குஜராத்தில் பாஜக, இமாச்சலில் காங்கிரஸ்: தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள்  என்ன?

குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகியவற்றின் சட்டப்பேரவைகளுக்கு நடந்த வாக்குப்பதிவுக்குப் பிந்தைய தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதில் பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

குஜராத் மோதி

ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரசாரம் செய்தாலும், 10 இடங்களுக்கும் குறைவாகவே வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. அதன் முடிவுகளுக்காக குஜராத் மாநிலம் இப்போது ஆவலுடன் காத்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோதி, தனது தாயார் ஹீராபென் மோதி, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தங்களுடைய குடும்பத்தினருடன் தங்கள் சொந்த மாநிலத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு திங்கட்கிழமை சென்று வாக்களித்தனர்.

அந்த மாநிலத்தில் 27 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

அக்கட்சி இப்போது தனது ஏழாவது முறை ஆளுகையை தொடரும் ஆர்வத்தில் இருக்கிறது. அது எளிதாவதுடன் அந்த கட்சி அதிக இடங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெறும் என்றும் பல நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

குஜராத் தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோதி சொந்த மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட தேர்தல் பேரணிகளில் கலந்து கொண்டார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

தேர்தல்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தங்கள் தேசிய தடத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் குஜராத் மாநிலத்தில் தேர்தல் களம் கண்டது. அந்த கட்சியினர் விரிவான பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில்

“காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்படலாம்”

இதற்கிடையே, பாரத் ஜோடோ யாத்திரை மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் நடத்தி மக்களின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் கட்சி முயன்று வருகிறது.

அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய பிரசாரம் தெற்கு, வட மாநிலங்கள் வழியாக நடந்து வருகிறது. இவற்றுக்கு இடையே ராகுல் காந்தி குஜராத் மாநில தேர்தல் பரப்புரைக்கும் சில முறை சென்றிருந்தார்.

ஆனால், குஜராத்தில் காங்கிரஸ் கட்சி மேலும் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது என்கின்றன, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள். இதன்படி 2017ஆம் ஆண்டை கிடைத்த வெற்றியை விட இம்முறை காங்கிரஸின் இடங்கள் குறையக்கூடும் என்றும் அவை தெரிவிக்கின்றன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல நிறுவனங்களும் நடத்தியபோதும் அவற்றில் முக்கியமானவை ஆக கருதப்படும் நான்கு நிறுவனங்களின் கணிப்பை இங்கே வழங்குகிறோம்.

குஜராத் மோதி

ஆஜ்தக்-ஆக்சிஸ் மை இந்தியா

பாரதிய ஜனதா கட்சி 129 – 151 இடங்கள் வரையும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 30 இடங்கள் வரையும் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி 9 – 21 இடங்களிலும் மற்றவை 2-6 இடங்களிலும் வெல்லலாம் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.

நியூஸ் எக்ஸ் – ஜான் கி பாத்

இந்த கருத்துக் கணிப்பில் பாஜக 117 – 140 இடங்களிலும் காங்கிரஸ் 34 – 51 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 6-13 இடங்களிலும் மற்றவை1-2 இடங்களிலும் வெல்லலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவி பி-மார்க்

இந்த நிறுவனங்களின் கருத்துக் கணிப்பில், பாஜக 128-148 இடங்களிலும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 30-42 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 2-10 இடங்களிலும் மற்றவை 0-3 இடங்களிலும் வெல்லலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா

டிவி9 குஜராத்தி

இந்த தொலைக்காட்சி தனித்து நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜக 125-130 இடங்களிலும் காங்கிரஸ் 40-50 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 3-5 இடங்களிலும் மற்றவை 3-7 இடங்களிலும் வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய தேர்தலில் என்ன நிலை?

குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் திங்கட்கிழமை நடைபெற்றது.

முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் 285 சுயேச்சைகள் உட்பட 832 வேட்பாளர்களின் தேர்தல் தலைவிதியை தீர்மானிக்கும் இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

2017ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களிலும் காங்கிரஸ் 77 இடங்களிலும் வென்றன. பிறர் 6 இடங்களில் வென்றிருந்தனர்.

இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் முடிவு, டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும்.

2017இல் இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 44 இடங்களிலும் காங்கிரஸ் 21 இடங்களிலும் வென்றிருந்தன.

இந்த மாநிலத்துக்கான ஆஜ் தக்-ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக 24-34 இடங்களிலும் காங்கிரஸ் 30-40 இடங்களிலும் மற்றவை 4-8 இடங்களிலும் வெல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஏபிபி-சிஓட்டர் கருத்துக்கணிப்பில், பாஜக 33-41 இடங்களிலும் காங்கிரஸ் 24-32 இடங்களிலும் மற்றவை 0-4 இடங்களிலும் வெல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்தியா டிவி-மேட்ரிஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜக 35-40 இடங்களிலும் காங்கிரஸ் 26-31 இடங்களிலும் மற்றவை 0-3 இடங்களிலும் வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் 24 – டுடேஸ் சாணக்கியாவின் கருத்துக் கணிப்பில், பாஜக 33 இடங்களிலும் காங்கிரஸ் 33 இடங்களிலும் மற்றவை 2 இடங்களிலும் வெல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

Previous Story

உள்ளேயும் வெளியேயும் கோமாளிகள்!

Next Story

பாபர் மசூதி இடிப்பு நாள் டிசம்பர் 6: அயோத்தி பாபர் மசூதியை இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி? நேரில் படம் பிடித்தவரின் அனுபவங்கள்