சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜிஷான் நகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அவர்களுக்கு முழுமையாக ஆதரவையும் வழங்குவோம் என்று உறுதி அளித்துள்ளது.
சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜிஷான் நகரில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சாலை விபத்தில் மொத்தமாக 15 பேர் உயிரிழந்தனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதரகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், சாலை விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கின்றனர்.
அவர்களுக்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று தெரிவித்து கொள்கிறேன். அதேபோல் காயமடைந்த இந்தியர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறோம். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் அணுகுவதற்காக பிரத்யேக ஹெல்ப் லைன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், சவுதி அரேபியாவில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து அறிந்த போது வேதனையடைந்தேன். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகளுடன் பேசினேன். துயரம் மிகுந்த இந்த சூழலில், அவர் நிச்சயம் முழு உதவியையும் செய்வார் என்று பதிவிட்டுள்ளார்.