குவைத் தீ விபத்தில் என்ன நடந்தது?

குவைத்தில், இந்தியர்கள் வசித்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பிபிசியிடம் தெரிவித்தார்.

30க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி கூறுகிறது. அவர்கள் குவைத்தின் அல்-அதான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குவைத்துக்கான இந்தியத் தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா, மருத்துவமனைகளுக்குச் சென்று காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான ஹெல்ப்லைன் எண்ணையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

+965-65505246 என்ற எண்ணை, பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், உதவிக்காகவும் மக்கள் அழைக்கலாம். தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உயிர் பிழைத்த நபர் தகவல்

குவைத் தீ விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த நபர் ஒருவர் பேசுகையில், “நான் 5வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தேன், திடீரென அருகில் இருந்தவர்கள் கதவை தட்டி அழைத்தார்கள். நான் வெளியே வந்து பார்த்த போது வெறும் கரும்புகையாக இருந்தது. என் பார்வைக்கு ஏதும் தெரியவில்லை, என்னால் எதையும் பார்க்க முடியவில்லை.

ஆனால், என் அறையின் கதவை தட்டியவர்கள் உயிர் பிழைக்க வேறு பகுதிக்கு ஓடிவிட்டார்கள். அதனால், அருகே இருந்த அறையில் இருந்தவர்களது கதவை நாங்கள் தட்டவில்லை. எங்கள் வீட்டின் சன்னல் சற்று பெரிதாக இருந்ததால் அதன் வழியாக எங்கள் அறையில் தங்கியிருந்த 4 பேரும் தப்பித்துவிட்டோம். ஆனால், எங்கள் அறையின் அருகே இருந்தவர்களின் அறையில் உள்ள ஜன்னல் மிகச்சிறியது, அதனால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை.” என்று கூறினார்.

குவைத் தீ விபத்து

மணமான 9 மாதங்களில் உயிரிழந்த நபர்

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த உமருதீன் ஷமீரின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவர்களது தொலைபேசிக்கு அழைத்து போது, பக்கத்து வீட்டுக்காரர் பதிலளித்தார்.

29 வயதான அவர் ஓட்டுநர் ஆவார். குவைத்தில் இந்தியருக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், இந்த தீவிபத்தில் உயிரிழந்தார்.

“அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சில மணி நேரங்களுக்கு முன்பு குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. 9 மாதங்களுக்கு முன்பு இங்கு வந்த அவருக்கு திருமணம் நடந்தது. அவரது பெற்றோர் பேசும் நிலையில் இல்லை,” என பிபிசி ஹிந்தியிடம் அவரது அண்டை வீட்டுக்காரர் கூறினார். அவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.

குவைத்தில் உமருதீனின் நண்பர் நௌஃபல் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், “அவரது குடும்பத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நான் மூன்று கட்டிடங்கள் தள்ளி தங்கியுள்ளேன். நாங்கள் அனைவரும் ஒரே எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்கிறோம். உமருதீனும் அங்கே ஒரு தொழிலாளி. கட்டிடத்தில் யார் இருந்தார்கள், யார் இல்லை என்று சொல்வது கடினம்’’ என்றார்.

“எண்ணெய் நிறுவனத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஷிப்ட் முறையில் வேலை செய்கிறார்கள். அதிகாலை 0130 மணியளவில் வேலைக்குச் சென்ற ஏழு பேர் கொண்ட குழு உள்ளது. அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள், அவர்கள் முழு அதிர்ச்சியில் உள்ளனர்,” என்று நௌஃபல் கூறினார்.

நௌஃபலின் கூற்றுப்படி, கட்டடத்தில் இருந்த பெரும்பாலானோர் இந்தியர்கள். குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.

ஆனால், பிபிசி ஹிந்தியிடம் பேசிய கேரள முஸ்லிம் கலாசார மையத்தின் (கேஎம்சிசி) குவைத் பிரிவுத் தலைவர் ஷர்புதீன் கோனெட்டு, “தீயில் இறந்த அல்லது காயமடைந்தவர்களின் உடல்களை நாங்கள் இன்னும் தேடி வருகிறோம். அடித்தளத்தில் இருந்து ஆறு மாடி கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் பல உடல்களை அடையாளம் காண முடியவில்லை.

தற்போதைய நிலவரப்படி, குறைந்தது 11 இந்தியர்கள் இறந்துள்ளனர் மற்றும் இருவர் மோசமான நிலையில் உள்ளனர். உடல்களை அடையாளம் காண சிலருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டியிருக்கலாம், ”என்று கூறினார். அவர் அப்போது, தீ விபத்து நடந்த இடத்தில் இருந்தார்.

விபத்திற்கான காரணம் என்ன?

குவைத்துக்கான இந்தியத் தூதர்
குவைத்துக்கான இந்தியத் தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா, மருத்துவமனைகளுக்குச் சென்று காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார்.

இந்த சம்பவத்தை குவைத் உள்துறை அமைச்சரும் உறுதி செய்துள்ளார். புதன்கிழமை காலை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் ஜன்னல்களில் இருந்து அடர்ந்த கரும் புகை வெளியேறியதை காண முடிந்தது.

குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள இந்த 6 மாடி குடியிருப்பின் ஒரு சமையலறையில் இருந்து தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது கட்டடத்தில் 160 தொழிலாளர்கள் இருந்தனர். அனைத்து தொழிலாளர்களும் ஒரே நிறுவனத்தில்தான் வேலை செய்கிறார்கள்.

குவைத் உள்துறை அமைச்சர் ஃபஹத் யூசுப் அல் சபா சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர், “கட்டட உரிமையாளர்களின் பேராசையே இந்த சம்பவத்திற்கு காரணம்” என்றார்.

குவைத் ஊடக அறிக்கையின்படி, இந்த கட்டடத்தில் அளவுக்கு அதிகமான மக்கள், கடும் நெருக்கடியில் வசித்து வந்துள்ளனர். குடியிருப்பில் உள்ள சட்ட மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குவைத் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். குறிப்பாக கட்டுமானம் மற்றும் உள் கட்டமைப்புத் துறைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையே குவைத் சார்ந்துள்ளது.

குவைத்தில் உள்ள புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் தரம் குறித்து மனித உரிமை அமைப்புகள் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு கூறியது என்ன?

குவைத்துக்கான இந்தியத் தூதர்

இந்திய பிரதமர் மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.” என்று கூறியுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தீ விபத்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குவைத் தீ விபத்து குறித்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். அடுத்தக் கட்ட தகவலுக்காக காத்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா காயமடைந்த 30க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள குவைத்தின் அல்-அதான் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் வழங்கும் எனவும் உறுதி அளித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருமே விரைவில் குணமடைவார்கள் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

குவைத்தில் பணிபுரியும் தமிழர் கூறியது என்ன?தீ விபத்து நடந்த இடத்தில்

தீ விபத்து நடந்த இடத்தில் குவிந்துள்ள குவைத் காவல் துறையினர்

குவைத்தில், தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் வசிக்கிறார் மணிகண்டன். இவர் தமிழ்நாட்டின் விருதுநகரைச் சேர்ந்தவர். பணிக்காக குவைத் சென்றுள்ள இவர், நடந்த சம்பவம் குறித்து விவரித்தார்.

“குவைத்தில் பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், பெரும்பாலானோர் இரவு நேரப் பணிக்கு செல்வார்கள். வேலையை முடித்துவிட்டு அதிகாலை குடியிருப்புக்கு திரும்பி வந்தவர்களில் சிலர் உணவு சமைத்துள்ளனர். கட்டிடத்தின் அடித்தளத்தில் சமையலறை உள்ளது. அப்போது சமையலறையில் பற்றிய தீ, கட்டுக்கடங்காமல் மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது.” என்று கூறினார்.

அதிகாலை நேரம் என்பதால் அறைகளில் உறங்கிக் கொண்டிருந்த பலர் மூச்சுத்திணறி இறந்ததாகவும், சிலர் தப்பிக்க நினைத்து மாடிகளில் இருந்து குதித்ததால் உயிரிழந்ததாகவும் கூறினார் மணிகண்டன்.

“இங்குள்ள அறைகளில் தங்கியிருந்தவர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். தமிழர்களும் தங்கி இருந்தனர். அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.” என்று கூறுகிறார் அவர்.

Previous Story

எதிரும் புதிருமான அரசியல்!

Next Story

தமிழர்கள் இன்னமும் எவ்வளவு காலம்தான் ஏமாறுவது!