சதி வேலைகள் செய்து தேர்தல் குழப்பப்படலாம் -எச்சரிக்கை

2024 ஜனாதிபதித் தேர்தல் பல தடைகளைத் தாண்டி பயணித்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு என்ன நடந்தது என்பதும் நாம் பார்த்த செய்திகள்தான். அதனையும் தடுத்து விட்ட ஆட்சியாளர்கள் இப்போது இந்த நாட்டில் நடக்கின்ற மிகப் பெரிய தேர்தலுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமக்கு வாய்ப்பில்லாத இந்தத் தேர்தலை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் செய்த அனைத்து ஏற்பாடுகளும் தோல்வியில் முடிய இப்போது குளிக்க மறுக்கின்ற நாயை ஆற்றுக்கு இழுத்துச் செல்வதைப்போல இந்தத் தேர்தலை ஆட்சியாளர்கள்; சந்திக்கின்றார்கள்.

அரசாங்கம் யாருடையது நாடாளுமன்றம் யாருடையது என்று புரியாத அளவுக்கு ஆட்சி போய்க் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக மொட்டுக் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்த இருக்கின்றது என்று தெரிகின்றது. ஆனால் இப்படி மொட்டுக் கட்சி ரணிலுக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்துவது என்பது இரு தரப்புக்களுக்கும் ஒரு தற்கொலை முயற்சி என்றுதான் கூற வேண்டும்.

தன்னிச்சையாக ரணில் தன்னை சுயேட்சை வேட்பாளர் என்று சொல்லிக் கொண்டு களத்தில் குதித்ததால் மொட்டுக் கட்சியினருக்கு குறிப்பாக ராஜபக்ஸாக்களுக்கு இது ஒரு கௌரவப் பிரச்சனையாக அமைந்தது. அதனால்தான் இப்போது அவர்கள் தரப்பில் இருந்து ஒரு வேட்பாளர் வருகின்றாராம்!

மஹிந்த ராஜபக்ஸ இப்படி ஒரு தீர்மானத்துக்கு வருவதை உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் வேறுவழியின்றி மொட்டு வேட்பாளரை அவர் அங்கிகரிக்க வேண்டி வந்திருக்கின்றது. சிரந்தி மற்றும் அவரது இரு புதல்வர்கள் மூத்த சகோதரர் சாமல் ராஜபக்ஸ ஆகியோரும் இதில் உடன்பாடு கிடையாது. அவர்கள் ரணிலை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டில்தான் இருந்தார்கள்

ஜனாதிபதிபத் தேர்தலுக்கான பொதுக் கூட்டங்களை நடாத்துகின்ற போது அடுத்த ஜனாதிபதி யார் என்பதனை ஊகிக்க முடியுமாக இருக்கும். அப்போது தமக்கு இதில் வாய்ப்பு கம்மி என்று வருகின்ற போது அதிகாரத்தில் இருந்தவர்கள் ஏதாவது அதிரடியான சதி-நாசகார வேலைகளைச் செய்து இறுதி நேரத்தில் கூட இந்தத் தேர்தலுக்கு ஆப்பு வைக்கின்ற முயற்சிகளில் இறங்க இடமிருக்கின்றது என்று நாம் எச்சரிக்கின்றோம்.

நன்றி கார்டியன் நியூஸ் (8) 07.08.2024

Previous Story

கார்டியன் நியூஸ் (8) 07.08.2024

Next Story

சஜித் 57 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றியாம்!