திருமணம் ஆர்வம் காட்டாத இளசுகள்..
சீனாவுக்கு மக்கள் தொகை அதிகரிப்பு பிரச்சினையாக இருந்த காலம் மாறி, இப்போது மக்கள் தொகை சரிவது பிரச்சினையாக மாறியிருக்கிறது. இதைச் சமாளிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அது பெரிதாகப் பலன் தரவில்லை.
இதற்கிடையே சமீபத்தில் வெளியான டேட்டாவில் அங்கு குழந்தை பிறப்பு மட்டுமின்றி, திருமணங்களும் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. அதேபோல விவாகரத்துகளும் அங்கு அதிகரிக்கிறதாம்.
உலகின் மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இந்தியாவுக்குப் பிறகு, சீனா 2வது இடத்தில் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே சீனாவுக்கு மக்கள் தொகை அதிகரிப்பு தான் பிரச்சினையாக இருந்தது.

ஆனால், சில காலமாக நிலைமை மொத்தமாக மாறியிருக்கிறது. மக்கள் தொகை குறையத் தொடங்கியுள்ளது அங்குப் பிரச்சினையாகியுள்ளது.
இது நீண்ட கால நோக்கில் சீனா பொருளாதாரத்தைப் பாதிக்கும். இதற்கிடையே சமீபத்தில் வெளியான டேட்டாவில் சில முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.
சீனாவின் பிரச்சினை:
அதாவது அங்குக் குழந்தை பிறப்பு மட்டுமின்றி அங்குத் திருமணங்களும் கூட கடந்த பல ஆண்டுகளாகவே குறைந்து வருகிறது. சீனாவில் கடந்த 2024ல், வரலாற்றில் இல்லாத அளவுக்குத் திருமண விகிதம் மிக மோசமாகக் குறைந்துள்ளது.
அங்குள்ள இளைஞர்களைத் திருமணம் செய்யாமலும் குழந்தைகளைப் பெறவும் அந்நாட்டு அரசு ஊக்குவித்து வரும் போதிலும், இளைஞர்கள் திருமணம் செய்ய ஆர்வம் காட்டுவதில்லையாம். இது சீனாவுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது.
கடந்தாண்டு சுமார் 60 லட்சம் தம்பதிகள் மட்டுமே தங்கள் திருமணங்களைப் பதிவு செய்துள்ளனர். இது 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 20.5 சதவீதம் குறைவாகும்..
சீனாவில் 1986 முதல் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் சூழலில், 2024ல் தான் மிகக் குறைந்த திருமணங்கள் பதிவாகியுள்ளன.
திருமணங்களும் குழந்தை பிறப்பும்
திருமணங்கள் குறைவதால் குழந்தை பிறப்பும் கூட சீனாவில் தொடர்ந்து குறைந்தே வருகிறது. இந்த இரண்டும் சீனாவுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.
ஏனென்றால் குழந்தை பிறப்பு குறையும் போது, வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க வேலை செய்யும் வயதில் இருப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது. இது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.
கடந்த 2013ம் ஆண்டில் சீனாவில் அதிகபட்சமாக சுமார் 1.3 கோடி திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தனர். இப்போது 10 ஆண்டுகளில் அது சரி பாதிக்கும் கீழாகக் குறைந்துள்ளது.
அதிகரிக்கும் விவாகரத்து:
அதேபோல சீனாவில் விவாகரத்துகளும் அதிகரித்தே வருகிறது. கடந்த 2024ல் சீனாவில் சுமார் 26 லட்சம் பேர் விவாகரத்து கோரி விண்ணப்பித்தனர்.
இது முந்தைய ஆண்டை விட 28,000 அதிகமாகும்.. கடந்த சில ஆண்டுகளாகவே விவாகரத்துகள் அதிகரித்து வருவதும் சீனாவுக்குத் தலைவலியாக உள்ளது.
விவாகரத்துகளைக் கட்டுப்படுத்த 2021ஆம் ஆண்டு முதல், விவாகரத்துக்குத் தாக்கல் செய்யும் தம்பதிகளுக்கு 30 நாள் “கூலிங்-ஆஃப்” காலத்தைச் சீனா விதித்துள்ள போதிலும், விவாகரத்துகள் அதிகரித்தே வருகிறது.
மேலும், கடந்த 3 ஆண்டுகளாகவே சீனாவில் மக்கள் தொகை சரிந்து வருகிறது. குறிப்பாக வேலை செய்யும் வயதில் (16 முதல் 59) இருப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
அதேநேரம் வயதானவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகிறது. அதாவது வேலை செய்ய ஆட்கள் குறைந்து கொண்டே இருக்கிறார்கள்.
சீன அரசு:
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் திருமணங்களுக்கும் குழந்தை பிறப்பிற்கும் தொடர்பு இருக்காது. பல சிங்கிள் பெற்றோரைப் பார்க்க முடியும். ஆனால், சீனா போன்ற ஆசிய நாடுகளில் நிலைமை அப்படி இல்லை.
திருமணங்கள் குறைவதால் குழந்தை பிறப்பும் குறைகிறது. இதைச் சமாளிக்கப் பல சிறப்புத் திட்டங்களையும் சீனா செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், எதற்கும் பெரியளவில் பலன் கிடைப்பதில்லை.
இதே நிலை தொடர்ந்தால் சீனா பொருளாதார ரீதியாகப் பலவீனமான நாடாகவும் நிலைமை மிக மோசமானால் மக்களே இல்லாத நாடாகவும் கூட சீனா மாறும் ஆபத்து இருக்கிறது.