நஜீப் பின் கபூர்
நன்றி: 19.10.2025ஞாயிறு தினக்குரல்
*****
தற்போதய அரசியலில் சீலரத்ன தேரருக்கும்
ரணிலுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது!
*****
வங்குரோத்து ரணிலுடன் கூட்டணி போட்டாலும்
அவர்களுக்கு பெரிய வாக்கு வங்கி கிடையாது!
*****
நாட்டில் வலுவான ஒரு அரசாங்கம் இருக்கின்ற போது பலமான எதிரணி ஒன்று மிக மிக அவசியம் என்பதில் மாற்றுக் கருத்துகள் எவருக்கும் இருக்க முடியாது. எந்தவொரு கட்சிகளின் துணையோ கூட்டணி இன்றி தற்போதய அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஜேவிபி-என்பிபி அணிகள் இந்த அரசுக்குள் இருந்தாலும் கொள்கை ரீதியில் அவர்கள் எஃகு மதில் போல ஐக்கியமாக இருக்கின்றனர்.
அதனால் அந்த அணிக்குள் பிளவு வரும் என்ற கதைகள் அனைத்தும் மாயை என்பது இன்று நிரூபனமாகி வருகின்றது. அரசுக்குள் ஜேவிபி-என்பிபி என்று குழுக்களிடையே முரண்பாடு பிளவு ஹருணி ஐம்பது அறுபது பேருடன் அரசிலிருந்து வெளியேற இருக்கின்றார். டில்வின் பிரதமராகின்றார் என்றெல்லாம் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இவை எதிர்கட்சியினராலும் அவர்களுக்காக காசுக்காக விலைபோயிருக்கின்ற ஊடகங்களாலும் சந்தைக்கு விடப்பட்ட செய்திகள் என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும். இப்போது இந்தக் கட்சி தாவல் பற்றி எவருமே பேசுவதில்லை. இதுபற்றி கருத்துத் தெரிவித்த ஜேவிபி. செயலாளர் டில்வின் அப்படிக் கனவு காணும் உரிமை அவர்களுக்கு இருப்பதை நாம் மதிக்கின்றறோம் என்று ஏலனமாக சொல்லி இருந்தார்.
இப்போது அந்தக் கதைகள் காணமால் போயிருக்கின்ற நிலையில் அரசுக்கு எதிரான பாரிய பேரணிகளை நடாத்த நாம் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம் என்று வழக்கமாக அண்டப்புளூகுகளைக் கட்டவிழ்து விடுகின்ற ரணிலின் சகா வஜிர அபேவர்தன கூறிவருகின்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஒரு கோடி வாக்குகள் கிடைக்கும் என்று கதை விட்டவரல்லவா இந்த மனிதன். சரி அந்தக் கூட்டங்கள் எப்போது எங்கு நடக்கும் என்று கேட்டால் அதற்கான காலத்தையோ நேரத்தையோ அவர் நமக்குச் சொல்லவில்லை.
இந்தப் பேரணிக்கு முன்னர் சஜித்தையும் தங்களுடன் இணைத்துக் கொண்டால்தான் மக்கள் பிரசன்னத்தை ஓரளவு எதிர்பாக்க முடியும். அல்லது பார்வையாளர்களை விட மேடையில் அமர்ந்திருக்கின்றவர்கள் எண்ணிக்கைதான் அங்கும் அதிகமாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். இதனால்தான் தமது காட்சியின் பேராளர் மாநாட்டை அவர்கள் ஒரு மண்டபத்தில் நடாத்தி முடித்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய அரசியல் களத்தை ஆளும் தரப்பு, சஜித் தலைமையிலான பிரதான எதிரணி, நாமல் தலைமையிலான மொட்டு அணி. சுதந்திரக் கட்சி ரணிலின் பிரபுத்துவத்தை ஆதரிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி தெற்கிலுள்ள ஏனைய சில்லறைகள். இது தவிர வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தரப்புக்களும் சந்தர்ப்பவாத முஸ்லிம் மலையக தனித்துவக் குழுக்கள் என்று வரிசைப்படுத்த முடியும்.
மாகாணசபைத் தேர்தல் பற்றி அரச தரப்பினரும் பகிரங்கமாகப் பேசி வருவதால் அடுத்த வருடம் அந்தத் தேர்தலுக்கு வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கின்றன. ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் 2026 இறுதியில் தேர்தல் என்று சொன்னாலும் நமது கணக்குப்படி அவர்கள் அதிரடியாக முன்கூட்டித் தேர்தலுக்குச் செல்ல அதிக வாய்ப்புக்கள் இருந்து வருகின்றன என்பதுதான் எமது கருத்து.
ஆனால் இப்போது அரசியல் கூட்டு குறிப்பாக மீண்டும் சஜித்-ரணில் இணைவுக்கு எடுக்கிற முயற்சிகளும் அதில் வருகின்ற சாதாக பாதக நிலமைகள் இழுபறிகள் பற்றி பார்ப்போம். இதற்கு முன்பும் இது பற்றி நாம் அவ்வப்போது பேசி வந்திருக்கின்றோம். ரணில் கைதுக்குப் பின்னரான அரசியல் தேவைகள் காரணமாக இந்த இணைவு பற்றிய கருத்துக்கள் மேலோங்கி வருகின்றன.
பல்வேறு ஊழல் மோசடி மற்றும் குற்றச்சாட்டுக்கள் காரணமாக இந்தக் கூட்டணி பற்றிய தேவை எதிரணி அரசியல்வாதிகளுக்கும் கட்டாயமாகி இருக்கின்றது. சஜித் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் இருக்கின்றன. அதே போன்று சஜித் மற்றும் ரணில் அணியில் இருக்கின்ற பலபேருக்கும் இதேவிதமான குற்றச்சாட்டுக்கள் இருந்து வருவது தெரிந்ததே. இந்த நேரத்தில்தான் ஒன்றிணைவுக்கான அழுத்தம். இது மக்கள் நலனுக்கான கூட்டணியோ அல்லது தேர்தலை முன்னிருத்தி நடக்கின்ற ஒரு கூட்டணி என்றோ நாம் கருதவில்லை.
தமது தலைகளைக் காத்துக் கொள்ள எடுக்கப்படுக்கின்ற ஒரு சந்தர்ப்பவாத இணைப்பாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம். சுனாமி கொவிட் போர் காலங்களில் ஒட்டுமொத்த எதிரணி அரசியல் கட்சிகள் எப்போதாவது ஒன்று கூடி பொது நலனுக்கான ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கின்றார்களா என்று தேடிப்பார்த்தால் அப்படியான காட்சிகளை நாம் எமது அரசியலில் காணவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சி தோன்றிய காலம் முதல் அது பிரபுத்துவக் கொள்கையில்தான் செயல்பட்டு வந்திருக்கின்றது. அதனால்தான் எஸ்.டப்லியூ.ஆர்.டி.பண்டார நாயக்க பஞ்சசீலக் கொள்கைளுடன் சு.கட்சியை ஆரம்பித்துக் குறுகிய காலத்தில் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது. அவர் கூட பிரபுத்துவ வர்க்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வலதுசாரிப்போக்குடைய இடது சிந்தனை கொண்டவராக அவர் இருந்தார் என்று சொல்ல முடியும்.
மைத்திரி அதிகாரத்துக்கு வரும் வரை அந்தக் கட்சி பேரின மக்கள் மத்தியில் ஜனரஞ்சகமாக இருந்து வந்திருக்கின்றது. நாட்டில் இருந்த சிறுபான்மை சமூகங்கள் அனைத்தும் போல சு.கட்சியை ஒரு சந்தேகப்பார்வையுடன் நோக்கி வந்தன. அதில் பேரினவாதம் இருந்ததாக அவை நம்பின. அதனால்தான் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் வரை ஏறக்குறைய சிறுபான்மை சமூகங்கள் ஐதேக.-ஐமசவுக்கு ஆதரவாக இருந்து வந்திருக்கின்றன. என்றாலும் அஸ்ரஃப் மு.கா.வை அறிமுகம் செய்து ஐதேக.வில் கனிசமான சேதாரத்தை ஏற்படுத்தி இருந்தார்.
இன்றும் கூட மு.கா. தலைமை பலயீனமாக இருந்தாலும் கிழக்கில் அது ஓரளவுக்கு பலமாக இருந்து வருகின்றது. மு.காவுக்குள் சிறு சிறு கிளைகள் தோன்றினாலும் அவைகூட வடக்குக் கிழக்கில் இன்றும் பேரின கட்சிகளைவிட பலமான உள்ளே சில்லறைகளாக தமது பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதனால்தான் முஸ்லிம்கள் மத்தியில் ஹக்கீம் ரிசாட் அதாவுல்லா என்ற அணிகள். மலைகத்திலும் சௌமியமூர்த்தி தொண்டாவுக்குப் பிறகு இதே நிலை. ஜீவன் மனோ திகா ராதா என்ற அணிகள்-அல்லது ஓரிரு ஆசனங்களை வெற்றி கொள்ள அரசியல் இயக்கங்கள்!
இந்தத் முஸ்லிம் மலையகத் தனித்துவத் தலைமைகள் எப்போதும் தமது பிரதிநிதித்துவத்துக்காக ரணில்-சஜித் அணிகளுடன் கூட்டணிக்கு வருகின்றன. அவர்களும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு இவர்கள் சில ஆயிரம் வாக்குகளைக் கொண்டு வருவார்கள் என்பதால் இந்த சில்லறைகளுடன் கூட்டணி வைப்பதில் ஆர்வமாக இருக்கின்றார்கள். அதனால் இரு தரப்பிலும் தன்னலத்துக்காகத்தான் கூட்டணி போடுகின்றார்கள்.
நாம் முன்சொன்ன ஐதேக.வில் உள்ள பிரபுத்துவம் ரணசிங்ஹ பிரேமதாச அந்தக் கட்சிக்குள் என்னதான் செல்வாக்கான மனிதனாக மக்கள் மத்தியில் இருந்தாலும் அவருக்கு பிரபுத்துவவாதிகள் தட்டில் வைத்து தலைமைப்பதவியை கையளிக்கவில்லை. எனவேதான். அதிலிருந்த அதுலத்முதலி காமினி திநாயக்க பேன்றவர்கள் பிரேமதாசவுக்கு எதிராகப்போர்க் கொடி தூக்கினார்கள். பிரேமதாச படுகொலை வரை அங்கு வர்க்கவாதம் தொடர்ந்தது. இன்றும் அதே நிலைதான்.
மக்கள் மத்தியில் இன்று ரணிலைவிட சஜித் செல்வாக்கான ஒரு தலைவராக இருந்தாலும் அந்தக் கட்சியின் தலைமைக்கோ அல்லது இரண்டாம் நிலை இடத்திலே அவரை நிறுத்துவதில் நிறையவே முட்டுக்கட்டைகள். ரணில் மரணிக்கும் வரை ஐதேக. தலைவர். மரணம் நிகழ்ந்தாலும் அவரது நெருங்கிய உறவு ருவன்விஜேவர்தன அந்தக் கட்சிக்குத் தலைவர். அதற்கேற்பத்தான் யாப்பும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மு.கா.விலும் இதே நிலைதான்.
அதனால்தான் சஜித் ரணிலுக்கு ஆப்புவைத்து புதுக்கட்சி துவங்கினார். ரணில் சிலர் சொல்வது போல சிறந்த அரசியல் தலைவர் என்பதில் எப்போதும் நமக்கு உடன்பாடு கிடையாது. அது ஊதிப் பெருப்பிக்கப்பட்ட பெலுன் போன்றது. அப்படி ஒரு இமேஜை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் ரணிலின் பிரபுத்துவம் நல்ல அறுவடைகளை இன்று வரை பெற்றிருக்கின்றது.
ஆனால் நமது கணக்குப்படி அந்தக் கட்சிக்கு இன்று ஆதரவாலர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரு இரண்டு மூன்று இலட்சம் பேர்தான். ஐதேக.வில் இருந்த பெரும்பாலானவர்கள் சஜித்துடன் இணைந்து விட்டார்கள். எனவே புதிய கூட்டணி அல்லது சஜித்-ரணில் இணைவதால் பெரிய வாக்கு அங்கிருந்து வரப்போவதில்லை.
ரணில் செல்வாக்கை சற்றுப்பார்ப்போம். ஒரு ஆசனத்தை வைத்து அவர் ஜனாதிபதியான கதை என்பது முழுக்க முழுக்க ராஜபக்ஸாக்களுக்கான விசுவாசமும் குடி மக்களுக்கான துரோகமுமாகும். கடந்த தேர்தல்களை ஒரு முறை நினைவு கூர்ந்தால்… மஹியங்கனையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஒரு போதும் சஜித்தால் அணுராவைத் தோற்கடிக்க முடியாது என்று ரணில் பேசி இருந்தார். இத்துணைக்கும் ரணிலும் வேட்பாளர். சிலர் ரணில் போட்டியாளராக வந்திருக்கவிட்டால் சஜித்துக்கு வாய்ப்பு எனக் கூறுகின்றார்கள் இது எப்படிச் சாத்தியம்?
தேர்தலில் அணுர 42 சஜித் 32 ரணில் 17 நாமல் 2 சதவீத வாக்குகள் பெற்றாலும் பொதுத் தேர்தலில் ரணிலுக்கு என்ன நடந்தது அவரின் சகாக்கள் ஏன் களத்தில் இருந்து ஓடி ஒழித்தார்கள். எனவே தன்னை மக்கள் நிராகரித்து விட்டதை அவர்கள் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டதைத்தானே இந்த முடிவுகள் காட்டுகின்றன. ஜனாதிபதித் தேர்தலுடன் ரணிலின் ஆட்டம் ஓய்ந்து விட்டது. அவரை மீண்டும் நிமிர்த்த சகாக்கள் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றி பெறாது என்று நாம் அடித்துச் சொல்கின்றோம்.
தற்போதய அரசியல் சூழ்நிலையில் சீலரத்தன தேரருக்கும் ரணிலுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனால் ஐதேக.வில் சிரேஸ்டமானவர்கள் இன்றும் ரணிலுடன்தான் இருக்கின்றார்கள். அவர்கள் பிழைப்பு வழிதேடும் முயற்சிதான் இந்த இணைப்பு. ரணில்-சஜித் இணைகின்றார்கள் என்று வைத்துக் கொண்டால் அந்த அணியில் அவர்கள் கைதான் ஓங்கும். நாம் முன்பு ஒரு முறை சொன்னது போல அப்பா ராணில் சஜித் மகன் என்று நிலைதான் பொதுமக்கள் பார்வைக்குத் தெரியும்.
காபீர் அர்ஷ ஹக்கீம் மனோ போன்றவர்கள் ரணில் ஆதரவாலர்கள் என்பதனை சஜித் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கிடையில் இணைவு அறிக்கை சமர்ப்பிக்க கபீர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஆனால் அதனை சஜித் ஒரு முறை நன்றாக சரிபார்த்துக் கொள்வது நல்லது. எனவே என்ன பேச்சுவார்த்தை-ஐக்கியம் என்று வந்தாலும் அது தனது தலைமையில்தான் நடக்க வேண்டும் என்று சஜித் எடுத்திருக்கும் தீர்மானம் பாராட்டத்தக்கது. தனக்கு முதுகில் குத்த உள்ளேயே ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதனையும் சஜித் தெரிந்து கொள்ள வேண்டும்.
சஜித் ரணில் இணைகின்றார்கள் என்று வந்தால் அந்த அரங்கில் ரணில் முன்னே சஜித் காணாமல் போய்விடுவார். ரணிலுக்கு சுற்றி இருக்கும் எல்லோரும் சேர் போட சஜித் அங்கு சிறுமைப்படுத்தப்படுவார். சஜித் தலைவர், ரணில் சிரேஸ்ட தலைவர் என்று வந்தாலும் அதே ஆபத்து சஜித்துக்கு இருக்கின்றது என்பதனை நாம் எச்சரிக்கை செய்து வைக்கின்றோம். ஐதேக.வில் இருந்த தொன்னூறு சதவீதமானவர்கள் சஜித்துடன்தான் இருக்கின்றார்கள்.
என்னதான் அவர் பலயீனமான மனிதராக இருந்தாலும் எதிரணிக்கு இன்று நம்பகமான வேறு தலைமைகள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை. ஊழல் மோசடி மற்றும் பாதள உலக மற்றும் போதை வியாபாரிகளுடனான தொடர்புகள்-பங்கு காரணமாக பேரின சமூகத்தின் மத்தியில் ராஜபக்ஸாக்கள் மீது கடும் விமர்சனமும் கோபமும் காணப்படுகின்றது. அவர்கள் மீட்பாளராக அதிகாரத்துக்கு வந்த ரணில் மீது பொது மக்களுக்கு நல்லெண்ணம் கிடையாது.
ரணிலை ஒரு ஊழல் பேர்வலி-கொள்ளையன் அவர் ஒரு துரோகி என்று தனது தந்தை பிரமேதாச சமாதி முன்நின்று சபதம் எடுத்த சஜித் எப்படி ரணிலுடன் கூட்டணிக்கு வர முடியும். அணுர ஒரு அசாதாரண ஆளுமை. அவருடன் சஜித்தை ஒரே தராசில் வைத்து நிறுப்பது நியாயமற்ற செயல்.
சஜித்தும் அவரது ஆதரவாலர்களும் இணைவு விவகாரத்தில் சற்று பொறுமைகாக்க வேண்டும். மேலும் தேர்தலுக்கு முன்பு ஒரு சந்தர்ப்பவாத கூட்டணிக்கு ரணில் இணங்கினாலும் அவர்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவத்தை சஜித் விட்டுக் கொடுக்கத் தேவையில்லை. தேர்தலின் பின்னர் சபைகளை அமைக்கும் நிலை வந்தால் பார்ப்போம் என்று தள்ளி வைப்பதுதான் சஜித்துக்கு ஆரோக்கியமாக இருக்கும்.
சஜித்-ரணிலை இணைக்க அந்தக் கட்சிக்குள் நடக்கின்ற முயற்சிகளை நாம் ஒரு போராட்டமாகத்தான் பார்க்கின்றோம். திகாம்பரம் இது சாத்தியப்படாத முயற்சி என்று பகிரங்கமாகச் சொல்லி வருகின்றார்கள். கட்சியில் இருக்கின்ற சிலரது பேச்சைக் கேட்டு சஜித் இணைவுத்தீர்மனத்துக்கு வருவாராக இருந்தால் தெருவில் நின்ற பாம்பை மடியில் போட்டுக் கொண்டவன் நிலைதான் அவருக்கு வரும் என்று நாம் மீண்டும் எச்சரிக்கின்றோம்.