சர்வ கட்சி  அரசாங்கமா தேர்தலா?

-நஜீப் பின் கபூர்-

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியானது பெரும் அரசியல் குழப்பங்களையும் வன்முறைகளையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நெருக்கடிகளுக்கு இலக்காகி இருக்கின்ற மக்கள் தரப்பிலிருந்தும் ஆளும் மொட்டுக் கட்சித் தரப்பிலிருந்தும் ஏட்டிக்குப் போட்டியாக வன்முறைகள் நடந்து வருகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

பெருளாதார நெருக்கடிக்கு கொரோனாவையும் முன்பு பதவியில் இருந்த அரசாங்கத்தையும் ராஜபக்ஸ தாரப்பு குற்றம் சாட்டி வருகின்றது. எதிரணியினர் ராஜபக்ஸாக்களின் அரசியல் அடாவடித்தனங்கள் தான் இதற்குக் காரணம் என்று குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் பின்னணியில் நடக்கின்ற கொந்தளிப்புக்கள் தெரிந்ததே. இதனால் அதிகாரத்தில் இருந்த பிரதமர் ஜனாதிபதி என்போர் ஓடிப் போய் அந்த இடத்திற்க்கு தற்போது ரணில் பிரதமராகி தற்போது அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகவும் வந்திருக்கின்றார். என்றாலும் அவர் மொட்டுக் கட்சியின் விசுவாசத்துக்கு மாற்றமாக எந்தக் காரியமும் பார்க்க முடியாது.

அப்படி அவர் ஆட்டம் போட்டால் ஆள் அவுட். எனவே அவர் கைவிலங்கு போடப்பட்ட ஒரு ஜனாதிபதி என்றுதான் நாம் அவரைப் பார்க்கின்றோம். இந்த நிலையில் நாட்டில் தேசிய-சர்வகட்சி அரசாங்கம் அடுத்தது பொதுத் தேர்தல் என்ற இரு கருத்துக்கள் பேசுபொருளாகி இருக்கின்றது.

முதலில் தேசிய அரசு அல்லது சர்வ கட்சி அரசு என்ற விடயத்தைப் பார்ப்போம். கோட்டா கோ போராட்டத்துடன் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர் ஜனாதிபதியக வருவார். அப்போது சர்வ கட்சி அல்லது இடைக்கால அரசொன்று அமையும் என்ற எதிர்பார்ப்பு நாட்டில் இருந்தது.

ஆனால் மக்கள் விருப்புக்கு முற்றிலும் மாற்றமாக அரசியல் யாப்பிலுள்ள ஓட்டைகளைப் பாவித்து மொட்டுக் கட்சினர் ரணிலை வைத்து அதிரடியாக ஆட்டத்தை விளையாடி விட்டார்கள். இப்போது உச்சரிக்கப்படுகின்ற அனைத்துக் கட்சி அரசு என்பது ஏனோதானோ என்றாகி விட்டது. மொட்டுக் கட்சி தனது பெரும்பான்மையைத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கின்றது.

எனவே எதற்காக சர்வ கட்சி அரசு? நமக்குத்தானே பெரும்பான்மை இருக்கின்றது என்று அவர்கள் தரப்பில் பலர் திமிருடன் பேசுகின்றார்கள். அப்படித்தான் சர்வ கட்சி அரசு அமைக்கின்றது என்று வைத்தக் கொண்டாலும் மொட்டுக் கட்சியினரின் மேலாதிக்கம்தான் அங்கு தலைவிரித்தாடும்.

ஏற்கெனவே தேர்தலில் தனது கூட்டில் இருந்தவர்களை இவர்கள் எப்படியெல்லாம் அவமானப்படுத்தினார்கள், மைத்தரி விமல் வாசு கம்மன் பில ஏன் அந்தக் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்லுக்குத்தான் என்ன நடந்தது.? எனவே வலுவான மொட்டுக் கட்சியில் தற்போது எதிரணியில் இருக்கின்றவர்கள் போய் அணைந்து கொள்வது நமது பார்வையில் சரணாகதியாகத்தான் அமையும். ஆனால் அதற்கான முயற்ச்சிகளும் நடப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இதனை சஜித் அணியில் உள்ளவர்கள் நன்கு உணர்ந்துதான் இருக்கின்றார்கள். என்றாலும் அந்தக் கட்சிகளில் உள்ளவர்கள் தனியாகவும் அதன் கூட்டுக் கட்சிகளில்; உள்ளவர்களும் இப்போது தளம்பல் நிலையில் இருக்கின்றார்கள். ஜனாதிபதியும் அரசும் வலுவாக இருக்கின்றது.

நாமும் இருக்கின்ற காலத்தில் ஏதாவது தேடிக் கொள்வதாக இருந்தால் அல்லது சோ காட்டுவதாக இருந்தால் சர்வகட்சி அல்லது தேசிய அரசு என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு அதற்கு வேறு தேச நலன் என்ற முத்திரையையும் குத்திக் கொண்டு ஆளும் தரப்பில் இணைந்து கொள்வதற்கும் பலர் தயாராக இருக்கின்றார்கள் என்பதுதான் வேடிக்கை.

இதில் சஜித் அணியில் இருந்து நம்ப முடியாதவர்கள் கூட பல்டிக்குத் தயார் நிலையில் இருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் வெற்றி வாய்ப்புக்காக அந்த அணியுடன் கூட்டணியில் நின்ற பல சிறுபான்மைத் தலைவர்கள் கூட ஜனாதிபதியின் கதவுகளை பதவிகளுக்காகத் தட்டிக் கொண்டிருக்கின்றார்கள்- தூது அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் சிலரை உள்வாங்கிக் கொள்வதில் ரணில் தரப்பிலும் மொட்டுத் தரப்பிலும் பலத்த எதிர்ப்புக்  காணப்படுகின்றது. அதற்குக் காரணம் ஞானியாக ரணிலைப் பார்த்தவர்கள் இப்போது அவரை மோசமாக விமர்சிப்பதும், ஏற்கெனவே அந்த அணி சார்பில் பலர் அங்கு குடிபுகுந்து அமைச்சுப் பெற்று விட்டதும் இதற்குக் காரணம் என்று தெரிகின்றது.

வடக்குக் கிழக்குத் தமிழ் தரப்பில் ஜனாதிபதித் தேர்தலின் போது தப்புக் கணக்குப் பார்த்து சிலர் செய்த வேலையால் மூத்தவரும் கட்சியும் மூக்குடைபட்டிருக்கின்றது. அவர்கள் இப்போது அடுத்த கட்ட நாகர்வு தொடர்பாக குழப்ப நிலையில் இருக்கின்றார்கள்.

ரணில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு தரக்கூடும் என்றும் அங்குள்ள சிலர் நம்புகின்றார்கள்.  இந்தியாவை வைத்து காய் நகர்த்த களம் சிறப்பாக இருக்கின்றது ஆனால் உரியவர்கள் களத்தை பாவிப்பதாகத் தெரியவில்லை. ஜேவிபி மொட்டுக் கட்சியின் மேலாதிக்கத்தில் அமைக்கின்ற தேசிய அரசிலோ இடைக்கால அரசிலோ கலந்து கொள்ளாது என்று தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றது. ஆனால் எதிரணியில் இருக்கும் மாற்றுக் கட்சியினர் பலர் தள்ளாடுகின்றார்கள்.

சரி இப்போது சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று எப்படியோ அமைகின்றது என்று வைத்துக் கொள்வோம். தற்போது ஆளும் தரப்பில் 20 அமைச்சர்கள். இன்னும் பத்துப் பேர் அளவில் மொட்டுக் கட்சியில் இருந்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க இருக்கின்றார்கள். எதிரணியில் இருந்து அரசுக்குத் தாவுகின்றவர்களக்கு 10 வரையிலான அமைச்சுக்களைத்தான் ஒதுக்க முடியும்.

அப்படியாக இருந்தால் அமைச்சர்கள் எண்ணிக்கை 40 வரை உயரும். குடி மக்களின் எதிர்பார்ப்புக்களை இந்த அமைச்சரவை எந்த வகையிலும் நிறைவு செய்யாது. அத்துடன் சர்வதேசம் கேட்க்கின்ற அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற அரசாகவும் இது அமைய மாட்டாது.

இதன் பின்னர் நாட்டில் நடக்கின்ற அரச எதிர்ப்புப் போராட்டங்கள் எந்தளவுக்குக் கலை கட்டும் என்பதிலும் நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன. காலிமுகத்திடலுக்கும் ஆப்பு. அரசியல் யாப்பு ரீதியில் போராட்டக்காரர்கள் பின்டைவை எதிர்நோக்கி இருக்கின்றார்கள். போராட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்ட மொன்போக்காவும் ரணில் கடும்போக்காகவும் களத்தில் இருக்கின்றார். அப்படி நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கின்றது.

அப்படி நடந்து கொள்வதன் மூலமே ரணில் ஆளும் தரப்பை திருப்திப் படுத்தி  தனது இருப்பையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதற்கிடையில் இன்னும் சில நாட்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டா நாட்டில் வந்து இறங்குவார் என்பதும் உறுதியாகி வருகின்றது. அப்போது அவர் கட்டளைகளையும் ரணில் நிறைவேற்ற வேண்டி வரும்.

நாம் சொல்கின்றவாறு களம் அமையுமாக இருந்தால் ரணில் சர்வதேசத்தின் பலத்த கண்டனத்தக்கு இலக்காவார். இப்போது கூட அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. ரணிலுக்காக யாருமே உதவத் தயாராக இல்லை. எனவேதான் ரணில் மேற்கைத் தவிர்த்து சீனா பக்கம் திருப்புகின்றார். இடையில் இந்தியாவையும் புகழ்ந்து கொள்கின்றார்.

இப்படி சந்தர்ப்பத்துக்கு ஏற்றவிதமாக இலங்கை நடந்து கொள்கின்றது. சில நேரங்களில் இந்தியாவுக்கு நெருக்கமாகவும் இன்னும் சில சமயங்ங்களில் சீனாவுக்கு நெருக்கமாகவும் நடந்து கொள்கின்றனர். இந்த விளையாட்டை எவ்வளவு காலத்துக்குத்தான் செய்ய முடியும்.

நாடாளுமனறத்தில் இருக்கின்ற தலைகளை வைத்து இன்று மக்கள் புரட்சி யாப்பால் தோற்கடிக்கப் பட்டு விட்டது. ஆட்சியாளர்கள் இன்று சர்வகட்சி அரசு பற்றி பேசுவது முற்றிலும் ஏமாற்று நடவடிக்கை. இந்த சர்வகட்சி சமைந்தாலும் அது நடைமுறையில் வெற்றி பெறப் போவதில்லை இதனை நாம் அடித்துச் சொல்கின்றோம்.

பொதுத் தேர்தல் ஒன்றே தீர்வாகும்

இப்போது பொதுத் தேர்தல் பற்றிப் பார்ப்போம். நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக இருந்தால் உண்மையில்லே மக்கள் கருத்துக் கணிப்புத்தான் தேவை. எனவே பெரும்பாலான  புத்திஜீவிகளும் பௌத்த தேரர்களும்கூட பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்லுமாறு அரசாங்கத்தை கேட்கின்றார்கள். போராட்டக்காரர்களும் கூட அதனை ஏற்றுக் கொள்வார்கள்.

சர்வதேசமும் நிலையான அரசொன்றை அமைக்கமாறு விடும் கோரிக்கைக்கு இதுதான் நல்ல தீர்வு. ஆனால் ஜனாதிபதி ரணிலும் நாடாளுமனற்த்தில் இருக்கின்ற பெரும்பாலான மொட்டுக் கட்சி உறுப்பினர்களும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தேர்தால் பற்றிய கோஷங்கள் பரவலாகக் கேட்டாலும் அதற்கான வாய்ப்புக்கள் மிகவுமே குறைவு. அப்படித் தேர்தல் ஒன்று வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். பிரதான எதிரணியான சஜித் தரப்பு மிகவும் பலயீனமாக இருக்கின்றது. தேர்தலுக்கு இவர்கள் பலமான கூட்டணி ஒன்றை அமைத்து வழக்கம் போல் களத்தில் நின்றாலும் தேர்தலின் பின்னர் அந்தக் கூட்டணயில் இருக்கின்ற கட்சிகள் நிரந்தரமாக அந்த அணியில் இருக்கப் போவதில்லை.

அவர்கள் வாய்ப்பு வரும் போது தமது பிரதிநிதித்துத்தை  டீல் பல்டிக்குத் தயாராகத்தான் வைத்திருப்பார்கள். இதனை அந்தக் கட்சியில் இருக்கின்ற தலைவர்களும் அறிந்து தான் வைத்திருக்கின்றார்கள்.

அதே போன்று மைத்திரியின் சு.கட்சி மற்றும் விமல் வாசு கம்மன் பில போன்ற சில்லறைகள் ஏதாவது ஒரு பிரதான கட்சியுடன்  கூட்டணியாகத்தான் தேர்தலுக்கு வருவார்கள். அவர்கள் மொட்டுக் கட்சியில் மீண்டும் இணைந்தாலும் ஆச்சர்யப்படத் தேவயில்லை. அவர்கள் அப்படித்தான் இன்று நாட்டில் முன்னுக்குப் பின் முரணாக அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

கள நிலவரம்

எமது கணிப்பின் படி தற்போதய நிலையில் இன்று நட்டில் தேர்தல் ஒன்று நடக்குமாக இருந்தால் அதிக ஆசனங்களைப் பெருகின்ற கட்சியாக சஜித் கூட்டணி இருக்கும். அவர்கள் 77 வரையிலான ஆசனங்களைப் பெறலாம். அதே போன்று மொட்டுக் கட்சி மக்கள் மத்தியில் என்னதான் எதிர்ப்புக்களைச் சந்தித்தாலும் தேர்தல் என்று வந்தால் அவர்கள் 68 வரையிலான ஆசனங்களைப் பொறலாம்.

பணத்தையும் அதிகாரத்தையும் வைத்து இவர்கள் அரசியலில் தனது விளையாட்டை செய்வார்கள். அல்லது ஈஸ்டர் தாக்குதல், முஸ்லிம்களுக்கு எதிரான ஏதாவது வன்முறையை தூண்டி மீண்டும் அவர்கள் அதிகாரத்துக்கு வர முயல்வார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்ற  ஜேவிபி தேர்தலில் மூன்றாம் நிலையில்தான் இன்னும் இருக்கின்றது. அவர்கள் என்னதான் கவர்ச்சியான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து மக்களை உசுப்பேற்றிக் கொண்டிருந்தாலும் அவர்கள் இன்னும் மஹிந்த மற்றும் சஜித் அணிக்கு சமனாக இல்லை என்பதுதான் எமது அவதானம்.

அவர்களின் பரப்புரைகளில் நிறையவே பலயீனங்களும் இருக்கின்றன. என்றாலும் தற்போது மூன்று ஆசனங்களை மட்டுமே வைத்திருக்கின்ற அவர்கள் 40 வரையிலான ஆசனங்களை இந்த அரசியல் பின்னணியில் பெற்றுக் கொள்ள இடமிருக்கின்றது.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் தரப்பினர் 16 வரையிலான ஆசனங்களைப் பெற்றுக் கொள்வார்கள். என்னதான் கூட்டணி பலயீனப்பட்டுப் போய் இருந்தாலும் அவர்களுக்குத்தான் அங்கு அதிக வாய்ப்புக்கள் இன்னும் இருக்கின்றன. மைத்திரி, டலஸ், விமல், வாசு, கம்மன்பில என்ற சில்லறைகள் ஏதோ வழியில் அல்லது ஏதாவது கூட்டணியில் புகுந்து  14 வரை ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கூட்டணிக்குள்ளே அல்லது அதற்கு வெளியிலே வருகின்ற நாடாளுமன்றத்தில் கட்சிகளின் பலம் பின்னருமாறு அமையலாம். இது சமகால நிலமை என்பதனைக் கருத்தில் கொள்ளவும். அரசியல் நிலமைகளுக்கு ஏற்ப இதில் மாற்றங்களுக்கு நிறையவே இடமிருக்கின்றது.

சஜித் அணி                 75-80

ராஜபக்ஸ முகாம்   63-68

அணுர அணி               35-40

தமிழ் தரப்பு                  15-17

சில்லறை                      13-15

இதர                                 03-05

கூட்டணிகள் ஊடாக முஸ்லிம் கட்சிகளில் இருந்து     08-10 வரையிலானவர்களும் அதே போன்று மலையகத் தனித்துவக் தரப்புக்களில் இருந்து 07-08 வரையிலானவர்களும் இதில் இடம் பெற்றிருப்பார்கள்.

டீல் அரசியலுக்கும் பணத்துக்கும் விலைபோகின்ற சம்பிரதாயத்தை உடைய நமது அரசியலில் தொங்கு நிலை  ஒரு ஆபதத்தான தேர்தல் முடிவாக அமைய இடமிருகின்றது. யார்தான் அதிகம் பணத்தை அள்ளி வீசுகின்றார்களோ அவர்க்குத்தான் தொங்கு நாடாளுமன்றத் தோல்தல் முடிவுகளும் வாய்ப்பாக அமையும். என்றாலும் தற்போது இருக்கின்ற நாடளுமன்த்தை விட இது சற்று ஆரோக்கியமான நிலை என்பதனையும் செல்ல வேண்டும்.

நன்றி:07.08.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சீன கப்பல் வருகை தள்ளிவைப்பு - இந்தியாவின் அழுத்தம் காரணம்?

Next Story

கனடாவில் மகனை காப்பாற்ற, உயிரைக் கொடுத்த இலங்கையர்