இரானின் அதிஉயர் ஆயதுல்லா அலி காமனெயி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தற்போது காமனெயி மரணத்தை இரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
காமனெயி மரணத்திற்கு இரான் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என, அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் கண்ணீருடன் தெரிவித்தார்.

இரானின் அதிஉயர் காமனெயி கொல்லப்பட்டதாக இரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையுடன், இரானில் உள்ள பல அரசு ஊடகங்கள் அயதுல்லா காமனெயி மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
அதன் அறிக்கையில் 86 வயது அயதுல்லா எப்படி இறந்தார் என்பது குறித்தோ அல்லது அடுத்த தலைவர் யார் என்பது குறித்த தகவல்களோ இல்லை.
தற்போது இரானின் அரசு தொலைக்காட்சி சேனலான IRINN, காமனெயி புகைப்படங்களுடன் பின்னணியில் குரான் ஓதப்படுகிறது.
முன்னதாக, அத்தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் காமனெயி மரணத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை குற்றம் சாட்டிய இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரபூர்வ அறிக்கையை வாசித்தார்.
காமனெயியின் “தியாகம்” “அடக்குமுறையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு எழுச்சியின்” தொடக்கமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அலி காமனெயி மரணம் குறித்த செய்தி தவறானது என்றும், அது அமெரிக்க உளவியல் போரின் விளைவு என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக, இரானின் செய்தி நிறுவனமான ஃபார்ஸ் கூறுகிறது.
புரட்சிகர காவல்படைக்கு நெருக்கமானதாகக் கருதப்படும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், டிரம்பின் தகவலை மறுத்து, “டிரம்ப் தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட செய்திகளைப் பரப்புவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளார். இதுபோன்ற நடத்தைக்கான முந்தைய எடுத்துக்காட்டுகளில் ஒன்று, மஷாத் நகரத்தின் வீழ்ச்சி குறித்த அவரது கூற்று ஆகும், இது பின்னர் ஆதாரமற்றது மற்றும் வெறும் பரபரப்பான ஊடக பிரசாரம் என்று நிரூபிக்கப்பட்டது.” என தெரிவித்துள்ளது.
“வரலாற்றில் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான காமனெயி இப்போது இறந்துவிட்டார்” என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் கூறியது என்ன?

காமனெயி மரணம் இரான் மக்களுக்கு நீதி என்று டிரம்ப் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான காமனெயி இப்போது இறந்துவிட்டார். இது இரான் மக்களுக்கு மட்டுமல்ல, காமனெயி மற்றும் அவரது ரத்தவெறி பிடித்த கும்பலால் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் சிறந்த அமெரிக்கர்கள் மற்றும் மக்களுக்குமான நீதி.” என பதிவிட்டுள்ளார்.
“அவரால் எங்கள் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிலிருந்து தப்ப முடியவில்லை, மேலும் இஸ்ரேலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதுவும் செய்ய முடியாது.”
“இரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கு இதுவரை கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. அவர்களது ஐ.ஆர்.ஜி.சி (புரட்சிகர காவல் படை), ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் பலரும் இனி சண்டையிட விரும்பவில்லை என்றும், எங்களிடம் பாதுகாப்பு கேட்கிறார்கள் என்றும் நாங்கள் கேள்விப்படுகிறோம். நேற்று இரவு நான் சொன்னது போல், ‘அவர்களுக்கு இப்போது பாதுகாப்பு கிடைக்கலாம், ஆனால் பின்னர் அவர்களுக்கு மரணம் மட்டுமே கிடைக்கும்.'”
“ஐ.ஆர்.ஜி.சி மற்றும் காவல்துறை இரானின் தேசபக்தர்களுடன் அமைதியாக ஒன்றிணைந்து, ஒரு பிரிவாக, நாட்டை அதற்கு தகுதியான மகத்துவத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன். இந்த செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும், ஏனென்றால் காமனெயி இறந்தது மட்டுமல்லாமல், நாடு பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட ஒரே நாளில் அழிக்கப்பட்டுள்ளது.”
“இருப்பினும், மத்திய கிழக்கு மற்றும் உண்மையில் உலகம் முழுவதும் அமைதிக்கான நமது இலக்கை அடைய, வாரம் முழுவதும் அல்லது தேவைப்படும் வரை கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு தொடரும்.”
இதற்கிடையில், காமனெயி மரணம் குறித்த கூற்றுகளைத் தொடர்ந்து, இரானிய நகரமான கராஜில் கொண்டாட்டங்கள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பகிரப்பட்டு பிபிசி பாரசீக மொழி சேவையால் சரிபார்க்கப்பட்ட ஒரு காணொளியில், இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி மரணம் குறித்த செய்திகளுக்குப் பிறகு, கராஜில் சில இரானியர்கள் கொண்டாடுவதைக் காண முடிகிறது. இருப்பினும், டொனால்ட் டிரம்ப் பதிவிடுவதற்கு முன்பே இது நிகழ்ந்தது.

‘இரானிய அதிகாரிகள் 40 பேர் உயிரிழப்பு’
பிபிசி கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் பேசிய உளவு மற்றும் ராணுவ வட்டாரங்கள், தாக்குதல்களில் இரானிய அதிகாரிகள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளன.
இந்த அதிகாரிகள் ஒரே இடத்தில் இருந்தார்களா அல்லது பல்வேறு இடங்களில் இருந்தார்களா என்பது தெரியவில்லை.
இறந்தவர்களுள் இரானின் அதிஉயர் தலைவர் காமனெயி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படை மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் அடங்குவர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.





