சிங்கப் பெண்!

நெல்லை மாவட்டத்தில் ஆடை இல்லாமல் கிடந்த மனநலம் குன்றிய ஆண் ஒருவருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் இருந்த ஒரு துணியை எடுத்து வேட்டி போல் பெண் ஒருவர் கட்டிய சம்பவம் பெரும் வரவேற்பைபெற்றுள்ளது

.உறவினர்கள்கைவிட்டுவிடுவதால் ஆதரவு இன்றி சாலைகளில் இருக்கும் மனநலம் குன்றியவர்களை கேலி பொருளாகவே சிலர் பார்த்து வந்தனர். அவர்களும் மனிதர்கள், அவர்களும் உணர்ச்சிகள் இருக்கிறது என்பதை மறந்து கேலி கிண்டல் செய்து வந்தனர்.

இது போல் கைவிடப்படும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும் தனியார் தொண்டு நிறுவனங்களும் அடைக்கலம் கொடுத்தன. இவர்களை வைத்து பராமரிக்கும் இடங்களில் உணவு செலவு, அவர்களை பராமரிக்கும் செலவுகளை அண்மைக்காலமாக பலர் செய்ய முன் வந்துள்ளார்கள்.

பிரச்சினை

மனதளவில் பிரச்சினை இருக்கும் இவர்களுக்கு உணவு, இருக்க இடம், உடை கொடுத்து அதனுடன் அன்பையும் கலந்து கொடுத்தால் அதுதான் மனிதம் என்கிறார்கள். ஆனால் நெல்லையில் பெண் ஒருவர் யாரும் செய்ய துணியாத ஒரு காரியத்தை செய்துள்ளார். அதாவது உடலில் ஒரு சிறிய ஆடைக் கூட இல்லாமல் நிர்வாணமாக இருந்தவருக்கு ஒரு துணியை வேட்டி போல் கட்டியுள்ளார்.

இரு சக்கர வாகனம்

அவர் யார் என்ன செய்தார் என்பதை பார்ப்போம். நெல்லை கங்கைகொண்டானை சேர்ந்தவர் நந்தினி. இவர் சிப்காட் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது நான்கு வழிச் சாலையின் நடுவில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் உடையின்றி நடந்து வருவதைப் பார்த்துள்ளார்.

இடுப்பில்

உடலில் ஒரு சிறிய துணி கூட இல்லாமல் அவரை பார்த்த நிலையில் தாயுள்ளம் கொண்ட நந்தினிக்கு அவர் மீது இரக்கம் ஏற்பட்டது. உடனே தனது வாகனத்தை நிறுத்தினார். அதில் ஒரு பட்டு துணி போன்ற சால்வை இருந்தது. அதை எடுத்தார். அந்த நபரிடம் சிறிதும் தயக்கமுமின்றி சென்றார். அவரது இடுப்பில் அந்த பச்சை நிற சால்வையை வேட்டி போல் கட்டிவிட்டார்.

கடைத்தெருவுக்கு போன நந்தினி

பின்னர் அங்கிருந்த ஒரு கல்லில் அவரை உட்கார வைத்துவிட்டு, அருகில் இருந்த கடைத்தெருவுக்கு போனார். அங்கு ஒரு சிறிய உணவகம் இருந்தது. அங்கு உணவை பார்சல் வாங்கிக் கொண்டு மனம் நலம் குன்றிய நபருக்கு ஊட்டிவிட்டார்.

தாயை போல் அந்த நபருக்கு நந்தினி காட்டிய அன்பை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து வைரலாக்கி வருகிறார்கள். ஆண்களே செய்ய விரும்பாத ஒரு காரியத்தை பெண்ணாக இருந்து கொண்டு செய்ததை அடுத்து இணையத்தில் நந்தினிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Previous Story

அனுஷ்கா விராட் ஜோடியின் பதிவு!

Next Story

அரசியலமைப்பு கோட்பாடுகள் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் முன்மொழிவுகள்