குற்றம்புரிவது குடி மக்களே!

-நஜீப் பின் கபூர்-

இலங்கை சுதந்திரம் பெற்று 74 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு அரசியல் பொருளாதார நெருக்கடி நாட்டில் நிழவுவதை சிறு  குழந்தை கூட பார்க்கின்றது-உணர்கின்றது. நாடு பிரித்தானியாவின் பிடியில் இருந்த போது வாழ்ந்த பல மூத்தவர்கள் அன்றைய நிலமையையும் இன்றைய நிலமையையும் மதிபீடு செய்து அது பற்றிய கதைகளை நமக்குச் சொல்லும் போது அவை அனேகமாக நமக்கு மிகுந்த ஆச்சர்யத்தை உண்டு பண்ணுகின்றது. ஆனால் நாட்டில் சில மாதங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அதிரடியான நெருக்கடிகள் நமக்கு ஒரு சுனமி போல்தான் அமைந்திருக்கின்றன.

இப்படியான ஒரு நெருக்கடிக்கு நாடு சடுதியாகச் செல்லும் என்று சில வருடங்களுக்கு முன்னர் எவரும் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். இது ஒரு தான்தோன்றித்தனமான அரசியல் செயல்பாட்டின் விளைவு. அல்லது பாதகச் செயல்களின் அறுவடை என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. இதற்கு கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சி செய்த அனைவரும் பொறுப்பாளிகள் என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும் குறிப்பாக ராஜபக்ஸாக்களின் காட்டுமிராண்டித்தனமான அரசியல் சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்தளவுக்கு நாடு ஆதாள பாதாளத்துக்குச் செல்வதற்குக் காரணம் என்பதனையும் துனிந்து சொல்ல வேண்டி இருக்கின்றது.

ஒட்டு மொத்தமாக நாட்டின் இந்த மோசமான நிலைக்கு அரசியல்வாதிகளை மட்டுமோ அல்லது அதிகாரிகளை மட்டுமோ காரணம் சொல்லி கைகழுவிக் கொள்வது நியாயமற்ற ஒரு நடவடிக்கை என்றுதான் நாம் கருதுகின்றோம். இது பற்றி ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாக இருக்கின்றது. பொதுவாக எடுத்துக் கொண்டால் நமது நாட்டில் அதிகாரத்தில் இருந்த அல்லது அரசியல் சொய்கின்ற அனைவரும் மோசமானவர்கள் என்று சொல்ல முடியாது. துவக்க காலம் முதல் நமது அரசியலில் மோசடிக்காரர்கள் ஊழல் பேர்வழிகள் இருந்திருக்கின்றார்கள். அதே நேரம் தமது காணி நிலங்களை சொத்துக்களை விற்று பொதுநல அரசியல் செய்த மகான்களும் இங்கு வாழ்ந்துதான் இருக்கின்றார்கள்.

எமது பார்வையின்படி ஜே.ஆர். ஜெயவர்தன அதிகாரத்துக்கு வந்தது முதல் நாட்டில் ஏற்பட்ட அரசியல் கலாச்சார மாற்றங்கள் நாட்டில் பல துறைகளில் பாரிய மாறுதல்கள் ஏற்படத் துவங்கியது. இந்த மாற்றங்களின் பின்னணி சார்வதேச அரசியல் ஆதிக்கப் போட்டியில் அதுவரை காணப்பட்ட சமநிலையில் நடந்த தளம்பலின் விளைவே. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியும் அமெக்காவின் ஏக உலக ஆதிக்கமும் இந்த மாற்றத்துக்கான அச்சாணியாக இருந்து வந்திருக்கின்றது.

தொடர்ச்சியாக ஜே.ஆர் இரு முறை. அதே போன்று அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரேமதாச கொல்லப்படும் வரை இரு முறை என்று தொடர்ச்சியாக இரு தசாப்தங்களுக்கு மேல் ஐ.தே.க ஆட்சி நீடித்தது. அதன் பின்னர் ஒரு தசாப்தம் சந்திரிக்கா காலம் என்று இந்த ஆட்சி சில குடும்பங்களை மையப்படுத்திய அரசியலாக இருந்தது. இதில் பிரமேதாச கதை வேறு. அன்று ஜே.ஆர். தவிர்க்க முடியாதுதான் பிரேமதாசவுக்கு அதிகாரத்தை கைமாற்ற வேண்டி வந்தது. இது பற்றிய கதைகள் நிறைய இருக்கின்றன. இன்று ரணில் இந்த ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வதும் கூட வாரிசு அரசியலின் பின்னணி என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படியாக நாடு குடும்ப அதிகார வர்க்கத்தின் கைகளில் சிக்கி இருந்ததே அல்லாமல் நாட்டை திட்டமிட்டு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற சிந்தனை எந்த அரசியல் தலைவரிடமும் இருக்கவில்லை. அவர்கள் தனது அரசியல் இருப்பு, தன்னைச் சார்ந்தவர்களின் அரசியல் எதிர்காலம் என்றுதான் காய் நகர்த்தி வந்தார்கள். இதனால்தான் வாக்குறுதி அரசியலை முன்னிருத்தி அதனை நிலைநாட்டுவதில் ஆட்சியாளர்கள் பொது மக்களுடன் முட்டி மோத வேண்டி வந்தது. தொடர்ச்சியாக அதிகாரத்துக்கு வந்த அனைத்து கட்சிகளும் தலைவர்களும் வாக்குறுதிகளைக் கொடுத்துத்தான் மக்களை ஏமாற்றி அதிகார ஆசனத்தில் அமர்ந்தார்கள்.

சந்திரிக்காவுக்கு பின்னர் இந்த அரசியல் மாற்றம் புதிய ஒரு தலைமுறையான மெதமூலனையின் கரங்களுக்குள் சென்றது. இந்த மெதமூலன குடும்பத்துக்கு அதிகாரம் கைமாறியது ஜே.ஆரிடமிருந்து பிரமதாசவுக்கு கைமாறிய ஒழுங்கில்தான். இப்படியாக அதிகாரத்தை பெற்றுக் கொண்ட ராஜபக்ஸாக்கள் தெற்கு வாதத்தை கிளப்பி முதலில் அந்த வாக்குகளை தமது அணியின் பலமாக மாற்றிக் கொண்டார்கள். சிங்கள மக்கள் மத்தியில் உள்ள வர்க்க பேதம் மஹிந்த ராஜபக்ஸாக்களின் வெற்றிக்கு அதிக பங்களிப்பைச் செய்தது.

அதன் பின்னர் புலிகளுடனான போர் வெற்றி ராஜபக்ஸாக்களை மன்னர்களாகவும் துட்டகைமுனுவாகவும் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு இமேஜை உருவாக்கி இருந்தது. இதன் தொடர்ச்சியாக ராஜபக்ஸாக்கள் அணி சிங்கள இனவாதத்தை நாட்டில் ஆளமாக விகாரைகள், ஊடகங்கள் வாயிலாக வளர்த்து வந்தது. (பிற்காலத்தில் அவர்களின் அழிவும் அதிலிருந்துதான் ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.) மஹிந்த ராஜபக்ஸ சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கான அரசியல் தலைவராக வளந்திருந்த நேரத்தில், இடைக் காலத்தில் அவரது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையும் அவரது குடும்ப அரசியலும் அவருக்கு ஒரு தோல்வியைக் கொடுத்தது. கூட இருந்து சகா மைத்திரி கோடாறிக் காம்பாக மாறி இருக்காவிட்டால் நிச்சயம் 2015 தேர்தலிலும் மஹிந்ததான் ஜெயித்திருப்பார்.

நல்லாட்சி என்று அதிகாரத்துக்கு வந்த நாள் முதல் ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் இணக்கப்பாடுகளுக்குப் பதிலாக முரண்பாடுகள்தான் அதிகமாக இருந்தது. இந்தப் பின்னணியில் மைத்திரி-ரணில் நல்லாட்சி நாட்டில் அதிகாரத்தில் இருந்தாலும் ராஜபக்ஸாக்கள் பேரின மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தார்கள். இதனால் நல்லாட்சியில் ஆக்கபூர்வமாக எதுவுமே செய்ய முடியவில்லை. அந்த நாட்களில் ரணிலை மேற்கத்திய ஏஜெண்டாகத்தான் சிங்கள சமூகத்தினர் பார்த்தனர்.

மொட்டுக் கட்சியினரும் ஏன் இன்றைய பிரதமர் தினேஷ் எவ்வளவு மோசமாகவும் கேவலமாகவும் இந்த ரணிலை அன்று பேசி வந்தார் என்பது அரசியல் படிக்கின்ற வாசகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அதே ரணில் இன்று ஆளும் மொட்டுக் கட்சியின்  மீட்பாளராகவும் பாதுகாவலனாகவும் இருந்து ரணில் இந்த அரசங்கத்தை வழி நாடத்திச் செல்கின்றார் என்றால் இந்த அரசியலை என்ன என்று சொல்வது. இது பற்றி மொட்டுக் கட்சியிடம் கேள்வி கேட்டால் அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது பகைவனும் கிடையாது என்று சொல்லி நைசாக தப்பித்துக் கொள்கின்றார்கள்.

தனக்கு மூன்றாவது முறையும் தேர்தலில் நிற்க முடியாது என்ற தடை காரணமாக தம்பி கோட்டாவுக்கு அந்த இடத்தை மஹிந்த விட்டுக் கொடுத்தார். மஹிந்த அந்த வாய்ப்பை அவருக்கு வழங்குவதற்கு முன்னரே பேரினத்தார் பௌத்த விகாரைகளினுடாக தமது இனவாத அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்துக் கொண்டிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜீத்தை பேரின சிங்கள வாக்காளர்கள் இருபத்தி ஐந்து சதவீதமானவர்கள் கூட ஆதரிக்கவில்லை. அவரை பேரித்தார் தங்களில் ஒருவராக கருதக் கூட இல்லை. அதே நேரம் வடக்கு கிழக்குத் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் தமது தொண்ணூறு சத வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித்துக்கு வழங்கி இருந்தார்கள் என்பதும் அனைவரும் அறிந்த கதை.

இப்படி அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் அனைவரும் தாம் பதவியில் இருக்கின்ற நாட்களில் பொது மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்து பலவழிகளிலும் தமது தனிப்பட்ட கஜானாவுக்குள் பணத்தை சேகரித்து வந்தார்கள். மேல் மட்ட முதல்  பிரதேச சபை உறுப்பினர்கள் வரை பொதுமக்கள் பணத்தை- சொத்துக்களை எப்படி எல்லாம் கொள்ளையடித்து காசு சம்பாதிக்கலாம் என்று நன்கு தெரிந்து வைத்திருந்தனர்-கற்றுக் கொண்டனர். இதனால் சாதாரண பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்வரை தமது எதிர்காலத்துக்கான சொத்துக்களை சேகரிக்க முடிந்தது. இன்று அதிகாரம் மிக்க பதவியில் இருந்த ராஜபக்ஸாக்கள் குடும்பம் அவருக்கு நெருக்கமாக இருந்து அரசியல் செய்தவர்கள் சொத்து சேகரிப்பு பற்றி பல்வேறு மட்டங்களில் கேள்விகள் எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஐ.நா.சபை, மனித உரிமைகள் அமைப்பு சர்வதேச வங்கி, ஆசிய வங்கி, ஐஎம்எப் மற்றும் சர்வதேச நிருவனங்கள் அனைத்தும் இலங்கை அரசியலில் நடக்கின்ற அப்பட்டமான நிதி மோசடிகள் களவுகள் பற்றி பகிரங்கமாக பேசியும் அதுபற்றிய நடவடிக்கைகளில் இறங்கும்படி அரசாங்கத்தைக் கோட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் தற்போது பதவில் இருக்கின்ற ஜனாதிபதி ரணிலாலோ மொட்டுக் கட்சியாலோ இதற்குப் பதில் கொடுக்க முடியாது. அவர்கள் மீதுதான் இந்தப் பாரிய குற்றச்சாட்டுக்களே இருக்கின்றன.

ஈஸ்டர் தாக்குதலை சற்று நினைத்துப் பாருங்கள்,! அது பற்றிய குற்றச்சாட்டுக்கள் பெரும் கேள்விக்குறியாக இருக்கின்றது. இதற்கு சர்வதேச விசாரணை தேவை என்று சொல்லப்படுகின்றது. இந்த அரசு அதனை ஒரு போதும் செய்யாது. அப்படியானால் அதன் அர்த்தம் புரிந்து கொள்ளக் கூடியதே. அதே போன்று சர்வதேசம் இலங்கையிடம் கோட்கின்ற எந்தக் கேள்விக்கும் இந்த அரசாங்கம் பதில் தராது.

பில்லியன் ரில்லியன் கணக்கில் நாட்டில் நடந்திருப்பதாக நம்பப்படுகின்ற மோசடிகள் மீதான நடவடிக்கை நிலையும் இதுதான். குற்றவாளிகளை அரசு தண்டிக்காவிட்டாலும் சர்வதேசமும் வெகு ஜனங்களும் இதில் என்ன நடந்திருக்கின்றது யார் மீது விரல் நீட்டப்படுகின்றது என்பதளை நன்றாகத் தெரிந்துதான் வைத்திருக்கின்றார்கள். சுருக்கமாகவும் நேரடியாகவும் சொன்னால் ராஜபக்ஸாக்களும் அவர்களின் கையாட்களும் நாடுபூராவிலிலும் மோசடிகளைச் செய்திருக்கின்றார்கள் என்ற ஒரு பலமான கருத்து நாட்டில் இருக்கின்றது.

அரசியல்வாதிகளின் இந்த அட்டகாசங்களை தமக்கு நல்ல வருமானம் ஈட்டுகின்ற வடிகால்களாக இலங்கையில் உயர் பதவியில் இருக்கின்ற அதிகாரிகள் பாவித்து வந்திருக்கின்றார்கள். அவர்கள் தனியாகவும் அரசியல்வாதிகளுடன் இணைந்தும் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பது பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. கோப் குழுக் கூட்டங்களில் இது பற்றி கேள்விகள் கேட்டகப்படுகின்ற போது ஒருவர் மற்றவர்மீது பந்தை எறிந்து தப்பித்துக் கொள்ளும் முயற்ச்சிகள் நடக்கின்றன.

அதேன்போன்று இலங்கையின் நீதித்துறையை சற்று பாருங்கள் அரசியல் விருப்பு வெறுப்புக்களினால்  மக்கள் நலன்களுக்காகப் போராடிய பலர் உள்ளேயும் அப்பட்டமான குற்றவாளிகள் பலர் அரச அனுசரனையால் வெளியேயும் இருக்க வேண்டி நிலை நாட்டில் காணப்படுகின்றது. சீனி இறக்குமதியில் நடந்த பல பில்லியன் கொள்ளை. தேங்காய் எண்ணை இறக்குமதியில் நடந்த கொள்ளை இதன் பின்னணியில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு முழு நாடுமே அவர்களைத் தெரிந்திருந்தாலும் அவர்கள் மீது இது வரை எந்த சட்ட நடவடிக்கைகளும் இல்லை.

அது போன்று அதிகாரிகளும் வர்த்தக மாபீயாக்களும் நாட்டை இன்றுவரை எந்தளவுக்கு கொள்ளையடிக்க முடியுமே அதனைச் செய்து கொண்டுதான் வருகின்றார்கள். இது பற்றிப் பகிரங்கமாக பேசப்பட்டாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதில் மேல் மட்ட அரசியல் தொடர்புகள் இருக்கின்றன. எனவே கொள்ளைக்கும் ஊழல் மோசடிக்கும் இந்த நாட்டில் கதவுகள் திறந்தே இருக்கின்றது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தமக்கு முடிந்த அளவு சுருட்டிக் கொள்ள வழி இருக்கின்றது என்பதுதான் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.

அரசியல்வாதிகள் தங்களை தொடர்ச்சியாக வஞ்சிக்கின்றார்கள் அதிகாரிகள் தங்கள் ஏமாற்றுகின்றார்கள் என்று பொதுமக்கள் கண்கூடாகக் பார்த்துக் கொண்டு மௌனம் சாதிக்கின்றார்கள் என்றால் அதற்கு அவர்களும் அங்கீகாரம் கொடுக்கின்றார்கள் என்பதுதான் அதன் பொருள். தங்களுக்கு ஏட்பட்டுள்ள இந்த நெருக்கடி, தனது குழந்கைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பது, தாம் பட்டிணிச்சாவில் வாழ்ந்து கொண்டிருப்பது, இதற்கான  அனைத்துக் குற்றவாளிகளும் நமது கண்முன்னே இருக்கின்றார்கள். இதனால்தான் மக்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். மக்கள் நலன்களுக்காக-விமோசனத்துக்காக போராட்டங்களை நடத்தியவர்களை பிடித்து அரசு உள்ள தள்ளிக் கொண்டிருக்கின்றபோது அப்பட்மான குற்றவாளிகள் இன்று நாட்டில் சுதந்திரமாக  நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தக் கட்சிகளை பொது மக்கள் எவ்வளவு காலத்துக்குத்தான் ஜீரணித்துக் கொண்டிருக்க முடியும்? ஒரு முறை மத்திய வங்கி ஆளுநனர் நந்தலால் வீரசிங்ஹ சொன்னது போல இந்த நிலமை தொடர்ந்தால் நாட்டில் இரத்த ஆறு ஒடுவதை எவரும் தடுக்க முடியாது. குறைந்து பட்சம் மக்கள் இதற்கு தண்டணை வழங்காத வரை இந்த அக்கிரமங்களை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் செய்து கொண்டுதான் இருப்பார்கள். நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் மாற்றத்துக்கான முடிவை எடுக்காத வரை இந்த நிலமை தொடரத்தான் செய்யும். இதனால்தான் நாம் மக்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்றோம்.

அண்மையில் தெற்காசியவிலே உயரமான தாமரை கோபுரத்தை திறந்து வைத்த போது அங்கு ஊடகங்கள் முன் பேசிய மக்களும் தேர்களும் அங்கு ஏறிப்பார்த்த போது தாங்கள் சுவர்க்கபுரியில் இருப்பதாக உணர்ந்ததாக தெலைக்காட்சிகள் முன்தோன்றி பேட்டி கொடுத்ததுடன் ராஜபக்கஸாக்களை புகழ்ந்து தள்ளி இருந்தார்கள். இது பற்றி கருத்துத் தெரிவித்த ஜேவிபி. தலைவர் அணுரகுமார ராஜபக்ஸாக்கள் இந்த நாட்டில் கொள்ளை அடித்து பணக்குவியலின் உயரத்தையும் ஊழல் மோசடியின் சின்னமாகவும்தான் இதனை குடிமக்கள் பார்க்க வேண்டும். அப்படி சிந்திக்காதவரை மக்களுக்கு விமோசனமோ விடுதலையோ கிடையாது என்றுதான் நாமும் சொல்ல வேண்டி இருக்கின்றது. தூக்கி எறிய வேண்டிய சமூகக் குற்றவாளிகளை அதிகார கதிரையில் அமர்தினால் மக்கள் தாமாகவே அழிவைத் தேடிக் கொள்வது தவிர்க்க முடியாது.

நன்றி: 25.09.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இரான் பெண்களின் ஹிஜாப் போராட்டம்

Next Story

சீன அதிபர் ஜி ஜின் பிங் எங்கே?