வான்வழி தாக்குதலில் 23 பேர் பலி
காசா: பாலஸ்தீனத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காசாவில் மிகப்பெரிய பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023ல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டிற்குள் புகுந்து தொடர் தாக்குதல் நடத்தியதுடன், 200க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. பதிலுக்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஒன்றரை ஆண்டுகளாக இந்த போர் நீடித்து வரும் நிலையில், கடந்த ஜனவரியில், 42 நாட்களுக்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபின், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பல்வேறு நிபந்தனைகள் விதித்தது. ஹமாஸ் அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், காசாவில் மிகப்பெரிய பகுதிகளை ராணுவம் கைப்பற்றி விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் பாலஸ்தீனம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளது. மேலும், காசாவில் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 23 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் கூறுகையில், ‘காசாவில் உள்ள மிகப்பெரிய பகுதிகள் கைப்பற்றப்பட்டது. அந்தப் பகுதிகள் எங்களின் ராணுவம் கட்டுப்பாட்டில் உள்ளது. பாலஸ்தீனம் சிறுமைப்படுத்தப்பட்டு, தனித்து விடப்பட்டுள்ளது.
பிணையக் கைதிகளை விடுவிக்கும் வரையிலோ அல்லது ஹமாஸ் பயங்கரவாதிகளை வீழ்த்தும் வரையிலோ இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும்,’ எனக் கூறினார்.
இதனிடையே, விரைவில் பாலஸ்தீனத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.