சர்ச்சை:பிளேபாய் இதழுக்கு போஸ்!  சிக்கிய பிரான்ஸ் அமைச்சர்!!

பிரான்ஸ் நாட்டு அமைச்சர் ஒருவர் பிளேபாய் இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த சம்பவம் அந்த நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவர்ச்சி புகைப்படங்களை அட்டைப்படமாக வெளியிடும் பிளேபாய் இதழில், அமைச்சரின் பேட்டி அட்டைப்படமாக வந்துள்ளது சியாப்பாவின் அரசியல் எதிரிகள் மற்றும் சொந்தக் கட்சியை சேர்ந்த நபர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

பிரான்ஸ் அமைச்சர், ப்ளேபாய்
பிரான்ஸ் அமைச்சர், ப்ளேபாய்

“அமைச்சரின் நடவடிக்கை தற்போது நிலவும் சூழலுக்கு பொருத்தமானது அல்ல,” என்று பிரான்ஸ் நாட்டின் பிரதமர் எலிசபெத் பார்ன் தெரிவித்துள்ளார்.

ஃபிரான்ஸ் அதிபர் எமானுவல் மக்ரூங் பரிந்துரையின் பேரில், ஓய்வூதிய திட்டங்களில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் குறித்து கோபமடைந்துள்ள தொழிலாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே சமீப காலமாக வன்முறை மோதல்கள் நடந்து வருகின்றன.

பிரான்ஸ் நாட்டில் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி 64 ஆக மாற்றும் அதிபரின் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பிரதமர் பார்னின் இந்த விமர்சனத்தை, மகளிர் உரிமை ஆர்வலரான சாண்ட்ரின் ரூசோவும் எதிரொலித்தார்.

அவர் பி.எஃப்.எம் தொலைக்காட்சியில் பேசியபோது, “பெண்களின் உடல் எங்கு வேண்டுமானாலும் வெளிப்படுத்தப்படலாம். அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் இதன் பின்னணியில் ஒரு சமூகக் காரணி இருக்கிறது,” என்று கூறினார்.

அமைச்சரின் அட்டைப்படத்துடன் பிளேபாய் இதழில், பெண்கள், தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகள் குறித்தும், கருக்கலைப்பு தொடர்பான நேர்காணலும் இடம்பெற்றுள்ளது.

அட்டைப்படத்தில் தோன்றிய தனது முடிவை, கடந்த சனிக்கிழமையன்று அமைச்சர் சியாப்பா நியாயப்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“பெண்கள் தங்கள் உடலைக் கொண்டு அனைத்து இடங்களிலும், எல்லா நேரத்திலும் விரும்பியதைச் செய்ய இருக்கும் உரிமையை நான் பாதுகாக்கிறேன். பிரான்ஸ் பெண்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். இது பிற்போக்குவாதிகளுக்கு எரிச்சல் தருகிறதா?” என்று பதிவிட்டுள்ளார்.

40 வயதான சியாப்பா, அரசியலுக்கு வருவதற்கு முன்பே பெண்ணிய எழுத்தாளராகவும், பிரெஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைக்கும் நபராகவும் இருந்துள்ளார்.

தாய்மையின் சவால்கள், பெண்களின் ஆரோக்கியம் குறித்து எழுதியிருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு சமத்துவத்துறை அமைச்சராக இருந்த போது, பொதுவெளியில் நடக்கும் பாலியல் அத்துமீறல், தெருக்களில் நடக்கும் அத்துமீறலை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்தார் சியாப்பா.

ஆனால் அவர் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல.

பிரான்ஸ் அமைச்சர், ப்ளேபாய்

2010ஆம் ஆண்டில் அவர் எழுதிய ஒரு புத்தகத்தில், எடை அதிகமாக இருப்பவர்களுக்கு பாலியல் வாழ்க்கையில் உதவக்கூடிய சில அறிவுரைகளை வழங்கியிருந்தார். இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் 2017 ஆம் ஆண்டில் பாரிஸில் “பெண்கள் செல்லக் கூடாத இடம்” என்று அழைக்கப்படும் பகுதிக்கு திட்டமிட்டு சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ப்ளேபாய் பத்திரிகையின் பிரெஞ்சு மொழி பதிப்பின் ஆசிரியர், சியாப்பா பத்திரிகையில் தோன்றிய முடிவை ஆதரித்துள்ளார்.

மக்ரோனின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் “பிளேபாய் பத்திரிகைக்கு பொருத்தமானவர்” என்று அந்த ஆசிரியர் விவரித்தார். பெண்களின் உரிமைகளுக்காக அவர் கொடுக்கும் வலுவான குரலை முன்வைத்து இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் ப்ளேபாய் பத்திரிகையின் ஆசிரியர்.

“பிளேபாய் என்பது 300 பக்கங்களைக் கொண்ட கவர்ச்சி படங்கள் நிறைந்த ஒரு பத்திரிகை. இது ஓவ்வொரு காலாண்டுக்கும் டிரெண்டில் உள்ள அம்சங்களை வைத்து வெளிவருகிறது,” என்று அவர் கூறினார்.

“சில பக்கங்களில் ஆடையில்லாத பெண்கள் இருப்பார்கள், ஆனால் அவை பெரும்பாலான பக்கங்கள் அல்ல,” என்று இந்த பத்திரிகையின் ஆசிரியர் கூறினார்.

Previous Story

ரணிலுடன் தனியாக டீல்!

Next Story

ரணில்-ராஜபக்ஸ இரகசிய சந்திப்பு!