காலடிக்கே வந்து நிற்கும் நெருக்கடி

-நஜீப் பின் கபூர்-

நாட்டுக்கு மிகவும் நெருக்கடியான ஒரு காலம் வர இருக்கின்றது என்று நாம் நெடுநாளாக மக்களை எச்சரித்து வந்தது நமது வாசகர்கள் அனைவருக்கும் தெரியும். அதோ வருகின்றது இதோ வருகின்றது என்றும் அடிக்கடி எச்சரித்தும் வந்தோம். இன்று, இப்போது அந்த நெருக்கடி எமது கால்களுக்குக் கீழேயே வந்து நிற்க்கின்றது.

இந்த வாரம் காலடியில் இருக்கின்ற நெருக்கடிகளைப் பற்றி பேசுவோம். அதற்கு முன்னர் இந்த நாட்டு நெருக்கடிகளை நாம் எப்படி வாங்கிக் கொண்டோம். அல்லது நமது தலைகளில் நாமே மண்ணை வரிப் போட்டுக் கொண்டது போல இது எப்படி நடந்தது என்றும் சற்றுப் பார்ப்போம்.

சுருக்கமாகச் சொல்வதானால் உலகில் கடனிலே வாழ்ந்து அந்தக் கடனிலே கொள்ளையடித்தும் கமிஷன் வாங்கியும் கடனாலேயே உலகில் மூழ்கி அழிவைத் தேடிக் கொண்ட ஒரு நாட்டுக்கு முன்னுதாரணமாக நாம் இன்று உலகத்தாரால் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இதில் வினோதமான கதை என்னவென்றால் கடனில் மூழ்கிப் போய் இருக்கின்ற நாம் நீரில் மூழ்கிப் போகும் இறுதி  நேரத்தில் ஒருவன் கரங்களை தூக்குகின்ற அந்த நேரத்தில் கூட கடன் கடன் டொலர் டொலர்… என்றுதான் நாடு கையை உயர்த்திக் கொண்டிருக்கின்றது என்றுதான் இதனைச் சொல்ல வேண்டி இருக்கின்றது.

1948 க்குப் பின் நமது அரசியல் தலைவர்கள் இன்று வரை நமக்கு காட்டி வந்த ஆசை வார்த்தைகளையோ ஏமாற்றுக் கதைகளையோ நாம் இங்கு  மீண்டும் மீண்டும் பேச வரவில்லை.

அதனை பல முறை சொல்லி வந்திருக்கின்றோம். ஆனால் நாடு மூழ்கிப் போகின்ற இந்த நேரத்திலும் நயவஞ்சக அரசியல் இன்னும் எப்படி நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது என்பதனை ஒரு முறை பார்ப்போம்.

பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ஜீ.ஆர். உரையாற்றுகையில் வழக்கம் போல ஏதும் புதிதாக அதில் இருக்கவில்லை. மாறாக முன்னுக்குப் பின் முரனான தகவல்கள்தான் அங்கே அதிகம் இருந்தன. அவரும் மக்கள் என்ன துயரங்களை சொல்லி இன்று ஒப்பாறி வைக்கின்றார்களோ  அதனைத்தான் ஜனாதிபதியும் தனது உரையில் சொல்லி இருந்தார். ஆனால் அவர் அதற்கான தீர்வுகளைத்தான் நமக்குச் சொல்லி இருக்க வேண்டும் ஆனால் அந்த உரையில் அது இடம் பெற்றிருக்கவில்லை.

மத்திய அதிவேக பாதையை மீரிகம-குருனாகல பகுதியைத் திறந்து வைத்து ஜனாதிபதி கரசாரமாக பேசி இருந்தார். தன்னால் கடந்த இரு வருடங்களாக எதிர்பார்த்த எதையும் கொரோனாவால் சரிவரச் செய்ய   முடியவில்லை. என்றாலும் எஞ்சி இருக்கின்ற மூன்று வருடங்களில் தான் நாட்டு மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் செய்து முடிப்போன்…. முடிப்பேன்…. முடிப்பேன்…. என்னை நம்புங்கள் என்று அழுத்தமாக அடித்தக் கூறி இருந்தார். ஆனால் அதற்கான பின்னணி அரவே நாட்டில் கிடையாது என்று நாங்ளும்; அடித்துச் சொல்கின்றோம். எனவே மக்கள் திரும்பத் திரும்ப ஏமாறுவதைத் தவிர்த்துக் கொள்வது பாதுகாப்பாக இருக்கும் என்று நாம் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

ஜனாதிபதியின் உரையில் இனவாதம் இனப்பாகுபாடு கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது. அதே நேரம் நாட்டில் மிகப் பெரிய இனாவதியும் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியாக இருந்தவர் என்றவகையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழுவே பரிந்துரைத்திருந்த ஞானசாரர்தான் இன்று ஒரே நாடு ஒரே சட்டம் இயற்றுவதற்கும் தலைவர் என்ற நிலை. அப்படிப் பட்டவர்களுக்குதான் நீதியை வடிவமைக்கின்ற முக்கிய பொறுப்பை இதே ஜனாதிபதி கையளித்திருக்கின்றார். எனவே இது முன்னுக்குப்பின் முரனான ஒரு செயலாக ஜனாதிபதிக்கு புரியாமல் இருப்பது ஏனோ?

ஜனாதிபதி உரையில் தனது காலத்தில் மனித உரிமைகள் ஒரு போதும் இங்கு மீறப்பட வில்லை என்றும் சொல்லி இருந்தார். இது ஜெனிவாவுக்கு காட்டிய பச்சைக் கொடி என்றுதான் நாம் பார்க்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அந்த வார்த்தை யதார்த்தமானதல்ல. பதவியில் இருக்கின்ற அரசு இனவாத்ததை முன்னிருத்தித்தான் அதிகாரத்தைப் பிடித்தது. இப்போது அவர்கள் இனவாதம் கூடாது என்று சொல்வதை எப்படி நம்பிக்கையுடன் நாம் பார்க்க முடியும்? உலகம் எப்படி இதனை நம்பும் என்றும் கேட்கத் தோன்றுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி உரையாற்றும் போது தனது காலத்தில் ஒரு சதம் கூட கடன் வாங்கவில்லை என்றும பேசி இருந்தார். அதே நேரம் அவரது அரசாங்கத்தில் உள்ள கடன்கள் தொடர்பான தகவல்களைப் தேடிய போது இந்த ஜனாதிபதி பதவியேற்றது முதல் 2021 நவம்பர் வரை 1411 கோடி அமொரிக்க டொலர்கள் கடன் பெறப்பட்டிருக்கின்றதாம். இதன் இன்றைய பெருமதி 352750 கோடி  ரூபாய்கள் எனத் தகவல் கிடைத்திருக்கின்றது. இதில் ஒரு சதம் கூட திருப்பிச் செலுத்தப்பட்டிருக்க வில்லை என்றும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதிக்கு பேச்சுக்களைத் தயாரித்துக் கொடுக்கின்றவர்கள் இது விடயத்தில் அவதானம் செலுத்தி இருந்தால் அவரது பேச்சு விமர்சிக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ள முடியும். அதே போன்று 1000ம் தேசிய பாடசாலைகள் தொடர்பான தகவல்களை ஜனாதிபதி சொல்லுகின்ற போதும் எண்ணிக்கையில் குழறுபடிகள்-தவறுகள் இருக்கின்றன. ஜனாதிபதிக்கு பேச்சுக்களைத் தயார் செய்து கொடுப்பவர்கள் இது விடயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இவர்கள் ஜனாதிபதியை ஒரு கோமாளியாக்கி விடுகின்றார்கள்.

சில தினங்களுக்கு முன்னர் ஆளும் தரப்பிலுள்ள அமைச்சர்களே எதிரணியில் உள்ளவர்கள் போல் ஒருவரை எதிர்த்து மற்றெருவர் கருத்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். டொலர் தந்தால்தான் என்னால் எரிபொருள் தரமுடியும் என்றார் அமைசச்ர் உதய கம்மன்பில. அவர் நேரடியாக நிதி அமைச்சர் பசிலுக்குத்தான் கை நீட்டி இருந்தார். எரிபொருள் தந்தால்தான் தன்னால் மின்சாரம் தரமுடியும் என்று மின்சாரத்துக்குப் பொறுப்பான அமைசர் காமினி லொக்குகே. குடிநீர் தருவதாக இருந்தால் தனக்கு மின்சார சப்ளை வேண்டும் என்றார் அமைச்சர் வாசுதேவ நாணயக்க.

இவர்கள் ஏதோ வேறு வேறு அரசாங்கங்களில் இருப்பவர்கள் போல்தான் ஊடகங்கள் முன் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இது எவ்வளவு தூரம் கேவலமான ஒரு  செயல். இந்த இடத்திலும் சரியான தலைமைத்துவம் நாட்டில் இல்லை என்பது தெளிவாகின்றது. இந்த செயல்பாடுகளும் ஜனாதிபதி ஜீ.ஆர். நிருவாக குறைகளைத்தான் சுட்டிக் காட்டுகின்றது.

பொரளை தேவலய கைக்குண்டு சம்பவம் பொலிஸ் திணைக்களத்துக்கு பெரிய அவமானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. தீப் பெட்டியில் சில குச்சிகள் காணாமல் போய் இருந்ததை வைத்து தேவாலய ஊழியர் தலையில் குற்றம் சுமத்தியது எந்தளவு பெரிய வேடிக்கையான செயல். நீதி மன்றம் கைது செய்யப்பட்டவரை விசாரிக்க முன்னரே பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேக்கரவும் பொலிஸ் அதிபரும் கூட குற்றவாளியை என்று அந்த நபரை பகிரங்கப்படுத்தி தீர்ப்புச் சொல்லி இருந்தனர்.

இப்போது இவை எல்லாம் நாடகங்கள்-சுத்தப் பொய் என்று தெரிய வந்த போது உயர் பதவிகளை வகின்றவர்கள் இது விடயம் தொடர்பாக இன்னும் ஊடகங்கள் முன் வந்து பேசுவது எந்த முகத்தை வைத்துக் கொண்டு என்று கேட்கத் தோன்றுகின்றது.

கடந்த வாரம் ஈஸ்டர் தாக்குதலுக்கு 1000 நாட்கள்  நிகழ்வுகளை பேரயர் அறிவித்த போது அதில் அச்சத்தை உண்டு பண்ணி அந்த ஏற்பாடுகளைக் குழப்புவதற்குத்தான் இந்த ஏற்பாடுகள் என்பதுதான் இப்போது ஊகிக்க வேண்டி இருக்கின்றது.

ஈஸ்டர் தாக்குதலை பயன் படுத்தி அதிகாரத்துக்கு வந்தவர்கள் இன்றும் குண்டுகளைக் காட்டி மக்களை அச்சுறுத்தி தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க முனைவதையே இதுவும் காட்டுகின்றது.

பிறப்பிலும் இறப்பிலும் வாழ்விலும் சாவிலும் மக்களின் பணத்தை எப்படிக் கொள்ளையடித்து பணம் சேர்க்கலாம் என்று இருந்த நமது அரசியல்வாதிகளுக்கு இப்போது அதற்கான மார்க்கங்கள் அடைபட்டுப் போய் இருக்கின்றன. அதனால் அவர்களும் இப்போது தலைவர்களுக்கு கடைக்குப் போவதை மட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியா தமது பிராந்திய வல்லாதிக்கம் காரணமாக தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்றது. சீன அரிசியை இலவசமாக அள்ளிக் கொடுக்கின்றது இந்திய எரி பொருட்களுக்கு வழிகளை செய்து கொடுத்திருக்கின்றது. ஆனால் இது தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கக் கூடிய ஒரு காரியம் அல்ல.

இலங்கைக்கு ஏற்பட்டிருக்கின்ற பேராபத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளிப் போட முடியுமே அல்லாமல் இது ஆபத்தை துடைத்தெரிய உதவாது. நோயாளிக்கு சீனாவும் இந்தியாவும் சேலாயின் கொடுத்து வருகின்றார்களே அல்லாமல் நோயாளிக்கு அவர்கள் மருந்து கண்டறியவில்லை அது அவர்களுக்குத் தேவையுமில்லை.

டொலர் இல்லை அதனால் பொருட்களின் இறக்குமதியுமில்லை. எரி பொருள் இல்லை வாகன ஓட்டமும் முடங்கும். மின்சாரமும் இல்லை. அதனால் குடிநீர் சப்ளையும் கிடையாது. உணவு, மருந்து, பால், மரக்கறி எரிவயு எல்லாமே இல்லை இல்லை.

அரசு டொலருக்காக இப்போது பெருமதிமிக்க காணிகளை வெளி நாடுகளுக்கு விற்கத் தயாராகி வருகின்றது. இயற்கை வளங்களை அரசியல்வாதிகளும் அவர்களின் கையாட்களும் முடிந்த வரை சூரையாடிக் கொண்டிருகின்றார்கள்.

பிச்சைக்காரன் கண்டவரிடம் எல்லாம் காசு காசு என்று கை நீட்டவது போல இப்போது கடன் கடன் என்று நமது இலங்கை அரசு கெஞ்சிக் கொண்டு உலகம் பூராவும் சுற்றித் திரிகின்றது. மறுபுறத்தில் இலங்கை கொடுக்கின்ற கடனை திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் இருக்கின்ற நாடு என்று சர்வதேச நிறுவனங்கள் எச்சரித்து வருகின்றன. எனவே கடன் தருவதற்கும் நமக்கு நாடுகள் கிடையாது.

நமது சந்ததியினருக்கு என்னதான் மிச்சம் இருக்கின்றது? இரவில் இருளில் பகலில்  கியூவில்.! பிள்ளைகளோ பாலுக்கும் சாப்பாட்டுக்கும் பெற்றோர்களிடத்தில் கதறும் நிலை. அப்பாக்கள் அம்மாக்கள் தெருவில் ஓடித்திரிகின்ற காட்சிகள்தான் இப்போது இங்கு நடக்க இருக்கின்றன.

இப்போது பல இலட்சம் பேர் இரவு சாப்பாடு இன்றி பட்டினியில் படுக்கைக்குச் செல்கின்றார்கள் என்று ஆளும் தரப்பில் உள்ளவர்களே பகிரங்கமாக பேசி வருகின்றார்கள்.

ஆனாலும் ஆளும் தரப்போ இது உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இன்று உள்ள நிலமை இது நமக்கு மட்டுமல்ல என்று சொல்லி சமாளிக்கின்றார்கள். ஆனால் இது உண்மை அல்ல. கொரோனாவுக்குள்ளும் நாடுகள் தமது இருப்பை உறுப்படுத்தி வந்திருக்கின்றன. அவர்களிடம் தமது மக்களுக்குத் தேவையான அன்னியச் செலவாணி கையிருப்பில் இருக்கின்றன.

இதனால்தான் இந்திய, சீனா பங்களதேஷ் போன்ற நாடுகள் நமக்குக் கடன் கொடுக்கின்ற நிலையில் இருக்கின்றன. அங்கெல்லாம் இந்த நிலை என்றால் அவர்கள் எப்படி எமக்கு கடன் தருவது.? தந்த கடன்களுக்கு வேறு கால நீடிப்பும் அவர்கள் வழங்கி இருக்கின்றார்களே அது எப்படி.?

பொருளாதார கொலையாளி என்று அழைக்கப்பட்டு வந்த ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர பதவி விலகி அந்த இடத்துக்கு காமினி செனரத் நியமனம் பெற்றிருக்கின்றார். பதவி விலகிய பீ.பி. புத்தகம் எழுதப் போகின்றாராம்.

அந்தப் புத்தகத்தில் தனது பொருளாதாரக் கொலைகள் பற்றி எழுதப் போகின்றாரா? அல்லது தான் பதவியில் இருந்து விரட்டியடிக்கப் பட்ட கதை சொல்லப் போக்கின்றாரா என்பது புத்தகத்தை முடிக்கின்ற நேரம் அப்போது பதவியில் இருக்கின்ற ஆட்சியாளர்களைப் பொருத்துத்தான் அமையும் என்று நாங்கள் நினைக்கின்றோம். அதுதானே அரசியல்.!

புதிதாக நியமனம் பெற்றவர் பிரதமர் எம்.ஆரின் செயலாளர். அவர் பிரதமரிடமும் பதவி பார்த்துக் கொண்டு ஜனாதிபதியிடத்திலும் பதவி வகிப்பதால் இருவரையும் சமாளித்துக் கொள்ள முடியுமாக இருக்கும்.

என்னதான் இருந்தாலும் டொலர் சீரோவாக இருக்கின்ற ஒரு நாட்டில் எவரும் வெற்றிகரமான ஜனாதிபதி செயலாராக காரியம் பார்ப்பது மிகவும் நெருக்கடியான வேலையாகத்தான் இருக்கும் என்று நாம் கருதுகின்றோம். பீ.பி. கூட நாட்டில் என்னதான் நடக்கின்றது என்று தனக்கே புரியவில்லை என்று சொல்லிவிட்டுப் போய் இருக்கின்றார்.

இன்று மக்களின் காலடிகளுக்குள்ளே நெருக்கடி வந்து நிற்க்கின்றது. அல்லது அவர்கள் சமயலறை வீடு போய் வரும் இடங்கள் தொழில் பார்க்கின்ற நிறுவனங்கள் என்று ஒட்டு மொத்த எல்லா இடங்களிலும் இந்த நெருக்கடி இப்போது தெரிகின்றது.

ஆட்சியாளர்கள் குறைந்த பட்சம் நாங்கள் விட்ட தவறுகளும் இந்த மோசமான நிலைக்குக் காரணமாக இருக்கின்றது என்று மக்களிடத்தில் யதார்த்தத்தை ஒத்துக் கொண்டால் கூட அவர்களின் கோபம் சற்றுத் தனிய இடமிருக்கின்றது ஆனால் அவர்கள் இன்றும் நாடகங்களைத்தான் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்

இன்னும் ஓரிரு வருடங்களில் நாங்கள் நாட்டில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி நிலமையைச் சரி செய்த விடுவோம் என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் சொல்வது நடந்தால் நல்லது. ஆனால் அதற்கான வாய்ப்பே கிடையாது என்பது எமது கருத்து.

நன்றி: ஞாயிறு தினக்குரல் 23.01.2022

Previous Story

ஐ.நா.விற்கு செல்லத் தயாராகும் பேராயர்! கலக்கத்தில் கோட்டாபய!!

Next Story

பரீட்சை கடமைகளிலும் அரசியல் : இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு