குறட்டை விடுவதால்  என்ன ஆபத்து? எப்படித் தடுக்கலாம்?

-சனீத் பெரேரா-

குறட்டை விடும் பழக்கம் குறட்டை விடுபவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குறட்டை அவர்களின் இணையர் மற்றும் உறவை பாதிக்கும், இதில் உடல் உறவு உட்பட தாம்பத்யம் தொடர்பான விஷயமும் அடக்கம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“என் கணவர் சத்தமாக குறட்டை விடுவதைப் பற்றி நான் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் சொல்லி கேலி செய்தேன், ஆனால் மனதளவில் ஆழமாக அது என்னைத் பாதித்தது. இதைப் பற்றி என் கணவருடன் பேசினால் அவர் மனம் புண்படுவார் என்று நான் கவலைப்பட்டேன்” என்று சிங்கப்பூரைச் சேர்ந்த 45 வயதான அருணிகா செல்வம் கூறுகிறார்.

குறட்டை என்பது சகஜமான ஒன்று என்று அருணிகா எண்ணினார். ஆனால் அது அவரின் கணவருக்கும் தாம்பத்திய உறவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

“அவர் இரவில் தூக்கத்தின் நடுவே பலமுறை எழுந்திருக்க ஆரம்பித்தார். காலையில் எரிச்சல் உணர்வோடு இருப்பார்,” என்று அருணிகா பிபிசியிடம் தெரிவித்தார்.

கணவரின் குறட்டை சத்தத்தால் அருணிகாவால் ஆழ்ந்து உறங்க முடியவில்லை. ஓய்வின்மை மற்றும் தூக்கமின்மை காரணமாக வேலையில் அவரின் செயல்திறன் பாதிக்கப்பட்டது.

இணையர் குறட்டை விடுவதை கண்டு கொள்ளாமல் விடுவது பொதுவாக பல வீடுகளில் நிகழும். ஆனால் குறட்டை பிரச்சனை, இணையருடனான உறவு மற்றும் இருவரின் ஆரோக்கியத்திலும் கடுமையான விளைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தூக்கத்தின் போது காற்றோட்டம் தடைபட்டு, சுவாசம் நின்று மீண்டும் தொடங்கும்

தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் (sleep apnoea) என்றால் என்ன?

பொதுவாக சத்தமாக குறட்டை விடுவது, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் (OSA) எனப்படும் தூக்கக் கோளாறுடன் தொடர்புடையதாக இருக்கும், இந்த நிலையில் தூக்கத்தின் போது காற்றோட்டம் தடைப்பட்டு, சுவாசம் நின்று மீண்டும் தொடங்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த கோளாறு தொண்டையின் சுவர்களை தளர்வடையச் செய்து, சுருங்கச் செய்து, சாதாரண சுவாசத்தை குறுக்கிட்டு, ஆக்ஸிஜன் குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.

இங்கிலாந்தின் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர், சுவாச நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி சத்தியமூர்த்தியின் கூற்றுப்படி, தூக்கத்தில் மூச்சுத்திணறல் அறிகுறிகள் லேசான நிலை தொடங்கி கடுமையான நிலை வரை ஏற்படும். ஆனால் பாதிக்கப்பட்ட நபரை இந்த பிரச்னை படிப்படியாக மோசமான நிலைக்கு தள்ளும்.

மேலும் சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், குறட்டை விடுபவர் மற்றும் அவர்களது இணையரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அது பாதிக்கும், தம்பதிகளின் உடல் உறவையும் பாதிக்கும் என்று அவர் எச்சரிக்கிறார்.

தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் என்ன?

ஒருவர் தூங்கும்போதுதான் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன, அவை பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

  • உரத்த சத்தத்துடன் குறட்டை
  • சுவாசம் தடைப்பட்டு மீண்டும் தொடங்குவது
  • மூச்சுத்திணறல், குறட்டை அல்லது மூச்சுத் திணறல் போன்ற சத்தங்கள் எழுப்புவது
  • தூக்கத்தின் நடுவே அடிக்கடி எழுந்திருத்தல்

பாதிக்கப்பட்டவர்களுக்கு பகல் நேரத்திலும் சில அறிகுறிகள் ஏற்படும், அவை:

  • தூங்கி எழுந்ததும் தலைவலி
  • மிகவும் சோர்வாக உணர்வது
  • கவனச் சிதறல்
  • மோசமான நினைவாற்றல்
  • மனச்சோர்வு, எரிச்சல் அல்லது மனநிலையின் பிற மாற்றங்கள்
  • மோசமான ஒருங்கிணைப்பு திறன்
  • உடலுறவில் நாட்டமின்மை
குறட்டை

மூச்சுத்திணறலின் போது ரத்த ஆக்ஸிஜன் அளவுகளில் ஏற்படும் திடீர் வீழ்ச்சி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

குறட்டையால் பிற உடல்நலப் பிரச்னைகள்

கூடுதலாக, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத் திணறல் (obstructive sleep apnoea) பாதிப்பு மற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

மூச்சுத்திணறலின் போது ரத்த ஆக்ஸிஜன் அளவுகளில் ஏற்படும் திடீர் வீழ்ச்சி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர், மேலும் இது பல்வேறு மருத்துவ சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

சில ஆய்வுகள் ஓஎஸ்ஏ (obstructive sleep apnoea) இதய செயலிழப்பு அபாயத்தை 140% அதிகரிக்கும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 60% மற்றும் கரோனரி இதய நோய் அபாயத்தை 30% அதிகரிக்கும் என்று கூறுகின்றன.

தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது உடலுறவையும் பாதிக்கலாம் என தூக்க சிகிச்சை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சில தம்பதிகள் தங்கள் துணையின் குறட்டையை நகைச்சுவையாக அணுகினாலும், அது அவர்களின் தாம்பத்திய உறவை பாதிக்கும் என்று டாக்டர் சத்தியமூர்த்தி எச்சரிக்கிறார்.

“வழக்கமாக என்னிடம் வரும் நோயாளிகளில் 90% பேர், இணையரை தன் குறட்டை பழக்கம் பெரிதும் பாதித்ததால் தான் சிகிச்சை மேற்கொள்ளும் முடிவை எடுக்கின்றனர். நாளடைவில் தம்பதி தனியாக தூங்க முடிவெடுப்பர், மேலும் இந்த பிரிவு `தூக்க விவாகரத்து’ என்னும் நிலையை உருவாக்கும்.” என்று அவர் பிபிசியிடம் குறிப்பிட்டார்.

“இது ஒரு மோசமான விஷயம் அல்ல’’ என்று குறிப்பிடும் அமெரிக்காவைச் சேர்ந்த உறவு சிகிச்சை நிபுணர் சாரா நாசர்சாதே, “குறட்டை பழக்கம் இருந்தாலும், இல்லையென்றாலும், தம்பதிகள் சில சமயங்களில் தனித்தனியாக தூங்க வேண்டும்’’ என்று பரிந்துரைக்கிறார். ’’ஆழ்ந்த இரவு தூக்கத்துடன் நம் நாளைத் தொடங்குவது தம்பதிகளுக்கு ஆரோக்கியமான உறவை வளர்க்கும்’’ என்றும் அவர் பிபிசியிடம் கூறினார், இருப்பினும் வீட்டில் ஒரு கூடுதல் படுக்கையறை இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

ஆனால் சில தம்பதிகளுக்கு, ‘தூக்க விவாகரத்து’ என்பது நிரந்தரமான பிரிவினைக்கான முதல் படியாக இருக்கும்.

குறட்டை

குறட்டை விடுவதை இயல்பான ஒன்று என பலரும் நம்புகின்றனர்.

குறட்டையால் சிங்கப்பூர் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

அருணிகா செல்வம், உலகிலேயே அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட மிகவும் வளர்ந்த நாடான சிங்கப்பூரில் வசிக்கிறார். இருப்பினும் தன் வீட்டில் இணையர் உடன் இருக்கும் அறையை தவிர வேறு இடத்தில் தூங்குவது அவருக்கு சாத்தியமில்லை.

“சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பதால் கூடுதல் வருமானம் ஈட்ட, எங்கள் விருந்தினர் அறையை வாடகைக்கு விட வேண்டியிருந்தது” என்று திருமணமாகி 15 வருடங்கள் கடந்து ஒரு குழந்தையின் தாயாக இருக்கும் அருணிகா தன் நிலையை விவரித்தார்.

எண்ணற்ற தூக்கமில்லாத இரவுகளைக் கடந்த பிறகு , இதற்கு மேல் முடியாது என்ற நிலையில் அருணிகா தன் கணவரிடம் அவரின் குறட்டை பிரச்சனை பற்றி பேசினார். அவரின் கணவர் குறட்டை விடுவது இயல்பானது என்று நம்புவதால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கத் தயங்கினார்.

மேலும் அவரது தந்தை மற்றும் தாத்தா இருவரும் குறட்டை விடும் பழக்கம் உடையவர் என்பதால் இது பெரிய பிரச்னையில்லை என அவர் நம்பினார்.

சத்தமாக குறட்டை விடுவது ஆண்மையின் ஒரு அங்கமாகவே பலர் கருதுகின்றனர். குறிப்பாக சில ஆசிய கலாச்சாரங்களில், குறட்டை விடுவது சாதரண விஷயம் என்றே நம்புகின்றனர்’’ என்று அருணிகா மேலும் கூறினார்.

குறட்டையால் ஏற்படும் தூக்கமின்மை மனச் சமநிலையை குலைக்கும். இதனால் ஏற்படும் மன உளைச்சல் தேவையற்ற வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும்.

சாரா நாசர்சாதே கூறுகையில், “இதுபோன்ற சூழ்நிலைகளில், குறட்டை விடும் இணையரிடம் சரியான நேரத்தில், நுட்பமான முறையில் இந்த விஷயத்தை புரிய வைக்க வேண்டும். இந்தப் பிரச்சனையை பற்றி பேச சரியான தருணத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.’’

“உடலுறவு கொண்ட பிறகு, நல்ல மனநிலையில் இருக்கும் போது இதைப் பற்றி பேச முயற்சிக்கலாம்” என்று நாசர்சாதே கூறினார். இவர் “லவ் பை டிசைன் – 6 இன்க்ரீடியன்ட்ஸ் டு பில்ட் லைஃப் டைம் ஆஃப் லவ்’’ என்னும் புத்தகத்தின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக உளவியல் நிபுணரான இவர் இதுகுறித்து கூறுகையில், “குறட்டை விடுபவர் அந்த நிலையை எண்ணி வெட்கப்படுகிறார்’’ என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம்.’’ என்றார்.

குறட்டை

குறட்டையால் திருமண உறவு கூட முடிவுக்கு வரலாம்

குறட்டையால் தீவிரமான பாதிப்புகள்

பிரிட்டிஷ் குறட்டை மற்றும் தூக்கநிலை மூச்சுத்திணறல் சங்கத்தின் கூற்றுப்படி, பிரிட்டனில் சுமார் 15 மில்லியன் குறட்டை பாதிப்பு கொண்டவர்கள் உள்ளனர். மேலும் இது நாட்டில் 30 மில்லியன் மக்களை பாதிக்கிறது – கிட்டத்தட்ட மக்கள்தொகையில் பாதி என்றே சொல்லலாம்.

“குறட்டை பழக்கம் உடையவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன’’ என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் குறட்டை விடுபவர் யாராக இருந்தாலும், அந்தப் பழக்கம் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் விவாகரத்துக்கான பொதுவான காரணங்களில் ஒன்று `குறட்டை’ என்று சில செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இருப்பினும் இந்த கூற்றை நிரூபிக்க போதுமான தரவுகள் இல்லை.

குறட்டை பழக்கம் திருமண உறவில் ஆழமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பிரிட்டனைச் சேர்ந்த குடும்பநல வழக்கறிஞரான ரீட்டா குப்தா, தனது நிறுவனம் குறட்டையுடன் தொடர்புடைய பல விவாகரத்து வழக்குகளை கையாண்டதாகக் கூறினார்.

“திருமண பந்தத்தில் ஏற்படும் மகிழ்ச்சியின்மைக்கு இது நிச்சயமாக ஒரு காரணமாக இருக்கும். அவர் குறட்டை விடுவதால் நாங்கள் பல ஆண்டுகளாக தனித்தனி அறைகளில் தான் தூங்குகிறோம், நாங்கள் ஏற்கெனவே பிரிந்துதான் வாழ்கிறோம்’, என்று நிறைய பேர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்,” என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.

“இதுபோன்ற விவாகரத்து வழக்குகளில் பொதுவான பிரச்சினை என்னவெனில், மருத்துவ சிகிச்சைகளை புறக்கணிப்பது, இந்த சிக்கலை திறம்பட சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காதது தான்’’ என்று குடும்பநல வழக்கறிஞர் மேலும் கூறினார்.

“உதாரணமாக, ஒரு ஆணுக்கு எதிரான வழக்கில், அவருடைய மனைவி, ‘என் கணவர் ஏற்கனவே மோசமாக குறட்டை விடுகிறார். இது என் தூக்கத்தை மோசமாக பாதிக்கிறது. ஆனால், அவர் அதை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று கூறுகிறார்.

குறட்டை

CPAP சாதனம் தூக்கத்தின் போது ஏற்படும் சுவாசக் கோளாறைத் தடுக்க உதவுகிறது.

குறட்டை அல்லது தூக்கநிலை மூச்சுத்திணறல் பிரச்னையை தீர்க்க நீங்கள் என்ன செய்யலாம்?

தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கான சிகிச்சைகள் வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றுவதை உள்ளடக்கியது.

  • உடல் எடைக் குறைப்பு
  • புகைபிடிப்பதை நிறுத்துதல்
  • மது அருந்துவதை கட்டுப்படுத்துதல்

இருப்பினும், பலருக்கு, CPAP என்னும் காற்றுப்பாதை அழுத்த சாதனத்தைப் பயன்படுத்துவது அவசியமாகிறது. இந்த சாதனம், நீங்கள் தூங்கும் போது உங்கள் வாய் அல்லது மூக்கில் அணியும் முக கவசத்தினுள் காற்றை மெதுவாக உட்செலுத்துகிறது.

இந்த CPAP சாதனம் தூக்கத்தின் போது ஏற்படும் சுவாசக் கோளாறைத் தடுக்க உதவுகிறது.

மருத்துவர் ராமமூர்த்தி சத்தியமூர்த்தி கூறுகையில், “குறட்டை விடுபவர் மற்றும் அவரின் இணையர் ஆகிய இருவரின் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிப்பது முக்கியம். இது அவர்களை மருத்துவ ஆலோசனையைப் பெற ஊக்குவிக்கும்” என்கிறார்.

“குறட்டை பிரச்னைக்கு மருத்துவ ஆலோசனைப் பெறுவது, திருமண உறவுக்கு மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் நாளடைவில் குறட்டையால் ஏற்படும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை எடுக்கும் செலவும் குறையும். எனவே, இது முழு குடும்பத்திற்கும் ஒட்டுமொத்த நன்மை தரும்” என்று அவர் கூறினார்.

குறட்டை

குறட்டை பிரச்னையை தீர்ப்பதில் உலக அளவில் பல காரணிகள் தடையாக உள்ளன.

பொருளாதார, சமூகத் தடைகள்

குறட்டை பிரச்னைக்கான அணுகுமுறைகள் உலகளாவிய மற்றும் தனி நபர் சார்ந்து மாறுபடலாம். பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார காரணிகள் மற்றும் பாலினம் மற்றும் பாலுணர்வால் கூட பாதிக்கப்படலாம்.

இலங்கையின் கொழும்பில் ஹோட்டல் வரவேற்பாளராகப் பணிபுரியும் 40 வயது தன்பால் ஈர்ப்பாளரான சமன் (அவரது உண்மையான பெயர் அல்ல), அவரது பாலினத்தை குடும்பத்தினரிடம் இருந்து ரகசியமாக வைத்துள்ளார். அவரது காதலர் தனது வீட்டில் உள்ள கூடுதல் அறையில் வாடகைக்கு வசிக்கும் நண்பர் என்று குடும்பத்தினரை நம்ப வைத்திருக்கிறார்.

“எனது இணையர் சத்தமாக குறட்டை விடுபவர், அவரின் குறட்டை சத்தத்தால் என்னால் தூங்க முடியவில்லை. என் அம்மா என்னைச் சந்திக்க வரும் போது மட்டும்தான் எனக்கு நன்றாகத் தூக்கம் வரும்” என்று சமன் பிபிசியிடம் கூறினார்.

“என் அம்மா வரும்போது, என் இணையர் விருப்பத்துடன் என் அம்மாவுக்கு அந்த கூடுதல் அறை வழங்கப்படும், எனவே என் இணையர் சோபாவில் தூங்கி என் அம்மாவுக்கு சந்தேகம் வராத வண்ணம் பார்த்துக் கொள்வார். அந்த நாட்களில் மட்டும் நான் நன்றாக தூங்குவேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

“எனது காதலர் தன்னை பெண்பால் குணங்கள் கொண்ட தன்பால் ஈர்ப்பாளராக கருதுகிறார், ஆனால் குறட்டை விடுவது நமது கலாச்சாரத்தில் ஆண்மைக்குரியதாகவே கருதப்படுகிறது. இந்த விஷயத்தைப் பற்றி விவாதிப்பது அவரை காயப்படுத்தி என்னை விட்டு அவர் விலகி செல்ல வழிவகுக்கும் என்று நான் அஞ்சுகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

ஒருபுறம் குறட்டை பிரச்சனையை காதலனிடம் விவாதிக்க சமன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டிருக்கையில், மறுபுறம், அருணிகா ஒருவழியாக தன் கணவரிடம் மருத்துவரை அணுகுமாறு வற்புறுத்தத் தொடங்கினார். அதன் விளைவாக அருணிகாவின் கணவருக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் இருப்பது கண்டறியப்பட்டது.

உடல் எடையை குறைக்கும் நோக்கத்தில் உடற்பயிற்சிகள் மேற்கொண்டு தனது கணவர் ஏற்கெனவே பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டதாக அருணிகா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Previous Story

பொதுத் தேர்தல்:ராஜபக்ஸாக்கள் கணிப்பு!

Next Story

பிரசன்ன ரணிலுக்கு ஆப்பு?