சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை

மியான்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து மக்களுக்காகப் போராடி வந்த தலைவர் ஆங் சான் சூச்சி கொரோனா விதிமுறைகளை மீறியதாகக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.மியான்மார் நாட்டில் கடந்த 1962 தொடங்கி சுமார் 50 ஆண்டுகளுக்கு ராணுவ ஆட்சியே நடைபெற்று வந்தது. இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தவர் ஆங் சான் சூச்சி. இதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். இருப்பினும், கொள்கையில் மனம் தளராமல் ஆங் சான் சூச்சி தொடர்ந்து போராடி வந்தார்.

மியான்மர்

மக்கள் போராட்டம் தீவிமரடைந்த நிலையில் கடந்த 2015இல் அங்குப் பொதுத்தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூச்சி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்நாட்டின் சட்டச் சிக்கல்கள் காரணமாக ஆங் சான் சூச்சியால் அதிபராகப் பதவியேற்க முடியவில்லை. இதையடுத்து அவரது நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவரான டின் கியாவ் அதிபராகப் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகர் பதவி ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டது.

ராணுவ ஆட்சி

இந்தச் சூழலில் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அங்கு மீண்டும் பொதுத்தேர்தல் நடந்தது. அதிலும் ஆங் சான் சூச்சி கட்சியே மாபெரும் வெற்றி பெற்றது. இருப்பினும், இத்தேர்தலில் மோசடி நடந்துள்ளதால் தேர்தலை ஏற்க முடியாது என்று அறிவித்த அந்நாட்டு ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் ஆட்சியைக் கவிழ்த்தது. இருப்பினும், தேர்தல் நியாயமாகவே நடைபெற்றதாகத் தேர்தல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இது சர்வதேச அளவில் மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என்ன குற்றச்சாட்டு

ஆங் சான் சூச்சியை கைது செய்த மியான்மர் ராணுவத்தினர் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது. கொரோனா தடுப்பு விதிகளை மீறி பிரசாரம் செய்தது,, சட்ட விரோதமாக வாக்கி டாக்கி இறக்குமதி, தேசவிரோதப் பேச்சு, ஊழல் என 4 குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருப்பினும் வழக்கு விசாரணை அனைத்தும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் தான் நடந்தது. இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை.

4 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கில் ஆங் சான் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு குறித்த இதர தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தத் தீர்ப்பு சர்வதேச நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய நாடாளுமன்ற தலைவர் சார்லஸ் சாண்டியாகொ இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ராணுவ ஆட்சியில் கைது செய்யப்பட்டது முதல் ஆங் சான் சூச்சி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

தேர்தல் எப்போது

மியான்மரில் மக்களாட்சி கவிழ்க்கப்பட்ட ராணுவ ஆட்சி அமைந்து 6 மாதங்களுக்கு மேலாகிறது. முதலில் அரசைக் கவிழ்த்த போது, இதை ஆட்சி கவிழ்ப்பு எனக் கூறக் கூடாது என்று குறிப்பிட்ட அந்நாட்டு ராணுவத்தினர் தேர்தல் முறைகேடு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் முறையாக நடத்தப்பட்ட பிறகு ஆட்சி அதிகாரம் மீண்டும் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர். இருப்பினும் 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தேர்தல் நடத்துவது குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

Previous Story

அரபாத் அணிகள் சாதனை

Next Story

கிரிக்கெட் அட்டவணை தேதி மற்றும் நேரம் அணி இடம்