சாதாரண போன்கள் மீது அதிகரிக்கும்  மோகம்!

-பிரென்னன் டோஹெர்டி-

அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட டம்ப் போன்களை விரும்பும் மக்கள் : பிரச்னை என்ன?

நவீன தொழில்நுட்பத்தை வெறுக்கும் நியோ-லுடிட்கள் (neo-Luddites) மற்றும் தொழில்நுட்ப அழுத்தம் உள்ளவர்கள் குறைவான அம்சங்களைக் கொண்ட போன்களை தேடுகின்றனர். ஆனால் இந்த போன்களின் சந்தை நிலையற்றதாகவும் உறுதியற்ற லாப வரம்புகளையும் கொண்டிருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு ஐபோன் 17 வயதை எட்டுகிறது. ஐபோன் என்னும் தொடுதிரை மூலம் இயங்கும் (touchscreen-controlled device) சாதனத்தின் வெளியீடு, ஸ்மார்ட்போன்கள் பற்றிய மக்களின் எதிர்பார்ப்புகளை வரையறுத்தது. அதன் பிறகு டச் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட் போன்களின் சந்தை பெரும் எழுச்சியைக் கண்டது. இதனால் ஒரு தலைமுறையினர் ஸ்மார்ட்போன் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தெரியாமலேயே வளர்ந்துவிட்டனர்.

ஸ்மார்ட்போன்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வெளியான எண்ணற்ற அறிவியல் ஆய்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ, மொபைல் போன்களால் பாதிக்கப்பட்டவர்களின் சொந்த அனுபவங்களைத் தெரிந்து கொள்ளவோ மக்களுக்கு நேரமில்லை அல்லது அறிந்து கொள்வதற்கான நேரம் கடந்துவிட்டது.

உலகை தங்கள் விரல் நுனியில் வைத்திருக்க உதவும் ஸ்மார்ட் போன்கள் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றி பலர் நன்கு அறிந்திருக்கிறார்கள். இந்த போன்கள் ஒருங்கிணைப்புத் திறனை பாதிக்கும், தூக்கத்தைப் பாதிக்கும். மேலும் சில மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.

டம்ப் போன்கள் என்றால் என்ன?

டம்ப் போன்கள்

இந்தச் சிக்கல்களைத் தீர்க்க, எளிமையான வழிகள் ஏராளமாக உள்ளன. உதாரணமாக, திரை நேரத்தைக் கட்டுப்படுத்தும் செயலிகளை போனில் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் சிலர் செயலிகள் பரிந்துரைக்கும் நேரத்தைத் தாண்டியும் மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். எனவே மொபைல் போன் பயன்பாட்டைக் குறைக்கும் இன்னும் ஆக்கப்பூர்வமான வழிமுறைகளின் தேவை அதிகரித்துள்ளது.

அலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் அலாரங்களை செட் செய்வது போன்ற அடிப்படை செயல்பாடுகளைக் கொண்ட போன்களுக்கான தேடலும் அதிகரித்து வருகிறது. அதற்கான தீர்வுதான் ‘டம்ப் போன்கள் (dumb phone)’. சில டம்ப் போன்கள் 90களில் வெளியான ஃபிளிப் (Flip) போன்களை ஒத்திருக்கும். மற்றவை வியக்கத்தக்க ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்கும் மேம்பட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.

ஒரு சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் மொபைல் போன்களுக்கு அடிமையாவதைத் தடுக்க, திரை நேரத்தைக் குறைக்க, டம்ப் போன்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதுபோன்று அக்கறையுள்ள சில பெற்றோர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் ஏற்படுத்தும் கவனச் சிதறல்களில் இருந்து குழந்தைகளை விலக்கி வைப்பதற்கான ஒரு வழியாக இந்த எளிய போன்களை கருதுகின்றனர்.

இந்த எளிமையான டம்ப் போன்கள் வயது முதிர்ந்தவர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கட்டுமானம் அல்லது விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தரப்பினர் உடையாத கடினமான மொபைல் போன்களை விரும்புகின்றனர். அவர்களுக்குச் சிறந்த தேர்வாக டம்ப் போன்கள் இருக்கும்.

மேலும் ஸ்மார்ட்போன்களை சராசரி விலை கொடுத்து வாங்க முடியாதவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். சமூக ஊடகங்களில் இருந்து தப்பிக்க நினைக்கும் இளைஞர்கள் டம்ப் போன்களை விரும்புகின்றனர்.

டம்ப் போன்கள் எளிதாகக் கிடைக்குமா?

டம்ப் போன்கள் எளிதாகக் கிடைக்குமா?

நானும் இந்த போனை முயற்சி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். 2000களின் முற்பகுதியில் கேமிங் கன்சோல்கள் இல்லாத வீட்டில் வளர்ந்த நான், ஹாலோ மற்றும் பார்டர்லேண்ட்ஸ் போன்ற கேம்களை நண்பர்களின் வீட்டில் விளையாடினேன். அதன் விளைவாக எனக்கு அடிக்கடி மயக்கம் வருவது போல் இருந்தது. மேலும் கவனச் சிதறல் பிரச்னையும் இருந்தது.

பின்னர், ஒரு செய்தி ஊடகத்தில் நிருபராகப் பணியாற்றினேன், அப்போது ட்விட்டரில் அதிக நேரம் செலவிட்டேன். கொரோனா பாதிப்பால் பொதுமுடக்கம் அறிவித்த காலகட்டத்தில் ட்விட்டர் பயன்பாட்டை நிறுத்தினேன். ஆனால் இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கு அடிமையானேன். எப்போதுமே போன் திரையில் மூழ்கியிருப்பது என் நல்வாழ்வை அரித்தது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டை நிறுத்துவது எனக்கு நல்லது என்று தோன்றியது.

ஆயினும் நடைமுறையில் ஸ்மார்ட் போனை ஒதுக்கிவிட்டு, அதற்கு மாற்றான டம்ப் போனை வாங்குவது நான் எதிர்பார்த்ததைவிட சற்று கடினமாக இருந்தது. முதலில், டம்ப் போனை வாங்குவதே சவாலான ஒன்றாக இருந்தது. குறைவான தேர்வுகள் மட்டுமே இருந்தன. இணையம் முழுவதும் மில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன் மதிப்புரைகள் உள்ளன.

ஆனால் டம்ப் போன்கள் பற்றி அவ்வளவாக யாரும் பேசவில்லை. நான் இறுதியாக எழுத்தாளர் மற்றும் டம்ப் ஃபோன் வழக்கறிஞரான ஜோஸ் பிரியோன்ஸ் உதவியுடன் ‘டம்ப்ஃபோன் ஃபைண்டர்’ என்னும் இணையதளத்தைக் கண்டுபிடித்தேன். ‘CAT-S22’ என்னும் ஃபிளிப் போனை தேர்ந்தெடுத்தேன், இது ஒரு செமி-ஸ்மார்ட் டம்ப் ஃபோன். இது கூகுள் மேப்ஸ் (Google Maps) உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. இதன் விலை $69 (ரூ.5735).

டம்ப் ஃபோன்களை பற்றி நான் எவ்வளவு அதிகமாகக் கற்றுக் கொண்டேனோ, அந்த அளவுக்கு மதிப்புரைகள் இல்லாததால், போனை பயன்படுத்துவதில் எனக்குச் சிக்கல் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அதிகரித்து வரும் தேவை இருந்தபோதிலும், தொலைபேசி உற்பத்தியாளர்கள் டம்ப் ஃபோன் சாதனங்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை நான் புரிந்துகொண்டேன்.

அனைத்து புதிய போன் விற்பனையகங்களிலும் பெரும்பான்மையான ஸ்மார்ட்போன்கள் இருப்பதால், புதிய டம்ப் போன்களை வெளியிடுவதற்கு அல்லது அவற்றின் தற்போதைய மாடல்களை புதுப்பிப்பதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் குறைந்த பட்ஜெட்டை மட்டுமே ஒதுக்குகின்றன.

மோசமான பொருளாதாரச் சந்தை

அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட டம்ப் போன்களை விரும்பும் மக்கள் : பிரச்னை என்ன?

டம்ப் ஃபோன்களுக்கான சந்தை சிறிய அளவில் இருந்தாலும், விற்பனை ஓரளவுக்கு ஆகிறது. அமெரிக்காவில், கவுன்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனத்தின் ஆகஸ்ட் 2023 தரவுகள்படி – அடிப்படை வசதிகளைக் கொண்ட டம்ப் போன் ரகமான ஃபீச்சர் போன்கள் (feature phones) கைபேசி சந்தையில் வெறும் 2% மட்டுமே ஆக்கிரமித்துள்ளன. கவுன்டர்பாயின்ட் மதிப்பீட்டின்படி, அமெரிக்காவில் மட்டும் இந்த ஆண்டின் இறுதிக்குள் டம்ப் போன் விற்பனை 2.8 மில்லியனை எட்டும்.

“அமெரிக்காவில் ஃபீச்சர் போன்கள் ஓரளவுக்கு விற்பனை ஆகின்றன. ஏனெனில் அவற்றின் எளிமையான வடிவமைப்பு, மலிவு விலை மற்றும் கடினமான அமைப்பு குறிப்பிட்ட மக்கள்தொகைக்கு ஏற்றவாறு உள்ளது.

மொபைல் சந்தையில் ஃபீச்சர் போன்களுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு இருக்காது என்றாலும், ஸ்மார்ட்போன் ஆதிக்கம் செலுத்தும் சந்தையில் ஃபீச்சர் போன்களுக்கான நிலையான தேவையை உருவாக்கும் சூழல் உருவாகியுள்ளது,” என்று ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

டெக்சாஸில் உள்ள பேய்லர் யுனிவர்சிட்டியின் ஹான்காமர் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் மார்க்கெட்டிங் பேராசிரியரான ஜிம் ராபர்ட்ஸ், உலகளவில் அமெரிக்காவில்தான் வியக்கத்தக்க அளவில் டம்ப் ஃபோன்கள் விற்கப்படுவதாகக் கூறுகிறார். அவர் கூற்றுபடி சுமார் 20% டம்ப் ஃபோன்கள் விற்கப்படுகின்றன. ஆனால் உண்மையான சந்தை தரவு புள்ளிவிவரங்கள் வேறுபடுகின்றன.

ராபர்ட்ஸ் கூற்றுபடி, “எதிர்பார்க்கும் அளவுக்குத் தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை, அல்லது மிகவும் மகிழ்ச்சியுடன் இல்லை என்பதை நுகர்வோர் உணர்கிறார்கள். அவர்கள் தங்கள் தொலைபேசிகளில் அதிக நேரம் செலவிடுவதுதான் மகிழ்ச்சியின்மைக்குக் காரணம் என்று கருதுகிறார்கள்,” என்கிறார்.

ஸ்மார்ட்போன்களில் அதிக லாபம்

ஸ்டேடிஸ்டா சந்தை அறிக்கைப்படி, மொத்த உலகளாவிய ஃபீச்சர் போன் சந்தை இந்த ஆண்டு 10.6 பில்லியன் டாலர் வருவாயைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. போன் உற்பத்தியாளர்கள் ஃபீச்சர் போன் விற்பனையில் இருந்து குறிப்பிடத்தக்க தொகையை மட்டுமே பெறுகின்றனர். ​​அவர்களால் ஸ்மார்ட் போன்களை போன்று லாபம் ஈட்ட முடியவில்லை. வணிகத்தை மேம்படுத்த முயல்வது பொருளாதார ரீதியாக உதவாது, குறிப்பாக டம்ப் ஃபோன்கள் பெரும்பாலும் அவற்றின் ஒட்டுமொத்த நிறுவனங்களின் ஒரு சிறிய பிரிவாக மட்டுமே இருக்கும்.

இந்தத் தொழில்நுட்ப ஜாம்பவான்களில் பலர் மேம்பட்ட மென்பொருள் அல்லது மிகவும் சிறப்பு வாய்ந்த வன்பொருளில் வருவாய் ஈட்டுகின்றனர். அந்த ஸ்மார்ட் போன்களுக்கு நுகர்வோர் அதிக விலை செலுத்துவார்கள். மேலும் இந்தத் தொழில் நிறுவனங்கள் மிகவும் மாறுபட்ட வருவாய் வழிகளையும் கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, சாம்சங், அதன் செமி கண்டக்டர் (semiconductor) பிரிவில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் பல பில்லியன்கள் சம்பாதிக்கிறது. எனவே இந்த நிறுவனங்கள் டம்ப் போன் பயனர்களைக் கருத்தில் கொள்வதில்லை. சிறிய அளவில் மட்டுமே டம்ப் ஃபோன் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன. அதன் வருவாய்த் திறன் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகையில், “தொழில்நுட்ப ஜாம்பவான்கள் ஸ்மார்ட்போன்களுக்கு கட்டணம் வசூலிக்க முடியும் என்பதால், அவர்கள் எந்த நேரத்திலும் டம்ப் ஃபோன் பயனர்களுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டார்கள்,” என்கின்றனர். 2019ஆம் ஆண்டில் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டை விட்டு வெளியேறிய பிரியோன்ஸ், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் அதிக விலையுயர்ந்த மாடல்களை டம்ப் ஃபோன்கள் முந்துவதை விரும்பவில்லை என்று விளக்குகிறார்.

“பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் உங்கள் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டைக் குறைப்பதை விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

சாத்தியமான மாற்றாக இருக்குமா?

அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட டம்ப் போன்களை விரும்பும் மக்கள் : பிரச்னை என்ன?

இன்னும் டம்ப் ஃபோன்களை வழங்கும் நிறுவனங்களைப் பற்றிப் பேசுகையில், ஃபாரெஸ்டர் ரிசர்ச்சின் (Forrester Research) துணைத் தலைவரும் முதன்மை ஆய்வாளருமான தாமஸ் ஹுசன், “இந்த விற்பனையாளர்களில் பலர் இதைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை, குறைந்த பட்சம் இந்த சாதனங்களை நீண்ட காலத்திற்குத் தயாரிப்பார்களா என்பது தெரியவில்லை,” என்றார்.

குறைவான லாப வரம்புகளுடன், இந்த போன்கள் இயங்கும் தொழில்நுட்பம் காலாவதியாகி, அவை செயல்பட முடியாமல் போகும் என்ற கூற்றும் உள்ளது. உதாரணமாக, உலகெங்கிலும் உள்ள டம்ப் ஃபோன் பயனர்கள் தங்கள் செயல்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ளும் 2G மற்றும் 3G நெட்வொர்க்குகள் முற்றிலும் செயல்படாமல் போய்விட்டால், அவர்கள் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விடுவார்கள்.

மேலும் சாதாரண வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குக்கூட பணிரீதியாக ஸ்மார்ட் ஃபோன் தேவைப்படுகிறது. எனவே பயனர்களின் எண்ணிக்கையும் ஃபோன் உற்பத்தியைப் பாதிக்கும். ஆர்வமுள்ள வணிக மாதிரியைக்கூட மேம்படுத்துவதற்குப் போதுமான வாடிக்கையாளர்கள் இல்லாமல் இருக்கலாம்.

இருப்பினும், டம்ப் ஃபோன் நிறுவனங்கள் நிலைத்து நிற்க ஒரு வழி உள்ளது. பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருக்க, நிறுவனங்கள் “இந்த ஃபோனின் பிரீமியம் பிராண்டை உருவாக்கலாம்” என்று ஹுசன் கூறுகிறார்.

உண்மையில், சில ஸ்டார்ட்-அப்கள் இந்த சிறப்புச் சந்தையை நிலைநிறுத்தவும் பொருளாதார வெற்றியைக் காணவும் முயற்சி செய்கின்றன. ஃபீச்சர் ஃபோனில் ஒரு வகையான நவீனத் தோற்றத்தை வழங்குகின்றன.

நியூயார்க்கை தளமாகக் கொண்ட லைட் என்ற நிறுவனம் தனிப் பயனாக்கக் கூடிய ‘லைட் போன்களை’ உருவாக்குகிறது, இது இணையம், சமூக ஊடகங்கள் மற்றும் பிற கவனச் சிதறல்களுக்கு மக்கள் அடிமை ஆவதைக் குறைக்கிறது.

அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட டம்ப் போன்களை விரும்பும் மக்கள் : பிரச்னை என்ன?

“நாங்கள் லைட் போன் மூலம் செய்ய முயல்வது செயலற்ற போனை உருவாக்குவது அல்ல, மாறாக மிகவும் உள்நோக்கத்துடன் கூடிய அடிப்படை அலைபேசியை உருவாக்குவது. அதாவது பிரீமியம் டம்ப் போன்களை உருவாக்குவது,” என்று லைட்டின் இணை நிறுவனர்ஜோ ஹோலியர் 2023இல் CNBCயிடம் தெரிவித்தார்.

இந்த சாதனத்தின் விலை தற்போது 299 டாலர்கள்(ரூ.24,854). இதைக் குறைந்த அல்லது இடைப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுடன் ஒப்பிடலாம். டம்ப்- டவுன் போனுக்கு இது அதிக விலை, ஆனால் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஒரு முக்கிய தயாரிப்பைப் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக மாற்றுவதற்கான ஒரு வழியைக் கையில் எடுத்துள்ளது.

குறைந்த விலை அல்லது கடினத் தன்மையின் அடிப்படையில் விற்கப்படும் ஃபீச்சர் போன்களைப் போலல்லாமல், லைட் போன்கள், ஸ்டைல் ​​அல்லது சில செயல்பாடுகளில் தியாகம் செய்யாமல் டிஜிட்டல் பயன்பாட்டைக் குறைக்கும் எண்ணம் உள்ளவர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

பிரியோன்ஸ் கூற்றுபடி, “லைட் போனில் அழைப்புகள், குறுந்தகவல் மற்றும் அடிப்படைப் பயன்பாட்டுச் செயல்பாடுகள் உள்ளன, இவை அனைத்தும் இ-ரீடரை போன்ற மின் மை திரை மூலம் பார்க்க முடியும். இதில் காலெண்டர், மேப்ஸ், பாட்காஸ்ட்கள் மற்றும் இசையைக் கேட்க முடியும். குறிப்புகளை எடுக்க முடியும். ஸ்மார்ட் போன் பயன்பாட்டைக் குறைத்து எப்படி வாழ வேண்டும் என்பதை நான் கற்றுக்கொள்ள முடிந்த ஒரு நல்ல அம்சத்தைக் கொண்ட ஃபோன்,” என்று அவர் கூறுகிறார்.

இந்தப் புதிய சாதனங்கள் தங்கள் டிஜிட்டல் திரைக்கு அடிமையாவதைத் தடுக்க நினைக்கும் பயனர்களைக் கவரும் வகையில் மற்ற வணிக மாதிரிகளுடன் போட்டியிட வேண்டும். ஆனால் வன்பொருள் மாற்றத்தைவிட மென்மையாகச் செல்லும் வகையில் அவ்வாறு செய்ய விரும்பலாம்.

அதுதான் அமெரிக்காவை தளமாகக் கொண்ட கோஸ்ட் மோட் (Ghost Mode) நிறுவனத்தின் உத்தி. இந்நிறுவனம் தனது சொந்த போனை உற்பத்தி செய்து விற்பதற்குப் பதிலாக, கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை வாடிக்கையாளரின் விவரக் குறிப்புகளுக்கு ஏற்ப அவர்களுக்குத் தேவையான அனைத்து பயன்பாடுகளுடன் மறுநிரலாக்கம் செய்கிறது.

அவற்றைச் செய்தவுடன், கோஸ்ட் மோட் நிறுவனம் அந்தப் பயன்பாட்டு செயலிகளை லாக் செய்கிறது. பயனர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருப்பார்கள், ஆனால் தேவையற்ற செயலிகளைப் பயன்படுத்த முடியாது. இந்த முக்கியத் தயாரிப்புகளில் பெரும்பாலானவற்றைப் போலவே, இந்த சேவையும் 600 டாலர்கள் (ரூபாய் 50,000) என்ற அதிக விலையில் செய்யப்படுகிறது. ஆனால் இந்தப் பயன்பாடு உயர்நிலை வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடும்.

இந்தப் புதிய நிறுவனங்களின் போன்களில் மக்கள் அதிக ஆர்வம் காட்டிய போதிலும், சந்தைகளில் வெற்றி பெறுவது இன்னும் ஆபத்தானது.

நான் வாங்கிய CAT S-22இன் உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களான புல்லிட், எனது அலைபேசி என் கைகளுக்கு வருவதற்கு முந்தைய நாள் உற்பத்தியை நிறுத்தியது. நான் ஒரு வாரம் அதைப் பயன்படுத்திப் பார்த்தேன். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க நான் பயன்படுத்திய இரண்டு செயலிகளின் செயல்பாடுகளை அழைக்கவும், குறுஞ்செய்தி அனுப்பவும் பயன்படுத்தினேன்.

எனது மொத்த இணையப் பயன்பாடு ஒரு நாளுக்கு ஒரு மணிநேரமாகக் குறைந்தது. எனது சுற்றுப்புறங்கள், புத்தகங்கள் மற்றும் இசையில் என்னால் சிறப்பாகக் கவனம் செலுத்த முடிந்தது. ஆனால் எனது லைப்ரரி செயலியை நான் இழந்தேன். அதனால், நான் மீண்டும் சாம்சங் காலக்ஸி A32க்கு மாறினேன். நான் மினிமலிஸ்ட் என்னும் செயலியை என் ஃபோனில் நிறுவியுள்ளேன், இது தேவையற்ற செயலி ஐகான்கள் மற்றும் அதன் பின்னணி செயல்பாட்டை அகற்றும் ஒரு செயலி.

அனைவருடனும் தொடர்பில் இருக்க மெசஞ்சர், வாட்ஸ்அப் மட்டும் பயன்படுத்தினேன். ஆனால் அடிப்படைத் தேவையில்லாத எல்லா செயலிகளும் என் ஸ்கிரீனுக்கு வெளியே சென்றன. நான் அவற்றைத் தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்தினேன்.

Previous Story

தேர்தல்: அவசரம் மௌனம் புதிர்கள்!

Next Story

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி