காந்தாரா – சினிமா விமர்சனம்

நடிகர்கள்:
ரிஷப் ஷெட்டி, கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி, சப்தமி கௌடா;
ஒளிப்பதிவு:
அரவிந்த் எஸ். காஷ்யப்;
இசை:
அஜனீஷ் லோக்நாத்;
இயக்கம்:
ரிஷப் ஷெட்டி.

கன்னடத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் ‘காந்தாரா’ திரைப்படம், இந்த வாரம் முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு அக்டோபர்16இல் வெளியாகிறது. கடந்த சில ஆண்டுகளில் ‘கவலுதாரி’, ‘கருட கமனா க்ருஷப வாகனா’ என கன்னட திரையுலகிலிருந்து கவனிக்கத்தக்க திரைப்படங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், காந்தாரா இந்தப் போக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஊடகங்களில் தற்போது விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.

முதலில் இந்தப் படத்தின் கதையைப் பார்க்கலாம்: 1847ஆம் ஆண்டில் கன்னட பிரதேசத்தில் உள்ள அரசர் நிம்மதியைத் தேடி காட்டுக்குள் செல்கிறார். அங்கு வசிக்கும் மக்கள் இணைந்து கடவுளை வழிபடுவதைப் பார்த்து, அவர்களுக்கு பெரிய அளவில் நிலங்களை எழுதிக் கொடுக்கிறார். இதற்குப் பிறகு 1970களில் அந்த அரசனின் வழிவந்த ஒருவன், அந்த நிலங்களை மீட்க நினைக்கிறான்.

ஆனால், அங்கிருக்கும் தெய்வம் எச்சரிக்க, அவன் இறந்து போகிறான். இதற்குப் பிறகு, 1990ல் பண்ணையார் ஒருவர் அதே நிலத்தை அந்த மக்களிடமிருந்து பறிக்க நினைக்கிறார். மற்றொரு பக்கம், காப்புக் காடுகளை அளந்து மக்களை வெளியேற்றப்போவதாகக் கூறுகிறது வனத்துறை. அந்த மக்கள் வணங்கும் தெய்வம் என்ன செய்தது என்பது படத்தின் மீதிக் கதை.

முக்கோண திரைக்கதை

நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து திரைக்கதை எழுதியிருக்கும் விதம் சுவாரஸ்யத்திற்கு பெரிதும் கைகொடுத்திருப்பதாகச் சொல்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.

“முதல் பாதியில் ‘கம்பளா’ எனப்படும் எருமை மாட்டு போட்டி, அதையொட்டி சேற்றில் நடக்கும் சண்டைக்காட்சிகள் என காட்சி விருந்தாக பார்வையாளர்களை கவருகிறது படம். மற்றொருபுறம் யதார்த்ததுக்கு நெருக்கமான வாழ்விடங்கள், பழங்குடியின மக்களின் பண்பாட்டு கலாசாரம், வேட்டை தொழில் உள்ளிட்டவை கவனம் பெறுகின்றன. இறுதிக் காட்சியை மக்களின் நிலவியல் தன்மை சார்ந்து பதிவு செய்த விதம் ரசிக்க வைக்கிறது.

ரிஷப் ஷெட்டியின் நடிப்பு படத்திற்கு உயிரோட்டம் கொடுத்து காட்சிகளை மெருகேற்றுகிறது. குறிப்பாக இறுதிக் காட்சியில் அவர் ஆடும் ஆட்டமும், அதனுடன் சேர்ந்த நடிப்பும் தேர்ந்த கலைஞனுக்கான உருவகம். கறாரான வனத்துறை அதிகாரியாக கிஷோர். நாயகனுடன் முறுக்கிக் கொண்டு நிற்பது, தனது பணிக்கு இடையூறு ஏற்படும்போது திமிருவது என முதல் பாதியில் ஒருவகையான கதாபாத்திரமாகவும், இரண்டாம் பாதியில் அதற்கு முற்றிலும் மாற்றாகவும் தனக்கான கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.

படத்தின் மற்றொரு பெரிய பலம் அதன் தொழில்நுட்பக்குழு. வரைகலை, இசைக் கோர்வை, கலை ஆக்கம், சண்டைப்பயிற்சி, ஒலி வடிவமைப்பு உள்ளிட்டவை சிறந்த காட்சியனுபவத்திற்கு பக்கபலம் சேர்க்கின்றன. இடைவேளைக்கு முன்பான சண்டைக்காட்சிகளும், கம்பளா போட்டியும், இறுதிக்காட்சியில் திரையில் தெறிக்கும் வண்ணக்கலவையும் அரவிந்த் காஷ்யம் ஒளிப்பதிவில் அழகூட்டுகின்றன. தவறாமல் திரையரங்குகளில் கண்டு ரசிக்கத்தக்க சமகால படைப்பு இது” என்கிறது இந்து தமிழ் திசை.

கடைசி 20 நிமிடங்கள்

காந்தாரா

படத்தின் கடைசி 20 நிமிடங்களில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பு சில்லிட வைக்கிறது என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம்.

“படத்தின் கதை ஊகிக்கக்கூடியதாக இருந்தாலும், சிறப்பான தொழில்நுட்பம் இதனை ஒரு தனித்துவம் மிக்க அனுபவமாக்குகிறது. காந்தாராவைப் பொறுத்தவரை இது முழுக்க முழுக்க ரிஷப் ஷெட்டியின் ஆட்டம்தான். படத்தின் இயக்குநராகவும் கதாநாயகனாகவும் மிளிர்கிறார் அவர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு உங்களை உள்ளே ஈர்த்து, படத்தின் ஒரு பகுதியாக்கி விடுகிறது. படத்தின் முதல் பகுதி ஒரு விறுவிறுப்பான கதையைக் கொண்டிருக்கிறது.

இரண்டாம் பகுதி, கலாசாரம், பாரம்பரியம், மர்மங்கள் என தீவிரமான பாதையில் பயணிக்கிறது. இந்தப் படத்தின் உச்சகட்ட காட்சியையும் அதற்கு முந்தைய காட்சிகளையும் மறக்கவே முடியாது. மிகச் சிறப்பாக யோசித்து, அந்தக் காட்சிகளை சிறப்பாகவும் படமாக்கியிருக்கிறார்கள். கடைசி 20 நிமிடங்களில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பு சில்லிட வைக்கிறது. அவர் கடலோர பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அப்பகுதி மக்களுக்கே உரிய உடல்மொழி மிக இயல்பாக அவருக்கு வருகிறது. ஒரு நடிகன் என்ற முறையில் ரிஷப் ஷெட்டியின் ஒரு மறைக்கப்பட்ட பகுதியைக் காட்டுகிறது இந்தப் படம்.

சமரசமில்லா இயக்கம்

காந்தாரா

“காட்சி ரீதியாக இந்தப் படம் பிரமாண்டமானது. ஒளியமைப்பு, காட்சிப்படுத்தல் என மிகச் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப். நாட்டுப்புற கதையிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கதையை படமாக்குவதில் மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார்கள். துளு நாட்டின் கலாசாரத்தை எவ்வித சமரசமும் இன்றி வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம்.

வனத்தை முன்வைத்து அரசு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்படும் மோதல், ஜாதி ஏற்றத்தாழ்வு, வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மத்தியில் நம்முடைய நிகழ்த்து கலைகளைப் பாதுகாக்க வேண்டியதன் கட்டாயம் என பல்வேறு விஷயங்களை இந்தப் படம் பேசுகிறது என்கிறது இந்தியா டுடேவின் விமர்சனம்.

“மைய நீரோட்டத் திரைப்படங்களுக்கே உரிய நடிப்பை, பாரம்பரியக் கலை வடிவங்களைப் பயன்படுத்தி மேம்படுத்தியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. கதையின் நாயகன் சிவாவாக கச்சிதமாகப் பொருந்துகிறார் ரிஷப்.

தொடர்ந்து நிராகரித்து வந்த பொறுப்பை, நேரம் வரும்போது ஏற்கிறான் நாயகன். வேட்டையாடுவது, மரம் வெட்டுவது, பெண்களைத் துரத்துவது என திரியும் சிவா, அல்லு அர்ஜுனின் புஷ்பாவைப் போல வழக்கமான நாயகனில்லை. ஆனால், தாம் ஏற்று நடித்திருக்கும் பாத்திரத்திற்கு முழுமையாக ஒப்புக் கொடுத்திருக்கிறார் ரிஷப்.

ஆனால், காந்தாராவைப் பார்க்க இதுமட்டுமே காரணமல்ல. வனத்தை முன்வைத்து அரசு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்படும் மோதல், ஜாதி ஏற்றத்தாழ்வு, வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மத்தியில் நம்முடைய நிகழ்த்துக் கலைகளைப் பாதுகாக்க வேண்டியதன் கட்டாயம் என பல்வேறு விஷயங்களை இந்தப் படம் பேசுகிறது.

இது தவிர, அவ்வப்போது வரும் மிகச் சிறப்பான ஆக்ஷன் காட்சிகள், அட்டகாசமான க்ளைமாக்ஸ் ஆகியவை சேர்ந்து இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்கும் கட்டாயத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், இந்தப் படத்தில் எல்லாம் துல்லியமாக இருப்பதாகச் சொல்ல முடியாது. குறிப்பாக பெண்கள் மிகப் பிற்போக்குத்தனமாக நடத்தப்படுகிறார்கள். மற்றபடி குறிப்பிடத்தக்க படம்” என்கிறது இந்தியா டுடே.

Previous Story

ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவரே புதுக் கதை!

Next Story

ரணிலுக்கு பொதுஜன பெரமுன இறுதி நிபந்தனை !