/

சார்லி சாப்ளின்

 

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin,

ஏப்ரல் 161889 – டிசம்பர் 251977)

என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின்ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

இளமைப் பருவம்

சாப்ளின், இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார். 1896ஆம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது.

பின்னர் இருவரும் Hanwell School for Orphans and Destitute Children என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையில், சாப்ளினின் தந்தை குடிப் பழக்கத்தால் உடல் நலம் குன்றி சாப்ளினின் பன்னிரண்டாவது வயதில் இறந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த கேன் ஹில் அசைலம் (Cane Hill Asylum) என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். பின்பு இவரும் 1928ஆம் ஆண்டில் இறந்தார்.

சாப்ளின் ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894ஆம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சிறுவனாக பல நாட்கள் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த பொழுது சிட்னி இலண்டன் ஹிப்போட்ரோமில் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார்.

1903ஆம் ஆண்டில் “ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்” (Jim, A Romance of Cockayne) நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவரது முதல் நிரந்தர வேலை கிடைத்தது – செர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம். இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ் (Casey’s Court Circus) நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், Fred Karno’s Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார். அமெரிக்காவின் குடிபெயர்வுப் பதிவுகளின்படி கார்னோ குழுவுடன் அக்டோபர் 21912 – அன்று அமெரிக்கா வந்தடைந்தார். கார்னோ குழுவிலே ஆர்த்தர் ஸ்டான்லே ஜெப்பர்சனும் இருந்தார் – இவரே பின்னர் ஸ்டான் லாரலாக பிரபலமானார். இருவரும் சிறிது காலம் ஒரே அறையில் தங்கினர்.

திரையுலக வாழ்க்கை

தி கிட்” திரைப்படத்தில் ஜாக்கி கூகனுடன் சாப்ளின் (1921)

தயாரிப்பாளர் மாக் செனட் சாப்ளினின் திறமையைக் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார். முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னைப் பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார்.

இவரது கிடுகிடு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும், நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப்பட்ட உரிமையுமாகும். இவரது வளர்ச்சியையும், இவரது நிருவாகியாக பணிபுரிந்த சிட்னியின் ஆற்றலையும் சாப்லினின் சம்பளப் பட்டியல் எடுத்துக்காட்டியது. இவர் 1919ஆம் ஆண்டில் மேரி பிக்போர்ட்டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ்கிரிபித்துடன் இணைந்து யுனைட்டடு ஆர்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோவைத் துவங்கினார்.

1927ஆம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும் 1930ஆம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். சாப்ளின் சினிமாவின் பல துறைகளில் கை தேர்ந்தவராகத் திகழ்ந்தார். 1952ஆம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928ஆம் ஆண்டுத் திரைப்படம் “தி சர்க்கஸ்” படத்தின் தலைப்பு இசை அமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது ஸ்மைல்.

டிக்டேட்டராக சாப்ளின்

இவரது முதல் டாக்கீஸ் 1940 ஆம் ஆண்டில் வெளியான “தி கிரேட் டிக்டேடர்” (The Great Dictator). இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் புகுவதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இதில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார் – ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இரு முறைப் பார்த்தார்.

போர் முடிந்த பிறகு, ஹோலோகாஸ்ட்டின் கொடுமை உலகிற்கு தெரியவந்த பிறகு சாப்ளின் இக்கொடுமைகள் எல்லாம் தெரிந்திருந்தால் ஹிட்லரையும், நாசியர்களையும் கிண்டல் செய்திருக்க முடியாது என்றார் இவரது கடைசி திரைப்படங்கள் “தி கிங் இன் நியூ யார்க்” (1957), “தி சாப்லின் ரெவ்யூ” (1959) மற்றும் சோஃபியா லாரென், மார்லன் ப்ராண்டோ நடித்த “அ கௌண்டஸ் ·ஃப்ரம் ஹாங்காங்“.

கம்யூனிச சிந்தனை

சாப்ளினின் அரசியல் சிந்தனைகள் இடது சார்புடையதாகக் கருதப்படுகிறது. இதனையே இவரது திரைப்படங்களில், முக்கியமாக “மாடர்ன் டைம்ஸ்” (Modern Times) பிரதிபலித்தன. இப்படம் பாட்டாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையை சித்தரித்தது. “மெக்கார்த்திச காலங்களில்” இவர் அமெரிக்க கொள்கைகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கம்யூனிஸ்ட்-எனவும் சந்தேகிக்கப்பட்டார்; ஜே.எட்கார் ஹூவர் எஃப்.பி.ஐ-யிடம் இவரை கண்காணிக்குமாறு உத்தரவிட்டு, அமெரிக்காவில் சாப்ளின் வாழும் உரிமையை நீக்க முயற்சித்தார்.

சாப்ளினின் வெற்றிகள் அனைத்துமே அமெரிக்காவில் அமைந்தாலும், அவர் பிரிட்டிஷ் குடியுரிமையினையே நீட்டித்தார். 1952 ஆம் ஆண்டில் சாப்ளின் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதனை தெரிந்து கொண்ட ஹூவர் ஐ.என்.எஸ் (Immigration and Naturalization Service)-உடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாப்ளின் அமெரிக்கா திரும்பும் அனுமதிச் சீட்டை ரத்து செய்தார். ஆதலால் அவர் ஐரோப்பாவிலேயே தங்கும்படி நேர்ந்தது – பெரும்பாலும் வெவே, சுவிஸர்லாந்தில் வாழ்ந்தார். இவர் 1972 ஆம் ஆண்டில் சிறிது காலம், தனக்கு அளிக்கப்பட்ட கௌரவ ஆஸ்கார் விருதைப் பெறுவதற்காக அமெரிக்கா திரும்பினார்.

திருமணங்கள்

இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ், பலமுறை தன் தனிப்பட்ட வாழ்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அக்டோபர் 23 .1918-இல் இருபத்தியெட்டு வயது சாப்ளின் பதினாறு வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தது. இவர்களது திருமண வாழ்க்கை 1920 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

முப்பத்தி ஐந்து வயதில் “தி கோல்ட் ரஷ்” திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுது, பதினாறு வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். நவம்பர் 26 1924-இல் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் $825,000 ஒப்பந்ததுடன் விவாகரத்தில் முடிந்ததது. இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இவரது தலைமுடி நரைக்கத் துவங்கியது.

மேலும் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப் பற்றிய பல அந்தரங்க செய்திகள் இடம்பெற்றது. இதனால் இவரை எதிர்த்து பிரச்சாரங்கள் நடைபெற்றன. சாப்ளினின் நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936-இல் ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது. இக்காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது; ஆனால், பேரி சாப்ளினை துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார்.

ஆனால் மே 1943-ஆம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார். இரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும், அக்காலத்தில் இரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை; குழந்தை 21 வயது வரும் வரை வாரம் $75 வழங்குமாறு உத்தரவிடப்பட்டார்.

சில நாட்கள் கழித்து, ஐகன் ஓ’நீலின் மகள், ஓனா ஓ’நீலை சந்தித்தார். இவரை ஜூன் 16, 1943 அன்று மணந்தார். சாப்ளினின் வயது அப்பொழுது 54, ஓ’நீலின் வயது 17. இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழ்ந்தைகள் பிறந்தனர்.

சாப்ளினின் மரணம்

சாப்ளின், 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். மார்ச்சு 1, 1978 ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.

விருதுகளும் பெருமைகளும்

சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள்.

அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார்.

சாப்ளின் Monsieur Verdoux திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான விருதுக்காகவும், தி கிரேட் டிக்டேடர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை ஆகிய விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டாலும், விருதுகள் பெறவில்லை. 1972 ஆம் ஆண்டில் சிறந்த இசையமைப்புக்கான விருதை கிளயர் புளூம் நடித்திருந்த லைம்லைட் (1952) திரைப்படத்திற்காக பெற்றார். 1952 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டாலும் மெக்கார்த்திசத்தினால் சாப்ளினுக்கேற்பட்ட பிரச்சனைகளால் லாஸ் ஏஞல்சில் வெளிவரவில்லை.

1972 ஆம் ஆண்டிலேதான் விருதுக்குத் தேர்வாவதற்கான கட்டுப்பாடுகளை நிறைவு செய்தது. “லைம்லைட்” திரைப்படத்தில் பஸ்டர் கீட்டனும் நடித்திருந்தனர். இதுவே இவ்விரு நகைச்சுவை மேதைகளும் முதலும் கடைசியுமாக சேர்ந்து தோன்றிய திரைப்படம்.

மார்ச் 4, 1975 அன்று பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் அரசி சாப்ளினுக்கு “சர்” பட்டம் அளித்தார். இவருக்கு இந்தப் பெருமையை வழங்கக் கோரி 1956ஆம் ஆண்டே பரிந்துரைத்திருந்தாலும், இதனை பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக எதிர்த்தது. சாப்ளின் ஒரு பொதுவுடைமையாளர் என்றும், அவரைச் சிறப்பிப்பதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஏற்கனவே விரிசல் விட்டிருந்த உறவு பாதிக்கப்படும் என்றும் கருதினார்கள். அக்காலத்தில் தான் பனிப் போர் அதன் உச்சக்கட்டத்தில் இருந்தது; மேலும் சூயஸ் கால்வாயினை கைப்பற்றும் முயற்சியும் இரகசியமாக திட்டமிடப்பட்டு வந்தது.

சாப்ளின் “ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில்” இடம் பெற்றார். 1985 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு, இவரது உருவத்தை அஞ்சல் தலை ஒன்றில் வெளியிட்டு பெருமை சேர்த்தது. 1994 ஆம் ஆண்டு அல் ஹிர்ஸ்ஃபெல்ட் வடிவமைத்த அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார். 1992 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை “சாப்ளின்” என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.

இதனை இயக்கியவர் ஆஸ்கார் விருது பெற்ற சர். ரிச்சர்ட் அட்டன்பரோ. இதில் நடித்தவர்கள் ராபர்ட் டௌனி ஜூனியர், டான் ஐக்ராய்ட், ஜெரால்டின் சாப்ளின் (சாப்ளினின் மகள் சாப்ளினின் தாயாக நடித்திருந்தார்), சர் அந்தோனி ஹாப்கின்ஸ், மில்லா ஜோவோவிச், மொய்ரா கெல்லி, கெவின் கிலைன், டயானா லேன், பெனிலோப் ஆன் மில்லர், பால் ரைஸ், மரீசா டோமை, நான்சி டிராவிஸ் மற்றும் ஜேம்ஸ் வுட்ஸ்.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற “நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர்”கருத்துக் கணிப்பில் உலகத்தின் தலை சிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக சாப்ளினைத் தேர்ந்தெடுத்தார்கள்.

சாப்ளின் சுவையான செய்திகள்

  • சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும்பொழுது பெரிதும் வியப்புற்றனர்.
  • சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பலவற்றை நடத்தினார்கள். ஒரு முறை அப்போட்டி ஒன்றில் சாப்ளின் இரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது!

Previous Story

குடி மக்களுக்கோர் சிவப்பு எச்சரிக்கை!

Next Story

எருமைக்கு ரூ. 80 லட்சம்!இலங்கை நாணயப்படி 2கோடி 15 இலட்சம்!!