-அசீம் சாப்ரா-

இந்திய திரைப்பட இயக்குநரான பயல் கபாடியாவின், நிகழ்கால மும்பையின் தெருக்களை காட்சிப்படுத்தும் திரைப்படம் ஒன்று புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவின் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
பொதுவாக மும்பை என்றாலே பாலிவுட் நட்சத்திரங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்காமல், அதே மும்பையின் இதயத் துடிப்பாக விளங்கும், புலம்பெயர்ந்த மக்களின் குரல்களைத் தனது திரை மூலம் ஒலிக்கச் செய்திருக்கிறார் பயல்.
கபாடியாவின் முதல் புனைகதை திரைப்படமான ‘ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்’ என்ற இந்தப் படம், வியாழன் இரவு கான்ஸ் திரைப்பட விழாவின் முக்கிய போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படம் முடிந்த பிறகு அங்கிருந்தவர்கள் எட்டு நிமிடத்திற்கு எழுந்து நின்று கைதட்டி இதைப் பாராட்டினர். இது அதன் இயக்குநருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமையும், பெரும் சாதனையும்கூட.
கடந்த 30 ஆண்டுகளில் ஒரு இந்தியத் திரைப்படம் கேன்ஸின் பிரதான போட்டிப் பிரிவுகளில் பங்கேற்றிருப்பது இதுவே முதல்முறை. 38 வயதான கபாடியா உலகின் புகழ்பெற்ற இயக்குநர்களான பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலா, யோர்கோஸ் லாந்திமோஸ், அலி அப்பாஸி, ஜாக் ஆடியார்ட், ஜியா ஜாங்கே போன்றவர்களுடன் இந்தத் திரைப்பட விழாவில் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றை வெல்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

கடந்த நாற்பது ஆண்டுகளாகவே, உலகளாவிய திரைப்பட விழாக்களில் இந்திய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
கடந்த 1988ஆம் ஆண்டில் நடந்த கான்ஸ் திரைப்பட விழாவில், மீரா நாயரின் சலாம் பாம்பே என்ற திரைப்படம், ‘கேமரா டோர்’ விருதை வென்றது. செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களுக்கு சில நாட்களுக்கு முன்பு, மீராவின் ‘மான்சூன் வெட்டிங்(2001)’ என்ற திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருதை வென்றது.
இயக்குநர் ரித்தேஷ் பத்ராவின் புகழ்பெற்ற திரைப்படமான ‘தி லஞ்ச்பாக்ஸ்’, 2013ஆம் ஆண்டு கேன்ஸில் கிராண்ட் கோல்டன் ரயில் விருதை வென்றது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயக்குநர் சுசி தலாதியின் ‘கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்’ திரைப்படம் சன்டான்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் ஜூரி மற்றும் பார்வையாளர்களின் விருதுகளை வென்றது.
ஆனால் இந்தியா போன்ற உலகில் அதிக படங்களைத் தயாரிக்கும் ஒரு நாட்டுக்கு, பாம் டோர் அல்லது கான்ஸ் திரைப்பட விழாவின் முக்கிய விருதுகளில் ஒன்று கிடைப்பது பல ஆண்டுகளாக எட்டாக்கனியாகவே இருக்கிறது. இருப்பினும் இந்த ஆண்டு கபாடியாவின் சிறப்பான மற்றும் பார்வையாளர்களை மனதளவில் தொடக்கூடிய இந்தப் படம் அந்த ஏக்கத்தைத் தனிப்பதற்கான நல்வாய்ப்பு உள்ளது.
ஏற்கெனவே இந்தப் படம் பல தரப்பில் இருந்தும் சிறந்த விமர்சனங்கள் மற்றும் நல்ல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தி கார்டியன் பத்திரிகை இந்தப் படத்திற்கு ஐந்து நட்சத்திரம் வழங்கி, “தனித்துவமான மற்றும் மனிதநேயம் நிறைந்த ஒரு கதை” என்று தனது மதிப்பாய்வில் விவரித்துள்ளது.
விமர்சகர்கள், சத்யஜித் ரேயின் மஹாநகர் (தி பிக் சிட்டி) மற்றும் ஆரண்யேர் தின் ராத்திரி (டேஸ் அண்ட் நைட்ஸ் இன் தி ஃபாரஸ்ட்) ஆகியவற்றுக்கு இணையாக இந்தப் படத்தை ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.
மேலும் இண்டிவயர் அதன் ஏ-கிரேடு மதிப்பாய்வில் கபாடியாவின் திரைப்படம் மும்பையின் அழகைப் பிரதிபலிப்பதாகத் தனது மதிப்பாய்வில் தெரிவித்துள்ளது.

பிரபலமான இந்திய கலைஞரான நளினி மலானியின் மகளான பயல் கபாடியா, பன்முக கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மும்பையை நன்கு அறிந்தவர்.
அவர் கூறுகையில், “நாட்டில் உள்ள பல இடங்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு வேலை செய்வது சற்று எளிதாக இருக்கும் இடமாகவும் இது இருக்கிறது” என்கிறார்.
“வீட்டை விட்டு வேறு எங்காவது வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றி படம் எடுக்க விரும்பினேன்.”
கபாடியாவின் ‘ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்’ திரைப்படம், வேலைக்காக மும்பைக்கு புலம்பெயர்ந்த கேரளாவைச் சேர்ந்த இரண்டு இந்திய செவிலியர்கள் அவர்கள் பணிபுரியும் மருத்துவமனை மற்றும் சேர்ந்து வாழும் நெரிசலான அடுக்குமாடி குடியிருப்பு என அவர்கள் சந்திக்கும் போராட்டங்கள் மற்றும் வாழ்க்கையை காட்சிப் படுத்தியுள்ளது.
படத்தில் வரும் செவிலியரான பிரபா (கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ் படத்தில் துணை வேடத்தில் நடித்த கனி குஸ்ருதி) ஒரு திருமணமானவர். அவரது கணவர் ஜெர்மனியில் பணிபுரிகிறார். அவர்களுக்குள் பெரிதாக எந்த வித தொடர்பும் இருக்காது. ஆனால் திடீரென்று ஒருநாள் எதிர்பாராத விதமாக அவரது கணவரிடமிருந்து ஒரு குக்கர் அவருக்கு பரிசாக கிடைக்கிறது. தனது திருமண வாழ்க்கையின் காதலுக்கான அடையாளம் இதுதான் என்பது போல் அவர் அந்த குக்கரை அணைத்துக் கொள்கிறார்.

கதையில் வரும் இரண்டாவது செவிலியரான அனு(திவ்ய பிரபா) மிகவும் துறுதுறுவென இருக்கும் குணம் கொண்டவர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இளைஞரான ஷியாஸை (ஹிருது ஹாரூன்) ரகசியமாக காதலிக்கிறார்.
அனு இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஷியாஸுடனான காதலை அவரது குடும்பம் ஏற்காது.
சுமார் 2.2 கோடி மக்கள் நெருக்கியடித்து வாழ்ந்துகொண்டிருக்கும் மும்பையின் நெரிசலான சூழலும், அதன் கடுமையான மழைக்காலமும், அனுவையும் ஷியாஸையும் தனிமையில் காதலிக்க அனுமதிப்பதில்லை.
இந்நிலையில், இவர்கள் பணிபுரியும் அதே மருத்துவமனையைச் சேர்ந்த மற்றொரு செவிலியரான பார்வதி (சாயா கதம், இந்த ஆண்டு கான்ஸ் விழாவில் இவர் நடித்த இரண்டு படங்கள் இடம்பெற்றுள்ளன), பெருநகரின் பணக்காரர்களுக்காக நகர்ப்புற குடிசைப்பகுதியை மறுசீரமைப்புக்கு உட்படுத்த, அவர் இருந்த பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பார்வதி மும்பையை விட்டே கிளம்பும் முடிவை எடுக்கிறார்.
இந்தத் திருப்பம், இந்தக் கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் போக்கை மாற்றுவதற்கான வாய்ப்பாக இருக்குமா?

கபாடியா இந்தப் படத்திற்கு முன்பு இயக்கிய ‘எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்’ என்ற ஆவணப் படத்தில் வரும் மாணவர்களின் அரசியல் பிரச்னைகளுக்கும், இந்தப் படத்தில் பேசியுள்ள இருப்பிட அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
இந்த ஆவணப்படம் 2022ஆம் ஆண்டு கான்ஸ் திருவிழாவின் டைரக்டர்ஸ் ஃபோர்ட்நைட் சைட்பார் பிரிவில் திரையிடப்பட்டது. மேலும் இது சிறந்த ஆவணப் படத்திற்கான லுயி டோர்(L’Œil d’or) “கோல்டன் ஐ” விருதை வென்றது.
இந்தியாவின் புகழ்பெற்ற அரசு திரைப்படக் கல்லூரியில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தைப் பேசும் கதையே ‘எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்’ ஆவணப்படம். அந்தப் போராட்டத்தில் தானும் ஓர் அங்கமாக இருந்த கபாடியா 2018இல் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, சினிமாத் துறையில் கால் பதித்தார்.
அவர் 2022இல் அளித்த நேர்காணல் ஒன்றில் அந்த ஆவணப்படத்தை “பொது பல்கலைக் கழகங்களுக்கான காதல் கடிதம் என்றும் அவை சமூகத்தின் அனைத்து அடுக்கு மக்களும் ஒன்றாக இருக்கக்கூடிய, அறிவார்ந்த மற்றும் அடிப்படை சுதந்திரத்தைப் பெறக்கூடிய இடமாக இருக்க வேண்டும்” என்றும் விவரித்தார்.
இதே உணர்வு அவரின் தற்போதைய படமான ‘ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்’ திரைப்படத்திலும் எதிரொலிக்கிறது.