சதி காரர்களும் டீல் காரர்களும் மெகா கூட்டணி

நஜீப் பின் கபூர்

மரணப் படுக்கையில் இருக்கின்ற மனிதனுக்கு கடைசியாக அவனது உயிரை மீட்டெடுப்பதற்காக வைத்தியர்கள் என்னென்ன வேலைகளைச் செய்ய முடியுமோ அதiனைத்தான் தற்போது இந்தியா இலங்கைக்குச் செய்து கொண்டிருக்கின்றது.

இந்தியா கைகொடுத்திருக்கா விட்டால் பட்டினிச் சாவு ஏற்கெனவே துவங்கி இருக்கும். இந்தியா இப்படி நமக்கு உதவி செய்வது நட்பு ரீதியில் என்பதனை விடவும் பிராந்த அரசியல் ரீதியில் அதன் பிடியை வலுப்படுத்தும் ஒரு முயற்ச்சிதான் இதில் நடக்கின்றது.

இந்தியாவைப் பொருத்து அப்படி அது நடந்து கொள்வது பிழை என்றும் நாம் கருதவில்லை. இலங்கை என்ற நோயாளிக்கு எத்தனை நாட்களுக்குத்தான் இந்தியா தொடர்ந்து தனது ‘சேலாயனை’ ஏற்றிக் கொண்டிருக்க முடியும்.?

ரஷ்யா ஏன் உக்ரைன் மீது போர் தொடுக்கின்றது என்பதைப்போல்தான் இந்த விவகாரமும் பார்க்கப்பட வேண்டும். நேட்டோவில் உக்ரைன் உள்வாங்கப்பட்டால் தனது வீட்டு வாசலில்; ஒருவன் துப்பாக்கிகளுடன் நின்றிருப்பது போல ஒரு நிலைதான் ரஷ்யாவுக்கு.

எனவேதான் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் கடும் அழிவுகள் இன்று நடந்து கொண்டிருக்கின்றன. என்னதான் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் சண்டித்தனம் பேசினாலும் இந்த மோதலில் நேரடியாக ரஷ்யாவுக்கு எதிராகக் களமிறங்குவதைத் தவிர்த்து வருகின்றன.

எனவே ரஷ்யா அங்கு உக்ரைனுக்கு தர்ம அடிகொடுத்துக் கொண்டிருக்கின்றது. அதுபோல இலங்கையில் தற்போதய பொருளாதார  நெருக்கடியில் இந்தியா அசாதாரணமாக உள் நுழைந்து விளையாடுவதை சீனா பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை. அந்த விவகாரம் அப்படி இருக்க…!

இலங்கையின் பொருளாதரா நெருக்கடிக்கு கடந்த இரு வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட பிழையான அனுகுமுறைதான் காரணம் என்று பிரதமர் ரணில் சர்வதேச ஊடகமொன்றுக்குக்கு சில தினங்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்தார். தான் அரசைக் கையளிக்கின்ற போது ஏழு பில்லியன் அமெரிக்கா டொலர்கள் கையிருப்பில் இருந்தது என்றும் அவர் அங்கு சுட்டிக் காட்டினார்.

அவரது இந்தக் கருத்து நேரடியாக ராஜபக்ஸாக்கள் நாட்டை சீரழித்து விட்டார்கள் என்பதாகத்தான் அமைந்திருந்தது. ரணிலின் இந்தக் கருத்துக்களுக்கு கடுயைமான விமர்சனங்கள் வரும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆளும் தரப்பிலுள்ள பலர் குறிப்பாக மொட்டுக் கட்சியில் உள்ளவர்களே அதே நிலைப்பாட்டில் இருப்பதால்தான் எதிப்பு உயிர்த்துடிப்பற்றுப் போய் இருக்க வேண்டும்.

அலி சப்பரி நிதி அமைச்சராக இருந்த நேரத்தில் கூட அவரும் இதற்குச் சமாந்திரமான ஒரு கருத்தை சொல்லி இருந்தார். தற்போதய மத்திய வங்கி ஆளுநர் நந்தலாலும் வீரசிங்ஹவும் இதே நிலைப் பாட்டில்தான் இருக்கின்றார். ஆனால் இலங்கையின் பொருளாதாரம் இந்த நிலைக்குப் போனதற்கு ரணிலின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றது.

அரசியல்வாதிகள் அதிகாரிகள் அவர் காலத்தில் கூட பொது மக்கள் பணத்தை-சொத்துக்களை நிறையவே கையாடி இருக்கின்றார்கள். இதற்கு நல்ல உதாரணமாக அர்ஜூன் மகேந்திரன் மற்றும் ரவி கருணாநாயக்க பேன்றவர்களின் நடவடிக்கைகளைக் குறிப்பிட முடியும். இன்று பிரதமராக இருக்கின்ற ரணில் பிணைமுறி குறித்து ஒரு வார்த்தையாவது எங்காவது பேசி இருக்கின்றாரா?

நாம் வழக்கமாகச் சொல்வது போல இலங்கைப் பொருளாதாரம் இந்தளவுக்கு சீர்கெட்டுப்பபோனமைக்கு எழுபத்தி ஐந்து வீதம் (75) ராஜபக்ஸாக்களே பொருப்பேற்க வேண்டும். உலகில் ஆட்சியாளர்கள் தாம் பதவியில் இருக்கின்ற காலங்களில் குடிமக்கள் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்துதான் இருக்கின்றன.

ஆனால் இங்கு பதவிக்கு வந்த ராஜபக்ஸாக்கள் ஒரு காலத்தில் பிலிப்பைன்சில்-மார்க்கோஷ் ஆட்சியில் மக்களது சொத்துக்களை கொள்ளையடித்தை விட அதிகளவான தொகைப் பணத்தைக் கையாடி இருக்கின்றார்கள் என்று பகிரங்கமாக நாட்டில் விமர்சனங்கள்.

இதனை நாம் பிரதமர் ரணில் வார்த்தைகளில் சொல்வதானால் கடந்த காலங்களில் அபிவிருத்திப் பணிகளுக்கென 55 பில்லியன் டொலர்கள் வாங்கப்பட்டிருக்கின்றது. அதில் 30  பில்லியன்  டொலர்கள்  மத்திய வங்கிக்கு வராமலே வெளி நாடுகளுக்குப் போய் விட்டது என்று பிரதமர் ரணில் கூறி இருந்தார் ஆனால் அதற்கு இதுவரை ராஜபக்ஸாக்கள் தரப்பிலிருந்து பதில் கொடுக்கப்படவில்லை எனவே மக்கள் கருத்தும் ரணில் கருத்தும் சமந்திரமாக இருக்கின்றது.

இதனை சதவீதத்தில் பார்ப்பதாக இருந்தால் ஐம்பத்தி ஐந்து (55) பில்லின் டொலர் வெளிநாட்டுக் கடன் என்ற அளவில் முப்பது (30) என்பது சதவீதத்தில் 54.5 என்ற அளவு. மக்கள் பணத்தில் பெரும் பகுதி அரசியல்வாதிகளினால் கௌ;ளையடிக்கப் பட்டிருக்கின்றது என்று தெரியவருகின்றது.

அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதே கொள்ளையடிக்கின்ற நோக்கில்தான் என்பது தெளிவு. சில நல்லவர்கள் இருக்கக் கூடும். இப்போது கஜானா காலி என்பதால் சுராண்டலுக்கு வாய்ப்பு மிகவும் கம்மியாக இருப்பதால்தான் கதைகள் சந்திக்கு வருகின்றன. சுனாமியில் கொள்ளை, கெரானாவில் கொள்ளை.

அண்மையில் இந்திய மருத்து மற்றும் உணவுப் பொருட்களை வாங்கக் கொடுத்த பணத்தை இரும்பு வாங்கி அதில் கொள்ளையடிக்க முயன்ற ஒரு நிகழ்வு கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டதால் தடுக்கப்பட்டது என்பதனையும் வாசகர்களுக்குச் சொல்ல வேண்டும்.

பிறப்பிலும் இறப்பிலும் நமது ஆட்சியாளர்கள் மக்கள் பணத்தை-சொத்தை சூரையாடி வருகின்றார்கள் என்பது தற்போது நிரூபனமாகி இருக்கின்றது. நாமும் பிரதமர் ரணிலும் இங்கு பதிந்திருக்கின்ற தகவல்கள் பிழையானவை என்றால் சட்ட நடடிக்கைக்கு கதவுகள் திருந்துதானனே இருக்க வேண்டும்.?

அண்மைக் காலமாக இருந்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மெகா கூட்டணி சமைத்துக் கொண்டுதான் மக்கள் பணத்தை-சொத்துக்களைக் கொள்யடித்து வந்திருக்கின்றார்கள் என்பது கோப் குழுவின் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

அங்கு சொல்லப்படுகின்ற தகவல்கள் அதிர்ச்சி தருபவைகளாக அமைந்திருக்கின்றன. அடுத்த வேடிக்கை என்னவென்றால் ஏற்கெனவே கோப் குழுவில் மக்கள் பணத்தை தவறாக பயன் படுத்தினார்கள் என்று அந்தக் குழு குற்றம் சாட்டியவர்கள் கோப் குழுவில் கேள்வி எழுப்புக்கின்ற பக்கத்தில் இன்று அமர்ந்து அடுத்தவர்களிடத்தில் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்ற நிலையும் காணப்படுகின்றன.

அவர்கள் நாமங்களை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை தொப்பி சாரியாக இருப்பவர்கள் தங்களது தலைகளில் அவற்றை போட்டு அழகு பார்த்துக் கொள்ள முடியும்.

எனவேதான் இந்த நாட்டில் குடிமக்களுக்கு எதிரான அரசியல்வாதிகள் அதிகாரிகள் மெகா கூட்டணியென்று செய்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று நாம் கூறுகின்றோம். நாட்டில் ஆட்சி செய்பவர்களின் பிரதான நோக்கம் மக்கள் சொத்துக்களை சுராண்டுவது. இரண்டாம் பட்சம்தான் அபிவிருத்திப் பணிகள்-மக்கள் நலன்கள் என்று அமைந்திருக்கின்றது. நாம் மேற்சொன்ன கணக்குகளில் இருந்து இந்தக் கதை உறுதியாகின்றன.

அதிகாரத்தை விட்டு விலகுமாறு ஒட்டு மொத்த மக்களே வீதியில் இறங்கிப் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் தனக்கு 69 இலட்சம் மக்கள் அங்கிகாரம் தந்துதான் பதவியில் அமர்த்தி இருக்கின்றார்கள். எனவே நான் அவர்கள் ஆணைக்குப் புறம்பாக எப்படிப் பதவி இருந்து வெளியேற முடியும் என்று ஜனாதிபதி ஜீ.ஆர். திருப்பிக் கேட்க்கின்றார்.

‘கோட்டா கோ ஹோம்’ போராட்டம் உச்ச கட்டத்தில் இருக்கின்ற நேரத்தில் தளர்வுப் போக்குடன் பேசிய ஜனாதிபதி தற்போது மீண்டும் அதிகாரத் தோரனையில்தான் பேசி வருகின்றார். அவரும் சர்வதேச ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட விருப்பம் என்ற கருத்தைத்  தெரிவித்திருந்தார். எனவே இதிலிருந்து அவரது மன நிலையைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

தான் ஒரு தோல்வி அடைந்த ஜனாதிபதியாக ஓய்வு பெற முடியாது. ஒரு வெற்றியாளனாகத்தன் பதவியில் இருந்து வெளியேற வேண்டும். எனவே மீதமுள்ள இருவருடங்களில் அதிகாரத்தில் இருந்து சாதணை படைத்து விட்டுத்தான் போவேன் என்றும் அவர் பிடிவாத்தில் இருக்கின்றார்.

இது பற்றி கருத்துச் சொல்லி இருந்த ‘ஸ்ரீலங்கா கார்டியன் நியூஸ்’ என்ற இணையத் தளம் இன்னும் இருபது வருடங்கள் இருந்தாலும் அவர் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை. இதற்கு ஒரு வருடத்துக்கு முன்பும் அவர் இப்படி ஒரு முறை பேசி இருந்ததையும் ‘கார்டியன்’ தனது செய்தியில் சுட்டிக்காட்டி இருந்தது.

இரட்டைப் பிரசா உரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் வர இடம் தரம் வேண்டும். நிறைவேற்று அதிகாரம் வேண்டும் என்ற பிடிவாத்தில் ராஜபக்ஸாக்கள் 20ம் திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

தற்போது மக்கள் இந்த இரண்டையும் நீக்க வேண்டும். நாட்டின் அழிவுக்கு இவையும் முக்கிய காரணம் என்று கூறும் போது, இன்று அதற்கு ராஜபக்ஸாக்களும் அவர்களது விசிரிகளும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற நேரம் வரை நீதி அமைச்சர் விஜேதாச இந்த இரு விடயங்களை உள்ளடக்கிய 21வது திருத்தத்துக்கு அமைச்சரவையின் ஒப்புதலை இன்னும் பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

அப்படித்ததான் பெற்றுக் கொண்டாலும் அதற்குப் பல இடங்களில் முட்டுக்கட்டைகளுக்கு நிறையவே இடமிருக்கின்றது. இதிலுள்ள ஆரோக்கியமான நிலை என்னவென்றால் மொட்டுக் கட்சியில் இருக்கின்ற குறிபிபட்ட ஒரு தொகையினர் மக்கள் தரப்பில் ஆரோக்கியமான நிலைப்பட்டில் இருக்கின்றார்கள்.

மொட்டுக் கட்சியின் கோட்பதார் பசில் தற்போது தனது உறுப்புரிமையிலிருந்து விலகி இருக்கின்றார்.  ஆனாலும் தனக்கு எதிராகக் கொண்டு வருகின்ற பிரேணையைத் தோற்கடிக்கின்ற முயறச்சியில் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கின்றார். அவருக்கு இதில் வெற்றிபெற 76 வாக்குகள் இருந்தால் போதுமானது. எனவே வர இருக்கின்ற குறைந்த அளவு திருத்தங்கள் கூட நிறையவேற பல தடைகளைத் தாண்ட வேண்டி இருக்கும். மொட்டுக் கட்சி நாடாளுமன்றக் கூட்டத்தில் டலஸ் அலகப்பெருமாவும் சரத் வீரசேகரவும் எதிரும் புதிருமான 21 விடயத்தில் மோதி இருக்கின்றார்கள். டலஸ் ‘மக்கள் உணர்வுகளைப் புரிந்து தீர்மானங்களை எடுக்காதுபோனால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும்’ என்று அங்கு எச்சரித்திருந்தார். சரத் வீரசேக்கர ‘ஜனாதிபதி அதிகாரங்களைக் குறைக்கக் கூடாது’ என்று அங்கு பேசி இருந்தார்.

நன்றி:12.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

Dr.ஷாஃபி அதிரடி ! வியப்பில் பலர்!    நாடே பாராட்டுகின்றது! நமது வாழ்த்துக்களும்!!!

Next Story

என்ன அக்கிரமம் இது? அஃப்ரீன் பாத்திமா வீ டு தரைமட்டம்  - யார் அஃப்ரீ...!