காற்றோடு பஞ்சாகிய ஜனாதிபதி தீர்வு!

நஜீப் பின் கபூர்

நேற்று நமக்கு 75வது சுதந்திர தினம். வடக்குக் கிழக்கு மக்களுக்கு இது கரி நாளாகவும்  தெற்கில் கூட குடிமக்களுக்கு கோபத்தையும் கொந்தளிப்பையும் கிளரிவிட்ட நாளாகவும் இருந்தது. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் இதனைப் பெரு விழாவாக எடுத்து வரலாற்று பதிவாக்கவும்  முயன்றிப்பதையும் பார்க்க முடிகின்றது.

சுதந்திரத்துக்கு முன்னர் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்று ஜனாதிபதி ரணில் பேசிய அடுத்த கனமே சுதந்திரத்துக்கு முன்னர் தீர்வு வண்ணக் கனவு என்ற தலைப்பில் நாம் ஒரு கட்டுரையை 04.12.2022ல் எழுதி தமிழ் தலைவர்களுக்கு தமது மக்களை எமாற்ற வேண்டாம் என்று எச்சரித்திருந்ததை நமது வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அத்துடன் தெற்கில் பேரினத்தார் மத்தியில் செல்லாக் காசாக இருக்கின்ற ஜனாதிபதி ரணில் இனப் பிரச்சினைக்கு தீர்வை மட்டுமல்ல தமிழ் ஈழத்தையே தருகின்றேன் என்றும் சொல்வார். அவரது வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் கிடையாது அது இலங்கை ரூபாவுக்கு சர்வதேச அரங்கில் இருக்கின்ற மதிப்பைப் போன்றது என்றும் அவரது இந்த வார்த்தைகளை நம்பி மீண்டும் மீண்டும் அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டாம் என்று நாம் கடும் வர்த்தைகளில் எழுதி இருந்தோம்.

ஆனால் மூத்த அரசியல்வாதிகளும்  சட்டவல்லுனர்களும் ரணிலை நம்பி தமது நல்லெண்ண நகர்வுகளையும் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தனர். இவற்றையும் நாம் கடுமையாக கண்டித்திருந்தோம்.

நாட்கள் போகப் போக கதை கந்தல் என்று பெரியவர்களுக்குத் தெரியவந்த போது ஜனாதிபதி ஒன்றையே திருப்பித் திருப்பிப் பேசிக் கொண்டிருக்கின்றார். அதனால் அவருக்கு சில நிபந்தனைகளை நாம் விதித்திருக்கின்றோம் அதற்கு ஏழு நாட்களுக்குப் பதில் தராவிட்டால் நாம் பேச்சுவார்த்தைகளில் இருந்து ஒதுங்கிக் கொளவோம் என்று சொல்லி இருந்தார்கள். பண்டிதர்களின் இந்தக் கதையை ஜனாதிபதி ரணில் கண்டு கொள்ளவே இல்லை. பெரியவரும் சட்ட வல்லுனரும் மூக்குடைபட்டு இப்போது நமக்கு ஜனாதிபதியின் உண்மையான முகம் புரிகின்றது என்று வேறு கதைகளை சமூகத்துக்கு விடுகின்றார்கள்.

நாம் இந்த தீர்வுத் திட்டம் ஒருபோதும் சாத்தியம் இல்லை இது முழுமையான ஏமாற்று நாடகம். பெப்வவரி 4ம் திகதிக்குப் பின்னர் உண்மை தெரிய வருகின்ற போது அவர்கள் எப்படி சமூகத்துக்கு முன் நிற்கப் போகின்றார்கள் என்றும் நாம் அன்றே கேள்வி எழுப்பி இருந்தோம். இப்போது தீர்வும் கிடையாது பதிலும் கிடையாது என்று இவர்களை பேச்சுவார்த்தை வண்டியிலிருந்து ஜனாதிபதி சந்தியில் இறக்கிவிட்டிருக்கின்ற இந்த நேரத்தில் இவர்கள் வேறு தேர்தல் களத்திற்கும் வந்து நிற்க்கின்றார்கள்.

பேரினத் தலைவர் ஒருவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் தமிழர்களை ஏமாற்றுவது ஒன்றும் புதியதல்ல. என்றாலும் நாம் இளவ மரத்துக்குத்தான் காவல் நிற்க்கின்றோம் என்பதானை நன்கு தெரிந்து கொண்டும் தமிழ் தலைவர்கள் தொடர்ந்தும் தமது இனத்தை ஏமாற்றுவதில் நமக்கும் நிறையவே வலிகள் ஏற்படுகின்றன. தனிப்பட்ட ரீதியில் நாம் வாழ்கின்ற மண்ணுக்கும் வடக்கு கிழக்கு அரசியலுக்கும் அல்லது அந்தப் பூமியுடனோ எமக்கு எந்தத் தொடர்புகளும் இல்லாவிட்டாலும் மனிதம் என்றவகையில்தான் நமது இந்த விமர்சனங்கள் அமைகின்றன.

தெரிந்து கொண்டே தமது தலைவர்கள் சமூகத்தை ஏமாற்றி அரசியல் செய்கின்றார்கள் என்பதனை புத்திகூர்iமையுள்ள தமிழ் சமூகம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு அவர்களிடத்தில் ஏமாளிகளாக இருக்கப் போகின்றார்கள் என்பதனை அவர்கள்தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். எனவேதான் தமிழர்கள் மத்தியில் நாம் கடந்த காலங்களில் ஒன்று பட்ட ஒரு அரசியல் இயக்கமும் கோஷமும் என்ற செய்தியையும் தொடர்ந்து பேசி வந்திருக்கின்றோம். இந்த வங்குரோத்து அரசியல் வியாபாரிகள் முன் இது காலத்தின் கட்டாய தேவையாகவும் இருக்கின்றது என்பதனை நாம் மீண்டும் கூறி வைக்கின்றோம்.

உள்ளூராட்சித் தேர்தல் ஒன்று நடக்குமாக இருந்தால் இதற்கு சில வேலைகளில் வடக்கு மற்றும் கிழக்கில் இந்த ஏமாற்றுப் பேர்வலிகளுக்கு ஒருவேலை மக்கள் பாடம் புகட்டிக் கூடும். ஆனால் அந்தப் பாடம் மற்றுமொரு ஏமாற்று வலையில் தமிழ் மக்களை மாட்டி விடுகின்ற நகர்வாகவும் அமைந்து விடக்கூடாது என்று விடயத்திலும் மிகுந்த எச்சரிக்கை தேவை. ஒரு அணி ஒரே கோஷம் என்பதுதான் சிறந்த தெரிவாக இருக்க வேண்டும்.

இந்த அணியையும் கோஷத்தையும் கட்டியெழுப்புவதில் அரசியல் வியாபாரிகள் நிச்சயம் தொந்தரவுகளைக் கொடுப்பார்கள் என்பதும் தெரிந்த கதைதான். எனவேதான் சிவில் சமூகமும் புத்திஜீவிகளும் தமது பொறுப்புக்களை சரிவரச் செய்ய வேண்டி இருக்கின்றது.

இதற்கிடையில் ஜனாதிபதி சுதந்திரத்துக்கு முன்னர் தீர்வோடு மலையக மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு அதனை பின்னர் உடனே முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று அதிரடியாக அறிவித்திருந்ததும் தெரிந்ததே. சாத்தியமில்லாத இந்தக் கதைகளை எல்லாம் பேசிப் பேசி சிறுபான்மை சமூகங்களை ஜனாதிபதி ஏமாறிக் கொண்டிருக்கின்ற அதே நேரம் பொதுவாக தனக்குத் தெற்கில் ஏற்பட்டிருக்கின்ற மக்கள் எதிர்ப்புக்களை ராஜபக்ஸாக்களின் கூடாரத்துக்குள் மறைந்து கொண்டு இன்று வரை அவர் சமாளித்துக் கொண்டிருக்கின்றார்.

அதே நேரம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு தருகின்றேன் என்று இங்குள்ள தமிழ் தலைவர்களை ஏமாற்றிக் கொண்டும் இந்திய-இலங்கை உடன்பாட்டின் படி  பதனின்மூன்றை முற்றாக அமுல் படுத்துகின்றேன் என்று இந்தியாவையும் இவர் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார். மேலும் மேற்கத்திய நாடுகளின் நண்பர் போலவும் ஜனாதிபதி ரணில் தன்னைக் காட்டிக் கொண்டு ஒரு முக்கோண நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார். முடியுமான மட்டும் அதிகாரம் மிக்க ஜனாதிபதிப் பதவியல் அமர்ந்து விட்டுப் போவது மட்டும்தான் இவரது இலட்சிளமாக இருக்கின்றது. அதற்கேற்ப தனக்காகப் பேசுவதற்க்கும் இவர் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து சில கையாட்களை அதற்காக பாவித்துக் கொண்டிருக்கின்றார்.

கிழக்கு மாகாணத்தில் 40 சதவீத முஸ்லிம் சமூகத்தினரும் 35 சதவீதம் தமிழ் சமூகத்தினரும் 25 சதவீதம் சிங்களவர்களும் வாழ்கின்ற போது அரசியல் அமைப்பின் 13 னை முழுமையாக அமுல்படுத்தினால் இனங்களிடையே முரன்பாடுகள் தோன்றும் என்று கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவிக்கின்றார். அவரது இந்தக் கருத்து ஜனாதிபதி ரணிலின் கருத்துடன் நேரடியாக எதிர்க்கின்ற கருத்தாக இருக்கின்றது. எனவே ஜனாதிபதி ரணில் தொட்டிலையும் ஆட்டிக் கொண்டு குழந்தையையும் கில்லிக் கொண்டிருக்கின்றார். இது திட்டமிட்ட ஏற்பாடு அதே நேரம் மொட்டுக்கட்சியிலுள்ள பலர் இந்தப் பதிமூன்றை முற்றாக எதிர்த்து வருகின்றார்கள்.ஆனால் ராஜபக்ஸாக்கள் இதுவிவகாரத்தில் மதில் மேல் பூனையாக நின்று காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.

தீர்வு திட்டம் நேற்றுக் காற்றோடு போனாலும் பெரியவர் சம்பந்தர் ஐயா உடநலக் குறைவால் தீர்வு எதிர்பார்த்த நாளில் தனியார் வைத்தியசாலையில் அவசரப் பிரிவில் இப்போது இருக்கின்றார். ரணில்-சுமந்திரன் செயல்களினால் கடந்த பல நாட்களாக அவர் பெரும் மன அழுத்தத்தில் இருந்திருக்கின்றார் என்றும் நமக்குத் தெரிய வருகின்றது. அவர் மீது நமக்கு விமர்சனங்கள் இருந்தாலும் உளத்தூய்மையுடன் அவரது சுகத்திற்கு பிரார்த்னை செய்வதுடன், பெரியவரை இந்த நெருக்கடியில் தள்ளிவிட்டதில் சட்டவல்லுனரின் அரசியல்தான் இருந்திருக்க வேண்டும் என்றும் நாம் நம்புகின்றோம். சம். ஐயா வயது காரணமாக தொடர்ந்தும் தளர்வில் இருந்ததை பண்டிதர் தனக்கு வாய்பாகப் பாவித்து இன்று ஆளை நெருக்கடியில் மாட்டி விட்டாரே என்றும் எண்ணத் தோன்றுகின்றது. கட்சியின் அண்மையில் ஏற்பட்ட பிளவுகளும் இதன் தொடராக இருக்க வேண்டும்.

அறிவிக்கபட்டிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமாக இருந்தால் ரணில் ராஜபக்ஸாக்களின் அரசியல் இருப்பு கேள்விக்குறியாகி விடும். எனவேதான் இறுதிவரை அதற்கான முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றது. எப்படியும் இவர்கள் முடிந்தவரை தமது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் வரை அதிகாரத்தில் இருக்கு முயன்று கொண்டிருக்கின்றார்கள். அதற்குப் பின்னர் கூட தற்போதய தேர்தலைத் தள்ளிப் போட எடுக்கின்ற முயற்ச்சிகளும் தொடரலாம். ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் நாட்களிலும் இதே காரியம் நடக்கலாம். என்ற அச்சம் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.

இது வரை ஐஎம்எப் இலங்கைக்கு கடன் கொடுப்பது தொடர்பான எந்தத் தீர்க்கமான முடிவுகளையும் எடுக்கவில்லை. மக்கள் அங்கிகாரம் இல்லாத ஒரு அரசுக்கு கடன் கொடுப்பதில் அந்த அமைப்பு ஆர்வம் காட்டவில்லை என்ற ஒரு கதையும் வருகின்றது. மேலும் சீனாவின் உத்தரவாதம் தான் தற்போது ஐஎம்எப் கடனுக்குத் தேவையாக இருக்கின்றது என்று சொல்லப்பட்டது. ஆனால் இது மட்டும் அதற்குப் போதாது என்று தற்போது இலங்கை வந்திருந்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருக்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளும் இந்தக் கடன் தாமதமாகக் காரணம் என்று ஜீல்.எல்.பீரில் தெரிவிக்கின்றார். மேலும் மக்கள் அங்கிகாரம் இல்லாதவர்களைப் பதவியில் வைத்துக் கொண்டு இது விடயத்தில் இலங்கையுடன் செய்து கொள்ளப்படுகின்ற உடன்படிக்கைகளில் பிரயோசனம் இல்லை என்று அவர்கள் கருதுகின்றார்கள் என்றும் போராசிரியர் பீரிஸ் மேலும் தெரிவிக்கின்றார்.

உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததும் தான் கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளப் போகின்றேன் இதன் பின்னர் தலைவர் என்ற வகையில் கட்சிக் கூட்டங்களுக்கு நான் தலைமை தாங்கினாலும் தீர்மானங்களை கட்சிக்காரர்கள் தான் எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் ஏற்கெனவே தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். தேர்தல் நடந்தால் முடிவுகள் எப்படி அமையும் என்பதனை அவர் முன்பே நன்கு அறிந்திருப்பதால்தான் அவரது இந்த இராஜதந்திரம் என்று நாம் கருதுகின்றோம்.

மொட்டுக் கட்சிதான் ஜனாதிபதி ரணிலை நூலில் ஆட்டிக் கொண்டிருக்கின்றது என்பது அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற செய்திதான். மொட்டுக் கட்சியினரும் தமது தேர்தல் பணிகளை இன்று வரை ஆரம்பிக்கவில்லை. ரணில் எப்படியாவது தேர்தலைத் தள்ளிப் போட்டு விடுவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் ஒரு வேளை இருக்கக் கூடும். ஆனால் தேர்தல் நடந்தால் என்ன செய்வது என்ற தடுமாற்றம் அவர்களுக்கும் இருக்கின்றது. தேர்தல் பரப்புரைகளை எப்படி நடத்துவது என்று அவர்கள்  கூட்டங்களை சில தினங்களுக்கு முன்னர் நடாத்தி இருக்கின்றார்கள். அதில் தீர்க்கமான முடிவுகள் ஏதுவுமே எடுக்கப்படவில்லை. என்றும் தெரிகின்றது. அப்படி கூட்டங்களை நடாத்தினாலும் இரண்டாம் மட்டத் தலைவர்களைத்தான் அவற்றுக்கு அனுப்பி வைப்பது என்றும் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது. எப்படியும் ஆளும் தரப்பினர் தேர்தலுக்கு முகம் கொடுப்பதில் ஆர்வமில்லாது இருப்பதுடன் அவர்களுக்கு இது விடயத்தில் பெரும் அச்சம் இருக்கின்றது என்பதும் உண்மை.

நன்றி: 05.02.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

முதலிக்கும் தேர்தலுக்கும் முடிச்சு!

Next Story

2043 வரை ரணிலே ஜனாதிபதி!