-நஜீப் பின் கபூர்-
05.10.2025 நன்றி ஞாயிறு தினக்குரல்
*****
“இலட்சாதிபதிகள் என்ற வார்த்தை
சமாகாலத்தில் எந்தளவுக்கு ஏற்புடையது.?
*****
இடதுசாரிகள் பிச்சைக்காரர்களாகவும்
வலதுசாரிகள் செல்வந்தர்களாகவும்
வாழ வேண்டும் என்பதும் கட்டாயமில்லை.”
*****
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நமது நாட்டில் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் செல்வங்கள் பற்றி வெளிவந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. அதே போன்று கடந்த தேர்தல் காலங்களில் நமது நாட்டில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் சொத்து மற்றும் காசுக்கையிருப்புப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன.
அப்போதெல்லாம் சிவப்புக் கட்சி அல்லது ஜேவிபி.தான் நமது நாட்டில் மிகப் பெரிய பணப்பலம் உள்ள கட்சி என்று தெரிய வந்தன. ஜேவிபி. தனது கணக்கு வழக்குகளை துல்லியமாக பதிவில் வைத்திருப்பதால் அவர்களிடத்தில் கோடிக்கணக்கான பணம் இருப்பது தெரிய வந்தது.
ஜேவிபி.க்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு கவர்ச்சிகரமான செயலகம் பெலவத்தையில் அமைந்திருக்கின்றது. அதனை நிர்மாணிக்கின்ற போது ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் தமது உடல் உழைப்பு மற்றும் பணத்தை அதற்கு செலவு செய்திருக்கின்றார்கள் அதனை அவர்கள் ஒரு புனிதப்பணி என்றுதான் கருதுகின்றார்கள்.
அப்படியான ஒரு கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி போய்க் கொண்டிருப்பதால் அந்தக் கட்சி வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கான காசு கையிருப்பில் இருக்கின்றது. அதனால் அதுதான் நாட்டில் இருக்கின்ற பணக்காரக் கட்சி என்று இன்று வளர்ந்து நிற்கின்றது.

அதே நேரம் இந்த நாட்டை சில தசாப்தங்களாக ஆட்சி செய்த கட்சிகளுக்கு இதுவரை சொந்தக்காரியாலயம் கூட கிடையாது. அதே நேரம் பல கட்சிகள் தனது தண்ணீர் மின் கட்டணங்களைக் கூட கட்ட முடியாதிருக்கின்றது.
அதனால்தான் கட்சி செயலகத்தை நான் எனது சொந்தப் பணத்தில் இருந்து நடாத்தி வந்திருக்கின்றேன் என்று தயாகமகே போன்றவர்கள் பல முறை கூற நாம் கேட்டு வந்திருக்கின்றோம். எனவே ரணில் நல்ல நிருவாகி தலைவர் என்று இருந்தால் கட்சி செயலகத்துக்கு இந்த நிலை வந்திருக்குமா என்று கேள்வி எழுப்ப வேண்டி இருக்கின்றது.
ஆனால் தேர்தல்கள் செலவுகளைப் பார்க்கின்ற போது ஒரு ஜனாதிபதி வேட்பாளர் பொதுத் தேர்தல் வேட்பாளர் என்போர் எத்தனை கோடிகளை செலவு செய்கின்றார் என்பதனை ஒவ்வொரு குடியானவனும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதான் வருகின்றான்.
இதற்கான பணம் எங்கிருந்து வருகின்றது என்று பார்த்தால் பாதாள உலகத்தார் மற்றும் போதை வியாபாரிகளின் பணம் அரச சொத்துக்களை கொள்ளையடித்த காசு என்று இதில் பல ஆயிரம் கோடிகள் தேர்தல்களில் செலவாகி வருவது தெரிந்ததே.
இது தொடர்பான கணக்கு வழக்குகள் சொல்லப்படுவது போல புனிதமானதோ துல்லியமானதோ அல்ல அதில் வஞ்சகமும் ஏமாற்றுக்களும் போலிக் கணக்கு வழக்குகள் மற்றும் காட்டாத கணக்கு என்று நிறையவே அடங்குகின்றன.
பொதுவாக பார்க்கின்றபோது இடதுசாரிகள் அல்லது சமவுடமைவாதிகளின் அரசியல் பிச்சைக்காரத்தனமாகத்தான் இருக்க வேண்டும்.- இருக்கும் என்ற ஒரு கணக்கும் பார்வையும் நம்மிடத்தில் இருக்கின்றன. ஆனால் நாம் இங்கு தருகின்ற புள்ளிவிபரங்களைப் பார்க்கின்ற போது யதார்த்தத்தில் அது எந்த நிலையில் இருக்கின்றது என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள்.
உலக அரசியல் தலைவர்களின் மிகவும் செல்வந்தர் யார் என்று தேடிப்பார்த்தால் முதலிடத்தில் இருப்பது ரஸ்யா அதிபர் புட்டின். 90 பில்லியன் அ.டொலர்கள் இரண்டாம் இடத்தில் இருப்பது புருணை சுல்தான் 30 பில்லியன் அ.டொலர்கள். மூன்றாம் இடம் சவுதி அரச குடும்பம். 20 பில்லியன் அ.டொலர்கள். நான்காம் இடம் வடகொரிய அதிபர் 5பில்லியன் அ.டொலர்கள் என்று அந்தப் பட்டியல் அமைகின்றது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது நமது நாணயத்தில் இன்றைய மதிப்பு 3024000000.00 ரூபா என்று அமைகின்றது. எனவே இந்தத் தொகையை நீங்களே பெருக்கிப்பார்த்துக் கொள்ளுங்கள். எனவே முதலாளித்துவ-வலுதுசாரி நாட்டுத் தலைவர்கள்தான் உலகில் பெரும் கோடிஸ்வரர்களாக இருப்பார்கள் என்பது பொதுவான எண்ணக்கரு.

நமது இந்தக்கணக்கு-புள்ளிவிபரங்கள் காரணமாக ஒரு குழப்பத்தை தோற்றுவிப்பதாகவும் சிலர் கருதக் கூடும். பொதுவாக காசுக் கணக்குகள் இரகசியமாக அமைகின்றன-வைக்கப்படுவதுதான் சம்பிரதாயம். எனவே எந்தக் கணக்கையும் நம்புவது சிரமம் என்பதனையும் நாம் இங்கு சொல்லி வைக்கின்றோம்.

இப்போது நமது நாட்டில் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வருமானம் கணக்குச் சுட்டிக் காட்ட வேண்டும் என்று சட்டம் இருக்கின்றது. அதனால் குளிக்க இழுத்துச் செல்லப்படுகின்ற நாய்களைப்போல அரசியல்வாதிகள் தமது கணக்குகளை இன்று காட்டி வருகின்றனர். பலர் தமக்குள்ள சொத்துக்கள் செல்வங்களை எப்படிக் காட்டிக் கொள்வது என்ற நெருக்கடியில் இருக்கின்றனர்.
அண்மையில் தெற்கில் கைதாகி இருக்கின்ற உள்ளாட்சி உறுப்பினர்கள் தமக்கு நெருக்கமான சகோதரர்கள் உறவுகள் மட்டுமல்ல பிரதேச சபையில் கடமையாற்றுகின்ற சிற்றூழியர்களின் பேரில் கோடிக்கணக்கான பணத்தை வைப்புத் செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றனர்.
அந்தளவுக்கு வைத்திருக்க முடியாத பணம் அரசியல் வாதிகள் கைகளில் இருக்கின்றது என்றால் இந்த அரசியல்வாதிகளின் கறுப்புப் பணம் எந்தளவாக இருக்கமுடியும்.? இதற்குப் புறம்பகாக சர்வதேச வங்கிகளில் டொலரில் வெளிநாடுகளில் பணத்தை வைப்புச் செய்து வைத்திருக்கின்ற நமது அரசியல்வாதிகள் பற்றியும் அடிக்கடித் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

நமது அரசியலில் கறுப்புப் பணம் தாராளமாக பவிக்கப்பட்டு வந்திருப்பதைப் பரவலாகப் பார்க்க முடியும். அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வருமானங்கள் தொடர்ப்பில் ஜேவிபி. அல்லது என்பிபி. யில் பல தலைவர்கள் கோடிஸ்வரர்களாக இருந்தது தெரிய வந்திருக்கின்றது. இதில் வசந்த சமரசிங்ஹ பற்றிய கதைதான் பெரிய இசுவாக எடுத்துக் கொள்ளப்பட்ந்தது. அது அவரே தானாக சமர்ப்பித்த கணக்கு வழக்குகள்.
மேலும் ஜேவிபி.யில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் மத்திய வகுப்பைச் சேர்ந்த படித்த ஒரு அணி அங்கு இருக்கின்றது. எனவே அவர்களுக்கு பெற்றார் வழியில் கிடைத்த வருமானங்களும் இருக்கும் அப்படியான ஒருவர்தான் லால்காந்த அதே போன்ற விஜித ஹேரத்தும் ஒரு கோடிஸ்வரர்.
அவரது மனைவி ஒரு வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் நமது தேடலில் கிடைத்த சில தகவல்கள். இது போல ஜே.வி.பி-என்பியில் டசன் கணக்கான அல்லது நுற்றுக்கணக்கான கோடிஸ்வரர்கள் இருக்கின்றார்கள் என்பது நமது கணக்கு.
எனவே ஜேவிபி.-என்பிபி. அரசு ஆட்கள் என்றால் அவர்கள் பிச்சைக்காரர்கள் யாசகர்கள் போலத்தான் செயல்பட வேண்டும். பார்ப்பதற்கு அந்த்தத் தோற்றத்தில் இருந்து அவர்கள் வெளியேவரக் கூடாது என்று எதிர்பார்ப்பது எந்தளவுக்கு அறிவுபூர்மானதாக அமையுமுடியும் என்று கேட்கத் தோன்றுகின்றது.
முன்பு பேச்சு வழக்கில் கிராமங்களில் வட்டாரங்களில் இலட்சாதிபதிகள் என்ற ஒரு வார்த்தை இருந்தது. இன்று அப்படியான வார்த்தைகள் செயல் இழந்துவிட்டது என்பதுதான் எமது வாதம். நாம் கூறுகின்ற இந்த கதையை அல்லது யதார்த்தத்தை ஒரு முறை நன்றாக சிந்தித்துப்பாருங்கள். இன்று நாம் வாழ்கின்ற பிரதேசத்தில் உள்ள அனைவரும்போல இலட்சாதிபதிகள் என்பது எனது வாதம்.
இன்று ஒருவரின் வருமானம் பற்றிய கணிப்பீடு தகவல்களைச் சேகரிக்கும் போது அந்த மனிதனின் வருமானம். அசையும் அசையாத சொத்துக்கள் மனைவி வழியாக வந்தது என்று கணக்குச் சொல்ல வேண்டி அல்லது காட்ட வேண்டி இருக்கின்றது. அப்படிப்பார்க்கின்ற போது நாட்டில் இருக்கின்றவர்கள் அனைவரும் போல இலட்சாதிபதிகள் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கின்றது.
நமது நாட்டில் பெரும்பாலானவர்கள் சொந்த வீட்டில் நில புலங்குளுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது நமது அவதானம். நமது நாட்டில் ஒரு பேர்ச் காணித்துண்டு ஒன்று குறிப்பாக (பதினாறு தர பதினாறு அடி என்பது ஏறக்குறைய ஒரு பேர்ச்) இது நாட்டில் கோடிக்கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் என்றுதான் இன்று விலை போகின்றது. அத்துடன் அதில் ஒரு வீடு மற்றும் இன்னும் வருமானம் வருகின்ற வழிகள் அத்துடன் அதற்கு ஒரு பணப் பெறுமானமும் இருக்கும்.
அப்படிப்பார்க்கின்ற போது நாம் மேற்சொன்ன பெரும்மபாலானவர்கள் இலட்சாதிபதிகள் என்றுதான் கணக்கு வரும். எனவே இது போன்ற இலட்சாதிபதி என்றவார்த்தைகள் தற்காலத்துக்குப் பொருந்தாது. அவை அகாராதியில் இருந்து நீக்கப்பட வேண்டிய வார்த்தைகள். நாம் சொல்கின்ற இந்தக் கணக்குகளை உங்கள் சுற்றுவட்டாரங்கில் ஒருமுறை மதிப்பீடு செய்து பார்த்தால் இந்த இலட்சாதிபதி என்றால் என்ன என்று தெரியவரும்.
அப்படித்தான் இந்த ஆளும் என்பிபி. அரசாங்கத்தில் உள்ள வருமானங்கள் பற்றிய கணக்குகளும் அமைகின்றன என்பது நமது வாதம். மேலும் இந்த நாட்டில் இது வரை அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் அவர்களின் எடுபிடிகள் எப்படித்தான் இன்று இந்தளவுக்கு செல்வந்தர்களானார்கள் சொத்துச் சேகரித்தார்கள் என்பது தொடர்பில் பலத்த சந்தேகங்களும் கதைகளும் சொல்லப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஒரு பிரதேச சபை உறுப்பினராக இருந்த ஒருவர் சபை முதல்வராகி நாடாளுமன்ற உறுப்பினராக இன்று அமைச்சர் என்றும் அதற்கு மேலும் பதவிகளை அடைந்த போது அந்த நபர் எப்படி இந்தளவுக்கு காசு சொத்து சேர்த்தார்கள் என்றுபார்த்தால் அதற்கு அவர்களினால் தெளிவான பதில் கொடுக்க முடியாதிருக்கின்றது. இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகள் அவர்களுடன் வியாபாரம் செய்தவர்கள் தொழில் பார்த்தவர்கள் என்று பல்லாயிரக்கணக்கான கோடிஸ்வரர்கள் நமது நாட்டில் குறுகிய காலத்தில் முளைத்திருக்கின்றார்கள்.
இது எப்படி நடந்தது என்பதற்கு ஆதாரங்கள்தான் இப்போது ராஜாக்களின் கோட்டைகளில் கண்டறியப்பட்டு வருகின்றன. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்து அதற்கு அரசியல் பழிவாங்கள் என்று நாமம் சூட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
பொதுவாக பாதாள உலகத்தாரும் போதை வியாபாரிகள் செயல்பாடுகள் கைதுகள் தொடர்பாக நாம் கருத்துக்களைச் சொல்லி விளிப்படைச் செய்வதைவிட பொதுமக்களே நீங்களே இதன் பின்னணியை யதார்த்தத்தை ஆய்வுசெய்து பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இதனைக் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் ஆய்வாளர்களாக அல்லது உளவுத்துறை அதிகாரிகளாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஒரு குடிமகன் என்ற நிலைப்பாட்டில் இருந்து நீங்கள் சிந்திக்க வேண்டும். அதுதான் நீங்கள் உங்கள் சந்ததியினருக்கு கொடுக்கின்ற பாதுகாப்பாக அல்லது பாசமாக இருக்க முடியும்.
இப்போது அரசியல் ரீதியில் யார் பிச்சைக்காரர் யார் செல்வந்தர்கள் என்று சற்றுப்பார்ப்போம். அரசாங்க சொத்துக்களைக் கொள்ளையடித்து தனது கணக்கில் வரவு வைத்துக் கொண்டவர்கள். அரசியல் பலத்தை வைத்து இயற்கைவளங்களை கொள்ளையாடி சொத்துச்சேகரித்தவர்கள். கப்பம் வாங்கியவர்கள்.
கோடிக்கணக்கில் போலி மருந்துகளை நோயாளிகளுக்குக் கொடுத்து அவர்களைக் கொன்று குவித்து அதன் மூலம் சொத்து சேர்த்து இன்று கூண்டோடு கூண்டில் இருப்பவர்கள் கௌரவமான மனிதர்களா.?
அரச பணத்தில் இருந்து வெளிநாட்டு வைத்தியசாலைகளில் வைத்தியம் பார்த்த அரசியல்வாதிகள். தனது மனைவியின் தனிப்பட்ட பட்டமளிப்புக்கு அரச பணத்தை தப்பாக கொள்ளையடித்தவர்கள் எப்படி கனவான் அரசியல்வாதிகளாக முடியும். அப்பன் அவர் உடன் பிறப்புக்கள் புதல்வர்கள் வாழ்நாளிலே ஏதாவது ஒரு தொழில் பார்க்காமல் எப்படி இந்தளவுக்கு சொத்து சேர்த்திருக்க முடியும்.
ஒட்டு வாகனங்களை ஆயிரக்கணக்கில் இறக்குமதி செய்து அதன் மூலம் கோடிக்கணக்கில் சட்ட விரோத பணம் சம்பாதிக்க அரசியல்வாதிகள் அரச காணிளை நம்பமுடியாத விலையில் தமது பெயர்களிலும் உறவுகள் தெரிந்தவர்களின் பெயர்களிலும் எழுதிவைத்துக் கொண்டிருந்தவர்கள் எப்படி கௌரவமான அரசியல்வாதிகளாக இருக்க முடியும்.
என்பது பற்றி தேடிப்பார்ப்பது அரசாங்கத்தினது கடமை என்பதற்கு அப்பால் இதில் குடிமக்களுக்கும் கனிசமான பங்கு ஒன்றும் இருக்கின்றது. இது அவர்கள் தமது சந்ததியினர் பேரில் மேற்கொள்ளும் புனிதக் கடமையும் பொறுப்புமாகும். இதுபோன்ற தேசத்துரோக நடடிவக்கைகளைக் கண்டும் காணாமலும் நடந்து கொள்பவர்களும் சமூக ரீதியில் துரோகிகள்-குற்றவாளிகளே. என்பது எமது கணிப்பாக இருக்கின்றது. இது பற்றிய மாற்றுக் கருத்துக்களுக்கும் திறந்த விவாதத்துக்கும் வழியைத் திறந்து விடுகின்றோம்.





