வருகின்ற பொதுத் தேர்தலில் சீனியர்கள் பலர் வெளியே தள்ளப்பட்டு புதியவர்கள் பலர் உள்ளே நுழைவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கின்றது. பல தசாப்தங்களாக பாராளுமன்ற ஆசனங்களை சூடாக்கிக் கொண்டிருந்த சிலரை அந்த ஆசனங்களில் இருந்து தூக்கி எறிவதற்கு பொது மக்கள் ஏற்கெனவே தீர்மானம் எடுத்திருக்கின்றார்கள் என்பதனை பலதரப்பட்ட மக்களிடையே நடக்கின்ற உரையாடலில் இருந்து அவதானிக்க முடிகின்றது.
தங்களைப் பற்றி மக்களிடத்தில் நல்லெண்ணம் இல்லை என்று புரிந்து கொண்ட அரசியல்வாதிகள் பலர் மக்களின் காலடிகளில் போய் விழுகின்ற காட்சிகளையும். மக்களால்; அவர்கள் விரட்டியடிக்கப்படுகின்ற சம்பவங்களையும் பல இடங்களில் நாம் பரவலாக பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. தமது செயலாளர்கள்தான் தனக்கு இந்த நிலை வரக் காரணம் என்றும் சொல்லி சிலர் தப்பிக் கொள்ள முனைவதையும் அவதானிக்க முடிகின்றது. இலட்சக் கணக்கில் வோட்டு வாங்கியவர்கள் இந்த முறை ஆயிரக்கணக்கிலாவது பெற்றுக் கரை சேருவதற்க்காக வீடுவீடாக ஓடித்திரிகின்றார்கள்.
கடந்த தேர்தல்களில் ஒரே அணியில் இருந்தாலும் சுட்டமண் போல் எதிரும் புதிருமாக அரசியல் செய்தவர்கள் இப்போது ஒற்றுமையாக ஒரே மேடையில் தோன்றி பரப்புரை செய்வதன் மூலம் களத்திலுள்ள ஆபத்தை அவர்கள் புரிந்திருக்கின்றார்கள் என அறிய முடிகின்றது. இந்தக் காட்சிகளை வன்னியிலும் கண்டியிலும் நாம் பார்க்க முடிகின்றது. எனவே விருப்பு வாக்கில் இந்த முறை பெரும் வேறுபாடுகளுக்கு வாய்ப்பிருக்கின்றது என்பதனையும் அவதானிக்க முடிகின்றது.