கோட்டா வரவுக்கு பின்னய அரசியல்!

-நஜீப் பின் கபூர்-

“மக்கள் புதிதாக சிந்திக்காதவரை மீட்சி இல்லை”

முன்னாள் ஜனாதிபதி கோட்டா அரசியல் பிரவேசம். அவர் அண்ணன் மஹிந்த காலத்தில் இருந்த அதிகாரம் மிக்க பாதுகாப்புச் செயலாளர் பதவி. அவர் ஜனாதிபதியாக அதிகாரத்தை கைப்பற்றி பாணி. மிகக் குறுகிய காலத்துக்குள் அவரது வீழ்ச்சி. வெளி நாட்டுக்குத் தப்பியோடிய கதை.

எல்லாம் மிக அண்மைக் காலச் சம்பவங்களாக இருப்பததால் அரைத் மாவை திருப்பித் திருப்பி அரைப்பது போல நாம் இங்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டியதில்லை. அதனால் அதிகாரத்தில் இருந்த அவர் தப்பியோடிய பின்னர் அவரது மீள் வருகையும் அதனுடன் தொடர்பான கதைகளைப் பற்றித்தான் நாம் இங்கு பேசப் போகின்றோம்.

இது பற்றி பல்வேறு விதமான கதைகள் செய்திகள் ஊகங்கள் இன்று நாட்டில் பரவலாக இருந்து வருகின்றன. அவ்வாறான கதைகளில் பெரும்பாலானவை அரசியல் உள்நோக்கங்களை மையமாக வைத்து புனையப்படுபவையாக இருக்கின்றன என்றுதான் நாம் எதிர்பார்க்கின்றோம். எப்படியோ தப்பியோடியவர் மீண்டும் நாட்டுக்குள் வந்து விட்டார். இன்று அவருக்கு நமது பார்வையில் மூன்று தெரிவுகள் இருக்கின்றன.

முதலாவது செல்வாக்கு மிக்க பாதுகாப்புச் செயலாளராக இருந்து அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் போல் தனக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களைப் பலிவாங்குவது. இதில் அவர் மறைமுகமாக இருந்து காய் நகர்த்த முடியும். அப்போது அதற்கான பலியை தற்போதய ஜனாதிபதி ரணிலின் தலையில் கட்டிவிட முடியும்.

அடுத்து பரவலாக பேசப்படுவது போல அவர் ஒரு அரசியல் அதிகாரம் மிக்க பதிவிக்கு வருவது. அப்படியாக இருந்தால் அவர் பிரதமர் பதவியை பெற்று ஜனாதிபதியை விஞ்சிய அதிகாரங்களைச் செலுத்த முடியும். ரணில் என்பவர் ஊதிப் பெருப்பிக்கப்பட்டிருக்கின்ற ஒரு பலூன் என்றுதான் நாங்கள் உச்சரிக்க விரும்புகின்றோம். உலகத்துக்கு ரணிலைக் காட்டி மீண்டும் கோட்டா பிரதமராக இருந்து ஜனாதிபதி ஆதிக்கத்தையும் செலுத்த முடியும்.

இதன் மூலம் அவர் தனக்கு அரசியல் ரீதியில் இருக்கின்ற கணிசமான சவால்களை வெற்றி கொள்ள முடியும். சர்வதேச விசாரணைகள் மற்றும் தனக்கு எதிராக உள்நாட்டில் வரக்கூடிய வழக்கு வம்புகள் என்பவற்றில் இருந்து அவர் ஒருவகைப் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற ஆளும் தரப்பு பெரும்பான்மையை அவர் இது விடயத்தில் பாவித்துக் கொள்ள முடியும்.

ஆனால் கோட்டா அதிகாரம் மிக்க இந்தப் பிரதமர் பதவியை ஏற்பதில் மொட்டுக் காட்சிக்குள் நிறையவே முரண்பாடுகள் இருக்கின்றன. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸா மற்றும் அவரது பிள்ளைகளும் கோட்டா இந்தப் பதவிக்கு வருவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தற்போது அவரை சற்றுத் தள்ளிவைத்து மொட்டுக் கட்சியைப் புனரமைக்கின்ற முயற்ச்சியில்தான் மஹிந்தவும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஆர்வமாக இருக்கின்றார்கள் என்பதனை அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலையில் கோட்டா பிரதமர் என்று வந்தால் சிவ பூசையில் கரடி நுழைந்த கதையாகத்தான் அது அமைந்து விடும் என்பது கட்சிப் புனரமைப்பு வாதிகளின் கணிப்பாக இருக்கின்றது. எனவே கோட்டாவுக்குப் பிரதமர் பதவி என்பது சற்று சிக்கலான விவகாரமாகத்தான் மொட்டுக் கட்சிக்குள்ளே நிலமை இருக்கின்றது.

கோட்டாவுக்குள்ள அடுத்த அதாவது மூன்றாவது தெரிவு கடந்த காலங்களில் தன்னால் அரசியல் புரியாமையால் விடப்பட்ட பல தவறுகளுக்கு பொது மக்களிடத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்டு நாகரிகமாக அரசியல் இருந்து ஒதுங்கி வாழ்வது. அப்போது மக்களும் அவருக்கு ஒரு மன்னிப்பை வழங்கி மொட்டுக் கட்சிக்கு மீண்டும் மக்கள் விசுவாசத்தை பெரும் முயற்ச்சியாக அது அமையக் கூடும். ஆனால் நாம் சொல்கின்ற இந்த மூன்றாவது தெரிவை கோட்டா பின்பற்ற வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.

அவரது அரசியல் எப்போதும் தவறுகளைச் சரி என்று நினைத்து பிழையான பாதையில் போகும் பயணமாகவே இருந்து வந்திருக்கின்றது. இந்த மூன்று வழிகளைத் தவிர்த்து அவர் ரணிலுக்குத் தொடர்ந்தும் தொந்தரவு கொடுத்து தனது திட்டங்கள் மீது அழுத்தம் கொடுத்து சாதிக்கின்ற ஒரு தெரிவும் இருக்கின்றது. இதனை நான்காம் தெரிவு என்று எடுத்துக் கொண்டாலும் தவறு இருக்காது. அதனைத்தான் அவர் பின்பற்றவார் என்று நாம் நம்புகின்றோம்.

கோட்டா ஓய்வு பெற்ற ஒரு ஜனாதிபதிக்கு இருக்கின்ற அத்தனை உரிமைகளை அனுபவிக்க முடியும் என்று ஒரு வாதமும், அவர் அப்படி எதையும் அனுபவிக்க முடியாது இடைக் காலத்தில் அதிகாரத்தை விட்டு ஓடியவர். என்று சரத் என் சில்வா போன்ற சட்டவல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். ஆர். பிரேமதாச கொல்லப்பட்டார். அதன் பின்னர் இடைக்காலத்தில் அதாவது குறுகிய காலம் விஜேதுங்ஹ அதிகாரத்தில் இருந்து ஜனாதிபதி ஓய்வு சலுகைகள் பெற்றார் என்று வாதங்களும் இருக்கின்றன.

நாடாளுமன்றம்தான் இதுபற்றிய தீர்மானங்களை எடுக்கின்ற நிலை என்று வரும் போது அது கோட்டாவுக்கு சாமதாகமாகவே தற்போது இருக்கின்றது. எனவே பாதுகாப்புச் சொயலாளராக அவர் இருந்த போது அதனுடாக கிடைக்கின்ற சலுகைகள் தற்போது ஜனாதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்று கணக்கில் வருகின்ற பெருந் தொகை சலுகைகள் வரப்பிரசாதங்கள் அதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியவர் என்று வரும் போது இருக்கின்ற ஜனாதிபதியை விடவும் கோட்டாவுக்கு அதிக சலுகைகள்-பாதுகாப்புக் கிடைக்கவும் இடமிருக்கின்றது.

மொத்தத்தில் ஓடிப் போனாலும் தப்பிப் போனாலும் திரும்பி இருக்கின்ற கோட்டா இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய வசதி வாய்ப்புக்களை சலுகைகளைப் பெற்றுக் கொள்ள அதிக ஏதுநிலைகள் தற்போதய அரசியல் பின்னணியில் இருக்கின்றன என்றுதான் நாம் கருதுகின்றோம். எப்படியாக இருந்தாலும் தற்போதய நிலையில் நாட்டுக்கும் தற்போதய ஜனாதிபதிக்கும் கோட்டா பெரியதோர் தலைவலி என்றுதான் தெரிகின்றது.

தற்போதய ஜனாதிபதி ரணில் தீர்மானங்களை எடுக்கின்ற விடயத்தில் எந்தளவுக்கு பலயீனமாக இருக்கின்றார் அல்லது இருக்க வேண்டி வந்திருக்கின்றது என்பதற்கு நல்ல உதாரணம். சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் நியமனங்களின் போது பார்க்க முடிகின்றது. பதவி பெற்றவர்கள் அனைத்துப் பேரும் ராஜபக்ஸ விசுவாசிகள். கடந்த காலங்களில் அதாவது கோட்டா-மஹிந்த அரசில் பதவிகளில் இருந்தவர்கள்.

எனவே பட்டியல் மேலிடத்தில் இருந்து சிபார்சு செய்யபட்டிருக்கின்றது. ஜனாதிபதி ரணில் தனது கையாள் நியமணங்களை வழங்கி இருக்கின்றார் அவ்வளவுதான். இதனால்தான் கடந்த காலங்களில் ஊழல் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கும் பதவி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கின்றது.

பெருளாதார நெருக்கடியான இந்த நேரத்தில் எல்லா அமைச்சுக்களினதும் கூட்டுத் தொகை கிட்டத்தட்ட 70த் தண்டி நிற்க்கின்றது. இன்னும் பலருக்க பதவிகள் கொடுக்ப்பட இருக்கின்றன என்றும் தெரிகின்றது. சு.கட்சியில் இருந்து மைத்திரியின் விருப்புக்கு மாற்றமாகப் பலருக்குப் பதவிகள் கொடுக்கபட்டிருப்பதால் அவர் ரணில் மீது கடுப்பாக இருக்கின்றார்.

அரசுக்கு ஆதரவு கொடுத்த பல சிறுபான்மை உறுப்பினர்களுக்கு பதவிகள் கொடுக்கப்பட இருந்தும் ரணிலுக்கும் அந்தக் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நடந்த இரகசிய இணக்கப்பாடுகள் காரணமாக அவை தற்போதைக்குத் தவிர்க்கபட்டிருக்கின்றது என்றும் ஒரு தகவல் நமக்குக் கிடைத்திருக்கின்றது.

அனைத்துக் கட்சி அரசு தேசிய அரசு என்ற ரணிலின் எந்தத் திட்டமும் இந்த அரசில் பெரும்பான்மையாக இருக்கின்ற மொட்டுக் கட்சி முன்னால் ஒருபோதும் வெற்றி பெறமாட்டாது. இந்தப் புதிய அமைச்சரவையிலும் இதனைத்தான் அவதானிக்க முடிகின்றது. இதனால் ஏற்பட இருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளையோ சர்வதேசத்தின் நம்பிக்கையை இழப்பதைப்பற்றியோ இவர்கள் ஒருபோதும் கவலைப்படவும் மாட்டார்கள். குறிப்பாக ஐஎம்எப் வழங்கி இருக்கின்ற நிபந்தனைகளைக் கூட இவர்கள் மதிக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதற்கிடையில் இலங்கை அரசியலில் வித்தியாசமான ஒரு நிலை உருவாகி வருகின்றதோ என்றும் நமக்கு எண்ணத் தோன்றுகின்றது. மொட்டுக் கட்சி புனரமைப்பு. ஜனாதிபதி ரணில் தலைமையில் பெரும் எடுப்பில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சி மாநாடு. விமல், மற்றும் டலஸ் தரப்பினர் கட்சிகளின் அறிமுகம். சு.கட்சி மாநாடு மைத்திரிக்கு எதிரான சந்திரிக்காவின் குமார் வெல்கம தலைமையிலான புதிய சுதந்திரக் கட்சி அறிமுகம். என்பன தமது தரப்பை தேர்தலுக்குத் தயார்படுத்துகின்ற ஏற்பாடுகள் என்றும் ஒரு கதை.

இன்னும் ஆறுமாதங்களில் நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்று வருகின்றது என்று மொட்டுத் தரப்பிலே கதைகள் வருகின்றன. இந்தக் கட்சிகள் அனைத்தும் ராஜபக்ஸ மற்றும் சஜித் என்பேரின் மொத்த வியாபாரத்துக்கு முன்னே இலாபமீட்ட முனைகின்ற சில்லறை வியாபாரிகள் என்றுதான் புதுக் கட்சித் துவங்கி இருப்பவர்களை பார்க்க வேண்டி இருக்கின்றது.

இவர்கள் என்னதான் புதுக் கட்சி புதிய சக்தி என்று சொல்லிக் கொண்டாலும் ஒரு பொதுத் தேர்தல் என்று வருகின்ற போது இந்த மஹிந்த-சஜித் என்ற இரு அணிகளுடன் மொத்த வியாபாரிகளுடன் கூட்டணி என்றுதான் தேர்தலைச் சந்திக்கம் என்று நாம் முன் கூட்டியே சொல்லி வைக்க விரும்புகின்றோம். ஆனால் ஜேவிபி வழக்கம் போல் தன் வழி தனிவழி என்றுதான் தேர்தலைச் சந்திக்கும். மொத்தமாகப் பார்க்கின்ற போது புதுசு என்று வரும் அனைத்தும் பழசாகத்தான் இருக்கும். மக்கள் புதிதாகச் சிந்திக்காத வரையிலும் இது தான் தேசிய அரசியலில் காட்சிகளாக இருக்கும்.

அரசுக்கு எதிரான போராட்டமும் மழுங்கிப் போதால் மக்கள் அவலங்களுக்கும் விரைவில் விடிவு கிடையாது. விண்ணைத் தொடுகின்ற விலையேற்றமும் அதனைத் துறத்தும் குடிகளும் முடியாதோர் பட்டிணிச்சாவில் செத்து மடிய வேண்டியதுதான் என்றுதன் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதனை நாம் சொல்லவில்லை மத்திய வங்கி ஆளுநர் அடுத்து வருகின்ற பொருளாதார நெருக்கடி மிகவும் கொடூரமாக இருக்கும் முன்னய போராட்டங்களைப் போல் அல்லாது அது இரத்த ஆறு ஓடுகின்ற ஒரு போராட்டமாகத்தான் இருக்கும். அதனை எவரும் தடுக்க முடியாது என்று அவர் இந்த வார்த்தைகளிலே நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிலே எச்சரித்திருந்தார்.

இதற்கிடையில் இந்த மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான கதைகளும் அரசியல் வாட்டாரங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவரைத் தூக்கிவிட்டுப் புதியவர் ஒருவரை நியமனம் செய்யும் முயற்ச்சிகள் தொடர்ந்தும் திறைமறைவில் நடந்து வருகின்றன. புதிய வட் வரி அட்டகாசம் பற்றி சற்றுப் பார்ப்போம். எட்டு வீதம் என்றிருந்தது தற்போது 15 என்று உயர்ந்திருக்கின்றது. அது பொருட்களை இறக்குமதி செய்யும் போதும் பின்னர் அதனை சில்லறையாக சந்தையில் விற்பனை செய்யும் போதும் இந்த வாரி என்றால் நினைத்துப்பாருங்கள் பயங்கரத்தை. இவை அனைத்தும் பொது மக்களின் தலைகளோடுதான் போகப் போகின்றது.

ஐஎம்எப் கடனுதவி இன்னும் கேள்விக்குறியாக இருப்பது ஒரு பாக்கம். அடுத்தது இது முறையாக வந்தாலும் யானைப்பசிக்கு சோளப் பொறி என்பதுதான். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதய பொருளாதார நெருக்கடிக்கு இது தீர்வே அல்ல. அதனை அரசு எப்படிக் கையாளப் போகின்றது என்பதும், நமக்கு உடனடியாகத் தேவைப்படுகின்ற அன்னியச் செலவாணிக்கு அரசு என்ன பரிகாரம் காணப் போகின்றது என்பது பற்றி எவரிடமும் எந்தப் தெளிவான பதிலும் இல்லை.

இதற்கிடையில் இன்னும் சில மாதங்களில் வர இருக்கின்ற 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் போது புதிய ஒரு பிரதமார்தான் அதிகாரத்தில் இருப்பார் என்று மொட்டுக் கட்சியினர் சொல்லி வருகின்றார்கள். மீண்டும் மஹிந்தாவை அந்தப் பதவிக்கு கொண்டு வரும் ஒரு திட்டமும் அவர்கள் மத்தியில் தற்போது பேசு பொருளாக இருக்கின்றது.

ஐக்கிய தேசிய கட்சி மாநாட்டில் வளங்களே இல்லாத சிங்கப்பூரும் பாலைவனமாக இருக்கின்ற டுபாயும் செல்வம் கொளிக்கின்ற நாடுகளாக மாற முடியுமாக இருந்தால் இவ்வளவு வளங்களை குவித்து வைத்திருக்கின்ற நாம் ஏன் அந்த நிலையை அடைய முடியாது என்று கேள்வி எழுப்பி இருந்தார் ஜனாதிபதி ரணில். வார்த்தைகள் அழகாகத் தான் இருக்கின்றது. ஆனால் ஒட்டுமொத்த நாட்டையும் கொள்ளைக் கூட்டம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற போது ஐயா உங்கள் போதனைகளில் என்னதான் எடுத்துக் கொள்ள இருக்கின்றது.?

நன்றி: 11.09.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

முற்பகல் பதவியேற்ற அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Next Story

மீண்டும் ரிஸ்வி வைத்தியசாலை அபிவிருத்தி குழுவுக்கு நியமனம்!