மத்திய பகுதியில் உள்ள தென் கோர்டோபான் மாகாணத்தில் உள்ள கலோகி என்ற நகரில் ஒரு மழலையர் பள்ளியில் ரேபிட் சப்போர்ட் போர்சஸ் என்ற ஆயுத குழுவினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில், 33 குழந்தைகள் உட்பட சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர்.
முதல் தாக்குதல் நடந்த இடத்தில், சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த அவசரகால மருத்துவப் பணியாளர்கள் மீதும், இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் படிக்கும் பள்ளியில் அவர்களைக் கொல்வது என்பது குழந்தைகளின் உரிமைகளை மீறும் ஒரு கொடூரமான செயலாகும். இந்தச் சண்டையின் விலையை ஒருபோதும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது,” என்று சூடானுக்கான ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பு பிரதிநிதி ஷெல்டன் யெட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக இந்தத் தாக்குதல்களை நிறுத்தி, மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவோருக்குப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற வழியை அனுமதிக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரையும் ஐ.நா. வலியுறுத்தியிருக்கிறது.
துணை ராணுவப்படை என்று அழைக்கப்படும் ரேபிட் சப்போர்ட் போர்சஸ் ஆயுத குழுவினர், அல்-பாஷர் நகரைக் கைப்பற்றிய பிறகு, சண்டை கோர்டோபான் மாகாணங்களுக்கு மாறியிருக்கிறது.
இதன் காரணமாக , கடந்த சில வாரங்களாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சூடான் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் தென் கோர்டோபானில் உள்ள காவுடாவில் 48 பேர் பலியாகினர்; அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோர்டோபானிலும் அல்-ஃபாஷரில் நடந்தது போன்ற புதிய தாக்குதல்கள் இனி அடிக்கடி நடக்கக்கூடும் என ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் துர்க் எச்சரித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு முதல் சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நீடிக்கும் இந்தச் சண்டையில் இதுவரை 40,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
12 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், உண்மையான பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.



