சிரியாவின் மீது இஸ்ரேல் தாக்குதலில் 18 பேர் பலி

மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசின் செய்தி முகமை (சனா) தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஹமா மாகாணத்தில் உள்ள மஸ்யாஃப் பகுதியில் நடந்த தாக்குதல்களில் மேலும் 37 பேர் காயமடைந்ததாக சுகாதார அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அந்த செய்தி முகமை கூறியிருந்தது.

அப்பட்டமான ஆக்கிரமிப்பு

பிரிட்டனை தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழு, ‘இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், தாக்கப்பட்ட ஐந்து இலக்குகளில் ஆயுத உற்பத்தியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அறிவியல் ஆராய்ச்சி மையமும் உள்ளடங்குவதாகவும்’ தெரிவித்தது.

சிரியாவின் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி

இந்த தாக்குதல்கள் பற்றிய வெளிநாட்டு ஊடக செய்திகள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதல்களை ‘அப்பட்டமான ஆக்கிரமிப்பு’ என்று கண்டனம் தெரிவித்தது. இரானின் வெளியுறவு அமைச்சகம் ‘இது குற்றவியல் தாக்குதல்’ என்று கூறியது.

ஆனால், தனது முக்கிய எதிரியான இரானுடன் தொடர்புடையவை என்று கூறி சிரியாவின் இலக்குகள் மீது சமீபத்திய ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியதை இஸ்ரேல் இதற்கு முன்பாக ஒப்புக் கொண்டுள்ளது.

மஸ்யாஃப்-வாடி அல்-ஓயோன் நெடுஞ்சாலை
இந்த தாக்குதலால் மஸ்யாஃப்-வாடி அல்-ஓயோன் நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டதாகவும், வனப்பகுதியான ஹேர் அப்பாஸ் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சனா செய்தி முகமை தெரிவித்துள்ளது

                        ராணுவ தளங்களின் மீது ஏவுகணை தாக்குதல்

கடந்த ஆண்டு அக்டோபரில் காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலின் தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும், ஹெஸ்பொல்லா மற்றும் லெபனான், சிரியாவில் உள்ள பிற குழுக்களால் வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதிலடியாக இவை நடத்தப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11:20 மணியளவில் வடமேற்கு லெபனானின் மீது பறந்த ஒரு இஸ்ரேலிய விமானம், ‘மத்திய பிராந்தியத்தில் உள்ள பல ராணுவ தளங்களின் மீது ஏவுகணைகளை வீசியது’ என்று ஒரு சிரிய ராணுவ ஆதாரத்தை மேற்கோள் காட்டி சனாவின் செய்தி கூறுகிறது.

“எங்கள் வான் பாதுகாப்பு சில ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது” என்று அந்த சிரிய ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலால் மஸ்யாஃப்-வாடி அல்-ஓயோன் நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டதாகவும், வனப்பகுதியான ஹேர் அப்பாஸ் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சனா செய்தி முகமை தெரிவித்துள்ளது.

18 பேர் கொல்லப்பட்டதாகவும், 37 பேர் காயமடைந்ததாகவும் ஹமா மாகாணத்தின் சுகாதார இயக்குனர் கூறியதாக சனா செய்தி முகமை குறிப்பிட்டது.

சிரிய அரசால் நடத்தப்படும் ‘அல்-இக்பாரியா அல்-சூரியா’ தொலைக்காட்சியும் மஸ்யாஃப்-க்கு மேற்கே உள்ள துறைமுக நகரமான டார்டஸ் நகரில் சேதமடைந்த கட்டிடத்தைக் காட்டும் காட்சிகளை ஒளிபரப்பியது.

சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு (SOHR- எஸ்ஓஎச்ஆர்) என்பது களத்தில் ஒரு வலிமையான வலையமைப்பைக் கொண்ட, பிரிட்டனைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் கண்காணிப்புக் குழு.

அது, மஸ்யாஃபில் உள்ள அறிவியல் ஆய்வுப் பகுதி, மஸ்யாஃப்-வாடி அல்-ஓயோன் நெடுஞ்சாலை மற்றும் ஹேர் அப்பாஸ் பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ராணுவ தளங்களை இஸ்ரேலிய தாக்குதல்கள் அழித்ததாக தெரிவித்தது.

மஸ்யாஃப் மருத்துவமனை
மஸ்யாஃப் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது

‘ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை உருவாக்கும் திட்டம்’

குறுகிய மற்றும் நடுத்தர தூர இலக்குகளுக்கான துல்லியமான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இரானிய புரட்சிகர காவலர்கள் ஆறு ஆண்டுகளாக அந்த அறிவியல் ஆராய்ச்சி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக எஸ்ஓஎச்ஆர் தெரிவித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இரண்டு பிராந்திய புலனாய்வு ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ‘ரசாயன ஆயுத உற்பத்திக்கான ஒரு பெரிய ராணுவ ஆராய்ச்சி மையம் பல முறை தாக்கப்பட்டது’ எனக் கூறியது.

ரசாயன ஆயுதங்கள் ஒப்பந்தத்தை மீறி ரசாயன ஆயுதங்களை தயாரிக்க மஸ்யாஃப் அருகே உள்ள அறிவியல் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (SSRC) கிளை பயன்படுத்தப்பட்டதாக மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் முன்பு குற்றம் சாட்டின. இந்த கூற்றை சிரிய அரசு மறுத்துள்ளது.

எஸ்ஓஎச்ஆர் குழுவின் தகவலின் படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 64 முறை இஸ்ரேலிய விமான மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் சிரியப் பிரதேசத்தை குறிவைத்துள்ளன.

ஏப்ரலில், டமாஸ்கஸில் உள்ள தூதரக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இரான் குற்றம் சாட்டியது. அதில் ‘இரானிய புரட்சிகர காவலர் படையின்’ இரண்டு மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர்.

அதன் விளைவாக, இஸ்ரேலுக்கு எதிராக இரான் தனது முதல் நேரடி ராணுவ தாக்குதலை நடத்தி, பதிலடி கொடுத்தது. இரான் 300 ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியது, ஆனால் அவை அனைத்தும் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தலைமையிலான படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

Previous Story

மாவனெல்ல சஜித் கூட்டத்தில் குழப்பம்

Next Story

முஸ்லிம் அல்லாத பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச், யூடியூபர் கைதால் சர்ச்சை