குஜராத் தேர்தல்: இந்து வாக்குகளை கவர்ந்து எம்எல்ஏ ஆன முஸ்லிம் – யார் இவர்?

நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத்தின் ஒரே முஸ்லிம் எம்எல்ஏ இம்ரான் கேடாவாலா, ஆமதாபாத்தின் ஜமால்பூர் கடியா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் இந்த தொகுதி ‘பாஜகவின் கோட்டை’ எனக் கருதப்பட்டது.

ஆனால் இம்ரான் கேடாவாலா கடந்த இரண்டு தேர்தல்களிலும் இங்கிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொகுதி மறு வரையறைக்குப் பிறகும், ‘பாஜகவின் கோட்டை’ என்று கருதப்பட்ட இந்த சட்டப்பேரவைத் தொகுதியை 2012 ஆம் ஆண்டும் பாஜக வென்றது, ஆனால் 2017 முதல் காங்கிரஸ் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று வருகிறது.

தொகுதி மறு வரையறைக்குப் பிறகு, ஜமால்பூர்-கடியாவில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் முஸ்லிம் வேட்பாளர் சுயேச்சையாக நின்றதால் பாஜகவின் பூஷண் பட் வெற்றி பெற்றார்.

இந்த முறை நான்கு முனை போட்டியில் பாஜகவின் பூஷண் பட், காங்கிரஸின் இம்ரான் கேடாவாலா, அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சியின் சபீர் காப்லிவாலா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அருண் வோரா ஆகியோர் இந்தத் தொகுதியில் போட்டியிட்டனர்.

இங்குள்ள முஸ்லிம் வாக்காளர்களை கவர, கடைசி நிமிடம் வரை அசாதுதீன் ஒவைசி பிரசாரம் செய்தார்.

பில்கிஸ் பானோ பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த கைதிகள், அவர்களின் தண்டனை காலத்துக்கு முன்பே நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டது மற்றும் குஜராத் கலவரம் தொடர்பான பிரச்னைகளையும் ஓவைசி உரத்த குரலில் எழுப்பினார்.

கொரோனா கால உதவிக்குப் பலன்

இம்ரான் கேடாவாலா மொத்தம் 58,487 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் பூஷன் பட் 44,649 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில் ஒவைசி கட்சியின் சபீர் காப்லிவாலா 15,655 வாக்குகள் பெற்றார்.

அசாதுதீன் ஓவைசியின் பிரசாரம் இங்கு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று சுட்டிக்காட்டிய காங்கிரஸ் தலைவர் ஜகத் சுக்லா, “ஜமால்பூர்-கடியா தொகுதியில் 85 சதவிகிதத்திற்கும் அதிகமான படித்த வாக்காளர்கள் இருப்பதால் ஒவைசியின் கண்ணீர் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை” என்று கூறினார்.

சொல்லப்போனால் இந்தப் பகுதியில் இந்து-முஸ்லிம் ஒருமுனைப்படுத்தல் அதிகம் இல்லை.

2017இல் இம்ரான் கேடாவாலாவுக்கு எதிராக எந்த சுயேட்சை வேட்பாளரும் நிற்காததால் அவருக்கு பலன் கிடைத்தது. ஆனால் இம்முறை நான்குமுனை போட்டி மற்றும் நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் இருந்தபோதிலும் அவர் வெற்றி பெற்றார்.

கொரோனா நெருக்கடியின் போது மக்களுக்கு உதவுவதில் சிறப்பாகச் செயல்பட்டதே இம்ரான் கேடாவாலாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் என்று கூறப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று காலகட்டத்தில் மக்களுக்கு அவர் உதவியபோது அவரும் அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டார். இது உள்ளூர் மக்களால் நினைவுகூரப்படுகிறது.

பிபிசி குஜராத்தியிடம் பேசிய ஜமால்பூரை சேர்ந்த ரசாக் மன்சூரி, கொரோனா காலத்தில் கேடாவாலா செய்த பணிகளை நினைவு கூர்ந்தார்.

”ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த மாநகராட்சி தேர்தலில் ஓவைசியின் கட்சிக்கு வாக்களித்து காங்கிரஸை தோற்கடித்தோம். ஆனால் இம்ரான் கேடாவாலா கடினமான காலங்களில் எங்களுக்கு ஆதரவாக நின்றார். கொரோனா தொற்றுநோய் காலத்தில் மட்டுமல்ல, நாங்கள் பசியுடன் இருந்த நெருக்கடி நேரங்களிலும் ரொட்டிக்கு மாவு, உருளைக்கிழங்கு, வெங்காயம் கொடுத்து உதவி செய்தார். அதனால்தான் இந்த முறை அவருக்கு வாக்களிக்க முடிவு செய்தோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இம்ரான் கேடாவாலாவின் வெற்றியை ஆய்வு செய்த அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளர் ஏஃபுஸ் திர்மிசி, “ஆரம்பத்தில், இம்ரான் கேடாவாலாவின் வெற்றி கடினமாகத் தோன்றியது. சபீர் காப்லிவாலா அவரது பாரம்பரிய அரசியல் எதிரி. இம்ரான் கேடாவாலாவை போலவே அவரும் ஒரு முஸ்லிம்தான்,” என்று குறிப்பிட்டார்.

”ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் ஒரு முஸ்லீம் வேட்பாளர்தான் களத்தில் இருந்தார். இந்த நிலையில் முஸ்லிம் வாக்குகள் பிளவுபடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தன. மேலும் பாஜகவின் இந்து வாக்குகள் முழுவதும் அக்கட்சிக்குச் சென்றிருந்தால், 2012ஆம் ஆண்டைப் போலவே பாஜக வெற்றி பெறுவதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தன,” என்று அவர் குறிப்பிட்டார்.

தட்டச்சராக பணியைத் தொடங்கினார்

ஜமால்பூரை சேர்ந்த சமூக சேவகரும் பின்னர் எம்.எல்.ஏ ஆனவருமான உஸ்மான்கனி தியேவடிவாலாவிடம் தட்டச்சு பணி செய்பவராக 1993இல் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கிய இம்ரான் கேடாவாலா, அவரிடமிருந்து அரசியலை கற்றுக்கொண்டார்.

அவர் தியேவடிவாலாவால் மிகவும் ஈர்க்கப்பட்டார். சமூக சேவை செய்வதற்காக திருமணம் செய்துகொள்வதில்லை என்றும் இம்ரான் முடிவு செய்தார்.

இம்ரான் கேடாவாலாவின் வாழ்க்கையை உன்னிப்பாகப் கவனித்து வரும் ஆமதாபாத்தைச் சேர்ந்த குஜராத் டுடே நாளிதழின் இணை ஆசிரியர் அமல்தார் புகாரி, “ஜமால்பூரில் இருந்து சுயேச்சை எம்எல்ஏவாக இருந்த உஸ்மாங்னி தியேவடிவாலாவிடம் இம்ரான் கேடாவாலா பணிபுரிந்தார்,” என்றார்.

குஜராத் \

”சங்கர் சிங் வகேலாவுக்குப் பிறகு திலீப் பாரிக் ஆட்சிக்கு வந்தபோது அவர் அமைச்சரானார். 1998இல் தியேவடிவாலா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குள் இம்ரான் கேடாவாலாவும் தனது சமூக சேவையால் பிரபலமானார். மாநகராட்சி தேர்தலில் தியேவடிவாலாவின் ஆதரவுடன் சுயேட்சையாகப் போட்டியிட்டார். அதில் வெற்றியும் பெற்றார்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இம்ரான் கேடாவாலா ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர். இந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

“சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் காங்கிரஸில் சேர்ந்தார். அவரது பிரபலத்தைப் பார்த்து, காங்கிரஸ் அவரை முனிசிபல் ஹெல்த் கமிட்டி மற்றும் சட்டக் குழுவின் தலைவராகவும் ஆக்கியது,” என்று இம்ரான் கேடாவாலாவின் அரசியல் பயணம் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பிரகாஷ் ராவல் குறிப்பிட்டார்.

அகமது படேலின் ஆதரவு

“இம்ரானின் அரசியல் வழிகாட்டியான உஸ்மான்கனி தியேவடிவாலா 2003 ஆகஸ்டில் காலமானார். இடைத் தேர்தலில் தன்னை நிறுத்துமாறு இம்ரான் காங்கிரஸிடம் கேட்டார். ஆனால் சபீர் காப்லிவாலாவுக்கு காங்கிரஸ் டிக்கெட் கொடுத்தது. அந்த இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். இங்கிருந்து இருவருக்கும் இடையிலான அரசியல் பகை தொடங்கியது,” என்று பிரகாஷ் ராவல் கூறுகிறார்.

”2005ஆம் ஆண்டு இம்ரான் கேடாவாலாவுக்கு மாநகராட்சித் தேர்தலில் சீட்டு கொடுக்கக் கூடாது என்று சபீர் காப்லிவாலா வற்புறுத்தினார். ஆனால் காங்கிரஸ் டிக்கெட் கொடுத்து அவர் வெற்றி பெற்றார்.”

“இம்ரான் கேடாவாலா மீண்டும் 2007 இல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு டிக்கெட் கேட்டார். ஆனால் காங்கிரஸ் சபீர் காப்லிவாலாவை தேர்வு செய்தது. அதில் அவர் வெற்றி பெற்றார்,” என்று பிரகாஷ் ராவல் தெரிவித்தார்.

பின்னர் நடந்த மாநகராட்சி தேர்தலில் பிரபல கவுன்சிலராக இருந்தும் இம்ரான் கேடாவாலாவுக்கு டிக்கெட் கொடுக்க சபீர் காப்லிவாலா மறுத்துவிட்டார். பிறகு இம்ரான் கேடாவாலா சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

“2012இல் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில், தொகுதி மறு வரையறைக்குப் பிறகு சமீர் கான் பட்டானுக்கு, காங்கிரஸ் டிக்கெட் கொடுத்தது. அப்போது சபீர் காப்லிவாலா கிளர்ச்சி செய்து சுயேட்சையாக போட்டியிட்டார். முஸ்லிம் ஓட்டுகள் பிரிந்து, பாஜக வெற்றி பெற்றது,” என்று பிரகாஷ் ராவல் கூறினார்.

இம்ரான் கேடாவாலாவின் வலுவைக் கண்டு அகமது படேல், 2017ஆம் ஆண்டு தேர்தலில் ஜமால்பூர் கடியாவில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளித்தார். அதில் அவர் வெற்றி பெற்றார்.

இருப்பினும் அவரது அரசியல் எதிரியான சபீர் காப்லிவாலா அவருக்குத் தொடர்ந்து சிரமங்களை அளித்து வந்தார்.

இன்னும் திருமணம் ஆகவில்லை

காப்லிவாலா ஒவைசியுடன் கைகோர்த்தார். ஆனால் இறுதியில் கேடாவாலா வெற்றி பெற்றார். இந்த எல்லா விஷயங்கள் தொடர்பாகவும் சபீர் காப்லிவாலாவின் கருத்தை அறிய பிபிசி குஜராத்தி முயன்றது. ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

பிபிசி குஜராத்தி இம்ரான் கேடாவாலாவை சந்தித்தது. தனது வெற்றிக்காக தன் ஆதரவாளர்கள் செய்த வேண்டுதல்களை நிறைவேற்ற கோவில்-தர்கா-மசூதிக்கு செல்வதில் அவர் மும்முரமாக இருந்தார்.

அசாதுதீன் ஒவைசி

அவர் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்டதற்கு, “இப்போது எனக்கு வயதாகிவிட்டது, நான் மக்கள் சேவையை திருமணம் செய்து கொண்டேன். நான் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை,” என்று புன்னகையுடன் பதிலளித்தார்.

குஜராத்தின் ஒரே முஸ்லிம் எம்.எல்.ஏ என்ற நிலையில் தனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றிப் பேசிய அவர், ” ஒரே முஸ்லிம் எம்.எல்.ஏ என்பதால் என் பொறுப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால் நான் முஸ்லிம்களுடன் கூடவே தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கும் சம முன்னுரிமை அளிப்பேன்,” என்று தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் ஏற்பட்ட சிரமங்கள் குறித்துப் பேசிய அவர், ”சிரமங்கள் இருந்தன. ஆனால் முஸ்லிம் மற்றும் இந்து வாக்காளர்கள் எனக்கு சேவை செய்ய மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

“பாஜக அலை இருந்தது. இந்தத் தொகுதியிலும் பாஜக வென்றிருக்கும். ஆனால் எங்கள் தொகுதியில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வரவில்லை. இல்லையெனில் இந்தத் தொகுதியில் பாஜக கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும்,” என்கிறார் இந்தத் தொகுதியில் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் பூஷண் பட்.

Previous Story

இனப்பிரச்சினை தீர்வு : முஸ்லீம்கள் தனித்தரப்பாக பங்கேற்க வேண்டும்!

Next Story

திடீரென பாடசாலையை சுற்றிவளைத்த பொலிஸார்