கோட்டாவுக்கு 8 அடுக்கு பாதுகாப்பு !

தாய்லாந்தில் வீட்டு சிறை போல அடைபட்டிருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாளை நாடு திரும்ப உள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இலங்கையின் பொருளாதார பேரழிவை சீரமைக்க அரசாங்கத்தால் முடியாமல் போனதால் மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இந்த புரட்சியால் ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சே, இலங்கையைவிட்டே துரத்தி அடிக்கப்பட்டார்.

இலங்கையை விட்டு மனைவியுடன் வெளியேறிய கோத்தபாய ராஜபக்சே, மாலத்தீவுக்கு ஓடினார். அங்கிருந்து அடுத்ததாக சிங்கப்பூர் சென்று தஞ்சமடைந்தார். தற்போது தாய்லாந்தில் இருக்கிறார் கோத்தபாய. அந்நாட்டில் சுதந்திரமாக நடமாட கோத்தபாயவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நாடு திரும்ப முடிவு

தாய்லாந்தில் வீட்டுச் சிறையில் இருப்பது போல அடைபட்டிருக்கிறார் கோத்தபாய. அமெரிக்காவுக்கான குடியுரிமையை மீண்டும் பெற கோத்தபாய ராஜபக்சே மேற்கொண்ட முயற்சிகளும் கை கூடவில்லை. இதனால் இலங்கைக்கே வேறுவழியே இல்லாமல் திரும்புவது என கோத்தபாய முடிவு செய்திருந்தார்.

8 அடுக்கு பாதுகாப்பு

இது தொடர்பாக இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுடன் தொலைபேசியில் கோத்தபாய ராஜபக்சே ஆலோசனை நடத்தினார். இதனடிப்படையில் கோத்தபாய, இலங்கைக்கு திரும்பினால் அவருக்கு அதி உயர் பாதுகாப்பு வழங்க ரணில் முடிவு செய்தார். கோத்தபாயவின் வீட்டுக்கு 8 அடுக்கு பாதுகாப்பு தருவது என்பதும் ரணிலின் வியூகம்.

நாளை நாடு திரும்பும் கோத்தபாய

இதனையடுத்து கடந்த மாதம் இறுதியில் கோத்தபாய ராஜபக்சே, இலங்கை திரும்புவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் கோத்தபாயவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கோத்தபாய ராஜபக்சே நாளை இலங்கை திரும்ப உள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

பிரதமராகும் கோத்தபாய?

இலங்கை திரும்பும் கோத்தபாய ராஜபக்சே, அரசியலுக்கும் இறங்குவார் என கூறப்படுகிறது. இலங்கை நாடாளுமன்ற நியமன எம்.பி.யாக கோத்தபாய பதவியைப் பெறுவார். பின்னர் அவரை பிரதமராக்கவும் ரணில் விக்கிரமசிங்கே முயற்சிப்பார் எனவும் கூறப்படுகிறது.

இதற்காக பெண் எம்.பி. ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளார் என்கின்றன கொழும்பு செய்திகள். இதனிடையே இலங்கை திரும்பும் கோத்தபாய ராஜபக்சே, ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கான அனைத்து சலுகைகளையும் அனுபவிப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Previous Story

சினிமா: இந்த வாரம் என்ன படங்கள்?

Next Story

துண்டு விழும் தொகையை ஈடுசெய்ய கொள்ளையிட்ட பணத்தை கொண்டு வர வேண்டும்:ஓமல்பே சோபித தேரர்