கூட்டு பாலியல் வல்லுறவு கைதிகள் விடுவிக்கப்பட்டனர்!

இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடிய நாளில், குஜராத்தில் பில்கிஸ் பானோவை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, வேறு 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் மன்னிப்பு வழங்கப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

பில்கிஸ் பானோ

2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோவை கூட்டுப் பலாத்காரம் செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந்த 11 பேரும் கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

கைதிகளின் தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக, ஜூன் மாதம் எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. அதில் ஆயுள் தண்டனை மற்றும் பலாத்கார வழக்குகளில் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் மன்னிக்கப்படக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அவர்களின் தண்டனையை ரத்து செய்யும் முடிவை குஜராத் அரசு எடுத்துள்ளது.

இந்திய சுதந்திரத்தின் 76வது ஆண்டு சுதந்திர அமிரித் மஹோத்சவின் போது, சில வகை கைதிகளின் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் ஜூன் 10ம் தேதி எல்லா மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியிருந்தது. அவை மூன்று கட்டங்களாக: 15 ஆகஸ்ட் 2022 , 26 ஜனவரி 2023 மற்றும் மூன்றாம் கட்டமாக 15 ஆகஸ்ட் 2023 அன்றும் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதனுடன் எந்தெந்த வகை கைதிகளின் தண்டனையை மன்னிக்க முடியாது என்றும் கூறப்பட்டது. இதில் கற்பழிப்பு குற்றவாளிகள் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் அடங்குவர்.

ஆனால் விஷயம் இத்துடன் முடியவில்லை.

பில்கிஸ் பானோ

குஜராத்தின் 2014 மன்னிப்புக் கொள்கை

2014, ஜனவரி 23 ஆம் தேதி குஜராத் உள்துறை அமைச்சகம், மன்னிப்பு மற்றும் முன்கூட்டிய விடுதலைக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளை வெளியிட்டது. அதில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களின் கும்பல் கொலை மற்றும் கற்பழிப்பு அல்லது கூட்டுப் பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம், 1946இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதிகளின் தண்டனையை மன்னிக்கவோ அல்லது முன்கூட்டியே விடுதலை செய்யவோ முடியாது என்றும் இந்தக் கொள்கை கூறுகிறது.

1946-ம் ஆண்டு டெல்லி சிறப்புக் காவல் ஸ்தாபனச் சட்டத்தின் கீழ், இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மத்தியப் புலனாய்வு கழகம் சிபிஐ க்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பில்கிஸ் பானோ வழக்கை சிபிஐ விசாரித்து 11 பேரை குற்றவாளிகள் என்று நிரூபித்தது.குஜராதி

பில்கிஸ் பானோ தனது குடும்பத்துடன்

1992 கொள்கையின் கீழ் வழங்கப்பட்ட மன்னிப்பு

இது குறித்து குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலர் (உள்துறை) ராஜ்குமாரிடம் பிபிசி பேசியது.

“இது முன்கூட்டிய விடுதலை விவகாரம் அல்ல. இதில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 14 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் யார் வேண்டுமானாலும் மன்னிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். 2014 இன் கொள்கையின்படி அவர்கள் மன்னிப்பு பெற முடியாது. எனவே இந்த விவகாரம் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நாளில் நடைமுறையில் இருந்த கொள்கையின் கீழ் நீங்கள் முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.”

“தண்டனை வழங்கப்பட்டபோது,1992 ஆம் ஆண்டின் கொள்கை அமலில் இருந்தது,” என்று ராஜ்குமார் மேலும் கூறினார்.

“அந்தக் கொள்கையில் எந்த வகைப்பாடும் இல்லை. தண்டனையின் பிரிவுகள் தொடர்பான வகைப்பாடும் இல்லை. 14 ஆண்டுகள் நிறைவடைந்தால் இதுபோன்ற விவகாரங்களை பரிசீலிக்க முடியும் என்று மட்டுமே அந்தக்கொள்கை கூறுகிறது. 2014 ஆம் ஆண்டின் கொள்கை இந்த வழக்கிற்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் கண்டறிந்துள்ளது,”என்றார் அவர்.

“இந்த விவகாரம் சிபிஐயால் விசாரிக்கப்பட்டதால், இந்த வழக்கில் எந்த அரசு மன்னிப்பு அளிக்கமுடியும், அதாவது மத்திய அரசா மாநில அரசா என்று குஜராத் அரசு இந்திய அரசிடம் ஆலோசனை நடத்தியது,” என்று ராஜ் குமார் மேலும் கூறினார்.

“இந்த வழக்கில் மன்னிப்பு விஷயம் தொடர்பாக மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது,” என்றார் அவர்.

பில்கிஸ் பானோ

2014 ஆம் ஆண்டின் மன்னிப்புக் கொள்கையை புறந்தள்ள முடியுமா?

குஜராத் மாநிலஅரசு 2014-ம் ஆண்டு கொள்கையை புறந்தள்ளி, 1992-ம் ஆண்டின் கொள்கையை அடிப்படையாக வைத்து குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியது சரியா?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள, வழக்கறிஞரான மெஹ்மூத் பிராச்சாவிடம் பேசினோம்.அவர் டெல்லி கலவரம் போன்ற முக்கியமான வழக்குகளுடன் தொடர்புடையவர்.

கூட்டுப்பாலியல் வன்புணர்வை உதாரணமாகக் கூறிய அவர், முன்பு இதற்கான தண்டனை மரணதண்டனையாக இருக்கவில்லை.ஆகவே யாரேனும் கூட்டுப் பலாத்காரம் செய்து பின்னர் கூட்டுப் பலாத்காரத்தின் வரையறையும் தண்டனையும் மாற்றப்பட்டால் அது முந்தைய விவகாரங்களுக்குப்பொருந்தாது என்றார். எளிமையாகச் சொன்னால், இப்போது சட்டம் மாறிவிட்டது என்பதால் முன்பு குற்றம் இழைத்த கூட்டு பாலியல் வன்புணர்வு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க முடியாது. குற்றம் செய்யும் போது இருந்த சட்டத்தின் படிதான் தண்டனை வழங்கப்படும்.

ஆனால் மன்னிப்பு விஷயத்தில் அப்படி இல்லை என்கிறார் பிராச்சா.

“எந்த காரணத்திற்காகவும் அளிக்கப்படும் மன்னிப்பு என்பது ஒரு செயல்முறை. நீங்கள் செயல்முறையை மாற்றலாம் மற்றும் அது பின்னோக்கி விளைவை ஏற்படுத்தலாம். எனவே குற்ற மன்னிப்பு ,செயல்முறையின் ஒரு அம்சமாகும். குற்றத்திற்கான தண்டனையை அது அடிப்படையில் மாற்றாது.” என்று மெஹ்மூத் பிராச்சா கூறுகிறார்.

ஒரு குறிப்பிட்ட காலம் தண்டனையை முடித்த பின்னரே மன்னிப்பு தொடர்பான கேள்வி எழும். இந்த விஷயத்தில் எந்த சட்ட நிபந்தனையும் மீறப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

“மன்னிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியிருந்தால்மட்டுமே மன்னிப்பு குறித்த கேள்வி எழுகிறது. அன்று அமலில் உள்ள மன்னிப்புச் சட்டத்தின் அடிப்படையில், மன்னிப்புக்கான விண்ணப்பம் முடிவு செய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

பில்கிஸ் பானோ வழக்கின் குற்றவாளிகளின் மன்னிப்பு குறித்துப்பேசிய பிராச்சா,”2014க்குப் பிறகு மன்னிப்பு கோரி விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருந்தால், 2014ன் கொள்கையே வழிகாட்டும் கொள்கையாக இருந்திருக்க வேண்டும்,”என்றார்.

பில்கிஸ் பானோ

விவகாரம் என்ன?

2002 குஜராத் கலவரத்தின் போது, அகமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானோ ஒரு கும்பலால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார். அவரது மூன்று வயது மகள் சலேஹாவும் கொடூரமாக கொல்லப்பட்டார்.

2008 ஜனவரி 21 ஆம் தேதி மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பில்கிஸ் பானோவை கூட்டுப் பலாத்காரம் செய்து, ஏழு குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் இந்த தண்டனையை பம்பாய் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

குற்றவாளிகளில் ஒருவரான ராதே ஷ்யாம் ஷா, 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்தபிறகு நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். குற்ற மன்னிப்பு அளிப்பது பற்றி ஆராயுமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து குஜராத் அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் தண்டனையை ரத்து செய்ய ஒருமனதாக முடிவு செய்து அவர்களை விடுதலை செய்யுமாறு இந்தக்கமிட்டி பரிந்துரைத்தது. இறுதியாக இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 குற்றவாளிகளும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுவிக்க, குஜராத் அரசின் கமிட்டி எப்படி முடிவு செய்தது என்பது தனக்குப் புரியவில்லை என்கிறார் உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் பியோலி ஸ்வதீஜா.

“குஜராத் அரசுதான் மன்னிப்பு குறித்து முடிவு செய்ய முடியும் என்று உச்சநீதிமன்றம் கூறியதை அடுத்து குஜராத் அரசு அமைத்த குழுவிற்கு அதிகாரம் இருந்தன. ஆனால் கமிட்டி அந்த அதிகாரங்களை கண்மூடித்தனமாக பயன்படுத்தியிருக்கக்கூடாது. குற்றத்தின் தன்மை என்ன என்பதை கமிட்டி பார்த்திருக்க வேண்டும். கைதியின் நடத்தை எப்படி இருக்கிறது என்பது மட்டுமல்ல, குற்றத்தின் தன்மை என்ன என்பதையும் பார்க்க வேண்டும். குற்றத்தின் தன்மையை பார்த்திருந்தால், மனசாட்சி உள்ள ஒரு குழு இப்படி ஒரு முடிவை எப்படி எடுத்திருக்க முடியும் என்று தெரியவில்லை,”என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமரை சாடும் எதிர்க்கட்சிகள்

இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரின் விடுதலையை “எதிர்பாராதது” என்று வர்ணித்த காங்கிரஸ், பிரதமர் மீது நேரடித் தாக்குதலை தொடுத்துள்ளது.

“பிரதமர் செங்கோட்டையில் இருந்து பெரிய பெரிய விஷயங்களை பேசினார்… மகளிர் பாதுகாப்பு, மகளிர் மரியாதை, மகளிர் சக்தி… என வார்த்தை பிரயோகம் செய்தார். சில மணி நேரம் கழித்து குஜராத் அரசு இத்தகைய ஒரு முடிவை எடுத்துள்ளது. இது எதிர்பாராதது, முன்னெப்போதும் நடந்திராதது,” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறினார்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளனர். அவர்களின் நல்ல நடத்தை மற்றும் குற்றத்தின் தன்மை ஆகியவையே அவர்கள் விடுதலைக்கான காரணங்களாகும் என்று கூறிய குஜராத் அரசின் அறிக்கையை கேரா கடுமையாக விமர்சித்தார்.

“குற்றத்தின் தன்மையைப் பற்றி நாம் பேசினால், அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கும் பிரிவின்கீழ் கூட்டு பாலியல் வன்புணர்வு வராதா? இந்தக்குற்றத்திற்கு எவ்வளவு கடுமையான தண்டனை வழங்கப்பட்டாலும் அது குறைவுதான் என்றே கருதப்படுகிறது,”என்று குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேர் சிறையில் இருந்து விடுதலையான பிறகு வெளியான படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்பாகவும் காங்கிரஸ் பிரதமரை சாடியது.

“விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு ஆரத்தி எடுக்கப்படுவதையும், திலகம் இடப்படுவதையும், வாழ்த்துகள் கூறப்படுவதையும் நாம் பார்த்தோம். இதுதான் அம்ரித் மஹோத்சவா? இதுதான் பிரதமரின் பேச்சு மற்றும் செயல்பாட்டிற்கு இடையிலான வித்தியாசமா? அவரது சொந்த அரசுகளே பிரதமரின் பேச்சைக் கேட்பதை நிறுத்திவிட்டனவா அல்லது பிரதமர் நாட்டுக்கு ஏதோ ஒன்றை சொல்லிவிட்டு தொலைபேசியை எடுத்து தனது மாநில அரசுகளுக்கு வேறு எதையோ சொல்கிறாரா.”என்று காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous Story

22 வயது மாணவனை திருமணம் செய்து கொண்ட நடுத்தர வயது பேராசிரியை  சடலமாக மீட்பு!

Next Story

கரோனா:ஒரே வாரத்தில் 15 ஆயிரம்  மரணங்கள்