சுவாமி விவேகானந்தரும் பசுப் பாதுகாவலரும்

-நாசிருத்தீன்-

பிப்ரவரி 1897-ல் நடந்த நிகழ்வு. கொல்கத்தாவின் பாக் பஜார் பகுதி. ராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தரான பிரியநாத்தின் வீட்டில் சுவாமி விவேகானந்தர் அமர்ந்திருந்தார். ராமகிருஷ்ணரின் பக்தர்கள் பலர் அவரைச் சந்திக்க அங்கு வந்திருந்தனர். பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது ஒரு பசுப் பாதுகாப்புத் துறவி அங்கு வந்தார். சுவாமி விவேகானந்தர் அவரிடம் பேசச் சென்றார், சுவாமி விவேகானந்தருக்கும் பசுப் பாதுகாப்பு போதகருக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான உரையாடல் நடந்தது. இதை சரத்சந்திர சக்ரவர்த்தி பெங்காலி மொழியில் எழுதினார். இந்த உரையாடல் சுவாமி விவேகானந்தரின் எண்ணங்களின் அதிகாரப்பூர்வ தொகுப்பின் ஒரு பகுதியாகவும் மாறியது.

பசுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த ஆர்வலரிடம் சுவாமி விவேகானந்தர் என்ன சொல்லியிருப்பார்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

1893ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் உலக மதங்களின் நாடாளுமன்றத்தில் இந்து மதக் கொடியைப் பறக்கவிட்டுத் திரும்பிய விவேகானந்தர், காவி உடை அணிந்த சன்யாசியிடம் சொன்னதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது.

பசுப் பாதுகாப்பு ஆர்வலர்களும் துறவிகள் மற்றும் சன்னியாசிகள் போன்ற ஆடைகளை அணிந்தனர். அவரது தலையில் காவி நிற தலைப்பாகை இருந்தது. அவர் வங்காளத்திற்கு வெளியே உள்ள இந்தி பேசும் பகுதியைச் சேர்ந்தவர் என்று தோன்றியது. விவேகானந்தர் பசு பாதுகாப்பு ஆர்வலரைச் சந்திக்க உள் அறையிலிருந்து வந்தார். வாழ்த்துக்குப் பின், பசுப் பாதுகாப்பு ஆர்வலர், கோ மாதா படத்தை அவருக்கு வழங்கினார்.

இதையடுத்து அவரிடம் உரையாடத் தொடங்கினார் சுவாமி விவேகானந்தர். இவ்விருவரின் உரையாடல் விவேகானந்தரின் முழுமையான படைப்புகளில் பதிவாகியிருப்பதை அப்படியே உங்களுக்கு வழங்குகிறோம்.

விவேகானந்தர்உங்கள் கூட்டமைப்பின் நோக்கம் என்ன?

ஆர்வலர்நமது நாட்டின் பசுக்களை வெட்டப்படுவதிலிருந்து தடுக்கிறோம். பல இடங்களில் கோ சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கசாப்பு கடைகளில் இருந்து வாங்கப்பட்ட நோயாளியான, பலவீனமான பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.

விவேகானந்தர்:  இது மிகவும் சிறந்த செயல்பாடு. உங்கள் அமைப்புக்கு வருவாய்க்கு என்ன வழி?

ஆர்வலர்: உங்களைப் போன்ற மஹாபுருஷர்களின் அருளால் ஏதொ கொஞ்சம் கிடைக்கிறது. அதைக்கொண்டு செய்கிறோம்.

விவேகானந்தர்: வைப்பில் எவ்வளவு இருக்கும்?

ஆர்வலர்: மார்வாடி வைசிய சமாஜம் இதற்காகச் சிறப்பு உதவி செய்கிறது. இந்த நற்பணிக்காக அவர்கள் பெரும்பொருளைக் கொடுத்து உதவியுள்ளனர்.

விவேகானந்தர்: மத்திய இந்தியாவில் தற்சமயம் பயங்கர பஞ்சம் நிலவுகிறது. ஒன்பது லட்சம் பேர் உணவின்றிப் பசியால் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. உங்கள் அமைப்பு இந்தப் பஞ்சத்தைப் போக்க ஏதேனும் உதவி செய்யத் தொடங்கியுள்ளதா?

ஆர்வலர்: எங்கள் அமைப்பு பசுப் பராமரிப்பு என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. பஞ்சத்துக்கு எந்த உதவியும் செய்வதில்லை.

விவேகானந்தர்: உங்கள் கண் முன் லட்சக்கணக்கானோர் பசியால் உயிர் துறக்கும் கொடுமையைப் பார்த்தும் கூட, ஒரு பிடி உணவளித்து இந்தக் கொடும் பஞ்ச காலத்தில் அவர்களைக் காப்பது உங்கள் கடமை என்று நீங்கள் உணரவில்லையா?

ஆர்வலர்: இல்லை. இது அவரவர் கர்ம பலன். பாவத்தினால் தான் பஞ்சம் விளைந்தது. அவரவர் செயல்களுக்கேற்ப அவரவர் பயன் பெறுவர்.

பசுப் பாதுகாப்பு ஆர்வலரின் இந்தப் பேச்சைக் கேட்டதும் சுவாமி விவேகானந்தரின் பெரிய விழிகள் சுடராக ஒளிர்ந்தன. கோபத்தால் முகம் சிவந்தது. ஆனால் அவர் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

மனிதர்கள் பட்டினியால் வாடுவதைக் கண்டும் இரக்கம் காட்டாத ஒரு அமைப்பு, அவர்களின் உயிரைக் காக்க ஒரு பிடி தானியத்தைக் கூடக் கொடுக்காமல், விலங்குகள், பறவைகளுக்குப் பெரிய அளவில் உணவு விநியோகம் செய்கிறது. தனது சகோதரர்களின் துயரத்தைத் துடைக்க நினைக்காத இத்தகைய அமைப்பின் மீது எனக்குச் சிறிதளவும் அனுதாபம் இல்லை. இப்படிப்பட்டவர்களால் சமுதாயத்திற்கு எந்த ஒரு சிறப்புப் பலனும் இருக்கும் என்றும் நான் நம்பவில்லை என்றார் விவேகானந்தர்.

அதன் பிறகு அவர், கர்ம பலன் பற்றிய வாதத்திற்கு வருகிறார். “மனிதர்கள் தங்கள் செயல்களின் பலனால் இறக்கிறார்கள் என்ற வாதத்தின் அடிப்படையில், உலகில் எந்த ஒரு செயலுக்காகவும் முயற்சி செய்வது முற்றிலும் பயனற்றது. விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான உங்கள் பணியும் இந்த வாதத்தில் அடங்கும். பசுக்கள் தங்கள் கர்மாவின் காரணமாகவே கசாப்புக் கடைக்காரர்களின் கைக்கு வந்து, கொல்லப்படுகின்றன, எனவே அவற்றைப் பாதுகாக்க முயற்சிப்பது கூட பயனற்றது தானே?” என்றார்.

விவேகானந்தரின் இந்த மொழிகளைக் கேட்ட பசுப் பாதுகாப்பு ஆர்வலர் திகைத்தார். “ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் பசு நமக்குத் தாய் போன்றது என்று வேதம் சொல்கிறதே” என்றார்.

இப்போது விவேகானந்தர் சிரித்தார். அவர் சிரித்துக்கொண்டே, “ஆம், பசு நம் தாய் தான், எனக்கு நன்றாகப் புரிகிறது. அப்படி இல்லை என்றால், வேறு யாரால் இவ்வளவு அற்புதமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்!” என்றார்.இதை கேட்ட பசு பாதுகாவலர் வேறு எதுவும் கூறவில்லை. விவேகானந்தரின் நையாண்டியை அவர் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். அப்போது பசுப் பாதுகாவலர் விவேகானந்தரிடம், “எங்கள் அமைப்பு சார்பாக உங்களிடம் உதவித் தொகை பெற வந்துள்ளேன்” என்றார்.

விவேகானந்தர்: நான் ஒரு நாடோடித் துறவி. உங்களுக்கு உதவ என்னிடம் ஏது பணம்? ஒரு வேளை என்னிடம் பணம் இருந்தால் நான் முதலில் மனிதர்களைக் காப்பாற்றவே அதைச் செலவு செய்வேன். மனிதர்களுக்கு அன்ன தானம், கல்வி தானம், தர்மம் என்று மனிதர்களுக்கான சேவைகள் முடிந்து என்னிடம் பணம் மிச்சம் இருந்தால் உங்கள் அமைப்புக்குத் தருவேன்.

இந்தப் பதிலைக் கேட்ட ஆர்வலர் திரும்பிச் சென்று விட்டார்.

மனிதமே சிறந்த அறம்

அங்கிருந்த ராமகிருஷ்ண பரம்ஹம்சரின் சீடர் சரத்சந்திரர், “இதற்குப் பிறகு, விவேகானந்தர் மக்களிடம், ‘அவர் என்ன சொன்னார் கேட்டீர்களா? மனிதன் தனது செயல்களின் பலனால் இறக்கிறான், அதனால் அவன் மீது கருணை காட்டி என்ன பயன் என்கிறார். நமது நாட்டின் வீழ்ச்சிக்கு இதுவே வாழும் ஆதாரம். உங்கள் இந்து மதத்தின் கர்மவாதம் எங்கே கொண்டு சென்று விட்டது பார்த்தீர்களா? ஒரு மனிதனின் துன்பம் கண்டு துக்கமடையாத ஒரு இதயம் கொண்டவர் ஒரு மனிதனா?” என்று வேதனையில் துடித்தபடி சொன்னார்.” என்கிறார்.

இந்த உரையாடல் 121 ஆண்டுகளுக்கு முந்தையது. ஆனால் இந்த உரையாடல் நம் காலத்திற்கும் பொருந்துகிறது அல்லவா?

சுவாமி விவேகானந்தரைப் பொருத்தவரை, மனிதனுக்கும் மனித குலத்துக்கும் சேவை செய்வதே சிறந்த அறம் என்பது இந்த உரையாடலில் இருந்து தெரிகிறது. ஆனால் சுவாமி விவேகானந்தரின் பெயரை மேற்கோள் காட்டும் நம்மில் எத்தனை பேருக்கு ​​அவருடைய இந்த குணம் நினைவில் வருகிறது?

இன்னும் கற்பனை செய்யுங்கள்

அறிவைப் பயன்படுத்தினால் அறிவு தீட்சண்யமடையும் என்று கூறுவார்கள், அந்தத் துறவாடையும் காவி தலைப்பாகையும் அணிந்த விவேகானந்தர் இன்று நம்மிடையே இருந்தால் கீழ்க்கண்ட சம்பவங்கள் குறித்து என்ன கூறியிருப்பார்?

  • ஜார்க்கண்டின் சந்தோஷி, மீனா முசஹர், சாவித்ரி தேவி, ராஜேந்திர பிர்ஹோர், தில்லியின் ஷிகா, மான்சி, பாருல் ஆகிய சகோதரிகளின் பசி மரணம்
  • அக்லாக், அலிமுதீன், பஹலூ கான், காசிம் ரக்பர் கான் ஆகியோர் பசுவதை காரணமாகக் கொல்லப்பட்ட சம்பவம்
  • குஜராத், ஆந்திரா ஆகிய இடங்களில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகள் மீதான தாக்குதல்
  • மேலும் இந்த கொலைகளையோ, அடிதடிகளையோ அல்லது மற்ற வன்முறைகளையோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நியாயப்படுத்த முயல்வது.
  • கோசாலைகளில் பசுக்களின் மரணங்கள்
  • பயிர்கள் சேதம் மற்றும் கடன் சுமையால் உயிரிழக்கும் விவசாயிகள்.

மேலே கண்ட அவரது உரையாடலின் மூலம் அவரின் கருத்து என்னவாக இருந்திருக்கும் என்பதை நம்மால் எளிதில் ஊகிக்க முடியும்.

இன்றைக்கு சுவாமி விவேகானந்தர் இருந்திருந்தால், பசு பாதுகாவலரிடம் அவர் இப்படிப் பேசியிருந்தால், அவருக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

(நாசிருத்தீன் ஒரு மூத்த பத்திரிக்கையாளர். சமூக விவகாரங்களில் அதிக ஆர்வமாகச் செயல்படக்கூடியவர். எழுத்தும் ஆய்வும் தவிர, சமூக மாற்றத்திற்காகக் களத்தில் இறங்கிச் செயல்படும் செயல்பாட்டாளரும் ஆவார்.)

Previous Story

பன்றியின் இதயம் மனிதனுக்கு ஓகே!டாக்டர் முஹம்மது மொஹிடின்!!!

Next Story

தினம் (5.30-9.30 இடையே) ஒரு மணி மின்வெட்டு