“கோமாவுக்குப் போகும் தேசம்”

Sri Lanka Map Financial Crisis Economic Collapse Market Crash Global Meltdown Vector Illustration.

-நஜீப் பின் கபூர்-

அரசியல் என்றதும் சாக்கடை. அப்படிப் பேசுவதை நாம் பரவலாகக் கேட்டிருக்கின்றோம். ஆனால் நாடுகளும் சமூகங்களும் விரும்பியோ விரும்பமாலோ அந்த சாக்கடை வாசத்தை சுவசித்தோ அல்லது அதில் நீரடித்தான் ஆக வேண்டும்.

நமக்கு அரசிலைப் பிடிக்காது என்று சொன்னாலும் அரசியல் ஆதிக்கத்தில் இருந்து தனி மனிதனும் சமூகமும் விடுபட முடியாது என்பதுதான் யதார்த்தம். இயக்கர் நாகர் பிடியில் இருந்த நாட்டை லாலா நாட்டில் இருந்து வந்த விஜயன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். அதிகாரத்துக்கு வருவதற்காக குவனியை மணந்தான்.

பின்னர் சொந்த நாட்டவர்களை கூட்டி வந்து அவர்களோடு இங்கு குடி வாழ்ந்தான். பிறப்பில் அவன் சிங்கத்தின் வாரிசு என்றெல்லாம் வித்தியாசமான கதைகள். அந்தக் கதைகள்  அசிங்கமானது என்பதாலோ என்னவோ இப்போது அதுபற்றி எவரும் பெரிதாகப் பேசுவதில்லை. அவனுடன் துவங்குகிறது சிங்கள ஆட்சி.

அதன் பின்னர் இடை இடையே தென்னிந்தியப் படையெடுப்புக்கள். இடமாறும் இராசதானிகள். இடப் பெயர்வுகள். போத்துக்கேயர், ஒல்லாந்தார் இறுதியில்; ஆங்கிலேயர் என்ற ஐரோப்பியக் குடியேற்றங்கள் இங்கே. இவை எல்லாம் பழங் கதை. நமது வலாற்றுச் சுருக்கம்.

1948ல் நமக்குச் சுதந்திரம். 1972ல்  நமக்குக் குடியரசு  அந்தஸ்த்து. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை சுதேசத் தலைவர்களின் கீழ் நாம் எழுபத்தி நான்கு வருடங்கள் வாழ்ந்திருக்கின்றோம்.

ஆனால் இயக்கர் நாகர் கலாத்திலோ அல்லது மன்னர் காலத்திலோ அதுவும் அல்லாமல் ஐரோப்பியர் காலத்தில் கூட அடையாத துன்பங்கள் துயரங்களை நாம் இன்று அனுபவித்து வருகின்றோம் என்று சொன்னால் அந்த வார்த்தைப் பிரயோகத்தில் பெரிய தவறுகள் இருக்கும் என்று கருதமுடியாது.

நாம் ஏன் இப்படி உச்சரிக்கின்றோம் என்று சொன்னால் துவக்க காலத்தில் இருந்து 1948 வரை இருந்த அரசர்களோ ஆட்சியாளர்களோ அல்லது ஆக்கிரமிப்பாளர்களோ நம்மை இந்த அளவிற்கு ஏமாற்றிப் பிழைத்திருக்க மாட்டார்கள்- பொய்களைச் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று நாம் நம்புகின்றோம்.

அந்தக் காலத்தில் மோதல்கள் ஆக்கிரமிப்புக்கள் போர்கள் அழிவுகள் என்று நடந்திருக்கலாம், இந்தளவு வஞ்சக-சுரண்டல் அரசியல் நமது நாட்டில் நடந்திருக்காது. இன குல பேதங்கள் இருந்திருக்கலாம் அவை அனைத்தும் பொதுவானதாகத்தான் இருந்திருக்க வேண்டும். இன்று கூட குல இன பேதங்கள் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் இந்தளவு வன்முறைகள் அன்று இருந்திருக்க மாட்டது என்பது நமது கணிப்பு.

உலகில் நமக்குப் பின்னால் இருந்த எத்தனையோ நாடுகள் முன்னிலைக்குப் போய் விட்டது. ஏன் ஆசியாவில் நாம் ஜப்பானுக்கு மட்டுமே இரண்டாம் நிலைளில் இருந்தோம் .இன்று நமக்குப் பின்னால் இருந்த சிங்கப்பூர் மலேசிய  ஏன் ஆசியாவிலே பெரும் அல்லல் பட்ட குடிகள் வாழ்ந்த பங்காளதேஷ் கூட நம்மை விட எத்தனையோ மடங்கு முன்னால் போய் விட்டது.

அப்படியானால் நமக்கு மட்டும் என்ன நடந்தது. கொரோனாதான் நம்மை இந்த நிலைக்கு தள்ளி விட்டதா? இல்லை. கொரோனாவுக்குள்ளும் நாடுகள் தனது ஸ்தீரத்தன்மையை பாதுகாத்துக் கொண்டது. தனது சரிவை சரி செய்து கொண்டு விட்டது. அல்லது சரி செய்து கொண்டு வருகின்றது.

நமது அரசியல் தலைவர்கள் நமக்குப் மிகப் பெரிய துரோகங்களையும் ஏமாற்றங்களையும் செய்ததால்தான் நாம் இந்த நெருக்கடிகளுக்கு இலக்காகி விட்டோம். சுதந்திரத்துக்குப் பின்னர் சில ஆண்டுகள் நிலமை ஓரளவுக்கு சரியாக இருந்தாலும் பின்னோக்கி நகர நகர நமது ஆட்சியாளர்கள் பொது மக்கள் சொத்துக்களை கொள்ளை அடிப்பதில் தனது வேகத்தை துரிதப்படுத்தி வந்திருக்கின்றார்கள்.

அதற்காக நமக்கு ஆசை வார்த்தைகளை கதைகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள். கடந்த இரு தாசப்தங்களாக அதிகாரத்தில் இருந்த தலைவர்கள் போரிலும் அபிவிருத்தியிலும் மக்கள் சொத்துக்களை  சூரையாடி வந்தார்கள். அதற்கு ஏற்றவாறு அதிகாரிகளையும் அவர்கள் வைத்திருந்தார்கள். அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கின்றபோது அதிகாரிகளுக்கும் அதில் ஒரு பங்கு என்று எழுதப்படாத சட்டமாக போய்ச் சேர்ந்தது.

உள்ளாட்சி சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்றம், அமைச்சர்கள் ,தலைவர்கள் என்ற மட்டத்தில் அவரவர் வெயிட்டுக்கு ஏற்றவாறு மில்லியம், பில்லியன், ரில்லியன் என்று அந்த கொள்ளைகள் சுதந்திரமாக நடந்து. இன்று அந்தச் செல்வங்கள் அவர்கள் கஜானாக்களுக்குள் பாதுகாப்பாக இருக்கின்றது. எனவே தான் பண்டோர கொள்ளை என்ற அளவுக்கு இந்த புதுக் கதைகள் வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது.

அபிவிருத்திப் பணிகள் என்ற  பெயரில் கோடி கோடி எனக் கொள்ளைகள். சில தினங்களுக்கு முன்னர் செல்வாக்கான அமைச்சர் ஒருவர் பலநூறு கோடிகளைக் கொள்ளை அடிக்க இருந்ததை நாம் தடுத்து விட்டோம் என்று ஜேவிபி தலைவர்களில் ஒருவரான மஹிந்த சமரசிங்ஹ பகிரங்கமாக குறிப்பிடுகின்றார்.

இலாபமீட்டாத துறைமுகங்கள், விமான நிலையங்கள், மைதாணங்கள், கோபுரங்களை அமைக்கின்ற போது பில்லியம் ரில்லியன் கணக்கில் நாட்டுக்கு வருமானம் வரப்போகின்றது. நாட்டில் செல்வம் கொழிக்கப் போகின்றது. இலச்சக் கணக்கானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் என்று சொல்லித் தான் இவற்றை எல்லாம் இங்கு நிர்மானித்தார்கள். அதிலும் கொமிஷ் கொள்ளை வேறு அடித்தார்கள் என்பது உலகறிந்த இரகசியம்.

இன்று அவை அத்தனையும் வெறும் ஏமாற்று எல்லாம் கவிழ்ந்து போன கப்பல் என்ற நிலையில் வந்த போது அவை அத்தனையையும் மொத்த விலையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் என்று வித்து அதிலும் வேறு கொள்ளைகள் நடக்கின்றன.

ஒப்பந்தங்கள் நடக்கின்றன. அதுவும் நடு நிசியில். ஒப்பந்தங்களில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பது எல்லாம் மூடு மந்திரம். அந்தப் பணத்தில்தான்  இன்று ஆட்சியாளர்கள் நாட்டை ஓட்டிச் செல்ல நினைக்கின்றார்கள்.

இது கொரோனாவால் நமக்கு வந்த காயம் அல்ல. அரசியல் தலைவர்கள் தமது தனிப்பட்ட நலன்களை மையமாக வைத்து மேற் கொண்ட  திட்டங்கள். கொரோனா தடுப்பூசியில்யின் விலை, பங்களதேசத்தை விட ஐந்து டொலர்கள் அதிகம். வாங்கிய விலையை வெளியில் சொல்ல வேண்டாம் என்று வேறு சீனாவுடன் இணக்கப்பாடு. இந்தக் கதையை நாட்டுக்கு முதன் முதலில் நாம் ஆதரத்துடன் அன்று சொல்லி இருந்தோம்.

இன்று அதிவேக நெடுஞ்சாலைகள் பற்றிப் பேசப்படுகின்றது. இவற்றை அரசியல் வாதிகள் தமது தனிப்பட்ட வருவாய் கருதிதான் முன்னெடுக்கின்றார்கள். அதில் மோசடி செய்தவர்கள் பற்றிய பட்டியல் நாடாளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாசிக்கப்பட்டது.  அதில் ஆளும் எதிரணி என்ற இரு தரப்பினரும் இருந்தார்கள்.

மத்திய வங்கியைக் கொள்ளை அடிப்பதற்காக வெளி நாட்டுக்காரர்களைத் திட்டமிட்டு இங்கு அழைத்து வந்து பதவி வழங்கிய  தலைவர்கள் நாட்டில் இன்னும் அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இன்றுவரை அவர்களுக்கு எந்த நெருக்கடிளும் இல்லை.

அவர்கள் கோட்டும் சுட்டும் போட்ட பகல் கொள்ளையர்கள். இந்தக் கொள்ளையர் கூட்டத்தை மக்கள் இன்று இனம் கண்டு கொண்டாலும் அவர்களை அரசியல் அரங்கில் இருந்து துரத்துவதற்கு வழி தெரியாது விளிபிதுங்கி நிற்க்கின்றார்கள்.

பொய்யும் புரட்டும்தான் வாழ்க்கை என்று சமூகத்தில் சிலர் இருப்பது போல இந்தியாவையும் சர்வதேசத்தையும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டுதான் நாடு போய்க் கொண்டிருக்கின்றது. சிறையில் இருக்க வேண்டியவர்கள் அமைச்சரவையில் இருக்கின்ற நாட்டில் இதற்கு மேல் என்னதான் எதிர்பார்க்க முடியும் என்று ஜேவிபிக்காரர்கள் கேட்பதைத்தான் நாமும் இங்கு உச்சரிக்க வேண்டி இருக்கின்றது.

சில நோயாளிகள் தமது இறுதிக் கட்டத்தில் கோமா நிலைக்குப் போவது போல இப்போது நமது நாடு அந்தக் கட்டத்துக்கு வந்திருக்கின்றது. நாடு இருளில். எரிபொருள் தட்டுப்பாடு. வாகனங்கள் நடுத்தெருவில் நிறுத்தம்.

மீனவர்களுக்கு கடலுக்குப் போக முடியாத நிலை. விவசாயிகள் விளை நிலங்களுக்குப் போக முடியாத துர்ப்பாக்கியம். மக்கள் பட்டினியால் சாப்பாட்டுக்கு திண்டாட்டம். தலைவர்கள் டொலர் கேட்டு உலகம் பூராவும் யாசகம்.

ரஷ்யா-உக்ரைன் போர் துவங்கிய நிலையில் ஏழு வருடங்களுக்குப் பின் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலை ஏற்றம். இது நமக்கு மரத்தால் விழுந்தவனை மாடு மோதிய கதையாகத்தான் அமையும். நாடு நகர முடியாது ஸ்தம்பித நிலையில். எனவேதான் நாம் கோமாவுக்கப் போகும் தேசம் பற்றி எச்சரிக்கின்றோம்.

அந்த ஆபத்துக்கள் அப்படி இருக்க, இன்று ஒவ்வொரு காட்சிகளுக்குள்ளும் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று பார்ப்போம். ஆளும் தரப்பில் குடும்பத்துக்குள் பனிப்பேரொன்று நடந்து கொண்டிருக்கின்றது. அதில் தற்போதய ஜனாதிபதியும் முத்த சகோதரரும் தள்ளி நிற்க்கின்றார்கள்.

பிரதமர் எம்.ஆர். வாரிசுக்கும் பசிலுக்கும்தான் பலப்பரீட்சை. கிளர்ச்சி பண்ணிக் கொண்டிருக்கும் குட்டிக் காட்சிகள் பசில் கால்களைப் பிடித்து இழுக்கும் வேலையைப் பார்த்து வருகின்றது. நாமலை ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதியாகவோ  ஆளுமையுள்ள  தலைவராக வரக்கூடிய மனிதனாக சமைய மாட்டார்.

நாம் கடந்த கட்டுரைகளில் சொல்லி இருந்த படி பசில் உள்ளாட்சித் தேர்தலை வைத்து கள நிலவரத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருக்கின்றார். ஆனால் அவரது கட்சியில் உள்ள பல சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் இப்போது தேர்தலுக்குப் போவது ஆபத்து என்று எச்சரிக்கின்றார்கள்.

அதற்குக் காரணம் பட்டுப் போனால் தமது வருமானங்களை இழக்க வேண்டி வரும் என்ற அச்சம். ஆளும் மொட்டுக் கட்சிக்குள்ளே இப்போது அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் ஏதோ எதிர் எதிர் அணி  உறுப்பினர்கள் போல் சந்தியில் சண்டையிட்டு வருகின்றார்கள். கட்சியில் இருக்கும் அனேகமானவர்கள் தற்போது அடக்கி வாசிக்கத் துவங்கி இருக்கின்றார்கள்.

ஆளும் தரப்பிலுள்ள கூட்டுக் கட்சிகள் வருகின்ற இரண்டாம் திகதி ஏதோ மைத்திரி தலமையில் புது வித்தை காட்டி நாட்டை மீட்டெடுக்கப் போகின்றார்களாம். அதற்காக நாடு பூராவிலும் கூட்டமாம். முதல் கூட்டம்தான் மார்ச் இரண்டாம் திகதி. இதை எல்லாம் மக்கள் கண்டு கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் ஏதோ ஒரு தொகை கையாட்களை அழைத்து வந்து பெரிய இசு ஒன்றை அவர்கள் விடுவதாக கதைகளைச் சொல்லி அதனை ஊடகங்கள் வாயிலாக சந்தைப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அதற்கு மேல் ஏதுவுமே நடக்கப் போவதில்லை.

இதற்கிடையில் சந்திரிக்க, குமார் வெல்கம, புதிதாக ஜீவன் குமாரனதுங்க என்று ஒரு அணியும் இருப்பதாக காட்டிக் கொள்ளும் முயற்ச்சிகளும் நடக்கின்றன. வாசு, விமல், கம்மன்பில எங்கு போனாலும் ஒட்டுன்னி அரசியல் வேலைதான் பார்க்க முடியும். தனித்து ஏதும் அவர்களால் சாதிக்க முடியாது.

தனித்துவம் பேசி சமூக விமோசனம் பற்றி கதை விட்டுக் கொண்டிருந்த ஹக்கீமும் ரிஷாடும் தமது ஆட்களை ஆளும் தரப்புக்கு அனுப்பிவிட்டு இப்போது கிராமப் புறங்களில் சில வயதான முதலாளிகள் வங்குரோத்துக் கடைகளை திறந்து வைத்துக் கொண்டு குந்தி இருப்பது போலத்தான் அவர்கள் இருவரும் கட்சி நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

பிரதான எதிரணி சஜித்-சம்பிக்க என்று மல்லுக் கட்டிக் கொண்டிருக்கின்றது. சஜித்தைவிட சம்பிக்க ஆளுமை உள்ளவராக இருந்தாலும் அவரால் அந்தக் கட்சிக்குள் சஜித்தை மீறி ஏதும் பண்ண முடியாது. இருவரில் எவர் வந்தாலும் நம்பக் கூடிய குதிரைகளாக  இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.

ரணில்; ஏதோ சர்வதேசத்தில் எல்லோரையும் தனக்கு தெரியும் என்று ஆள் வைத்துப் பரப்பரை செய்து கொண்டிருக்கின்றார். நாம் வழக்கமாக சொல்வது போல் அவர் காட்சிக் கூடத்தில் வைக்க வேண்டிய ஒரு தலைவராகி விட்டார் அவ்வளவுதான். ஏதோ ஜேவிபி மட்டும் ஏதே சொய்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் வந்தால் வாக்குப் பெட்டியில் அவர்களுக்கு வாக்குகள் எந்தளவு இருக்கும் என்பது சந்தேகம்தான்.

தமிழ் தரப்பை பொருத்த வரை நிச்சயம் அவர்களால் ஈழத் தமிழர் எதிர்பார்க்கின்ற விமோசனம் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை நூறு சதவீதம் எப்படிப் போனாலும் ஒரு இருபத்தி ஐந்து சதவீதமாவது அவர்களால் அந்த சமூகத்துக்கு நடக்காது. வெறுமனே அதோ வருகின்றது இதோ வருகின்றது என்று சொல்லிக் கொண்டு அவர்கள் கூத்துக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.

இப்போது இருப்பதையாவது முதலில் காப்போம். ‘அது’ பற்றிப் பேசுவோம் என்று வேறு கதைக்கின்றார்கள். ஐயா இப்போது இருப்பது என்று சொல்கின்றீர்களே. அது என்ன? எங்கே இருக்கின்றது.? இருந்த மாகாணசபைகள் கூட நூலருந்த பட்டம் போல் காற்றில் போய்விட்டது.

பட்டம் விடுகின்ற சிறுசுகள் நூலருந்த பட்டத்தை தேடிப்பிடிக்க காடு மேடு எல்லாம் ஓடித்திரிவது போலதான் நீங்கள் அங்கேயும் இங்கேயும் என்று ஓடித் திரிகின்றீhகள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அதற்கு வழி பாருங்கள்.புதிய அனுகுமுறைகள் பற்றி சிந்தியுங்கள் என்றுதான் நாம் சொல்ல வேண்டும் போல் இருக்கின்றது. எப்படியோ நீங்கள் பெரியவர்கள் நாங்கள் சிறுசுகள். ஏதாவது நல்லது பண்ண யோசித்துப் பாருங்கள்.

மலை முகடுகள் பார்க்க அழகான கட்சிகளைக் கொடுத்தாலும், அங்கு இன்னும் விடியல் வரவில்லை. தருவதாகச் சொன்ன ஆயிரம் ரூபாய்க்கே ஆப்பு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அது கூடக் கிடைக்காத நேரத்தில் நாடு பட்டியைச் சந்திக்கும் நேரம் வந்தால், முதலில் மரண ஓலம் அங்கிருந்துதான் கேட்க வாய்ப்பு அதிகம் இருக்கின்றது என்று நாம் எச்சரிக்கை விடுக்கின்றோம்.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 27.02.2022

Previous Story

நீதிக்கும்-பொலிசுக்கும் லடாய்

Next Story

முஸ்லிம் புத்திஜீவிகள்-கூட்டமைப்பு பேச்சு!