சாதி பாகுபாட்டிற்கு எதிராக மசோதா USA: செனட் உறுப்பினருக்கு கொலை மிரட்டல்

சாதி பாகுபாட்டை சட்டவிரோதமாகக் கருத வகை செய்யும் மசோதா, கலிஃபோர்னியா மாகாண சட்டமன்றத்தின் கீழ் அவையில் இந்த வாரம் விவாதத்திற்கு வர உள்ளது. கலிஃபோர்னியாவை சேர்ந்த பத்திரிகையாளர் சவீதா படேல் இந்த மசோதா சட்டமாக்கப்படுவதை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்களிடம் இதுகுறித்து உரையாடினார்.

கலிபோர்னியா சாதி பாகுபாடு சட்டம்

கலிஃபோர்னியா மாகாண சட்ட மேலவையில் சாதி பாகுபாட்டிற்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்து பேசும் செனட் உறுப்பினர் ஆயிஷா வஹாப்

கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் சுக்ஜிந்தர் கவுர். நோயாளிகளுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் இரவு, பகல் பாராமல் உழைத்து வரும் இவர், “தாம் மிகுந்த அடக்குமுறைக்கு ஆளாகிறோம் என்ற எண்ணம், ஓய்வு நேரங்களில் எல்லாம் தமக்கு எழுகிறது” என்கிறார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், தெற்காசியாவை சேர்ந்த சக பணியாளர்களிடம் சாதிரீதியான அவமானங்களை அடிக்கடி சந்திக்க நேரிடுவதாகக் கூறுகிறார்.

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் கலிஃபோர்னியர்கள் வீடு, கல்வி, வேலை போன்ற அடிப்படை விஷயங்களைப் பெறுவதில் சிக்கல்களைச் சந்திப்பதோடு, சமூகத்திலும் பாரபட்சமாக நடத்தப்படுவதாகக் கூறுகின்றனர் தலித் உரிமைகளுக்காகப் போராடி வரும் ஆர்வலர்கள்.

மேலவையில் நிறைவேறிய மசோதா

குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் அவை உறுப்பினரான ஆயிஷா வஹாப், தான் வடிவமைத்த மசோதா ஒன்றை (SB -403 bill) கடந்த மார்ச் மாதம் அவையில் அறிமுகப்படுத்தினார்.

பாலினம், இனம், மதம் மற்றும் மாற்றுத்திறன் ஆகியவற்றுக்கு எதிரான பாகுபாடுகள் சட்டவிரோதமாகக் கருதப்படுவதைப் போன்று, சாதிப் பாகுபாட்டையும் சட்டவிரோதம் என்று அறிவிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

முப்பத்தி நான்கு செனட் (மேலவை) உறுப்பினர்களின் ஆதரவுடனும், ஒரேயோர் உறுப்பினரின் எதிர்ப்புடனும் இந்த மசோதா கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகாண சட்டமன்றத்தின் கீழ் அவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அமெரிக்காவில் சாதிப் பாகுபாட்டிற்கு சட்டரீதியாகத் தடை விதித்த முதல் மாகாணம் என்ற பெருமையை கலிஃபோர்னியா பெறும்.

“நாங்கள் மிகவும் அழுக்காக இருப்பதாக, உயர் சாதிகளைச் சேர்ந்த செவிலியர்கள் அவதூறு பரப்புகின்றனர்” என்று வேதனையுடன் கூறுகிறார் இந்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கும் திருமதி கௌர்.

தூண்டுதலாக இருந்த சியாட்டில்

தெற்காசியாவுக்கு வெளியே, சாதி பாகுபாடுகளுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வந்த முதல் நகரம் என்ற பெருமையை அமெரிக்காவின் சியாட்டில் பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அங்கு இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதே, கலிஃபோர்னியா மாகாணத்திலும் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான தூண்டுதலாக அமைந்தது.

கலிபோர்னியா சாதி பாகுபாடு சட்டம்

மசோதா குறித்துப் பெண்களிடம் விளக்கும் சமூக செயற்பாட்டாளர் ரேணு சிங்

கலிஃபோர்னியாவில் இயங்கும் தலித் உரிமைகளுக்காகப் போராடி வரும் அமைப்புகளின் தலைமையில், அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தலித் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் ஆர்வலர்கள் சேர்ந்து இந்தச் சட்டத்திற்கான முயற்சிகளை முன்னெடுத்தனர்.

தெற்காசியாவில் இருந்து புலம்பெயர்ந்தோர் அதிகம் வாழும் இடமாக உள்ள கலிஃபோர்னியா, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சிலவற்றின் தாயகமாகவும் திகழ்கிறது.

சீக்கியர்களின் ஆதரவு

அமெரிக்காவில் மொத்தமுள்ள 5 லட்சத்திற்கும் அதிகமான சீக்கிய சமூகத்தினரில், பாதிக்கும் மேற்பட்டோர் கலிஃபோர்னியாவில்தான் வசிக்கின்றனர்.

இங்குள்ள சீக்கியர்களின் கோவில்களான குருத்வாராக்கள், சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான சட்டத்திற்கு முழுவீச்சில் ஆதரவு திரட்டி வருகின்றன.

சீக்கிய கூட்டணி மற்றும் சீக்கிய அமெரிக்க சட்ட பாதுகாப்பு மற்றும் கல்வி நிதி அமைப்பு ஆகிய சீக்கிய சமூகத்தின் மிகப்பெரிய அமைப்புகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

கலிஃபோர்னியாவில் உள்ள சீக்கியர்கள் மத்தியில், மிகப்பெரிய தலித் சமூகமாக விளங்குகிறது, ரவிதசியா. இந்த சமூகத்தைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை இங்கு வசித்து வருகின்றனர். இவர்களும் இந்த மசோதாவை அதன் அடிமட்ட நிலையிலிருந்து ஆதரிக்கின்றனர்.

சாதி பாகுபாடுகள் தொடர்பான தங்களது சொந்த அனுபவங்களையும், தங்களைச் சுற்றி நிகழும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்தும் பெண்கள் பேச வேண்டும் என்று ரவிதசியா சமூக பாரம்பரியத்தைப் பின்பற்றும், பெண்களின் உரிமைக்காகப் போராடி வரும் ஆர்வலரான ரேணு சிங் வலியுறுத்துகிறார்.

கலிஃபோர்னியா

புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

தலித் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பின் ஒரு புள்ளிவிவரப்படி, தெற்காசியாவில் இருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தவர்களில் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாவோரில் நான்கில் ஒருவர் உடல் மற்றும் வாய்மொழி வன்முறைக்கு ஆளாகிறார்.

மூன்றில் ஒருவருக்கு கல்வியில் பாகுபாடு காட்டப்படுகிறது. மூன்றில் இருவர் பணியிடத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

சாதியை சொல்ல பயம்

சாதியை பற்றிய பகிர்வு மற்றும் அதன் விளைவுகள் குறித்து சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு 1,500க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்டது. அதில் கண்டறியப்பட்ட முக்கிய அம்சங்கள் 2018இல் வெளியிடப்பட்டன.

அதில் குறிப்பாக, கீழ் சாதியினராகக் கருதப்படுவர்கள் தங்களின் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்திக் கொண்டால், அதன் விளைவாகத் தாங்கள் பழிவாங்கப்படுவதுடன், இங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிடுவோமோ என்றும் அஞ்சினர்.

இந்த அச்சம் காரணமாக அவர்கள் தங்களின் சாதி அடையாளத்தை வெளிப்படுத்துவதைத் தவிர்த்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களில் கணிசமான பிரிவினர், சாதி பாகுபாடு குற்றச்சாட்டை நிராகரிக்கின்றனர்.

கலிபோர்னியா சாதி பாகுபாடு சட்டம்

மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தலித் உரிமைகளுக்காக போராடும் ஆர்வலர்கள்

மசோதாவுக்கு எதிராக ஒலிக்கும் குரல்கள்

“நான் இங்கு 35 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். எந்த இந்துவும் நான் என்ன சாதி என்று என்னிடம் கேட்டதில்லை,” என்கிறார் சான் ஃபிரான்சிஸ்கோவை சேர்ந்த தலித் செயற்பாட்டாளரான தீபக் ஆல்ட்ரின்.

இந்திய- அமெரிக்க தனிநபர்கள், மதம் மற்றும் பல்வேறு பணிகளைச் சார்ந்த குழுக்களின் மத்தியில் இந்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த மசோதா குறிப்பிட்ட ஒரு மதத்தைக் குறிக்கவில்லை. எனினும், இது இந்துக்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுக்கு எதிராக பாரபட்சமான போக்கை உருவாக்கும் என்பதுடன், பணி அமர்த்துவதற்கான அவர்களின் தகுதியையும் குறைக்கும் என்பன போன்ற வாதங்களை அவர்கள் முன்வைக்கின்றனர்.

“சாதி பாகுபாடு பிரச்னைகளைக் களைய கலிஃபோர்னியாவில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களே போதுமானவை. எனவே இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டாமென்று மக்கள் பிரதிநிதிகளை வலியுறுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரின் ஆதரவை திரட்டி வருகிறோம்” என்கின்றனர் அவர்கள்.

இந்து கொள்கை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை அமைப்பின் (HinduPACT) கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகள், கோவில்களின் நிர்வாகிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“இந்த மசோதா முற்றிலும் குறைபாடுள்ள, தவறான நோக்கம் கொண்டது” என்கிறார் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஜய் ஷா.

“இந்திய துணைக் கண்டத்தில் இருந்து இங்கு வரும் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் இந்து தர்மத்தைப் பின்பற்றுபவர்களை இலக்காகக் கொண்டுள்ள இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என்று கலிஃபோர்னியாவின் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கோரிக்கை விடுக்கிறோம்,” எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த மசோதா ஏற்கெனவே சாதியைப் பற்றித் தேவையற்ற கவனத்தை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த, குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களிடம், தெற்காசிய பகுதிகளைச் சாராதவர்கள், அவர்களின் சாதி தொடர்பாக முறையற்ற கேள்விகளை எழுப்புவதைக் கேட்க முடிகிறது.

இந்த நிலையில் இது ஒரு நடைமுறையானால், அதுவே இன உணர்வு அடிப்படையிலான துன்புறுத்தலுக்குக் காரணமாக அமையலாம் என்று எச்சரிக்கிறார் இந்து அமெரிக்க அமைப்பின் இணை அமைப்பாளரும், செயல் இயக்குநருமான சுஹாக் சுக்லா.

கலிஃபோர்னியா

மேலும் இதுதொடர்பாக கலிஃபோர்னியா மாகாண அரசுக்கு எதிராகத் தங்களது அமைப்பின் சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது மிகவும் சிக்கலான பிரச்னை என்பதால், தனிநபர்களின் சாதியை அடையாளம் காண அரசு எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதில் தங்களுக்குக் குழப்பம் உள்ளது என்கின்றனர் இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள்.

“இது வெறும் பாகுபாடுகளுக்கு எதிரான மசோதாவாக உள்ளதே தவிர, சாதி எப்படி நிர்ணயம் செய்யப்படும் என்பது குறித்து இதில் எந்தவொரு தெளிவான விளக்கமும் இடம்பெறவில்லை,” என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொலை மிரட்டல்

Aisha Wahab for State Senate

இப்படி, சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான இந்த மசோதாவுக்கு ஆதரவும், எதிர்ப்புக் குரல்களும் ஒலித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்த மசோதாவை முன்மொழிந்ததற்குப் பிறகு தமக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக வருத்தத்துடன் கூறுகிறார் கலிஃபோர்னியா மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினரான ஆயிஷா வஹாப்.

இந்த மசோதாவுக்கு எதிர்வினை தம்மை அதிருப்தி அடைய செய்துள்ளதாகக் கூறும் அவர், கலிஃபோர்னியா மாகாண மக்கள் இந்த மசோதாவை ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

“நீங்கள் உயர் சாதியைச் சேர்ந்தவரா, தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவரா என்பது விஷயமல்ல. இந்தச் சட்டம் உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்,” என்கிறார் அவர்.

Previous Story

மொட்டுக் கட்சிக்குள் ரணில் அணி!

Next Story

சவூதி போட்ட அந்தர் பல்டி!