காசா பள்ளியை குறிவைத்த இஸ்ரேல். 100 உயிர்களை பறித்த மூன்று குண்டுகள்!

‘மொத்த பலி 40,000ஐ நெருங்கியது ‘

Gaza Israel War

காசாவில் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 39,800 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

இதுவரை 39,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர்.

It was a tough night for the Gaza Strip': Al Jazeera correspondents - YouTube

23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டிணியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது. போர் தொடங்கி 300 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், இந்த போரின் நோக்கத்தை இஸ்ரேல் நிறைவேற்றியிருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இதற்கான பதிலை இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்திருக்கிறார். “ஹமாஸ் என்பது ஒரு சிந்தனை, ஹமாஸ் ஒரு கட்சி, இது மக்களின் இதயங்களில் வேரூன்றியிருக்கிறது. ஹமாஸை ஒழிக்க முடியும் என்று நினைப்பது தவறு” என்று கூறியுள்ளார்.

போர் தொடங்கி 8 மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் இதனை ஒப்புக்கொண்டிருக்கிறது. ஹமாஸின் சுரங்கப்பாதைகள், அதன் முன்னணி வீரர்கள் மற்றும் தலைவரை அழித்து அவர்கள் பிடியில் உள்ள 240க்கும் மேற்பட்ட பணயகைதிகளை மீட்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது.

Israel bombs hundreds of targets in ...

ஆனால், 8 மாதங்கள் ஆன பின்னரும் இந்த இலக்கை எட்ட முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது. மறுபுறம் காசாவின் குடிநீர் தேவையில் 90% பூர்த்தி செய்யப்படவில்லை. எனவே அங்கு மிகமோசமான சுகாதார நிலை நிலவி வருகிறது என ஐநா தெரிவித்திருக்கிறது.

காசவில் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீரை பரிசோதித்ததில் அதில் போலீயோ வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக உடனடியாக அங்கிருந்து சுமார் 14 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட வேண்டும் என்று ஐநா கூறியிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளியில் இருந்தால், தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்று பொதுமக்கள் பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்தனர். ஆனால் இஸ்ரேல் விமானப்படை இந்த பள்ளியை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து காசா அதிகாரிகள் கூறுகையில், “தராஜ் மாவட்டத்தில் அமைந்துள்ள அல்-தபின் பள்ளியை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 907 கிலோ எடை கொண்ட மூன்று குண்டுகள் இப்பள்ளி மீது விழுந்துள்ளது. இது கொடூரமான படுகொலை” என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

Previous Story

ஜனாதிபதி தேர்தல்: தமிழ் பொது வேட்பாளரும் மலையக , முஸ்லிம் ஆதரவும்!

Next Story

மாணவர்கள் விடுத்த கெடு.. 1 மணி நேரத்தில் பதவி விலகிய நீதிபதி!