குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூவின் கிராம  – கள நிலவரம்

-ரவி பிரகாஷ்-

தளர்ச்சியடைய வைக்கும் புழுக்கம் நிறைந்த காலைநேரத்தில் நாங்கள் உபர்பேடாவை அடைந்தபோது, பெண்கள் உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர்.
முர்முவின் கிராமத்திற்கு செல்லும் சாலை
முர்முவின் கிராமத்திற்கு செல்லும் சாலை

ஆட்கள் வயல்களுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர். பள்ளிக்குச் செல்வதற்காக குழந்தைகள் குளிப்பதில் மும்முரமாக இருந்தனர். கிராமத்தில் சில கடைகள் திறந்திருந்தன, சில மூடப்பட்டிருந்தன. ஆட்டோ ரிக்‌ஷாவில் சிலர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டதாக தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையதளங்களில் வெளியான செய்திகளில் கூறப்பட்டு வந்தது. திரௌபதி முர்முவின் வெற்றி நிச்சயம் என நம்பப்படுகிறது.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக அவர் பதவியேற்க உள்ளார்.

அந்த செய்தி உபர்பேடா மக்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. ஏனெனில், திரௌபதி முர்மு இந்த கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது குழந்தைப் பருவம் இந்தத் தெருக்களில் கழிந்தது. அவருடைய வீடு இங்கு உள்ளது.

சுமார் 3500 மக்கள் வசிக்கும் உபர்பேடா கிராமம் ஒடிஷா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் குசுமி தொகுதியின் ஒரு பகுதியாகும். ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் இருந்து சிறிது தூரத்தில் இரும்பு தாது சுரங்கங்கள் உள்ளன. மலைகள் உள்ளன. ஆறுகளும் குளங்களும் கூட இருக்கின்றன.

இது இந்தியாவின் மற்ற கிராமங்களைப் போலவே உள்ளது. இங்குள்ள மக்களுக்கும் அவரவர்களின் சொந்த பிரச்னைகள் மற்றும் தேவைகள் உள்ளன. மற்ற கிராமங்களைப் போலவே இங்கும் மக்கள் நடமாட்டம் விடியற்காலையில் இருந்து தொடங்குகிறது. உபர்பேடாவில் பிறந்த திரௌபதி முர்மு இந்தியாவின் குடியரசுத்தலைவராக வரப்போகிறார் என்பதில்மட்டுமே இந்த கிராமம்,பிற கிராமங்களில் இருந்து தனித்து நிற்கிறது.

hospital closed in village
கிராமத்தில் உள்ள மருத்துவமனை

முர்மு ராய்ரங்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் முர்மு.

திரௌபதி முர்மு செய்திகளில் இடம்பெறுவது இது முதல் முறை அல்ல. ராய்ரங்பூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாகவும், ஒடிஷா அரசில் அமைச்சராகவும், ஜார்கண்ட் ஆளுநராகவும் அவர் பதவி வகித்துள்ளார். அவரது பிறந்தவீடு உபர்பேடா மற்றும் புகுந்த வீடு பஹாட்பூர் .இந்த இரண்டுமே அவரது சட்டமன்றத் தொகுதியான ராய்ரங்பூரில் உள்ளது.

அப்படி இருந்தும்கூட அவரது கிராமம் நாட்டின் மற்ற கிராமங்களைப் போலவே ஏன் உள்ளது? மின்சாரம், தண்ணீர், சாலைகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வங்கிகள் போன்ற அடிப்படை வசதிகளைப் பற்றி இங்குள்ளவர்கள் ஏன் பேசுகிறார்கள்?

Modi posters in the village
கிராமத்தில் மோதியின் பேனர்

“இங்கு வளர்ச்சியே ஏற்படவில்லை என்று சொல்லமுடியாது. திரௌபதி முர்மு எம்எல்ஏ ஆன பிறகு இங்கு சாலைகள் அமைக்கப்பட்டன. மின்சாரம் வந்தது. குடிநீர் குழாய்கள் போடப்பட்டன. கிராமத்திற்கு செல்லும் வழியில், கான்ஹு ஆற்றின் மீது ஒரு பாலம் கட்டப்பட்டது. கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டது. அரசின் பல்வேறு திட்டங்கள் வந்துள்ளன. இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது,”என்று உபர்பேடா கிராமத்தலைவர் கேலாராம் ஹன்ஸ்தா பிபிசியிடம் தெரிவித்தார்.

உபர்பேடா கிராமத்தலைவர் கேலாராம் ஹன்ஸ்தா
உபர்பேடா கிராமத்தலைவர் கேலாராம் ஹன்ஸ்தா

“உபர்பேடா ஒரு டிஜிட்டல் கிராமம், ஆனால் டிஜிட்டல் கிராமத்தில் இருக்க வேண்டிய எல்லா வசதிகளும் இங்கு இல்லை. ஒரு வங்கி இருக்க வேண்டும். கிராமத்தின் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், அதனால் குழந்தைகள் பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்க முடியும். கிராம மருத்துவமனையில் (PHC) 14 படுக்கைகள் அமைக்கப்பட வேண்டும்,”என்று அவர் மேலும் கூறினார்.

“இங்கு போதிய அளவில் டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.ஏனெனில் அரசு நடத்தும் 108 ஆம்புலன்சுக்காக காத்திருந்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்முன் நோயாளி உயிரிழக்க நேரிடும்.” என்றார்.

அருகில் உள்ள கல்லூரி 20 கிமீ தொலைவில் உள்ளது

உபர்பேடா கிராமத்திற்கு அருகிலுள்ள கல்லூரி இங்கிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உயர்கல்விக்காக கல்லூரிக்கு செல்லும் பெண்களே அதிகம் சிரமப்படுகின்றனர். அவர்கள் சைக்கிளிலோ அல்லது வேறு வழியிலோ கல்லூரிக்கு செல்ல வேண்டும்.

திரௌபதி முர்முவின் அண்டை வீட்டாரான ஜிங்கி நாயக் ஒரு பட்டதாரி. கல்லூரிக்கு செல்வது அவருக்கு மிகவும் கடினமான விஷயம்.

jingi

“கிராமத்தில் உள்ள சிறுவர்கள் தங்கள் பைக் அல்லது சைக்கிளில் கல்லூரிக்கு செல்கிறார்கள். ஆனால் நாங்கள் கல்லூரிக்கு செல்வது மிகவும் கடினமான பணி. முன்பு நான் கல்லூரிக்கு சைக்கிளில் சென்றேன். ஆனால் இப்போது நான் கிராமத்தில் இருந்து மெயின் ரோட் வரை சைக்கிள் ஓட்ட வேண்டும். பிறகு பஸ்ஸில் கல்லூரிக்கு செல்ல வேண்டும். என் கிராமத்திலேயே கல்லூரி இருந்திருந்தால், இந்த பிரச்னை வந்திருக்காது,”என்று அவர் அவர் பிபிசியிடம் கூறினார்.

“எங்கள் கிராமம் ஐந்து வார்டுகளைக் கொண்டது. அரசு கல்லூரியை திறக்கும் அளவுக்கு இங்கு மக்கள் தொகை அதிகம். இது உபர்பேடாவின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, சுற்றியுள்ள கிராமங்களின் குழந்தைகளுக்கும் உதவும். திரௌபதி முர்மு குடியரசுத்தலைவர் ஆனபிறகு இது நடக்கும் என்று நான் நம்புகிறேன்.”என்றார் அவர்.

தற்போது கிராமத்தின் ஒரு பகுதியில் மின்சாரம் வந்துள்ளது

உபர்பேடா கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் வந்துவிட்டது. ஆனால் கிராமத்தின் ஒரு பகுதியில் மட்டுமே சமீபகாலமாக மின் விளக்குகள் எரிகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி, திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியபோது இந்த பகுதிக்கு வெளிச்சம் வந்தது.

“கிராமத்தின் டுங்கிரிசாயி டோலாவில் மின் இணைப்பு இல்லை. இங்குள்ள சுமார் 35 வீடுகளை சேர்ந்த மக்கள் இரவுகளை விளக்கு வெளிச்சத்தில் கழிக்கின்றனர்,”என்று இங்கு எலக்ட்ரீஷியனாக பணிபுரியும் ஜெகந்நாத் மண்டல் பிபிசியிடம் கூறினார்.

ஜெகந்நாத் மண்டல்
ஜெகந்நாத் மண்டல்

மின்துறை அதிகாரிகள் இங்கு கடந்த மாதம் அவசர அவசரமாக மின்சாரம் சப்ளை செய்துள்ளனர். இப்போது வீடுகளில் மின்சாரம் உள்ளது. ஆனால் பல ஏழைகளுக்கு உறுதியான வீடுகள் இல்லை. பிளாஸ்டிக் கூரையின் கீழ் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

ஏன் அப்படி?

“உபர்பேடாவின் முக்கிய கிராமப்பகுதி ஏற்கனவே மின்மயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் மக்கள் வசிக்கத்தொடங்கிய கிராமத்தின் விரிவடைந்த சில பகுதிகளில் மின்சாரம் இல்லை,”என்று குசுமியின் வட்டார வளர்ச்சி அதிகாரி (BDO) லக்மன் சரண் சோரேன் பிபிசியிடம் கூறினார்.

“அங்கு புதிய வீடுகள் கட்டப்பட்டதால், மின்சாரம் வழங்க சிறிது காலம் பிடித்தது. இப்போது நாங்கள் எங்கள் வேலையின் வேகத்தை அதிகரித்துள்ளோம், இதன் மூலம் வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்த முடியும்,”என்று அவர் கூறினார்.

திரௌபதி முர்முவின் பள்ளிக்கூடம்

கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளியில், இந்த நாட்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. திரௌபதி முர்மு ஒரு காலத்தில் ஆரம்ப வகுப்புகளில் படித்த பள்ளி இதுதான்.

இங்கு பல புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் பள்ளியின் பின்புறம் ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் கூடிய அறைகள் உள்ளன. அங்கு திரௌபதி முர்மு படித்து வந்தார். அப்போது அதன் கூரை ஓலைகளால் வேயப்பட்டிருந்தது.

” முன்பு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஒரு பள்ளியும், ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கு மற்றொரு பள்ளியும் இருந்தன. பிற்காலத்தில், இரண்டு பள்ளிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளியாக உருவானது. இப்போது இங்கு ஏழாம் வகுப்பு வரை உள்ளது. திரௌபதி எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவி என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.”என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோரஞ்சன் முர்மு பிபிசியிடம் தெரிவித்தார்.

மனோரஞ்சன் முர்மு
மனோரஞ்சன் முர்மு

பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் தனுஸ்ரீ ஓரான், தனது சீனியர் திரௌபதி முர்மு நாட்டின் குடியரசுத் தலைவராக வரப்போகிறார் என்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். வளர்ந்தபின் இந்திய ராணுவத்தில் சேர அவர் விரும்புகிறார்.

திரெளபதி முர்முவின் பூர்வீக வீடு
திரெளபதி முர்முவின் பூர்வீக வீடு

எளிய குடும்பத்தில் பிறந்த திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு பிறந்த வீட்டின் கூரை ஓலையால் வேயப்பட்டிருந்தது. இப்போது அதன் வெளிப்புறத்தில் மஞ்சள் நிற உறுதியானவீடு உள்ளது. ஆனால் அந்த வீட்டில் இருப்பவர்கள் திரௌபதி முர்முவின் குழந்தைப் பருவத்தில் இருந்ததுபோலவே அறைகளை அதே நிலையில் வைத்திருக்கிறார்கள். இப்போது அவரது அண்ணன் மருமகள் துலாரி துடு இந்த வீட்டில் வசிக்கிறார்.

திரெளபதி முர்முவின் பள்ளிக்கால படம்
திரெளபதி முர்முவின் பள்ளிக்கால படம்

“திரௌபதியின் நினைவுகள் அப்படியே இருக்கும் வகையில் பழைய வீட்டை அதே வடிவத்தில் வைத்துள்ளோம். அவர் இங்கு வரும்போதெல்லாம் இந்த வீட்டைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். அவருக்கு ‘பகால்’ (தண்ணீரில் செய்யப்பட்ட சிறப்பு உணவு) மற்றும் ஆலு கா சோக்காவும் மிகவும் பிடிக்கும். அவர் குடியரசுத்தலைவராக ஆனபிறகு விரைவில் எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், நாங்கள் அவரை வரவேற்க விரும்புகிறோம். எங்கள் ஊர் மக்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர் குடியரசுத்தலைவராக ஆகப்போகிறார்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

குடியரசுத்தலைவர் ஆவார் என்று நினைக்கவில்லை

திரெளபதி முர்மு அவரது தாயாருடன்

ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளில் திரௌபதி முர்முவுக்குப் பாடம் கற்பித்த விஷேஷ்வர் மஹாந்தோவுக்கு இப்போது 82 வயது. சிறுவயதிலிருந்தே அவர் திறமைசாலி என்றும், ஓய்வு நேரத்தில் பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை அவர் படிப்பார் என்றும் கூறினார்.

“திரௌபதி பள்ளிக்கு சரியான நேரத்தில் வந்து எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில்களை சொல்வாள். அவளுக்கு எதாவது விளங்கவில்லை என்றால், கேள்விகளைக் கேட்பாள். அவள் படித்து ஒரு நல்ல அதிகாரியாக வருவாள் என்று நான் நினைத்தேன். ஆனால் அவள் குடியரசுத்தலைவராக வருவாள் என்று நினைக்கவில்லை. இப்போது அவள் ஒரு புதிய சரித்திரத்தையே எழுதிவிட்டாள்.”என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

நண்பர்களின் நம்பிக்கை

உபர்பேடா கிராம மக்களின் மகிழ்ச்சி மற்றும் அடிப்படை வசதிகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில், முக்கிய பிரச்னைகள் பற்றிப்பேசும் சிலரும் உள்ளனர். இவர்களில் கோவிந்த் மஞ்சியும் ஒருவர். இவரும் திரௌபதி முர்முவும் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளனர். அவர் முர்முவின் பால்ய நண்பர்.

கோவிந்த் மஞ்சி மற்றும் அவரது மனைவி

கோவிந்த் மஞ்சி மற்றும் அவரது மனைவி

“நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத்தலைவராக அவர் ஆகப்போகிறார். இதைவிட பெருமைதரும் விஷயம் வேறு எதுவும் இல்லை. இந்த பதவிக்கு வந்த பிறகு அவர் அரசியலமைப்பில் பழங்குடியினருக்கென சர்னா மத தனிச்சட்டத்தை உருவாக்கி, பழங்குடி மொழிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று பிபிசியிடம் அவர் கூறினார்.

கிராமத்தின் மகள் குடியரத்தலைவர்

உபர்பேடா மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கு மத்தியில், அந்த கிராமத்தின் மகள் நாட்டின் குடியரசுத்தலைவராக வரப் போவது குறித்து அங்கு பண்டிகை சூழல் நிலவுகிறது.

Previous Story

தேஜாவு - திரைப்பட விமர்சனம்

Next Story

தப்புக் கணக்கால் ஏமாற்றம்!