கர்நாடவிலும் ஹிஜாப் சர்ச்சை: சீருடை கட்டாயம் அரசு ஆணை

-இம்ரான் குரேஷி-

கர்நாடகாவில் முன் பல்கலை கல்லூரிகளின் சீருடை குறித்த புதிய ஆணை ஒன்ற அம்மாநில அரசு இன்று வெளியிட்டள்ளது.இதில் வகுப்பறையில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாது என்ற தடை குறித்து உயர் நீதிமன்றம் விசாரிக்கும் வரை வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும் என அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் உள்ள கல்லூரி வளர்ச்சி கமிட்டி சீருடைகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று தனியார் கல்லூரிகள் சீருடை வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து பிபிசி ஹிந்தி சேவையிடம் பேசிய கர்நாடகாவின் இடைநிலை கல்வி அமைச்சர் நாகேஷ் பிசி, “நாங்கள் இதுகுறித்து ஆலோசித்தோம். உயர்நீதிமன்றத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து விவரிக்கப்படும்.

ஒவ்வொரு கல்லூரிக்கும் அதனின் சீருடையை தேர்வு செய்யும் உரிமை உள்ளது,” என்றார்.இதற்கிடையில் ஹிஜாப் அணிவது குறித்து எழுந்த சர்ச்சைக்கு எதிர்வினையாக காவி நிற துண்டு அணிந்து பெண்கள் தனியார் கல்லூரிக்குள் நுழைய முற்பட்டதால் கர்நாடாவின் கடலோர மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

உடுப்பி மாவட்டத்தில் குந்தாபூரில் உள்ள பந்தர்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்குள் நுழைய முற்பட்டனர். அதேபோன்று ஆர் என் ஷெட்டி என்ற தனியார் கல்லூரிகளில் மாணவர்களின் பைகளில் காவித் துண்டுகள் இருக்கிறதா என கல்லூரி அதிகாரிகள் சோதனையிட்டனர்.

கர்நாடகாவின் கடலோர நகரான உடுப்பியில் பள்ளி வகுப்பறையில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி கடந்த சில நாட்களாக, சுமார் 6 பதின்ம வயது மாணவிகள் நடத்தி வரும் போராட்டம் சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. தற்போது அந்த பிரச்னை நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. நாளுக்கு நாள் சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில் இன்று அரசு ஒரு புதிய ஆணையை வெளியிட்டுள்ளது.

முட்டுக் கட்டை தொடர்கிறது

“நாங்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றே எல்லா கூட்டங்களிலும் கூறுகின்றனர். தேர்வுக்கு சரியாக இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. ஹிஜாபை அகற்றிவிட்டு வகுப்பறைக்கு செல்லுங்கள் என்று எங்களிடம் சொல்கிறார்கள்.

இப்போது எங்கள் எம்எல்ஏ அவர்களும் முரட்டுத்தனமாகவே பேசுகிறார். ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர முடியாது, அப்படி செய்தால் கல்லூரியில் நுழைய முடியாது என்று கூறுகிறார்,” என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு மாணவிகளில் ஒருவரான ஏ.எச்.அல்மாஸ் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

ஆனால், இன்றைக்கும் இந்தப்பெண்கள் கல்லூரிக்கு செல்கின்றனர். ”எதிர்காலத்தில் அட்டெண்டென்ஸ் பிரச்சனை வரக்கூடாது” என அவர்கள் கூறுகின்றனர்.இந்த சர்ச்சை தனது படிப்பில் “மோசமான” விளைவை ஏற்படுத்தியதாக அல்மாஸ் ஒப்புக்கொள்கிறார்.

மற்ற மாணவிகளிடமிருந்து நோட்ஸ் பெறவும் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.மற்ற மாணவிகள் தங்களுடன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். அவ்வாறு செய்தால், கல்லூரி முதல்வர் முன் ஆஜராக வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.பிப்ரவரி 17 முதல் தொடங்கும் ப்ராக்டிக்கல் தேர்வுகளுக்கான முன் தேர்வு, அவரது மிகப்பெரிய கவலை.

” பிராக்டிகல் வகுப்பில் கலந்து கொள்ளாவிட்டால், தியரி தேர்வுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று கல்லூரி கூறுகிறது. லேப் பிராக்டிகல்க்கு வர வேண்டும் என்றால், ஹிஜாபை கழற்றினால் மட்டுமே அனுமதிப்போம் என்று சொல்கிறார்கள். ஹிஜாப் இல்லாமல் நாங்கள் செல்வது சாத்தியமில்லை.”என்கிறார் அல்மாஸ். ஹிஜாப் விஷயத்தில் ஏன் பிடிவாதமாக இருக்கிறீர்கள்?

இதற்கு பதிலளித்த அல்மாஸ், “அது எங்கள் சுயமரியாதை. அது எங்கள் அரசியலமைப்பு உரிமை. அதை நாங்கள் ஏன் அணியக்கூடாது? தனியார் கல்லூரிக்கு பணம் கொடுக்க முடியாததால் அரசு கல்லூரிக்கு நாங்கள் வந்தோம்” என்று கூறுகிறார்.

“எல்லோரும் அவரவர் மதச் சடங்குகளைப் பின்பற்றும் போது எங்களிடம் எப்படி பாகுபாடு காட்ட முடியும்? நாங்கள் எங்களின் அரசியலமைப்பு உரிமையை மட்டுமே கோருகிறோம்.”என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஹிஜாப் அணிவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் குண்டாப்பூரில் மாணவர்கள் காவி சால்வை அணிய தூண்டப்படுகிறார்கள். இது கல்லூரிகளின் சூழலை சீர்குலைக்கவில்லையா?

“இன்று உங்கள் குழந்தைகள் ஹிஜாப் அணிகிறார்கள், நாளை எங்கள் குழந்தைகள் காவி சால்வை அணிவார்கள் என்று எங்கள் எம்.எல்.ஏ சொன்ன பிறகுதான் இந்தப்பிரச்சனை மதம் மற்றும் வகுப்புவாதமாக ஆனது,” என்று அல்மாஸ் கூறுகிறார்.”இது கல்லூரியின் ஒழுக்கத்தை சீர்குலைக்கிறது. ஒரு நாள் கழித்து, சிக்மகளூரில் மாணவர்கள் காவி சால்வை அணிந்தனர். அது அவர்களைத் தூண்டுவது போல் இருந்தது.”

ஒரே நிமிடத்தில்…

முஸ்லிம் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் இந்து அமைப்புகளுடன் சந்திப்புக்களை நடத்திய சிக்மகளூர் கல்லூரி, பெண்களை ஹிஜாப் அணிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. அதே நேரம் அவர்கள் தலையில் துப்பட்டா அணியலாம் என்று கூறி பிரச்சனையை தீர்க்க முயன்றது.

“நாங்கள் முகத்தை மூடுவதில்லை. புர்கா அணிவதும் இல்லை. துப்பட்டாவுக்கும் ஹிஜாப்புக்கும் இடையே எந்த வித்தியாசமும் எங்களுக்குத் தெரியவில்லை” என்றார் அல்மாஸ்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) மாணவர் பிரிவான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (சிஎஃப்ஐ) கைப்பாவைகளாக ஆறு மாணவிகளைக் கொண்ட குழு மாறிவிட்டது என்று சில அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை அல்மாஸ் மறுக்கிறார்.

“ஒரு நிமிடத்தில் மொத்தப் பிரச்சனையையும் கல்லூரியால் தீர்த்து வைக்க முடியும். இது ஈகோ பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இது எங்கள் உரிமைப் பிரச்சனை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இது அரசியல். இது பாஜக அரசியல் ,”என்கிறார் அவர்.

இது CFI அரசியல் இல்லையா? இந்தக்கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்கே சார்? எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லையே,” என்றார்.

கலலூரி நிர்வாகத்தின் அணுகுமுறை

உடுப்பியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவும், அரசு பெண்கள் முன் பல்கலை கல்லூரியின் மேம்பாட்டுக் குழுவின் தலைவருமான ரகுபதி பட் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், “எங்களைப் பொருத்த வரை, பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் முடிவைப் பற்றி மாணவிகளுக்கும் தெரிவித்துள்ளோம்,” என்றார்.

“அரசின் உயர் அதிகாரக் குழு தனது அறிக்கையை அளித்தவுடன், நாங்கள் அதை செயல்படுத்துவோம் என்று கூறியுள்ளோம். அந்த அறிக்கை வரும் வரை, நாங்கள் ஒரு மாத அட்டெண்டென்ஸ் தருவோம். மேலும் இந்த சிறுமிகளுக்கு சிறப்பு வகுப்புகளையும் ஏற்பாடு செய்வோம்.

கல்லூரிக்கு வராத காரணத்தால் விடுபட்ட படிப்பை ஈடு செய்யவே இந்த ஏற்பாடு. இந்த நேரத்தில் ஹிஜாப் அணிய வேண்டாம் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டோம்.”என்று அவர் மேலும் கூறினார்.

“ஆனால் அவர்கள் ஹிஜாப் அணியாமல் இப்போதும் வகுப்பிற்கு வருவதில்லை. இது அவர்களது எண்ணத்தை காட்டுகிறது. அவர்களுக்கு ஏதோ ஒரு திட்டம் உள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக எந்த பிரச்சனையும் இருக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

“உண்மையில், 2000 வதுஆண்டிலிருந்து எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்கள் பெற்றோரின் கையெழுத்து உள்ள படிவத்தில் சீருடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிலையில் ஹிஜாப் அணிவது பற்றிய பேச்சுக்கே இடமில்லை. இது எல்லோருக்குமே தெரியும்.”

சீனியர் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்டதாக மாணவிகள் குற்றம்சாட்டுவது பற்றிப்பேசிய அவர், ” சீனியர்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. அவர்கள் சீருடை அணிந்து, அதற்கு மேல் ஹிஜாப் அணிந்திருந்தனர். ஆனால் அவர்கள் வகுப்பறைக்குள் வந்ததும், அதை அகற்றிவிடுவார்கள்,” என்றார்.

“இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு குழப்பம். இது முற்றிலும் தெளிவாக உள்ளது” என்று ரகுபதி பட் கூறுகிறார்.

“இதற்கு நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்,” என்கிறார் அவர்.

நீதிமன்றத்தை அடைந்த சர்ச்சை

ஹிஜாப் அணிவது குறித்த வழக்கு விசாரணை செவ்வாயன்று நடைபெறும்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் தாக்கல் செய்துள்ள இரண்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.

இரண்டும் வெவ்வேறு பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டவை. அரசியலமைப்புச் சட்டத்தின் 25 (1) பிரிவின் கீழ் ஆடையைத் தேர்ந்தெடுப்பது அடிப்படை உரிமை என்று ஒரு மனுவில் வாதிடப்பட்டுள்ளது.

ஹிஜாப் மீது விதிக்கப்பட்டுள்ள ஆடைக் கட்டுப்பாடு, சமூகத்தின் சட்டம் ஒழுங்கு அல்லது ஒழுக்கத்திற்காக அல்ல என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஐந்து மாணவிகள் தாக்கல் செய்த இரண்டாவது மனுவில், 2021-22 ஆம் ஆண்டிற்கான கல்வி வழிகாட்டுதல்களில், ப்ரீ யுனிவர்சிட்டி கல்லூரிகளுக்கு சீருடை எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

கல்லூரி சீருடையை முடிவு செய்தால், அதற்கு எதிராக துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தலையில் ஸ்கார்ஃப் அணியலாம் என்ற ஒற்றை நீதிபதி அடங்கிய நீதிமன்றப் பிரிவு அளித்த தீர்ப்பை உறுதி செய்து கேரள உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பை இரண்டு மனுக்களும் குறிப்பிடுகின்றன.

“முன்பு ஒன்று அல்லது இரண்டு மாணவிகள் உடல் நலம் கருதி இதை அணிந்தனர். ஆனால் தற்போது திடீரென 27 மாணவிகளும் அணியத் துவங்கியுள்ளனர்,” என்று குண்டாப்பூர் எம்.எல்.ஏ., ஹலாதி ஸ்ரீனிவாஸ் ஷெட்டி கூறினார்.

“அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அதன் அறிக்கை இன்னும் வரவில்லை. கல்வி ஆண்டு முடிவடையும் நிலையில் நாம் இருக்கிறோம். அறிக்கை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒட்டுமொத்தமாக நிலைமை நன்றாக இல்லை, “என்று ஷெட்டி தெரிவித்தார்.

Previous Story

USA பொலிஸாரின் சூட்டிற்கு  கறுப்பின அமீர் லோக்கி  பலி!

Next Story

ஐ.நா கடிதம்: பெரும் தவறிழைத்த சம்பந்தன்- கலாநிதி தயான்